நிலா





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘குடம் என்ற உடற்கொட்டு, அதற்குள் இருப்பதாகத் தோன்றும் ஆன்மா தன் ஆதி சத்துடன் கலக்கும் பொழுது சம்சாரசாகரம் இறந்து விடுகின்றது.’
அழகின் வாலையில் மிதக்கும் முழு நிலா. போதிமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார் ஞானி. எதிரில் வந்து நின்றான் ஜடாமுடிதாரி.

சுய விசாரணை செய்யும் தொனியில், ‘உடம்பு என்ற இப்பாண்டம் அழிந்த பிறகு என்ன சம்பவிக்கின்றது?’ என்றார் ஞானி.
‘அதுவே உன் மனத்தினை உலைதல் செயயும் வினா விடை நாடற் பயணம். புறப்படும்.
‘நீங்கள்தான் கடவுளா?’
‘அப்படி நான் சொல்லவில்லை. அஃது உன் நம்பிக்கையைப் பொறுத்தது…’ ஜடாமுடிதாரி நடக்கத் தொடங்கினான்.
‘நான் கடவுள் நம்பிக்கையற்றவன்’ என்றார் ஞானி.
‘அந்த நம்பிக்கையீனங்கூட ஒருவகை நம்பிக்கை தானே?….வா…’
இருவரும் ஓரிடத்தை அடைந்தனர். அவ்விடத்தில், பத்துப் பெரிய நிறை குடங்கள் வரிசையாக இருந்தன. முழு நிலவின் பூரண விம்பங்கள் நீந்தி மகிழும் சாயலில் அக்குடங்களில் அழகு வழிந்தது. ஞானி சிந்தனையில் ஆழ்ந்தார்.
‘பார்த்தாயா குடங்களும் சந்திரன்களும்!’
‘பார்த்தேன். பத்துக் குடங்களும் பத்துச் சந்திரன்களும்!’ என்றார் ஞானி பரவசத்துடன்.
ஜடாமுடிதாரி குடம் ஒன்றைக் காலால் இடறினான். பானை உடைந்தது. நீர் நிலத்தில் சிந்தியது. சந்திர விம்பம் மாயமாக மறைந்தது.
‘இப்பொழுது?’
‘ஒன்பது….’
‘பத்தாவது சந்திர விம்பம் எங்கே? குடத்துடன் உடைந்ததா? நீருடன் சிந்தியதா?’ எனக் கேட்டு ஜடா முடிதாரி சிரித்தான்.
ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. மெளனமே அவராகி வானத்தைப் பார்த்தார்.
வானத்தில் ஏக சந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான்.
‘அன்றேல் வானத்திலுள்ள சந்திரனிடத்தேயே அந்த விம்பம் சென்றடைந்து விட்டதென நினைக்கிறாயா?’
ஞானி பதிலளிக்கவில்லை. நிலத்தைக் குனிந்து பார்த்தார்.
‘குடங்களிலே தெரிபவை ஒரு சத்தின் பல்வேறு அசத்துத் தோற்றங்கள் என்பதாவது புரிகின்றதா?’
ஞானியின் உள்ளத்தில் திகைப்பு விளைந்தது.
‘குடம் என்ற உடற்கொட்டு. அதற்குள் இருப்பதாகத் தோன்றும் ஆன்மா. ஆன்மா தன் ஆதி சத்துடன் கலக்கும் பொழுது சம்சார சக்கரம் இற்று விடுகின்றது. அதுவே நித்யம்….’ எனக் கூறி ஜடாமுடிதாரி சிரித்தார்.
ஞானியின் முகத்தில் சிரிப்பு வெடித்துக் கிளம்பியது.
‘ஏன் சிரிக்கின்றாய்?’-ஜடாமுடிதாரியின் கேள்வி.
‘ஆன்மாவின் ஈடேற்றம் நான் விளங்காதது. என் வழி சித்த பரிசுத்தம்’ என்றார் ஞானி.
‘உனது பார்வை பாதி தூரமே…..!’
ஞானி திரும்பிப் பார்க்காமலே போதி மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
ஆனால், அன்று வைசாக பௌர்ணமியல்ல!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.