நியாயம் – ஒரு பக்க கதை





“மோகன்! கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மாவும் அப்பாவும் நம்மளோடதான் இருப்பாங்களா? மோகனின் ஆசைக் காதலி சௌம்யா கேட்டாள்.
அப்புறம் எங்கே போவாங்க? நம்மளோடதான் இருப்பாங்க! மோகன் சற்று அதிர்ச்சியோடு சொன்னான்.
அதுக்கில்லே… ஒருவேளை நாம தனிக்குடித்தனம் போய்ட்டாலும் அத்தையும் மாமாவும் தனியா சமாளிச்சுக்குவாங்கல்ல..
என்ன பேசுறே சௌம்யா? என்னோட அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பிள்ளைங்கிறதை ஞாபகம் வெச்சுக்கோ. என்னைப் பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிருக்கிறாங்க.
அம்மா, அப்பாவை வயசான காலத்தில தனியா விட்டுட்டு நாம தனிக்குடித்தனம் போகிறதெல்லாம் நடக்காது.
ஏன் மோகன்.. நீங்க சொன்ன அத்தனை நியாயமும் எனக்கும் பொருந்துமே! என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கு நானும் ஒரே பொண்ணுதானே. என்னையும் கஷ்டப்பட்டுத்தான் வளர்த்திருக்காங்க. நான் உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா என்னை பெத்தவங்களை யார் பாத்துப்பாங்க?
வயசான காலத்துல சேர்ந்து வசிக்கிற மாதிரி பெரிய வீடா எடுத்துக்கிட்டா எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மகனும் கிடைப்பார், உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு மகளும் கிடைப்பாள்ல..
சொன்ன சௌம்யாவை காதல் பொங்க பார்த்தான் மோகன்.
– கீர்த்தி (நவம்பர் 2011)