நான் உனக்காக தினம் வாழும் உயிரல்லவா




சிறுகதை (தானுங்கோ! உண்மையெல்லாம் இல்லை!)
*********************************************
நான் உனக்காக தினம் வாழும் உயிரல்லவா
*********************************************
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही।।
Vasansi jirnani yatha vihaya navani grhnati naro’ parani |
tatha sarirani vihaya jirnanyanyani samyati navani dehi ||
Bhagavad Gita – Chapter 2, Verse 22
“சுனோ ஜி ” என்றாள் சுஜா. ” ப்ளீஸ் இன்னிக்கு எதுவும் வேலை சொல்லாதே. நான் வெளில போறேன். Day long engagement” என்றேன் நான் என்னும் வெங்கடேஷ் என்னும் வீயார்.
“ஆமா உங்க எங்கேஜ்மென்ட் என்னன்னு தெரியாதாக்கும்? எப்பவும் fbன்னே இருந்தா வீடு எப்படி உருப்படும்? நானும் ரெண்டு வாரமா சொல்றேன். இன்னும் அத தேடி எடுத்தபாடில்ல…”
“இது பொய்யின்னு உனக்கே தெரியும். நானும் தேடாத எடமில்ல. கிடைக்கலேனா நான் என்ன பண்ண முடியும்?”

“அம்மா ஆசை ஆசையா பேத்திக்குன்னு கொடுத்தது. எப்படியும் இன்னி தேதில ஒண்ணு ஒண்ணேகால் லகரம் இருக்கும்” என்றாள் ஈனஸ்வரத்தில்.
“இங்க பாரு நான் இல்லேன்னு சொல்லல. ஆனா அது எங்கியும் போயிருக்காதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஸாயி இருக்கார். நல்லதே நடக்கும்” என்றேன்.
அவள் ஒன்றும் பேசவில்லை. நான் கனத்த இதயத்துடன் எழுந்து மத்யமர் விழாவுக்குச் செல்ல தயாரானேன். விஷயம் இதுதான். அவள் அம்மா எங்கள் பெண்ணுக்கு என்று ஒரு நகை கொடுத்திருந்தாள். சுஜா சொன்ன மாதிரி விலை மதிப்பானதுதான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அதை போன மாசம் ஒரு கல்யாணத்துப் போகவேண்டும் என்று லாக்கரில் இருந்து எடுத்தவள், கல்யாணத்துக்குப் போய் வந்தபின் எங்கோ ஞாபக மறதியாக வைத்து விட்டாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாங்களும் மூன்று வாரமாக தேடித் தேடி அலுத்து விட்டோம். யாரோ சொன்னார்கள் என்று கார்த்தவீரியார்ஜுன மந்திரத்தை வேறு ஆயிரத்தெட்டு முறை ஜெபித்தும் பார்த்தோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.
இதனிடையில் தான் நான் மெம்பராக இருக்கும் ஒரு முகநூல் குழுவின் ஆண்டு விழா அறிவிப்பு வந்தது. இந்தக் குழுவில் சேர்ந்த பிறகு என் நட்பு வட்டம் பெரிதானது உண்மைதான். அதே சமயம் எனக்கும் சுஜாவுக்கும் இடையே எழுந்த மனஸ்தாபத்துக்கும் அதுவே காரணம். நான் மிக அதிகமான நேரம் அந்தக் குழுவில் செலவிடுகிறேன் என்பது அவள் குற்றச்சாட்டு. அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய? இந்த மீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. இதுவரை நேரில் சந்திக்காத பல நட்புகளை சந்திக்கும் வாய்ப்பை நான் நழுவ விட விரும்பவில்லை.
நான் சுமார் எட்டரை மணிக்குக் கிளம்பியபோது சுஜா வந்து வழியனுப்பவில்லை. சரி கோபம் தணியும் என்று கிளம்பி வந்துவிட்டேன். விழா மண்டபத்தை அடைந்ததும் மனம் சற்று மகிழ்வானது. தெரிந்த தெரியாத முகங்கள் ! சிலர் என்னைப் பார்த்து “ஹாய் வீயார்” என்று அகமகிழ்வோடு விளித்தது மிகவும் சந்தோஷம் தந்தது.
விழாவுக்கு சுமார் ஐநூறு பேர்கள் வந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் அந்தக் குழுவின் பெயர் பொறித்த பேட்ஜ் அணிந்த மனிதர்கள்! ஏதோ கட்சி மாநாடுக்கு வந்த உணர்வு!
அப்போது தான் அந்த நண்பரைப் பார்த்தேன். (பெயர் வேண்டாமே!). “ஹாய்!” என்றேன். என்னைப் பார்த்தவர் முகத்தில் ஒரு குழப்பப் ரேகைகள். பிறகு சற்று முகம் தெளிந்து” வீயார்! the very man I wanted to see!” என்றார்.
“வாங்க உட்கார்ந்து பேசலாம்” என்றேன். சரியென்று வந்து என்னருகில் இருந்த சேரில் உட்கார்ந்தார்.
“எப்படி இருக்கீங்க? உங்க போஸ்ட் எல்லாம் நான் ரொம்ப ஆர்வமோடு படிப்பேன். உங்களுக்குத்தான் எவ்வளவு fan following!” என்றேன்.
“அதெல்லாம் சும்மா சொல்லாதீங்க. சரி அது இருக்கட்டும். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே!” என்றார்.
“சொல்லுங்க” என்றது மனிதர் மடை திறந்த வெள்ளம் போல கொட்டித் தீர்த்துவிட்டார். அதன் சாராம்சம் இதுதான்.
எனக்கு முன்னால் வெகு முன்னால் விழா வென்யூவுக்கு வந்துவிட்ட அவர் அறிமுகம் இன்னொரு நண்பருடன் ஆனதாம். அவருக்கு சுமார் இருவத்தைந்து வயதிருக்குமாம். பேசிக் கொண்டே இருக்கையில் அந்த இளைஞர் சட்டென்று இவரைப் பற்றியும் இவர் குடும்பத்தைப் பற்றியும் பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தாராம். அதுவும் நெருங்கிய குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத விஷயங்கள்!
இவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கடைசியாக அந்த இளைஞர் சொன்ன விஷயம்தான் இவரை ரொம்பவுமே பயப்பட வைத்ததாம். அது இவருக்கும் இவர் தந்தைக்கும் (இவர் தந்தை தவறி முப்பது வருடங்கள் இருக்குமாம்) மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்.
“அவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டிருக்கலாமே” என்றேன்.
“கேட்டேன் ஜி! அதுக்கு அவர் சொன்னார் “என்னடா! என்னத் தெரியலையா? நான்தான் உன் அப்பா!”
“என்ன” என்று கேட்டேன் சேரின் நுனிக்கே வந்துவிட்ட நான்.
“எனக்கும் அப்படித்தான் ஆச்சு ஜி! அப்பத்தான் உங்க நினைவு வந்தது. ஆவிக் கதைங்க எழுதறீங்களே, உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கும். உங்களை கேக்கலாம்ன்னு தான் உங்களைத் தேடி வந்தேன்”
எனக்கு திக்கென்றது. ஏதோ கதைகள் எழுதுகிறேன் சரி. அதனால் ஒரு மீடியம் ரேஞ்சுக்கு என்னைக் கொண்டு வைத்துவிட்டாரே!
“ஜி! முடிவா ஒண்ணும் சொல்லத் தெரியல இப்ப. அந்த ஆள் எங்க இருக்கார்? வாங்க பார்க்கலாம். நான் பேசிப் பார்க்கறேன் அவர்கிட்ட” என்றேன்.
“அது இன்னும் பெரிய அதிசயம் சார். கொஞ்ச நேரம் கழிச்சு அவரைத் தேடறேன். கண்ல அகப்படல மனுஷன்”
நான் திகைத்தேன். ஒருவேளை உண்மையாக இருக்குமோ? சே! அதெல்லாம் இருக்காது இந்த ஆவி பேய் எல்லாம் உடான்ஸ். ஏதோ பயன்திருக்கார் மனுஷன். சரி எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று பொதுப்படையாக சில விஷயங்கள் சித்தர் பாட்டு என்று சொல்லி ஒப்பேற்றினேன். அவருக்கு திருப்தி படவில்லை. பிறகு மதிய உணவு இடைவேளை ஆனது. Buffet தான். நான் எனக்கு ஒரு ப்ளேட் எடுத்து பிடித்த உணவு ஐட்டம்களை போட்டுக்கொண்டு ஒரு ஓரமாக சேரில் உட்கார்ந்தேன். என் மொபைல் சிணுங்கியது. சுஜா!
“அம்மா! கொஞ்சம் நிம்மதியா விடறியா? சாயந்தரம் வந்து தேடறேன்” என்றேன் கோபமாக. அவள் ஒன்றும் சொல்லாமல் வைத்துவிட்டாள்.
“அவளை ஏன் கோவிக்கற? வெலப் பிடிச்ச பண்டம்! அதான் பதட்டப்படறா. ஹால்ல ஷோ கேஸ்ல மேல் ஷெல்ப்ல இருக்கற உடையவர் படத்துக்கு பின்னால பாரு. அங்க கெடைக்கும். நீ தானே அன்னிக்கு அங்க பத்திரமா இருக்கும்னு வச்சே! என்று ஒரு குரல் என் அருகில் கேட்டது.
பயந்து, திகைத்து விதிர்விதிர்த்துத் திரும்பிப் பார்த்தால் ஒரு எட்டு வயசுப் பையன்! என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்துவிட்டு ஓடிவிட்டான். யாருடன் வந்தவன் என்று தெரியவில்லை.
‘சுஜாவுக்கு ஃபோன் செய்’ என்று உள்மனம் சொன்னது. நான் மொபைலை எடுத்து அவளை அழைத்தேன். “என்ன?” என்றாள் சுவாரசியம் இல்லாமல்.
அந்தப் பையன் சொன்னதைச் சொன்னேன்.
“இதோ லைன்ல இருங்க பார்க்கறேன்” என்றவள் ஒரு முப்பது வினாடிகள் கழித்து “சுனோஜி! கெடச்சுடுத்து! ஸாயி நம்மள கைவிடல” என்று சப்தமாக கத்தினாள் ஃபோனில்.
எனக்கு அதெல்லாம் உறைக்கவில்லை. எனக்கு உறைத்ததேல்லாம் என் அம்மா தவறி சுமார் ஒன்பது வருஷங்கள் இருக்கும் என்பதும் அந்தப் பையன் ஒரு பெண் குரலில் பேசினான் என்பதும் தான்.