நீதிவேந்தன் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 425
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
1.1 பத்மாவதி கதை | 1.2 நீதிவேந்தன் கதை | 2. மந்தாரவதி கதை
ஹிமாலயத்தின் தென் சாரலில் விந்தியஸதி என்றொரு நகரம் உண்டு. அங்கே ஸீவி சாரன் அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு ஐயகோனன் என்னும் மகன் இருந்தான். ஒரு சமயம் அரசகுமாரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அங்கே ஒரு யானையைக் கண்டு அதைத் தொடர்ந்து சென்றான். அவ்விதம் சென்றவன் பெருங்காடு ஒன்றினுள் நுழைந்துவிட்டான். அங்கிருந்து திரும்பிவரும் போது, காட்டின் நடுவிலே ஒரு நதி செல்வதைக் கண்டான். அதன் கரையில் அறநெறியாளன் ஒருவன் நீராடி தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தான்.
அரசகுமாரன் அவனிடம் சென்று. “ஐயா! என்னுடைய குதிரையைச் சிறிது நேரம் பிடித்துக்கொள்ளுங்கள். அதற்குள் நான் நதியிலிறங்கி தாகசாந்தி செய்து கொள்ளுகிறேன்.” என்றான்.
அதைக்கேட்ட அறநெறியாளன். “நான் உன் வேலைக்காரன் என்று நினைத்துக் கொண்டாயா? உன் குதிரையைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் என் வேலையா?” என்று கோபமாகக் கேட்டான்.
அவன் வார்த்தைகள் அரசகுமாரனின் சினத்தை அதிகரிக்கச் செய்துவிட்டன. தன் கையில் வைத்திருந்த சாட்டையினால் அவன் அந்த அந்தணனை அடித்தான். வலி பொறுக்கமாட்டாத அந்தணனோ அரசனின் சமூகத்திற்கு ஓடிவந்து, கதறியழுதான். அரசனும் அவனைச் சமாதானப்படுத்தி வி ஷயத்தை அறிந்தான்.
அரசியல் அதிகாரத்தில் அகங்காரம் கொண்டு தன் மகன் குதிரைச் சாட்டையினால் அறநெறியாளனை அடித்தான் என்று கேட்டதும் மன்னன் கண்களில் கோபாக்கினி வீசக் கொதித் தெழுந்தான். உடனே அவன் தன் மகனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான்.
அப்போது அருகிலிருந்த மந்திரி, “அரசே! அரசனுக்குரிய சகல லக்ஷணங்களும் பொருந்திய தங்கள் குமாரனை நாட்டைவிட்டு வெளியேற்றுவது நல்லதா? அது சரியல்ல” என்றான்.
“மந்திரி! அறநெறியாளனைக் குதிரைச் சாட்டையினால் அவன் அடித்திருக்கிறான். முன் விசாரணை ஏதுமின்றி அவன் அடித்த தால் அவன் அரசாளும் தகுதியிலிருந்து விலகியவனாகிறது.
“அறிஞன் ஒருபோதும் ‘விஷத்தை அருந்த மாட்டான்; பாம்புகளுடன் விளையாட மாட்டான்; துறவிகளை நிந்திக்க மாட்டான்; அறிஞர்களை விரோதித்துக் கொள்ளமாட்டான்.
“மந்திரி! நீ புராணங்கள் சொல்வதைக் கேட்டதில்லையா? முன் காலத்தில் அறநெறியாளனின் சாபத்தினால்தான் சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்தார்.
“ஒருவன் உயர்ந்த நிலையை அடைந்த போதிலும், ஒருபோதும் பூஜிக்கத் தகுந்த அறிஞர்களை நிந்திக்க மாட்டான்.
“ஆகவே, ஒருவன் எப்போதும் அறிஞர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.” இன்னும்,
“அறநெறியாளர்களை ஒருபோதும் மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது. ஏனெனில், அவர்கள் மூவுலகங்களின் சக்திகளை ஒருங்கே கொண்டவர்கள். அவர்கள். தானம், கௌரவம், புகழ் ஆகியவற்றால் பூசிக்கத் தகுந்தவர்கள்.
“எல்லாப் பொருள்களையும் அழிக்கக்கூடிய நெருப்பையும், குடிக்க முடியாத சமுத்திரத்தையும், நீந்த முடியாத களங்கத்தை (தேய்வை) உடைய சந்திரனையும் படைத்த அறநெறியாளரின் கோபத்தால் யார் தான் அழியமாட்டார்கள்?”
“அவர்களுடைய மூதாதையர்களும், தேவர்களும் எந்தப் பெரியோர் கரத்தினால் தங்கள் ஆகாரத்தை ஏற்றுக் கொள்ளுகின்றனரோ அவர்களைவிடப் பெரியவர் யார்?
“துறவறத்தைத் தங்கள் கடமையாகக் கொண்டுள்ள அவர்களை யார்தான் வணங்கமாட்டார்கள்?”
‘துறவறத்தை மேற்கொண்டவனும். தேவர்களாலும் மனிதர்களாலும் கௌரவிக்கப்பட்டவனுமான பரதன் ஆண்ட தேசத்தில் உள்ள பெரியோர்களை யார்தான் ஆச்ரயிக்க மாட்டார்கள்?
“சமுத்திரத்தைக் கையில் ஏந்திக் குடித்தவரும், விந்திய மலையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவருமான அகஸ்தியரைப் போன்ற பெரியோர்களைவிட எதைப் பெரிதாகச் சொல்ல முடியும்?”
“ஆண்டவனை பூஜிக்க விரும்புபவன் கேவலம் அறநெறியார் களைத் தங்களால் முடிந்த வரையில் திருப்தி செய்தாலே போதும்.
“துவாரகையில் கிருஷ்ணபகவான் சொல்லுகிறார். எவனொருவன் அறிஞர்களைப் பூஜிக்காமல், அடித்து, சபித்து, நிந்தையாகப் பேசுகிறானோ, அவன் என்னைச் சேர்ந்தவன் அல்ல; அவனை ஜ்வலிக்கும் நெருப்பிலே போடவேண்டியதுதான். மேலும், என்னைப் பூஜிக்க விரும்புபவர்கள் எப்போதும் அறநெறியாளர் களைக் கௌரவிக்க வேண்டும். அப்போதுதான் நான் திருப்தி அடைந்தவனாவேன்.”
“ஆகவே, மந்திரி, ஒரு பாவமுமற்ற அறநெறியாளனை அடித்த குற்றத்திற்காக அவன் கையை வெட்டிவிடுங்கள்” என்றான் நீதி மன்னன்.
அப்போது அந்த அறநெறியாளன் ஓடிவந்து, “ராஜேந்திரா! உம் குமாரனின் அறியாமையினால் இத்தவறு நடந்துவிட்டது. இனிமேல் அரசகுமாரன் அவ்வி தம் நடந்து கொள்ளமாட்டான். நான் இப்போது திருப்தி அடைந்துவிட்டேன். எனக்காக அவனை மன்னித்து விடும்” என்று வேண்டினான்.
அதைக்கேட்ட பார்த்திபனும் தன் உத்தரவை மாற்றிக் கொண்டான்.
-இவ்வி தம் கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனை நோக்கி, ”சொல்லுமையா ராஜனே! இவர்கள் இருவரில் சிறந்தவர் யார்?” என்று கேட்டது.
”அரசனே சிறந்தவன். தன் மகன் என்றும் பாராமல் தவறு செய்தான் என்பதற்காக அவன் தண்டனை கொடுத்தான் அல்லவா?” என்று விக்கிரமாதித்தன் சொல்லவே. வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு அவன் தோளைவிட்டு மறைந்து முருங்க மரத்திற்குப் போய் விட்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.