நிறைவு





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நகைக்கடை கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்து தெருவில் கிடந்த குருணிக்கல் பொறாமைப்பட்டது.
“எனக்கு ஏன் மதிப்பில்லை. நானும் ஒரு கல் தானே…” என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.
“ஏ குருணி! காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.’
“அப்படியென்றால்…?” என்று இழுத்தது குருணிக்கல்.
கடப்பாரை சொன்னது:-
“நிறைவாகும்வரை மறைவாகவே இரு”
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.