அறுவடை




இராஜகோபாலன் , சிறந்த கிருஷ்ண பக்தர் . ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. வழி வழியாய் ஐந்தாம் தலை முறையாய் ஜோசியம் சொல்லும் பரம்பரையில் வந்தவர். பல்முத்து முளைக்கும் முன்னமே சொல்முத்து முளைத்தவர். அவர் நாவில் சரஸ்வதி தவழும், லக்ஷ்மி கடாக்ஷம் செழித்திருக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தமாத்திரத்தில் கிரஹ சேர்க்கை என்ன, பலன்கள் என்னென்ன, பரிகாரங்கள் என்னென்ன என்று அனைத்தும் நிமிஷமாத்திரத்தில் சொல்லிவிடுவார். கேட்பவர்கள் உறைந்துபோய் நிற்பார்கள். எந்த நேரமும் அவர் வீட்டில் 7 , 8 பேர்கள் அவருக்காக காத்திருப்பார்கள்.
பித்ரு கர்மாக்கள் எல்லாம் ஸ்ரெத்தை தவறாமல் செய்வார் . அவர் இருக்கும் தெருவில் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கு அன்னதானம் தவறாமல் கொடுப்பார். அவனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு போவான்.
இவருடைய மனைவியை ஓர் வரியில் சொல்லமுடியுமேயானால், அஷ்ட லட்சுமிகளும் ஒட்டுமொத்தமாய் ஓருருவில் வந்தது போல் இருப்பாள். இந்த யோக தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். இருவரும் இவர்களின் இரு கண்கள், கண்ணின்மணிகள். இராமனும் லக்ஷுமனும் போல் என்று பார்ப்போரை பொறாமைகொள்ள வைக்கும்.
தீவிர வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த இவர்கள் சிறு வயதிலிருந்தே ஆழ்வார்கள் பாசுரங்கள், திவ்யப்ரபந்தம் என அனைத்தையும் அக்க்ஷரம் மாறாமல் சொல்வார்கள்.
இராஜகோபாலன் தன் மூத்த மகனை வேத பாடசாலையில் சேர்த்து விட ஆசைப்பட்டார். அதன்படியே ஐதராபாத் அருகே உள்ள கிராமத்தில் மிகச்சிறந்த வேதபாடசாலையில் சேர்த்துவிட்டார். அவனும் தன் அப்பா நினைத்தபடி வேதத்தில் வித்தகரானார். தான் படித்த அதே வேதபாடசாலையில் தானே பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வாகமும் நடத்தி வந்தார். மாதம் தவறாமல் தன் மகனை கிராமத்திற்கு சென்று பார்த்துவிட்டு வருவார்.
ஒரு முறை விடியற்காலையில் தன் மகனை பார்த்து விட்டு வர ஊருக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆந்தை சீறுவதுபோல் எட்டு முறை கேட்டது. அவருக்கு தூக்கிவாரிப்போட்டது ; உடுக்கை அடித்தது போல் அவர் நெஞ்சும் அடித்துக்கொண்டது. ஊருக்கு செல்லும் பாதி வழியில் தன் மகன் இறந்த செய்தி அவருக்கு போனில் வந்தது. ஆந்தையின் சீறல் சாவுச்சொல் என்றும் துர்மரணம் என்பதும் இப்போது அவர் உறுதியாக்கிக்கொண்டார்.
தகனம் முடித்து வீடு திரும்புகையில் தனிமையில் யோசித்து பார்க்கிறார்……. “இரண்டு வருடத்திற்கு முன்பு ஒருநாள் தன் மகனின் கல்யாண பிராப்தம் கேட்க ஒரு பாரம்பரிய ஜோசியரை பார்க்க சென்றபோது சாமுத்திரிகா லக்ஷணம் சொல்லும் அவர் இவரை பார்த்ததுமே, விரும்பாத பெண் மீது உன் விரல் பட்டால் உனக்கு கர்மா செய்ய உன் மூத்த மகன் உயிரோடு இருக்க மாட்டான் என்றார். தனக்கு வேறொரு பெண்ணோடு ஸ்திரீ சம்போகம் இருப்பது இவருக்கு மட்டும் உள் மனதில் உறுத்தியது”.
வீட்டிற்கு செல்லும் முன் வாசலில் அருக்கஞ்சட்டியில் வைத்திருந்த தண்ணீரில் காலை அலம்பும் போது அந்த புத்தி சுவாதீனம் இல்லாத பிச்சைக்காரன் இவரை பார்த்து ஓடி வருகிறான். என்றைக்குமே ஒருவார்த்தை கூட பேசாத அவன் இப்போது தலையை பிறாண்டிக்கொண்டும் , நெஞ்சில் அடித்துக்கொண்டும் ஏதோ குறி சொல்பவன் போல் கத்திகொண்டே வருகிறான்
புரியவே கஷ்டமாக இருந்தாலும் உன்னிப்பாக கவனித்து கேட்டதில் அவன் சொன்ன பொருள் :
“வெள்ளி முளைக்கும் வேளை வரைக்கும் பள்ளிஅறைக்குள் ஆடினாயே தாண்டவக்கோனே… !
மையை எழுதிய மலர்விழிமேலே பொய்யை எழுதி தீமூட்டினாயே தாண்டவக்கோனே…!
வாழும்போதே தன்னை பாழில் தள்ளிகொண்டான் தாண்டவக்கோனே…!
தனையும் அறியாமல் சாயங்கள் அப்பிக்கொண்டான் தாண்டவக்கோனே…!”.