நியாயங்கள் பொதுவானவை
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 230

“பீப் பிப் பீப்…” தொலையழைப்பான் சுகந்தியின் கவனத்தைக் கலைத்தது.
ஒரு முக்கியமான உரையாடலில் இருந்தவள் அதன் சத்ததை நிறுத்தினாள். வழக்கமாக இது போன்ற சமயங்களில் அதன் சத்தத்தை அடக்கி வைத்து விடுவதுதான் அவள் வழக்கம்.
அன்று உயர் அதிகாரிகள் திடீரென்று மீட்டிங் ஏற்பாடு செய்துவிட அவள் தன் வழக்கத்தை அடியோடு மறந்து விட்டிருந்ததன் விளைவு இந்த இடைஞ்சல்.
உரையாடல் தற்காலிகமாக முடிந்து மறுநாள் தொடருமாறு அறிவிக்கப்படவே, மற்றவர்களுடன் சுகந்தியும் அறையை விட்டு வெளியேறினாள்.
யார் அழைப்பார்கள்? அழைப்பானில் எண்ணைப் பார்த்ததுமே, ‘அப்பாவா? இந்த வேளையில் அழைக்கவே மாட்டாரே? தனியாக வேறு இருக்கிறார், என்ன அவசரமோ தெரியவில்லையே? என்று சுகந்தி சற்று அவசரமாகவே தன் இருக்கைக்கு வந்து அப்பாவை அழைக்கிறாள்.
“ஹலோ, அப்பா சுகந்தி பேசறேன்.”
“ஹலோ, சுகந்தி எனக்கு உன்கூட தனியா பேசணுமேம்மா.”
“அவசரமாப்பா? இரவு வேணும்னா நான் அங்க வரவாப்பா? உங்க உடம்புக்கு ஒண்ணுமில்லையே?”
“உடம்புக்கு ஒண்ணுமில்லம்மா. இது வேற விஷயம். உன்ன நான் இப்பவே பார்க்கணும்மா. மதிய உணவு இடைவேளை நேரம் உன்னோட பேசலாமா? நான் வரட்டுமா?”
“இப்பவே மணி பதினொண்ணே முக்கால். எப்படிப்பா அன் மோ கியோவிலேயிருந்து வருவீங்க? அப்படி என்ன விழயம்னுதான் சொல்லுங்களேன்.”
“நான் டாக்ஸி பிடிச்சு வந்துடுவேம்மா. வந்து சொல்றேன்.”
“உம். சரிப்பா. பார்த்து கவனமா வாங்க. நான் இங்கு உள்ள கீழ்தளத்து இந்திய சைவ உணவு விடுதில உங்களுக்காகக் காத்திருக்கேன். சரியா?”
“சரிம்மா. நான் கிளம்பி வரேன்.”
“சரிப்பா, பார்க்கலாம்.”
தொலைபேசியை வைத்துவிட்டு அப்பாவிற்கு என்ன தான் அப்படி அவசரம் இருக்க முடியும் என்று யோசித்தவண்ணம் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.
அப்பாவின் நினைவுகளில் மூழ்குகிறாள். அவர் பிடிவாதமாக தனியாக இருக்கிறார். இந்த ஆறு வருடமாக அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அவளும் பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டாள், தன்னுடன் வசிக்கும்படி.
அவர் கேட்பதால்லையே. அவளுடைய அண்ணனும் அமெரிக்காவிலிருந்து கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார். அங்கும் செல்ல அவருக்கு மனமில்லை.
ஆரோக்கியமாக இருக்கிறார் இருக்கிறார் என்ற என்ற ஒரே சமாதானம்தான் சுகந்திக்கு. அவருக்காகவே அவளும் தொலையழைப்பானை விடாமல் உபயோகிக்கிறாள்.
ஒரே பொருள், ஒரு நேரம் இடைஞ்சலாகவும் தோன்றுவதை எண்ணியபடி நடந்தாள் சுகந்தி. வாழ்க்கையின் தத்துவமே இரண்டு புறம் கொண்ட நாணயம் ஒன்றில் அடங்கிவிடுவது போன்ற ஒரு விசித்திர உணர்வு அவளை ஆட்கொள்கிறது!
மகன் சதீஷையும், மகள் திவ்யாவையும் பற்றிய நினைவு வர உடனே வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்க நினைக்கிறாள். ‘ஒரு வேளை அப்பா வந்து தன்னைக் காணவில்லை என்று தவித்தால்?…’ மனதை மாற்றில் ல்ப்ள்கிறாள்.
மதியம் இடைவேளையினூடே ஒருமுறை அவசரமாக அழைத்து சுருக்கமாகப் பேசிக் கொள்ளலாமென்று தீர்மானிக்கிறாள்.
சதீஷுக்கு ஒன்பது வயது முடிந்திருக்கிறது.
திவ்யாவும் ஏழு வயதை நெருங்குகிறாள்.
முன்பு போல் இருவரும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை.
வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு வேலை நல்லபடியாக அமைகிறதோ இல்லையோ வீட்டில் வேலைக்கமர்த்தும் மணிப்பெண் நல்லபடியாக அமைவது முக்கியமானதாக இருக்கிறதே!
அப்படி அமைவது ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும்தானே!
சுகந்தி தானும் அந்த அதிர்ஷ்டசாலிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பலமுறை எண்ணிக்கொள்வாள்.
உணவங்காடியை அடைந்த சுகந்தியை பரிச்சயமான பல புன்னகைகள் கனவுலகிலிருந்து நனவுலகிற்கு இழுக்கின்றன.
அப்பா வந்ததும் இருவருக்கும் வாங்கி விடலாம் என்று நினைத்த வண்ணமே ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து காத்திருக்கிறாள்.
சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக வருகிறார்.
“ரொம்ப நேரமா காத்திருக்கியாம்மா, சுகந்தி?” மூச்சு வாங்கியபடி கேட்கிறார்.
“இப்ப தான் வந்தேன். உட்காருங்கப்பா. நீங்களும் என்னோட சேர்ந்து சாப்பிடுங்கப்பா.”
“இல்லம்மா. நான் சாப்பிட்டுவிட்டு தான் வந்தேன். நீ சாப்பிடும்மா. எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீ மட்டும் வாங்கு.”
“இதோ வந்துடறேன்” கூறியபடி நகருகிறாள்.
உணவை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து உட்காரும் போதுதான், தன் தந்தை தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது சுகந்திக்கு.
“என்னப்பா, தீவிரமான யோசனையில இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லம்மா. திவ்யா, மாப்பிள்ளை எல்லோரும் நல்லா இருக்காங்களாம்மா?” அக்கறையுடன் கேட்கிறார்.
“நல்லா இருங்காப்பா” பதிலளித்தாள் மகள்.
உணவை உண்ணத் தொடங்கியபடியே மெதுவாக சுகந்தி விஷயத்திற்கு வருகிறாள்.
“சொல்லுங்கப்பா என்ன விஷயம்?”
“எனக்கு அவசரமா ஒரு மூவாயிரம் வெள்ளி பணம் தேவைப்படுதும்மா. உன்னத்தான் நம்பியிருக்கேன்.”
“என்னப்பா திடீர்னு இவ்வளவு பணம் தேவைப்படுதுன்னு சொல்றீங்க? எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“எனக்கு இன்னும் ஒரு வாரத்துல பணம் வரலிருக்கு. அப்ப நான் உனக்குத் திருப்பிக் கொடுத்துடறேம்மா.”
“அதுகில்லப்பா. உங்க மாப்பிள்ளை கிட்ட கேட்டா உடனே ஏற்பாடு செஞ்சி தந்துடுவாரே. ஆர்வத்துலதான் எதுக்குன்னு கேட்டேன்.”
“உங்கிட்டே சொல்றதுக்கு என்னம்மா இருக்கு. அதும்மா, என் சினேகிதர் ஒருத்தர் ரஹீம் பாய்னு, ஒனக்குக் கூட தெரியுமில்ல அவருக்கு ரொம்பவே உடம்பு சரியில்லம்மா. ஆஸ்பத்திரியில தான் இருக்காரு. குடும்பமே கஷ்டப்படும். கடனா அவுங்க சம்சாரம் எங்கிட்ட கேட்டாங்க. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லாததால்தான் நான் உங்கிட்ட கேக்கறேன்.”
“சரிப்பா. இன்னிக்கே அவருகிட்ட சொல்றேன்.”
“இல்லம்மா? மாப்பிள்ளைக்கு இது தெரிய வேண்டாம். எப்படியும் நாந்தான் இன்னும் ஒரு வாரத்துல திருப்பிக் கொடுத்துடுவேனே.”
“அவருக்குத் தெரிஞ்சா என்னப்பா? ஒண்ணும் சொல்ல மாட்டாருப்பா.”
“அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. எனக்குத்தான் தன்மானம்னு வச்சிக்கோயேன். என் மகன் பணக்காரன். எனக்கும் வருமானம் இருக்கு. சொந்த மகள் கிட்டயே கேக்கறேன்னு அவர் நினைக்கலாமே. தவிர, இதனால உனக்கு பின்னாடி ஒரு பிரச்சனையும் வரக் கூடாது, பாரு.”
“ஐயோ அப்பா, அவரு கிட்ட கேட்டா ஒரு பிரச்சனையும் வராது. கேக்காம செஞ்சா வேணா அவருக்குக் கோபம் வரலாம்”.
“உன்னோட சேமிப்புல அவ்வளவு இருக்காதாம்மா”
“என்னோட சேமிப்புல அவ்வளவு இருக்கவே வழியில்ல. அதனாலே என்னப்பா. நான் அவருகிட்ட கேட்டு வாங்கி உங்களுக்கு நாளைக்கு தரேனே.”
“அவருக்குத் தெரியணுமான்னு யோசிம்மா. என்னவானாலும், எனக்கு இன்னிக்கி ராத்திரியே சொல்லிடு. அப்பதான் அந்த அம்மா கிட்ட நான் விபரம் சொல்ல முடியும். என்னால முடியலன்னா அவங்க வேற இடத்துலயாவது கேப்பாங்க பாரு.”
“சரிப்பா, நான் ராத்திரி உங்களுக்கு தொலைபேசில கூப்பிட்டு சொல்றேனே.”
“அவருக்கு விஷயம் தெரிய வேண்டாமேன்னு தான் நினைக்கிறேன்.”
“அத நான் பாத்துக்கறேன். நீங்க கவலைய விடுங்கப்பா.”
“அப்ப சரிம்மா. நான் போயிட்டு வரேன்.”
“கவனமா போயிட்டு வாங்கப்பா.”
“சரிம்மா.”
அப்பா செல்வதையே பார்த்தபடி உண்பதை முடிக்கிறாள்.
அவளுக்குச் சற்று வினோதமாக இருக்கிறது. தன் தந்தையின் போக்கு. அவர் இதுவரை அவளிடம் உதவி கோரியதே இல்லை. உண்மைதான்.
ஆனால் இப்போது ஏன் தன்னிடம் கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடு என்கிறார்? அவளுக்கு புரியவேயில்லை.
தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுப்பதானாலும் கூட சுகந்தி தன் கணவனிடம் சொல்லிவிட்டுத் தான் செய்வது வழக்கம். அவள் கணவன் மிகவும் முற்போக்குவாதி. சுகந்திக்குத் தன் கணவன் ஒரு குணவான் என்ற கர்வமே உண்டு.
அவனிடம் விஷயத்தை மறைக்க வேண்டிய அவசியமே அவளுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை.
அவளை அறியாமல் அவளுக்குத் தன் தாயின் நினைவு வருகிறது. சுகந்தியின் திருமண நாள் அன்று அரைமணி நேரம் சில விஷயங்களை அறிவுரைகள் என்ற பெயரில் கூறியிருந்தார் அவள் தாய்.
அப்போது முக்கியமாக வலியுறுத்தி அவர் கூறியதே கணவனுக்குத் தெரியாமல் ஒன்றுமே செய்யாதே, ஒன்றையும் மறைக்காதே என்பதுதான். அதற்குத் தன் வாழ்வில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் அவர்.
சுகந்திக்கு அன்று நடந்த உரையாடல், பத்து வருடமானாலும் இன்றும் மனதில் பசுமையாகவே நினைவில் இருக்கிறது.
“சுகந்தி நல்லபடியா கல்யாணமே முடிஞ்சிடுச்சி. மாப்பிள்ளையும் அவங்க குடும்பமும் நல்ல குணமுள்ளவங்களா தெரியறாங்க. என்னவானாலும் நீ அவங்ககிட்ட நடந்துக்கற முறைலதான் உன் வாழ்வு சிறப்பா அமைய முடியும். உனக்குத் தெரியாதது இல்லை. இருந்தாலும் சொல்ல கடமைப்பட்டவங்ற முறைல நான் சொல்றேன்” அவள் அம்மா அவளிடம் வந்து அமர்ந்த வண்ணம் கூறினார்.
“அம்மா, நீங்க கவலையேப்பட வேண்டாம். உங்களுக்கு மகளாப் பொறந்த நானும் உங்கள் மாதிரி நல்ல பேரு தாம்மா எடுப்பேன். உங்களுக்கு ஒரு கெட்ட பேரு வரமாதிரி நான் என்னிக்குமே நடக்க மாட்டேன். போதுமாம்மா” தன் சிகையலங்காரங்களை மெல்ல கலைத்த வண்ணம் சுகந்தி கூறினாள்.
“நீ புத்திசாலி, அப்படியே நடப்பேன்னு நம்புகிறேன்ம்மா. இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் மட்டும் உனக்கு நான் சொல்ல விரும்பறேன். வாழ்நாளில் உன் கணவனுக்குத் தெரியாமல் நீ எந்த ஒரு சின்ன காரியமும் செய்யாத புரிஞ்சுதா? இது ஒண்ண மட்டும் மறக்காத என்ன?”
“சரிம்மா, மறக்க மாட்டேன். ஆனா, இதச் சொல்லும் போது மட்டும் ஏம்மா உங்க குரல் இப்படி பிசிறடிச்சி கண்ணெல்லாம் கலங்குது? நீங்க அழுகையைக் கட்டுப் படுத்திக்கிறீங்களாம்மா? ஏம்மா உங்களுக்கு ஏதும் மனவருத்தமா?”
“இல்லம்மா அப்படியெல்லாம் இல்ல. உங்கப்பா இன்னிக்கி நீ பார்க்கிறதுக்கும் அன்னிக்கு என் கல்யாணமான புதுசுல நான் பார்த்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?”
“என்னம்மா சொல்றீங்க? ஏதோ சொல்ல வரீங்க. ஆனா தயங்கறீங்க. என்னம்மா? சொல்லுங்க.”
“ஒரு சின்ன விஷயம் தான். எனக்கு கல்யாணமான ஒருமுறை எனக்குன்னு கொடுத்த முந்நூற்று சொச்சம் வெள்ளிய ரொம்ப நாளைக்கு வச்சிருந்தேன்.
திடீரென்று ஒரு நாள் எங்கம்மாவும் அப்பாவும் வந்தாங்க.
அப்பா அவசரமா பணம் வேணும்னு கைய பிசைஞ்சிக்கிட்டு வந்து நின்னாரு. நான் உடனே எங்கிட்ட இருந்த பணத்தை எடுத்து அவருகிட்ட கொடுத்தேன்.
உங்கப்பா கிட்ட அன்னிக்கே சொல்ல மறந்துட்டேன். மறுநாளே விஷயம் தெரிஞ்சு, தனக்குத் தெரியாம நான் எடுத்து பணத்தைக் கொடுத்தன்னும் மறைக்க நினைச்சு மறைச்சிட்டேன்னும் உங்கப்பா சொந்தக்காரங்க முன்னாடி என்ன குற்றவாளியாக்கிட்டாங்க. அன்னிலேருந்து நான் மிகவும் கவனமாயிருக்கேன்.”
“அப்பாவா…? இத்தனை அநியாயமா உங்களைப் பேசினாரு?’
“உனக்கு நம்ப முடியாதும்மா. நான் அன்னியிலேருந்து எங்கூடப் பிறந்தவங்க கிட்டேயிருந்தும் விலகியே இருந்தேன். நெருங்கினா சில செலவுகள் வருமே. எனக்கு சுதந்திரம் இல்லாம இல்ல. இருந்தாலும் எனக்குன்னு நானே ஒரு கோடு போட்டுக்கிட்டேன். அதைத் தாண்டாம இருந்தேன். உங்கப்பா மாறினாரு. ஆனா, மெல்ல மெல்ல தான் மாறினதும் தான் மாறுவதையும் அவர் விரும்பவேயில்லை.
என்னிக்கோ நடந்ததை இன்னிக்கி உங்கிட்ட சொல்ல வேண்டியதில்லை. ஆனா உனக்கு நான் கூறும் அறிவுரை மனதில் நல்லபடியா பதியத்தான் இதைச் சொல்றேன்.”
அதானா! மாமா அவங்க குடும்பம் எல்லாம் உங்கிட்ட நெருக்கமும், ஆசையுமில்லாம இருக்காங்க?”
“அவங்களுக்கு என் நிலைமை புரியலைஅயே. என்னத் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. அவங்களச் சொல்லி குத்தமில்ல.”
“அன்னிக்கு உங்கப்பா என்னப் பேசின பேச்சு, எங்கப்பாவையே தரக் குறைவாப் பேசினது எல்லாம் என் மனசுல ஆறாத வடுவா இருக்கு. அவரும் தானும் ஒரு தகப்பனாகப் போறத நினைச்சிருக்க மாட்டாரு.”
கலங்கிய கண்களுடன் தன் தாய் கூறியதை சுகந்தி பெருமூச்சுடன் நினைத்து கொள்கிறாள்.
யோசித்தபடியே நடந்த சுகந்தி அலுவலகத்தை அடைந்து விட்டிருந்தாள். வேலையில் ஈடுபட்டாள்.
மனதில் மட்டும் தன் தேவையன்று வரும்போது நியாயங்கள் மாறிவிட்டனவா? என்ற கேள்வி எழுந்து எழுந்து அடங்கியது. வயதானால் என்ன, குணங்கள் மாறலாம், நியாயங்களுமா மாறிவிடும்?
இல்லை… குணங்கள் மாறும்போது முதிர்ச்சியடையும் போது, நியாயங்கள் அங்கீகரிக்கப்பட்டு பொதுவுடைமையாகின்றனவா? தன் தந்தை என்றெண்ணாமல் மனிதனின் மனநிலை மாற்றங்களை ஆராய்கிறாள் சுகந்தி.
– 1995, தமிழ் முரசு.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆண்பார்க்க வந்தவள்
நிர்மலா ராகவன்
June 9, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 9, 2026
அவளின் குரல்
வினோதா ராமன்
June 9, 2026
