நிலைமாறும் போது…
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 454
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கபூர், பரீதா தம்பதிகள் சுமார் எட்டு ஆண்டுகள் பிள்ளை யில்லாமலிருந்து, நேர்ச்சைகள் வைத்து, தவமிருந்து பெற்ற பிள்ளைதான் வாரிதா.
அவள், அவர்களுக்கு ஏக புதல்வியாகவும் வந்து வாய்த்தாள்.
தமது மகள் பருவமெய்தியதும், உரிய காலத்திலேயே அவளை ஒருவரின் கையில் ஒப்படைத்து அவளின் சிறப்புகள் காண ஆசைப்பட்டார்கள் அத்தம்பதிகள்.
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? இங்கு எமது சமூகத்தில் எங்கு பார்த்தாலும், ‘பெண்ணைப் பெற்றீர்களா? உங்களுக்கு இதுதான் தண்டனை’ என்பது போல பெண்ணைப் பெற்ற பெற்றோர்களிட மிருந்து அதிகபட்சம் எவ்வளவு சீதன, ஆதனங்களையும், கைக் கூலியையும் பறித்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவையும் பறித்துக் கொள்ளவென இளைஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
இந்நிலைமையில், இத்தம்பதிகள் தமது புத்திரிக்கு ஒரு துணைவனைத் தேடிக் கொள்வதற்காக தம்மிடத்திலுள்ள பொரு ளாதார வசதிகளை எண்ணிப் பார்த்தனர். அவ்வசதிகளுக்குள் பெரிதாக என்றில்லாவிட்டாலும் ஒழுங்காகத் தொழில் புரிகின்ற ஒருவரைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம் என்று நம்பி ஆசை யையும் அதற்குள் மட்டுப்படுத்திக் கொண்டனர்.
கபூருக்கு பெரும்பாலும் வயல் வெளியிலேதான் பொழுது கள் கழியும். அவருக்கு ஊருக்குள் புழக்கம் குறைவு. ஆனால், அவரது மனைவிக்கோ, அவ்வூர் அயல்வீடு போல புழக்கம் அதிகம். அறிமுகமும் கூடவிருந்தது.
வீட்டுக்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வருபவர் அவளது கணவர்தான். என்றாலும், குடும்ப வேலைகளையெல்லாம் பார்த்து முடிப்பவள் அவளே. அவள் மிகவும் சாமர்த்திய சாலி.
வேலையோடு வேலையாக ஊரெல்லாம் போட்டுத் துழாவி தனது மகளுக்கான மாப்பிள்ளையையும் கண்டுபிடித்துக் கொண்டாள் பரீதா.
தேநீர்க்கடை வியாபாரியும் கொஞ்சம் கையிலும் மடி யிலும் வைத்திருப்பவருமான அவரைப்பற்றி அவள் தனது கணவரிடம் எடுத்துச் சொன்ன போது, அவர், “தனக்குத் தெரிந்த பிள்ளைதான். கிடைத்தால் நாம் செய்த அதிர்ஷ்டம்தான்” என்று மகிழ்ந்து போனார்.
சூடு ஆறுவதற்கு முன்பே, ஒரு நாள்,கபூரும், பரீதாவும், மாப்பிள்ளையையும், அவரது பெற்றோரையும் வீட்டிலே கண்டு, மாப்பிள்ளை மேல் தாம் கொண்ட விருப்பைப் பிட்டுவைத்து, தாம் கொடுக்க நினைத்துள்ள சீதன ஆதனம், கைக்கூலி போன்றவற்றையும் எடுத்து விளக்கி அவர்களின் சம்மதத்தையும் பெற்றுவிட்டனர்.
இரு தரப்பினரும் பேசிக் கொண்டபடி கபூரும் பரீதாவும் தாம் குடியிருந்த வீடு வளவை, மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் சீதன ஆதனமாக எழுதிக் கொடுத்ததோடு ஒன்றரை இலட்சம் ரூபாயை மாப்பிள்ளைக்கு கைக்கூலியாகவும் வழங்கினர்.
திருமணமும் இனிதாக நடந்தேறியது.
கபூரும், பரீதாவும் தமது சொத்துக்களென்று தம்மிடமிருந்த அனைத்தையுமே மகளுக்கும் மருமகனுக்கும் கையளித்துவிட்டு அவர்களது வீட்டிலேயே ஒண்டிக் கொண்டனர். என்றாலும், கபூர் அவர்களது தயவை நாடி நிற்கவில்லை. கரீம் மாஸ்டரின் மூன்று ஏக்கர் காணிக்கு வயற்காரனாகவிருந்து வேளாண்மை செய்து வந்ததோடு, நேரங்கிடைக்கும்போது வேறு வயல்களில், வரம்பு கட்டுதல், நாற்று நடுதல், சூடடித்தல் போன்ற வேலைகளையும் செய்து தனது குடும்பத்தை குறைவின்றிக் கவனித்து வந்தார். இதனால், அங்கு பிரச்சினைகள் எதுவும் முளைக்கவில்லை.
வாரிதாவும் கணவரும் கிளைத்துச் சடைத்து வளரும் விருட்சம் போல் பூரிப்போடு வாழ்ந்த அதேவேளை, வாரிதாவின் பெற்றோர் அவ்விருட்சத்தின் பக்கமாய் ஓடும் ஒரு நீரோடை போல அமைதியாக வாழ்ந்தனர்.
இவ்வாறு ஒன்பது வருடங்கள் உருண்டன. பத்தாவது வருடம் கபூருக்கு எழுபத்தேழு வயது நடக்கும் பொழுது, அவர், பாரிசவாதத்தின் பிடிக்குள் அகப்பட்டு இடது புறமாய் ஒரு கையும், காலும் இயக்கமின்றிப்போக படுக்கையிலே வீழ்ந்தார். திறமை வாய்ந்த ஒரு டாக்டரின் சிகிச்சையினால் ஓரளவு கையையும் காலையும் அசைத்து நடமாடத் துவங்கினார். கையிலிருந்த காசெல்லாம் கரைந்தாலும் நோய் முற்றாகக் குணமாகி பழைய நிலைக்கு அவரால் மீள முடியவில்லை.
அவர், வீட்டிலே முடங்கிக் கொண்டார். அவருக்கு எந்த வேலையையும் செய்ய இயலாதவாறு நோய் கையையும், காலையும் கட்டிப்போட்டுவிட்டது.
அப்போது, அவரும் மனைவியும் தமது மகளினதும், மருமகனினதும் தயவிலே வாழ வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
இவ்வாறு, இரண்டு மூன்று ஆண்டுகள் நகர்ந்தன. பின்னர், அவர்கள் பக்கமிருந்து முணு முணுப்புகள் பொரியத் தொடங்கின.
குறிப்பாக, மகள்தான் இதனைப் பெரிதாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றாள். என்றாலும், அவள் தனது தாயைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை.
பெரும்பாலும், வீட்டு வேலைகளையும் வெளி வேலை களையும் செய்து முடிப்பவள் தாய்தான் என்பதனால், அவளை உவப்போடு அணைத்துக் கொண்டாள் வாரிதா. ஆனால், அளுக்கு தந்தைதான் பெரும் சுமையாகத் தோன்றினார்.
“நீங்களும் நெடுக வீட்டிலேயே கிடந்தா, நாங்களும் உர்களுக்கு ஒரே அவிச்சிக் கொட்டிக் கொண்டிருக்கிறண்டா எப்டி? பெரிய பணக்காரனாலயும் ஏலாதே. உம்மாவ வேணுமிண்டாப் பாத்துக்கலாம். உங்களையும் வச்சிக் கவனிக்கிறத் துக்கு எங்களுக்கேலா. வெளிக்கிறங்கி உங்கட சீவியத்தயாவது பார்த்துக் கொள்ளுங்க” என்று வாரிதா தனது தந்தையின் காது களில் விழும் படியாகவே பல தடவைகள் கூறியிருக்கிறாள்.
அவர், அவ்வார்த்தைகள் தனது செவிகளில் பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும், அவர், ஒரு தடவை தனது புதல்வியைப் பார்த்து, ஈனமான குரலில் “எனது நிலை உனக்குத் தெரியாதா மகள்…. நல்லா நடந்து வேலை செய்யக் கூடிய உடல் நிலை எனக்கிருந்தால் நான் உங்கள் தயவை நாடியிருக்க மாட்டேனே மகள்” என்றார்.
அப்போதும் கூட, வாரிதாவுக்கு தனது தந்தை மீது, இரக்கம் சுரக்கவில்லை.
“நீங்க, எது சொல்லியும், நான் கேக்க ஆயத்தமில்ல…. வெளிக்கிறங்கி எங்கண்டான போய் உங்களக் காப்பாத்திக் கொள்ளுங்க….”
அவள், தனது தந்தையின் மேல் தீயாய்த் தகித்து விட்டு புயலாய் மறைந்தாள். அதன் பின்பும், அவர், அங்கு தனது மகளினதும் மருமகனினதும் தயவிலே வாழ விரும்பவில்லைதான். என்றாலும், எங்கு போவது, என்ன செய்வது என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. இவ்வாறு, இன்னுமொரு மாதம் அங்கேயே கழிந்தது.
ஒரு நாள், காலை, வழமையாக அவர் தன்னைச் சுருட்டிக் கொள்ளும் அந்த அறையில், எப்போதும் போல் அன்று கண்விழித்து எழுந்து தான் துயின்ற பாயில் அமர்ந்திருந்தா. பாயின் தலைப் பக்கமாக ஒரு தலையணையும், விசிறியும் போட்டபடி அப்படியே கிடந்தன.
அப்போது, அவ்வறையின் பக்கமாக வந்த வாரிதா, அப்பா யில் கால் சிக்கித் தடுமாறினாள். நிலத்தில் மோதவிருந்தகள் தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.
அந்நிகழ்வு, அவளுள், ஏற்கனவே, கனன்று கொண்டிந்த வெகுளித்தீயில் எண்ணெயை வார்த்தது.
கண்கள் இரண்டும் செம்பகத்தின் விழிகள் போல் சிவந்து கொண்டன. போதை ஏறியவள் போல நின்று ஆடினாள்.
“நானும் சொல்லிக்கிட்டுத்தானிருக்கன். நீங்களும் கொஞ்ச மும் உசும்புறாப்போலவுமில்லை…. நீங்க இஞ்ச இன்னமும் இருந்துக்கிட்டிருந்தா இனி எனக்கு பொல்லாத விசர்தான் வரும். சீ…. என்ன மனிசன் நீங்க. உங்களப் போல ரோசமத்த ஒரு ஆள நான், இந்தப் பகுதியிலயும் காணல்ல. இப்பயே வெளிக் கிறங்கிப் பெய்த்திருங்க. அதுவும், ஒரே போக்காப் பெய்த்திருங்க. போகக்குள்ள உங்கட பாய், தலகணி, விசிறி எல்லாத்தையுமே எடுத்துக் கொண்டு பெய்த்திருங்க. இனிமேல், நீங்க இந்த வளவுக் கையும் கால் வைத்திரப்படா….” என்றவள், ‘விசுக்’கென்று குனிந்து, தனது தந்தை உட்கார்ந்திருந்த அப்பாயைப் பலமாக ‘பற பற’ வென்று இழுத்தெடுத்தாள்.
தக்க சந்தர்ப்பத்தில் அவளது தந்தையும் பாயிலிருந்து விரைவாய் சீமெந்துத் தரையில் நழுவிக் கொண்டதால், பாயும் தப்பியது. அவரும் தன்னைக் காத்துக் கொண்டார்.
இன்னும் வாரிதாவின் ஆத்திரம் அடங்கவில்லை. அவள், தனது கரத்திலிருந்த அப்பாயோடு, அங்கு சிதறிக்கிடந்த தலை யணை, விசிறி ஆகியவற்றையும் பொறுக்கி எடுத்துக் கொண்டாள்.
ஒரே பாய்ச்சலில் முன்னே குதித்து, அவற்றை வளவுக்குள் வீசி எறிந்துவிட்டு மீண்டாள்.
கபூரோ, சோர்ந்து கிடந்த தனது சாரணை நடுங்கும் கரங்களாலே சரிசெய்து கொண்டு எழுந்து நின்றார். அங்கு நிகழ்ந்தவை அனைத்தையும் அவதானித்தவாறு நின்றிருந்த தனது மனைவியை அண்ணார்ந்து பார்த்தார். அவளோ, தனது கண வருக்கு ஆதரவாக வாய்திறந்தால் தானும் அவரோடு சேர்ந்து தெருவிலே நிற்கவேண்டிவரும் என்று அஞ்சி, தலையைத் தொங்க விட்டவாறு மௌனமாய் நின்றிருந்தாள்.
கபூரும், தனது மனைவியின் மன நிலையை விளங்கிக் கொண்டிருக்கவேண்டும்.
‘பெற்ற பிள்ளையே கைவிட்டிடும்போது மனைவி, கைவிடு வதென்பது பெரிய காரியமா என்ன? என்று அவர், தனக்குள்ளே மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டார். அவரின் மனம் துடிதுடித்தது.
‘இனி ஒரு பொழுதும், தனது மகளினதும் மருமகனினதும் தயவிலே வாழமாட்டேன்’ என்ற ஒரு திடமான தீர்மானத்தோடு வீட்டிலிருந்து வெளியிலே வந்தார்.
வளவின், வடபுறமாய், செழித்து வளர்ந்து கிடந்த ஒரு மாதுளையின் அருகிலே சிதறிக் கிடந்த பாய், தலையணை, விசிறி முதலியவற்றைச் சேர்த்தெடுத்துக் கொண்டு நிமிர்ந்தார்.
அவ்வேளை, வளவின் தென்புற எல்லை மதிலின் பக்கமாக நின்றிருந்த, அவரது புதல்வியின் கணவனும் அவரைப் பார்த்தான்.
“நீட்டுக்கு உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டுக் கவனிக்கிறது எங்களுக்கும் பெரிய கஷ்டம்தானே. என்ன செய்யிற மாமிய மட்டும் வைத்துப் பார்த்திக்கிறம். நீங்க எங்கண்டான போய் உங்களப் பார்த்துக் கொள்ளுங்க. திரும்பி வந்து எங்களுக்கு கரச்சல் தந்திரப்படா.நானும் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாத வனுக்குப் பொல்லாதவன். ஓம்….” என்று கண்டிப்பான வார்த்தை களைக் கக்கினான் மருமகன்.
தனது மருமகனின் இவ்வார்த்தைகளும், கபூரின் செவி களைத் தொட்டு நெஞ்சையும் சுட்டது.
அவர், அதனையும் தாங்கிக் கொண்டு மௌனமாய், நடுங்கி நடுங்கித் தள்ளாடியவராய் மெல்ல மெல்ல அடி வைத்து வளவின் வெளி’கேற் றையும் தாண்டி தெருவிலே இறங்கினார்.
இடது புறமாய், நான்கு ஐந்து மீற்றர்களுக்கு அப்பால் தெருக் கரையில், இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு சாதாரண கட்டடம். அதில், ஓர் அறை, மளிகைக்கடையாக மலர்ந்திருந்தது. மற்றைய அறை மூடிக் கிடந்தது. அக்கட்டடத்தை ஒட்டியவாறு அதன்பின்னே ஒரு வீடும் அமைந்திருந்தது. அவற்றின் சொந்தக்காரன், கபூருக்கு தாய் வழியில் உறவினன். அதனால், அவர், கூசாமல் அவ்வீட்டுக்குச் சென்று, தான் வைத்திருந்த பொருட்களை அங்கு ஒப்படைத்து விட்டு திரும்பி வந்தார். மூடிக் கிடந்த அறையின் முன்னே அறையோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்த படிக்கட்டில் தள்ளாடியவராக கைகளை மெல்ல ஊன்றி உட்கார்ந்தார். அவரிடமிருந்து ‘ம்…ஹு…’ என்று நெடுமூச்சொன்று வெளிப்பட்டு மறைந்தது.
அவர், தனது மருமகனைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், மகள்தான் அவருக்கு பயங்கரமாகத் தோன்றினாள்.
அவள், தன்னோடு நடந்து கொண்ட முறையை நினைக்க நினைக்க அவரின் நெஞ்சிலே துன்பம் பெருகி கடலாய் கொந் தளிக்கத் தொடங்கியது.
கபூர், தனது ஆறுதலுக்காக தான் உட்கார்ந்திருந்த படிக் கட்டிலிருந்து, சற்றுப் பின்னே நகர்ந்து, மூடிக் கிடந்த அவ்வறை யின் கதவிலே முதுகை பொருத்திக் கொண்டார்.
அவரது மனவானிலே, கடந்த காலத்தில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் மிதந்து வந்தன.
அப்பொழுது, வாரிதாவுக்கு வயது ஒன்றரை இரண் டிருக்கும். குழந்தையாகவிருந்த அவளை வயிற்றுப்போக்கு வாய்ப்பாகப் பிடித்துக் கொண்டது.
கபூரும், பரீதாவும் நோயுற்ற தமது குழந்தையை, டாக்டர் கள் பலரிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்கள், ஆனால், பயன் தான் கிட்டவில்லை.
சில பெண்களின் ஆலோசனையின் பேரில், வாச்சாப்பரிசாரி யிடமும் காட்டி, ‘குறி’பார்த்து, ‘அச்சிலமும்’ கட்டிப்பார்த்தனர். அப்போதும் நோய் குணமாகவில்லை.
‘எவ்வளவு பேருக்கிட்டக் காட்டியாச்சு… இனி எங்க காட்ற…’ என்று அலுத்தவளாய், குழந்தையை மடியிலே வைத்துக் கொண்டு வீட்டிலே அம்மிக்கல்லாய் அமர்ந்துவிட்டாள் பரீதா. ஆனால், அவளின் கணவரோ தனது மகளின் உச்சந்தலையைத் தொட்டுப் பார்ப்பதும், இமைகளை நீக்கிப் பார்ப்பதுமாய் நிம்மதியின்றித் தவித்தார்.
ஒரு நாள், பிற்பகல். வெளியிலே போயிருந்த அவர், அவசரமாய் வீட்டுக்குத் திரும்பிவந்தார்.
”நம்மிட ஊருக்க பள்ளியடிய, மெயின் ரோட்டுப்பக்கமா புதிசா ஒரு டாக்கித்தர் ஆசுபத்திரி திறந்திருக்காராம். பிள்ளைய அவருக்கிட்டயும் ஒருக்காக் காட்டிப் பாப்பமே. நானே காட்டிட்டு வாறன். தாங்க… பிள்ளைய” என்று தனது மகளை மனைவியிட மிருந்து வாங்கி, தோளிலே போட்டு, துவாயினாலும் மூடிக் கொண்டார். பாதையிலே இறங்கி விடுவிடென்று நடந்தார். புதிய அவ்வைத்தியசாலையை அண்மித்தார். தோளில் கிடந்த அவரது குழந்தை திடுகூறாக மலங் கழித்துவிட, வலது புறமாய் அவரது சேர்ட்டும், சாரணும் அதிலே தோய்ந்து விடுகிறது.
அவர், தனது நடையைத் தளர்த்தி, அப்பக்கமாய் தன்னை ஒரு முறை அவதானித்துக் கொண்டார். மறுகணமே, அவர், தனக்கு எதிரேயிருந்த ஒரு வீட்டுக்குச் சென்று, தன்னையும், குழந்தையையும் நீரினால் சுத்தம் செய்து ஈரத்தையும் துடைத்துக் கொண்டார். அப்போதும் அவர், தனது குழந்தை மேல் வெறுப் படையவில்லை. “பிள்ளைக்கு என்ன நடந்தது! சே…” என்று மேலும் அனுதாபப்பட்டுக் கொண்டார்.
அவர், மீண்டும் தனது குழந்தையை தோளிலே போட்டு அணைத்துக் கொண்டு, தான் தேடிவந்த வைத்தியசாலையை அடைந்து, அவ்வைத்தியரைக் கண்டு தனது குழந்தையின் நிலையை எடுத்து விளக்கினார்.
டாக்டரிடமிருந்து மருந்துகளையும், தைரியத்தையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இது ஒரு சம்பவம்.
வாரிதா, ஐந்து வயதை எட்டிக்கொண்டிருந்த போது, அவளை தைபோயிற் காய்ச்சல் பீடித்துக் கொண்டது.
கபூரும், பரீதாவும், மகளை தமக்குத் தெரிந்த எல்லா டாக்டர்களிடமும் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால், நோய் தான் விட்டுவிட்டுப் போகவில்லை.
அவர்கள், தமது புதல்வியை, அனுபவம் வாய்ந்த ஒரு டாக்டரின் ஆலோசனையின் பேரில், மட்டக்களப்பு அரச மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கே, பரீதா, தனது மகளின் அருகிலே யிருந்து அவளைப் பார்த்துக் கொண்டாள். வாரிதாவுக்கு அவ்வளவு உதவி போதும்தான். கபூர், வீட்டுக்குச் சென்று விரும்பிய நேரம் திரும்பிவர நல்ல வாய்ப்புமிருந்தது. என்றாலும், அவருக்கு, அங்கிருந்து போவதுதான் கடினமாகவிருந்தது. உயிரைவிட்டு விட்டுப்போவது போன்றிருந்தது. குட்டி போட்ட பூனை போல அங்கேயே சுற்றிக் கொண்டு திரிந்தார். அவர், பல இரவுகளை வைத்திய சாலையின் முன் மண்டபத்தில், வெளி நோயாளர் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த ஒரு நீண்ட வாங்கிலேயே கழித்தார்.
அவர், தனது மனைவியின் வற்புறுத்தலின் காரணமாய் இரண்டு மூன்று தினங்கள் வீட்டுக்கும் போகவேண்டி வந்தது. இருந்தாலும் அவர், சுவரில் பலமாக வீசியெறிந்த பந்தாய், உடனேயே வைத்திய சாலைக்கு மீண்டும் வந்துவிடுவார்.
தனது மகளின் காய்ச்சல் குணமாகும் வரை அவருக்கு நிம்மதியே இல்லை. அவரது எண்ணம், உணர்வுகள் எல்லாம் அவளே.
காய்ச்சல் குணமாகி அவள், வார்ட்டிலிருந்து வெளியே வந்தபொழுது அவர் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
தாயோடு வந்துநின்ற தனது மகளை,அகலவிரிந்த விழிகளாலே பார்த்தார். வைத்தியசாலை, தம்மைச் சுற்றி நின்ற மக்கள் அனைத்துமே அவருக்கு மறந்து போயிற்று. தனது புதல்வியை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டார். அவளின் கன்னங்களில் முத்தமழை பொழிந்தார்.”போன என்ட உயிர் வந்திட்டு” என்றவாறு அணைத்துக் கொண்டார்.
தெருவில் விரைந்து வந்த ஒரு வேனின் சத்தம் அறையின் படிக்கட்டிலே உட்கார்ந்திருந்த கபூரை உலுக்கிவிட்டது.மெல்ல நிமிர்ந்தார். இமைக் கரைகளில் கசிந்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.
‘என்ன புள்ள…. எவ்வளவு அருமையாய் பேணி வளர்த் தேனே! அவளுக்காக எத்தனை துன்பங்கள், எத்தனை கஷ்டங்கள் பட்டேன். எல்லாம் கானலாய், வெறுங்கனவாய் ஆனதே… சே…’ என்று அவர், தனக்குள்ளே புலம்பிக் கொண்டார்.
சில விநாடிகள் கருகி உதிர்ந்தன.
‘என்ட கூட்டாளிர மகன் சுபைர், அட்டப்பளத்துக்க மில்லுப் போட்டிருக்கான். கண்டால் போதும், ‘மாமா…மாமா… என்று உயிரையே மாய்ப்பான். நல்ல பிள்ளை…. அவன்ட மில்லில என்னன்டான ஒரு வேலையில என்னச் சேத்துக்குவான். என்ட கடைசிக் காலத்தையும் அங்கேயே கழிச்சிரலாம்…’ என்று எண்ணிய வராய், கையை ஊன்றியவாறு மெல்ல எழுந்தார். அறையின் படிக்கட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வீதிக்கு வந்தார்.
அவரின் தேகம் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. எனினும் அவர், தன்னை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு சுபைரின் வீட்டை நோக்கி நடந்தார். தட்டுத்தடுமாறும் தம் வாழ்க்கையில் பற்றிப்பிடித்துக்கொள்ள ஒரு தூண் கிடைத்த நம்பிக்கையோடு.
– தினகரன் வாரமஞ்சரி, 1999 ஏப்ரல் 18.
– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.