நிம்மதி
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் காலத்து இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஹரிக்கேன் லாந்தர் விளக்கைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை விளக்கின் ஒரு பக்கத்தில் கம்பியை வளைத்து கட்டை விரல் மாதிரி நீட்டி வைத்திருப்பார்கள். அதை அமுக்கினால் கண்ணாடி உயரும். இடையில் ஏற்படும் இடுக்கின் வழியாகத் தீக்குச்சிக் கொண்டு விளக்கை ஏற்ற வேண்டும். விளக்கினுள் மேல் பாகத்தில் படிந்து விடும் கரிப்புகையைச் சரியாகத் துடைத்து சுத்தம் செய்யாவிட்டாலும் அல்லது திரி கொடுகிற அளவுக்கு விளக்கில் மண்ணெண்ணெய இல்லாவிட்டாலும் விளக்கு எரியாது. குபுக் குபுக்கென்று குதித்து அணைந்துவிடும். போதுமான எண்ணெயோடு சரியாக எரிய ஆரம்பித்துவிட்டால் புயல் அடித்தால்கூட அணையாது. அதனால்தான் அதற்கு ‘ஹரிக்கேன்’ விளக்கு என்று பெயர் அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று ஹரிக்கேல் விளக்கு, கோழி முட்டை போன்ற கிளாஸ் பொருத்திய பெட்ரூம் விளக்கும் சமையல் அறையில் கை விளக்கான சிம்னி விளக்கு இருக்கும். சிம்னி விளக்குக்குக் கிளாஸ் கிடையாது.
அலுத்துக் களைத்துப் பசியோடு நரசிம்மன் வீடு திரும்பியபோது மணி எட்டு இருக்கும். வீட்டில் வெளிச்சமே இல்லை. எப்போதும் சுவாமி மாடத்திற்கருகே எரியும் குத்து விளக்குக் கூடத் திரி எரிந்து போய் விட்டது மீனா ஓடிச் சென்று ஹரிக்கேன் விளக்கை ஏற்ற முயன்றாள்; ஒன்று, இரண்டு மூன்று எனத் தீக்குச்சிகள்தான் தீர்ந்து போயின. விளக்கு எரிந்தால்தானே! எண்ணெய் இல்லை. விளக்கில் மட்டுமல்ல; புட்டியிலும் எண்ணெய் இல்லை. கை விளக்கான சிம்னி விளக்குதான் ஆபத்துதவி. அந்த மங்கிய ஒளியில் பெயருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டுப் படுத்தான் நரசிம்மன்.
1949ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை ‘நிம்மதி’. மாதச் சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் வறுமை நிலையையும், அன்றாடம் வீட்டில் ஏற்படும் நிம்மதியற்ற சூழ்நிலையையும் பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
அருமையான கதை. மனித மன இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் ஆசிரியரின் தனித்திறமை தெரிகிறது. வீண் ஆர்ப்பாட்டமோ வார்த்தை ஜாலமோ இல்லாமல் இயல்பான, எல்லாருக்கும் புரியும்படியான எளிய நடை, அறுபதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றாலும் கூ இன்றும் படித்து, ரசித்து மகிழக்கூடிய கதை. ‘நிம்மதி’.
– மாயூரன்
நிம்மதி
“அப்பப்பா, என்ன கூச்சல்! இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட நிம்மதியில்லையா?” என்று கூவினான் நரசிம்மன்.
கையில் செய்தித்தாளுடன் ‘காமிரா’ உள்ளினின்று கோபாவேசத்துடன் கூவிக் கொண்டே அந்த அவன் முகத்தில் ஆத்திரம் ஜ்வலித்தது. தொட்டிலில் படுத்துக் கொண்டிருந்த குழந்தை நிமிஷத்துக்கு நிமிஷம் அழுகையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.
“ஆபீஸிலே எட்டு மணி நேரமும் உழைத்துவிட்டு இங்கே கொஞ்ச நேரம் நிம்மதியாயிருக்கலாம்னா இந்த வீட்டிலே கொஞ்சம் கூட முடியவில்லையே! குழந்தையைக் கொஞ்ச நேரம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாலென்ன? அதைவிட என்ன வெட்டி முறிக்கிறாப் போலேயாம்?” என்றான் நரசிம்மன் உரத்த குரலில்.
சமையல் உள்ளிருந்து கைக் காரியத்தை அப்படியே போட்டு விட்டு வந்தாள் மீனா.
“வெட்டி முறிக்காத போனாலும் எனக்கும் வேலைன்னு ஒண்ணு மில்லையா? இப்படி ஒரு நிமிஷம் வீட்டிலே இருக்கிறதுக்குள்ளே அழுகையைப் பொறுத்துக்காமே அங்கலாய்த்துக் கொள்கிறேளே! பொழுது விடிஞ்சா. நாள் முழுதும் அதோடேயே பொழுதைக் ஈழிக்கும் எனக்கு எப்படி இருக்கும்?” என்றாள்.
நரசிம்மனின் கோபம் இன்னும் அதிகமாயிற்று.
“குழந்தையும் நீயும் எப்படியாவது போங்கள்! நன்றாகத் தூங்கித் தொலைந்த பிறகு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே போய்விட்டான்.
சந்தோஷமானவர்களுக்கும் சங்கடம் உள்ளவர்களுக்கும் தஞ்சம் அளிக்குமிடம் கடற்கரையல்லவா? மணலில் அழுத்தி அழுத்திக் கால் பதிய நடந்து சென்று ஓர் ஒதுக்குப்புறமாகப் பார்த்து உட்கார்ந்தான் நரசிம்மன். பட்டாணி சுண்டல் விற்பவன் இரண்டு, மூன்று முறை அந்தப் பக்கம் போய் அவன் பொறுமையைச் சோதித்தான்.
மூன்றாவது முறை அந்த ‘நைப்பாசை அவனைச்சும்மா விடவில்லை. “இந்தப்பா!” என்று கைதட்டிக் கூப்பிட்டான். அரையணா கடலை வாங்கி வைத்துக் கொண்டான். எவ்வளவுக்கெவ்வளவு சுவாரஸ்யமாக் வாங்கினானோ, அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சுவாரஸ்யம் கையில் கடலை வந்த பிறகு போய்விட்டது.
பலவித யோசனைகள் பின்னலிட்டன. உண்மையில் எவ்வளவு பெரிய கூச்சலிடையேயும் நிம்மதியாக இருப்பதென்றால் இருக்கலாம் ஆனால், மனத்தில் அலை கடலென எழுந்து மோதும் அந்த வேதனைகள் அவனுடைய நிம்மதியைக் குலைத்துவிடும்.
சம்பளமாக முழுசாக வரும் எழுபது ரூபாயில் அந்த ஈட்டிக்காரல் ஆறுமாத வட்டிக்காரன் – காபூலிவாலா இருக்கிறானே, அவள் தயாராக வந்து அலுவலகம் எதிரே காத்துக் கொண்டிருக்கும்போது முழுசாக இருபது ரூபாய் அவனுக்கு அழுதுவிட்டு மீதி ஐம்பது ரூபாயுடன் வீடு திரும்பும்போது மனத்தில் அமைதி ஏது?
அந்த இருபது ரூபாய்… இதுவரை நான்கு மாதம் செலுத்தியாரி விட்டது. இன்னும் நூற்று அறுபது ரூபாய் – இருநூறு ரூபாய் கடன் வாங்கியதற்கு இருநூற்று நாற்பது ரூபாய். இதை நினைக்கும்போதே அவனுக்கு ஆத்திரம் வந்தது.
இப்பொழுது கத்தியதே ஒரு குழந்தை, அந்தச் சங்கரியின் பிரசவத்திற்காகத்தான் அவன் காபூலிவாலாவிடம் கடன் வாங்கினாள் பிரசவத்திற்கு முன் பணத்துக்கு என்ன செய்வது என்று ஏங்கிக் கொண்டிருந்தபோது இந்தக் காபூலிக்காரன் ‘பிரத்யட்ச’மானான். ஒரு நகை நட்டு ஈடு வைக்காமல் வள்ளிசாக நூற்றி எண்பது ரூபாயை எண்ணிக் கொடுத்தான். இருநூறு ரூபாய்க்கு எழுதி வாங்கிக் கொண்டான்.
எப்படியாவது பணம் கிடைத்து மீனா சுகப்பிரசவம் ஆகிவிட்டால் போதும் என்றிருந்தது நரசிம்மனுக்கு.
அதே மீனா சுகப்பிரசவமாகி எந்தச் சங்கரியைக் கொஞ்சினாளோ, அதே சங்கரி தொட்டிலில் படுத்துக் கொண்டு அழும்போது, நரசிம்மனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சுகமாகப் பிழைத்து எழுந்தால்போதும் என்று ஏங்கிய அதே மீனாவைக் கண்டால் இன்று வெறுப்பு.
அதற்குச் சமாதானமாகத் தனக்குத் தானே ‘நிம்மதி’ என்ற வார்த்தையை அவன் உபயோகிக்கிறான். உண்மையில் ‘நிம்மதி’ பண அளவில் தான் – வறுமை இருள் மறையும் வரையில்தான் என்பது அவனுக்குத் தெரியாதா, என்ன?
நன்றாக இருட்டி விட்டது. தூரத்தே ஹைகோர்ட் ‘லைட் ஹவுஸி’ லிருந்து ஒளி சுழன்று வந்தது. மினுக் மினுக்கென்ற பழைய எலக்ட்ரிக் விளக்குகள். இந்த மெர்க்குரி விளக்குக்கிடையே ஒளியிழந்து நின்றன. ஜனக்கடல் கலைந்து போய், அலைகடலின் பேரொலி அந்தப் பிராந்தியத்தில் அதிகமாயிற்று.
துண்டை உதறிக் கொண்டு எழுந்தான் நரசிம்மன். அப்பொழுதும் பல பல யோசித்து ஒரு முடிவுக்கும் வராத குழப்ப நிலை, கையிலிருந்து கடலையைக் கூட, ஏனோ அப்படியே வீசி எறிந்தான்.
வீட்டிற்குள் நுழையும்போது மணி எட்டு. வெளிச்சமின்றி இருளோ என்றிருந்தது. வழக்கமாக, எப்போதும் சுவாமி மாடத்துக்கருகே எரியும் குத்து விளக்கில்கூடத் திரி எரிந்து போய்விட்டது. நரசிம்மனின் ஆத்திரம் அதிகமாகியத.
கால் செருப்புச் சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்த மீனா, ஓடோடியும் சென்று ஹரிக்கேன் விளக்கை ஏற்ற முயன்றாள். ஒரு குச்சி, இரண்டு குச்சி, மூன்று குச்சிகள்… எரிந்தால்தானே?
வெளியே இருந்து உள்ளே நுழைந்ததால் நரசிம்மனுக்கு நன்றாக வியர்த்திருந்தது. பசி, பழைய ஆத்திரம் இரண்டும் சேர்ந்தன.
“மூதேவி பிடித்து விட்டதா, வீட்டில்? நாள் முழுதும் உழைக்கிறேன், உழைக்கிறேன் என்றாயே… அந்த லட்சணம் இதுதானா?” என்று கூவினான் அவன்.
மீனா பதில் பேசவில்லை. விளக்கை ஆட்டிப் பார்த்தாள். எண்ணெய் இல்லை. கைவிளக்கான சிம்னி விளக்குத்தான் ஆபத்துதவி. அதைக் கொளுத்தினாள். மண்ணெண்ணெய் புட்டியை எடுத்துப் பார்த்தாள். ஒரு துளிகூட இல்லை.
“காலையில் கூடச் சொன்னேன். எண்ணெய் இல்லையென்று…” என்று ஆரம்பித்தாள் மீனா.
“இல்லையா?துளிக்கூட இல்லையா? இப்போதுதானே வாங்கினேன். அதற்குள்ளேயா ஆகிவிட்டது?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
உண்மையில் எண்ணெய் வாங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது.
“அதற்குள் ஆகாமல் என்ன செய்யும்? குடித்துவிட்டேனா?!! என்றாள் மீனா.
அவளுக்கு ரோசம் என்பதில்லையா? எப்படித் தீரும் எண்ணெய்! என்று கேட்டால் இந்தப் பதில்தானே கூற வேண்டும்? ஆனால் சமயம் சரியா என்று அவள் கவனிக்கவில்லை.
”வரவரக் கழுதைக்கு வாய் அதிகமாகிவிட்டது. மூதேவி வீட்டைக் கவனிக்கிறதே இல்லை!” என்றான் நரசிம்மன்.
மீனா விம்மினாள். இலை போடப்பட்டது. ஏதோ கடனுக்காகச் சாப்பிடுவது போல அந்த மங்கிய விளக்கொளியில் சாப்பிட்டுவிட்டு ‘அப்பாடா!’ என்று எழுந்தான் நரசிம்மன்.
பாயை விரித்துப் படுத்துவிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
அதற்குள் சங்கரி இரவு ஆகாரத்துக்காக விழித்துக் கொண்டாள்.
தாயும் அருகிலேயில்லை. அழுகை பொங்கி வந்தது அவளிடமிருந்து விசும்பும் ஒலி கேட்டது.
“சனியன்!” என்று நரசிம்மனின் உதடுகள் முணுமுணுத்தன. பாயை வாரிச் சுருட்டிக் கொண்டு திண்ணைக்குப் போய்விட்டான். முதலில் தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்தாலும் பிறகு நல்ல தூக்கம்.
காலை விடிந்ததும் சங்கரிக்கு வயிற்றுப் போக்கு. மீனா இதுபற்றி கணவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. குழந்தையை டாக்டர் சீதாராமனிடம் கொண்டு போய்க் காட்டினாள்.
நரசிம்மனை அவருக்குத் தெரியும். அவர் குழந்தையைப் பரிசோதித்தார். வயிற்றுப் போக்குக்கு மருந்து கொடுத்து, “அம்மா! குழந்தைக்கு வயிற்றில் கட்டி…” என்றார்.
பதறிவிட்டாள் மீனா. “டாக்டர், டாக்டர்! எத்தனை மாசக் கட்டி! பயமில்லையா? டாக்டர்! என்ன மருந்து கொடுக்க வேண்டும்?” என்று கேட்டாள்.
“பயப்படாதே அம்மா! இப்பொழுதுதான் அதற்கான அறிகுறி கண்டுள்ளது. நல்ல வேளை. எதேச்சையாய்ப் பார்த்தோம். இல்லாவிடில் வளர்ந்த பிறகு மருந்து கொடுப்பது சாத்தியமா? நரசிம்மனிடம் சொல்லுங்கள் ஐந்து ரூபாய் மருந்து நாலு பாட்டில் வாங்கிக் கொடுத்தால் போதும்” என்றார்.
கலங்கிய கண்களுடன் வீடு திரும்பினாள் மீனா. கோபத்துடன் அவளை வரவேற்றான் நரசிம்மன். “எங்கே போயிருந்தே, உன் செல்லக் குழந்தையை எடுத்துண்டு?” என்று கேட்டான்.
ஓவென்று அழுதேவிட்டாள் மீனா. “குழந்தைக்கு வயிற்றில் ஈட்டியாம்…” என்றாள் விம்மலிடையே.
அவனுக்கு இது ‘சொரேர்’ என்று தைத்தாலும் கூட ‘செலவு’ என்ற பூதம் மீண்டும் ஏதோ ஒரு புது உருவில் வந்திருப்பதாகத் தோன்றியது. அவன் பதிலே பேசவில்லை. கொல்லைப்புறம் போய்விட்டான்.
அன்று ஆபீஸிலிருந்து வரும்போது திடமான முடிவுடன் வந்தான் நரசிம்மன். மீனாவைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைப்பது என்பதுதான் அந்த முடிவு.
‘அவள் திரும்பி வருவதற்குள் இந்தக் கடன் தொல்லைகளும் தீர்ந்து விடும். ஏதோ குழந்தைக்குக் கட்டி என்கிறார்களே… அதையும் அவர்களே பார்த்து அனுப்ப மாட்டார்களா? கொஞ்ச நாளைக்குத்தான் நிம்மதியாக இருக்கலாமே!’ இவ்வாறு அவன் எண்ணினான்.
நரசிம்மன் இதை அவளிடம் நாசூக்காகச் சொல்லும்போது மீனாவுக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால், தன் கணவருடைய அலட்சிய புத்திக்கு இந்த மாறுதல் ஒரு மருந்தாயிருக்கட்டுமே என்று அவள் ஊருக்குப் போகச் சம்மதித்தாள்.
மீனாஊருக்குப்போய் ஒரு வாரமாயிற்று. வீடு ஒரேசூன்யமாயிருந்தது. விளக்கும் சரிவர ஏற்றப்படவில்லை.
ஹரிக்கேன் விளக்கைத் தூக்கினால் சிம்னி கழன்றது. மேல் பர்னரைத் தூக்கினால் திரியை எட்டுவதற்குள் நெருப்புக் குச்சி அணைந்தது. தினம் ஒருமுறை குடித்தனக்காரப் பையனைக் கூப்பிட்டு அந்த விளக்கை ஏற்ற சொல்லும்போதுதான் நரசிம்மனுக்குத் தனது பழைய முட்டாள்தனம் நினைவுக்கு வந்தது.
மீனா வீட்டை விட்டுப் போன பிறகும் அவனுக்கு நிம்மதியில்லை என்றால்..?
ஒருநாள் அவன் எழுந்து வாசல் பக்கம் வரும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நின்றது. அவன் தங்கை, தங்கையின் குழந்தைகள், தங்கையின் கணவர் எல்லாரும் இறங்கினார்கள்.
நரசிம்மன் ஒருகணம் சிலையாய் நின்றான்.
மறுகணம் சமாளித்துக் கொண்டு, “வாம்மா காவேரி! ஒரு கடிதாக போடக் கூடாதா? நான் ஸ்டேஷனுக்கு வந்திருக்க மாட்டேனா?!! என்றான் அவன்.
“போடணும்னுதான் நினைச்சேன். என்னவோ திடீர்னு அந்த ஊர் பிடிக்கலை. அப்பாடான்னு ஒரு மாசம் எங்கேயாவது இடம் மாறினாத் தேவலைப்போல இருந்தது. நினைச்சேன்; அவரிடம் சொன்னேன். சொன்ன மறுநாள் கிளம்பிவிட்டோம்” என்றாள் காவேரி.
நரசிம்மனுக்கு ஒன்றுமே பேச வரவில்லை.
“அண்ணா! மீனா எங்கே?” என்றாள் அவள்.
“குழந்தைக்குக் கட்டி… அவள் பொறந்த வீட்டிலிருந்து வந்து அழைச்சுண்டு போயிருக்கா. நீ வருவது தெரிந்தா அவளை அனுப்பாடி இருந்திருப்பேன்” என்றான் அவன், மனச்சாட்சிக்கு விரோதமாய்.
காவேரி வந்தபிறகு வீடு கலகலப்பாக இருந்தது. இந்தக் கலகலப்பு நரசிம்மனுக்கு இப்பொழுது பிடித்தது.
இரு வாரங்கள் கழிந்தன. காவேரி படுக்கை பெட்டிகளையெல்லாம் கட்டிக் கொண்டிருந்தாள்.
“ஏன், இதற்குள் கிளம்பி விட்டாய்?” என்றான் நரசிம்மன்.
“எவ்வளவு நாள் இங்கே தங்குவது? சும்மா இட மாற்றம் இருக் கட்டுமே என்று வந்தோம். தங்கியாகிவிட்டது. புறப்படுகிறோம்’ என்றாள் காவேரி.
காவேரியும் போன பிறகு நரசிம்மனுக்கு இருப்பே கொள்ளவில்லை. வீட்டில். பாதி நாள் அவன் வீட்டுக்கு வர மாட்டான். இத்தனை நாளும் போகாத சிநேகிதிர் வீடு, தூரத்து உறவினர் வீடு. இவற்றுக்கெல்லாம் சென்று ‘டிகானா’ போடுவான்.
அன்று நரசிம்மன் காரியாலயத்துள் நுழைந்ததும். “மிஸ்டர் நரசிம்மன்! கோயமுத்தூர் பிராஞ்சுக்கு நீங்கள் போக முடியுமா?'” என்று கேட்டார் மானேஜர்.
ஏதோ சொப்பன லோகத்திலிருப்பதுபோல் நரசிம்மன் தலையை ஆட்டினான். “நீங்கள் அங்கே போய் அந்த ஊழல்களைச் சரிப்படுத்திப் பழைய மானேஜரை ‘ரிலீவ்’ செய்து விட வேண்டும்” என்றார் மானேஜர்.
மறுநாள் ‘புளூ மவுண்ட’னில் கோயமுத்தூருக்குப் போவதற்குப் பதிலாகப் பொள்ளாச்சிக்கு பயணமானான் நரசிம்மன்.
ராத்திரி ஏழு மணிக்குப் பொள்ளாச்சி வந்து சேர்ந்தது ரயில். பிசுபிசுவென மழை பெய்து கொண்டிருந்தது. இருந்தாலும் அவன் மனத்தில் இப்பொழுது ஏதோ ஒரு நிம்மதி குடி கொண்டிருந்தது. கொயமுத்தூருக்குப் போகிறேன் என்று அவன் ஒப்புக் கொண்டதற்குக் நாரணம் உத்தியோக உயர்வு மட்டுமன்று. மீனாவின் பிறந்தகம் பொள்ளாச்சியில் இருக்கிறது என்பதற்காகவும்தான்!
‘கடக் கடக்’ என்ற சப்தத்துடுன் வாசலில் வண்டி நின்றதும், மீனா ஹெரிக்கேன் விளக்குடன் வந்து கதவைத் திறந்தாள்.
அவளைத் தொடர்ந்து வந்த அவள் தகப்பனார், “மாப்பிள்ளையா!” என்றார் வியப்புடன்.
நரசிம்மன் திடுதிடுவென்று உள்ளே சென்றான். தொட்டிலில் சங்கரி படுத்துக் கொண்டிருந்தாள். அவளை வாரி எடுத்துக் கொண்டான் அவன்.
“என்ன திடீர்னு கருணை!” என்றாள் மெல்லிய குரலில் மீனா.
”ஊம்… இனிமேல் எல்லாம் நமக்கு இங்கேதான். இப்பதாண்டியம்மா எனக்கு நிம்மதியாச்சு!” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை முத்தமிட்டான் நரசிம்மன்.
அரைத் தூக்கத்திலே திடீரென விழித்துக் கொண்ட சங்கரி வீறிட்டழுதாள்.
ஆனால், அந்த அழுகை இப்பொழுது நரசிம்மனுக்கு இன்பமாக இருந்தது.
– 1949
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.