கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 469 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெய்யனுக்கு அன்று வேலைகள் எல்லாம் சட்டுபுட்டென்று முடிந்துவிட்டன. சல்லடை காம்பராவில் அவன் வேலை செய்யும் கடைசி நாள் அது. இனிமேல் இங்கிருந்து போய்விடவேண்டியதுதான் – திரும்புவதில்லை. அதை நினைக்கவும் முடியவில்லை. சல்லடைக் காம்பராவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றி விட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றிவிட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள கைபிடி அவன் கை பட்டுப் பட்டுத் தேய்ந்துபோய்விட்டது. பதின் மூன்றாவது வயதில் சல்லடைக் காம்பராவுக்குள் நுழைந்தவன் அன்று முதல் இன்று வரை அதுவே அவனது உலகம், வேலையே அவன் வாழ்க்கை. 

மூன்று மாதங்களக்கு முன்பு, அவன் மதுரைக்கு யாத்திரை புறப்படும் சமயம் அந்தச் சூழ்நிலை முழுவதும் அவனது நரம்புகளை உரித்துப் பிய்த்தன. கடகடவென்று உருளும் சக்கரங்களின் இடைவிடாத ஏகநாதம் அவன் மனதை சோர்வடையச் செய்தது. ‘இன்னும் உழை, இன்னும் வியர்வை சிந்து’ என்று அவை சதா நச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அவற்றின் அசைவில் ஒரு வித தாளக்கட்டுப்பாடு இருந்தது. அவனுடைய இருதயத் துடிப்படன் ஒன்றி அவையும் கும்மாளம் போட்டன. ஆண்களும் பெண்களும் ஒவ்வொருவராகப் போய்ச் சேரும்வரை மெய்யன் மயிந்தி மயிந்தி நின்றான். – ஒரு கடைசிப் பார்வைக்காக. 

வரண்ட ஒளியற்ற அந்த சல்லடைக் காம்பரா திடீரென்று உயிர்ப்புற்றது. புத்தம் புதிய தேயிலைத் தூளின் நறுமணம், மௌனமாகக் கிடக்கும் சக்தி வாய்ந்த அந்த சக்கரங்கள் – 

இவையெல்லாம் அவன் மனதில் வர்ணிக்க முடியாத ஓர் உணர்ச்சியை எழுப்பின. சல்லடை தேயிலையை அரிக்கும் போது உண்டாக்கும் ‘டக், டக், டக்’ என்ற ஓசையும், சுழலும் சக்கரங்களின் குமுறலும் பத்து வருடங்களாக அவன் செவிகளில் லயித்திருந்தன. 

“நாளை இன்னொருவன் இந்த இடத்துக்கு வரப்போகிறான். என்றாலும் ஒன்றும் நடவாதது போல வழக்கமாக வேலைகள் நடக்கும்எல்லாம் அது அதுக்குரிய இடத்தில் இருக்கும். நான் மட்டிலும் இருக்க மாட்டேன். வாழ்க்கைச் சுழலின் சுதந்திரம்தான் என்ன? ஆமா, பார்க்கப் போனால் யார்தான் இவ்வுலகத்தில் இன்றியமையாதவர்கள்”- இவ்வாறு எண்ணமிட்டான் மெய்யன். 

பழைய சம்பவங்கள் திரைப்படம்போல் அவன் மனக் கண் முன்பு ஓடின. பிரயாணப் பத்திரங்களை எடுப்பதற்குத் தான் கொழும்புக்கு போனதை நினைவுபடுத்தினான். இமிகிரேஷன் ஆபிஸில் ‘விசாரணைகள்’ என்ற போட் பலகையின் கீழிருந்த அதிகாரி ஆம், எருமை மாட்டைப்போல தடித்த கழுத்திலுள்ள ஒரு குட்டையான மனிதன். அவன் கண்களில் அனல் வீசியது. வலையில் சிக்கிய வனவிலங்கு போல காணப்பட்டான். டி. ஆர். பியைப் புதுப்பிக்க தான் இரண்டாம் முறையும் இந்த மனிதன் முன் பத்திரங்களை நீட்டியது ஞாபகம் வந்தது. அங்கு வந்த எல்லோரும் அவனுடைய கோரப்பார்வையைக் கண்டு கதி கலங்கினர். 

சிறிது நேரம் பொறுத்து, “ஏய், உன்னுடைய டி. ஆர் பியைப் புதுப்பிக்க முடியாது. போ வெளியே” என்று தடிக்கழுத்து உறுமியது. 

“சாமி, நான் மதுரைக்கு சாமி கும்பிடத்தானே போனேன். நான் இங்கேயே தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன், சாமி” என்று மெய்யன் குளறினான். 

“ஆமா, எல்லாப் பிச்சைக்காரப் பயலும் இப்போ இலங்கையனாப் போய் விட்டான். இங்கே ஒன்றும் செய்வதற்கியலா விட்டால் வீட்டிலை போய் கிட, போ” 

“சீ, என்ன மனிதன் இந்த ஆள்! வீட்டிலை போய் கிடக்கட்டாமெல்லே! இவர்கள் ஏன் இப்படி முரடர்களாய் இருக்கிறார்கள்? பிரஜா உரிமை அதிகாரியும் இப்படித்தான் நடந்து கொண்டான். என் அம்மா அப்பாவைக் கல்யாணம் செய்த வளா என்றல்லவா கேட்கிறான்! என்ன கொடுமை” சிந்தித்தபடியே மெய்யன் அவ்விடத்தை விட்டு அகன்றான். 

படம் மாறியது. அன்பு விஞ்சும் அருமைத்தாயாரின் நினைவு வந்தது. சோகப் புன்னகையும், நீர் ததும்பும் கண்களும், தாங்க முடியாத ஒரு வலி அவன் நெஞ்சத்தைப் பிளந்தது. அவள் இவ்வுலக வாழ்வை நீத்த நாள். கண்கள் வரண்டு போகும் வரை விக்கி விக்கி அழுதான். யமனோடு போராடிக் கொண்டிருக்கும் சமயத்திலும் அவள் சொன்னாள், வழக்கம் போல. “மெய்யா, என் மகனே, என்னைப்பற்றி வருந்தாதேயடா! உனக்கு இன்னும் எவ்வளவோ ஆயுசு இருக்கு, என்னை நினைத்து நினைத்து அதை வீணாக்கதே! நான் எப்போதும் உன்னோடு கூடவே இருப்பேன். உடம்பைக் கவனிததுக்கொள். அத்துடன் உன் அப்பன் கொண்டு வந்த அந்த நாய்க்குட்டி – சூட்டி அதையும் மறந்திடாதே!” 

அந்நாளில் சூட்டி குதித்தோடித் திரியும் அழகான நாய் ‘கொழு கொழு’ வென்றிருந்த அதன் உடம்பில் மென்மையான கம்பளம் போல் உரோமம் வளர்ந்திருந்தது. காதுகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டு அது அவனை வரவேற்கும் போது வால் மட்டுமா ஆடும்? பிற்பகுதி முழுவதுமே ஆடும். மறக்க முடியாதது அந்த இன்பக் காட்சி தாய் இறந்த பின் சூட்டிதான் மெய்யனின் உயிர்த்துணை. அறுந்து போன வீணை நரம்புகளில் எஞ்சிக்கிடக்கும் ஒரு துண்டு. தாயாரின் கடைசிப் பரிசு. 

இன்று, தன் வீட்டையும் மாமனையும் மாமியையும் – எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாயையும் – விட்டுப் போவதை நினைக்க அவன் மனம் கிறு கிறுத்தது. இடிந்து நொருங்கி மண்குடிசை போலிருந்தது அவன் உள்ளம். மாமிக்கு அந்த நாயென்றால் பிடிப்பதில்லை. எனவே அதை ஸ்டோர் காவற்காரனிடம் கொடுத்து விடுவதென்று முடிவு செய்தான். ராமன் நாயைக் கேட்கிறான் என்று மெய்யன் தன் மாமியாரிடம் ஜாடையாகத் தெரிவித்த போது அவள் ஆட்சேபிக்கவே இல்லை. மௌனமாக ஆமோதிக்கவும் செய்தாள். இந்த மனப்பான்மை அவனுக்கு மேலும் ஆத்திரத்தையும் துக்கத்தையும் அளித்தது. 

மெய்யன் வீடு திரும்பிய போது அவனுடைய பிரயாணத்துக்கு எல்லாம் தயாராகி இருந்தன. அவனுடைய சாமான்கள் எல்லாவற்றையும் திரட்டிக் கட்டி அறையின் ஒரு மூலையில் வைத்திருந்தாள் மாமியார். வழக்கத்திலேயே அதிகம் பேசாத மெய்யனுக்கு அன்று நாவும் கிட்டிப்போய்விட்டது. 

மாமனார் சொன்னார். “மெய்யன்!சஞ்சலப்படாதே நாம் என்ன செய்ய முடியும் வேறு வழியில்லை. உன்னுடைய அப்பாட்டன் காலத்திலேயே நாங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு விட்டோம். இன்னும் யாராவது எட்டிய உறவினர் இருக்கக்கூடும் யார் கண்டார்கள்? ஆண்டவனை மறந்து விடாதே, ஏழைகளுக்கு அவன் ஒருவன்தான் துணை… பணத்தையும் பெர்மிட்டையும் கவனமாக வைத்துக்கொள்..” 

“சரி, மாமா! சரி, மாமா!” இவ்விரு வார்த்தைகளிலும் தான் சொல்லப்படுவதெல்லாம் அடங்கிவிட்டது போல் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான் மெய்யன். 

புறப்படும் நேரம் கிட்டியதும் துணிப்பொட்டணியை துாக்கித் தோளில் வைத்துக்கொண்டு, சூட்டியை கக்கத்தில் இடுக்கி, மௌனமாக பிரியாவிடை பெற்றான். ஸ்ரோர் காவற்காரனின் வீட்டை நோக்கி அவன் வயல்களுக்கூடாக நடந்து சென்றபோது, லயத்திலுள்ள தொழிலாளர்கள் அவனுடைய நிர்ப்பந்தமான புறப்பாட்டைப் பற்றியே பேசிக்கொண்டனர். அவனை எங்கேயோ கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டார்கள். 

சூட்டி மெய்யனின் தோளோடு ஒட்டிக்கொண்டிருந்தது. அடிக்கடி அவனுடைய சொக்கையை மோந்து நக்கிப் பார்த்துக் கொள்ளும். அதுவே தங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து செல்லும் கடைசிப் பிரயாணம் என்று அதற்கெப்படித் தெரியும். நாய்களுக்கு பிரஜா உரிமை சட்டம் இல்லையா என்று மெய்யன் யோசித்தான். ஏதோ ஒரு வகை பத்திரங்களும் தஸ்தா வேஜூகளும் இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் நாய்களின் உயிர்களுக்குமல்லவா ஆபத்து வந்துவிடும்! கடவுளே என்று சூட்டிக்கு அப்படி ஒன்றும் நேர்ந்து விடப்படாது! 

மெய்யனின் வரவை எதிர்பார்த்து நின்றான் ராமன். அதிகம் பேசுவதற்கு நேரமில்லை. அடுப்பங்கரைக்கு பின்னாலிருந்த ஒரு சிறிய அறையை சுட்டிக்காட்டி “அந்த அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறேன் சூட்டியை நாள் போகப் போக அது என்னோடு பழகிவிடும். அதைப்பற்றி ஒன்றுமே கவலைப்பட வேண்டியதில்லை. நான் பார்த்துக் கொள்ளுகிறேன்,” என்றான் ராமன். 

ஆம் என்று தலையசைத்து விட்டு மெய்யன் கதவண்டை நெருங்கினான். சூட்டி அவனை இறுக அணைத்துப்பிடித்தது. தரையில் அதை இறக்கிவிட்டு அறைக்குள் கூப்பிட்டான். அது மறுத்தது. கெஞ்சி அழைத்துப்பார்த்தான். சூட்டி அசையவேயில்லை. முன்னங் கால் இரண்டிலும் பிடித்திழுத்தான். அடி விழப் போகிறதோ என்று நினைத்து சூட்டி அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. சட்டென்று அதைத் துாக்கிக் கொண்டு போய் அறைக்குள் விட்டு விட்டு கதவைப் படீரென்று சாத்திவிட்டான். பாவம், சூட்டி முன்னங் கால்களால் கதவைப் பிராண்டிய படியே ஊளையிட்டது. இருவரும் மௌனமாக ரயில்லே ஸ்டேசனை நோக்கி நடந்தனர். மாலை மங்கி இரவுட் கலந்துகொண்டிருந்தது. சூட்டியின் ஊளைச்சத்தம், குழந்தையின் அழுகுரல் போல், இருட்டில் மிதந்து வந்து மறைந்தது. அந்தக் குரல் அவனுடைய தாயார் துயிலுறும் இடு காட்டிலிருந்து எழும் குரல் போலிருந்தது மெய்யனுக்கு. ஆமாம், தேயிலைச் செடிக்கடியில் அவளும் மண்ணோடு மண்ணாயல்லவா கிடக்கிறாள்.

ரயில்வே ஸ்டேஷனில் எப்போதும் போல ஏக தடபுடலாயிருந்தது. மெய்யன் டிக்கட் ஜன்னலண்டை போய் திருச்சி ஜங்சனுக்கு டிக்கட் வாங்கினான். 

கடைசி மணி அடித்தது. 

“உள்ளே போ! ஒன்றுக்கும் கவலைப்படாதே!” என்றான் ராமன். மெய்யன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். அப்பொழுதுதான் வண்டியும் வந்து நின்றது. ஆண்களும், பெண்களுமாக ஏராளமான சனங்கள் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். தோட்டக்காட்டுப் பெண்கள் சிலர் விம்மி அழுதார்கள். மெய்யனுக்காக அழுவதற்கு யாரும் அங்கில்லை. பெட்டிக்குள் ஏறி ஓர் பெண்ணருகில் உட்கார்ந்து கொண்டான். எதையும் கவனிப்பதற்கு அவனுடைய மூளை சரியாயிருந்தால் தானே! ரயில் வண்டி கீச்சிட்டுவிட்டு உருண்டு நகர்ந்தது. ராமன் வெளியே கையை மோவாய் கட்டையில் வைத்தபடி பார்த்துக்கொண்டு நின்றான். ‘தகிடு தொம், தகிடு தொம்’ என்று தாளம் போட்டுக் கொண்டே ரயில் வண்டி தன் வேகத்தை அதிகரித்தது. மெய்யனை சித்திரவதை செய்வது போலிருந்தது. இந்த சக்கரங்களின் ஓசை அவன் சீவியம் முழுவதையுமே சக்கரங்கள் அல்லவா வியாபித்திருந்தன. ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஸ்டோரில் விளக்கெரிவதைக் கண்டான். அந்த விளக்கொளி, ரயில்வே ஸ்டேஷனில் அந்தப் பெண்களின் ஓலம், சூட்டியின் பரிதாபமான அழகை – எல்லாம் சேர்ந்து அவன் மூளையை சம்மட்டியால் அடித்தன. திடீரென்று இமிகிரேஷன் ஆபிஸில் கண்ட அந்த தடிக்கழுத்து இருளில் தோன்றியது. 

“யாத்திரையாகத்தான் இந்தியாவிற்குப் போனேன். என்று உண்மையைச் சொன்னேன். மனிதன் நம்பவில்லை. இதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய இறுதி யாத்திரை.” வண்டி ஓடிக்கொண்டேயிருந்தது. வானில் நட்சத்திரங்கள் அவனைப் பார்த்து கண் சிமிட்டின. இதற்கு முன் அவன் ஒருநாளாவது நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கவில்லை. இன்றைக்கு என்னவோ அவற்றைப்பார்க்க வேண்டுமென்ற ஓர் ஆசை பிறந்துவிட்டது. சூட்டியின் ஊளைக்குரல் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் எதிரொளித்தது, அவனுடைய நெஞ்சில் வந்து ஒடுங்குவது போலிருந்தது. 

அந்த இளம் பெண் கொஞ்சம் கொஞ்சமாக கிட்ட நெருங்கி வந்து விட்டாள். அந்த உஷ்ணமான ஸ்பரிஷம் இன்ப போதையை அளித்தது. ஆனால் ஒரு கணம் தான், அடுத்த கணம் வேறு நினைவுகள் சல்லடை காம்பரா, சுழலும் சக்கரங்கள் … ரயில் வண்டி வேகமாகச் சென்றது. அடுத்த நாள் காலை ஈரச்சேற்றை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டு சூட்டி பழைய வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அதைக் கண்டவுடன் மாமி கூச்சலிட்டாள். 

“இந்த நாசமாய்ப்போன நாய் மறுபடியும் வந்திட்டுதே! சூட்டி ஒரு தரம் வீட்டைச் சுற்றி ஓடி வந்து அவள் மேல் தொங்கிப் பாய்ந்தது. 

“சீ, போ, நாயே” என்று கத்தினாள் மாமியார், சூட்டி விறாந்தைப் பக்கம் வழக்கமாகத் தான் படுக்கும் மூலையைத் தேடியது. அங்கே கோழிக்கூடு வைக்கப்பட்டிருந்தது! 

“போ வெளியே, பிசாசு!” மீண்டும் கத்தினாள் மாமியார். சூட்டி கோழிக் கூட்டுக்கு வெளியே நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டு மெய்யனின் வருகையை எதிர்பார்த்திருந்தது. அவன் வந்தால் தானே! அதற்கொன்றும் விளங்கவில்லை. 

காலை மாறி மத்தியானம் வந்தது. ஸ்டோரிலும் தோட்டத்திலும் வேலை செய்தவர்கள் பகற் போசனத்திற்கு வந்தார்கள். சூட்டி தெருவைப் பார்த்தபடி குந்திக்கொண்டிருந்தது. மெய்யனின் மாமனார் வந்தார். அது ஓடிப் போய் அவருடைய கால் விரல்களை மோந்து பார்த்து வாலை ஆட்டியது. அந்த மனிதர் உணர்ச்சி வசப்பட்டவராய் துாரத்து மலைகளைப் பார்த்த வண்ணம் நின்றார். நாய் ஊளையிட்டுக் கொண்டே அவருடைய முகத்தை அன்புடன் நோக்கியது….. 

பொழுது சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது, சூட்டி அந்த இடத்தை விட்டு அகலவில்லை. கண்களைத் தெருவில் பதித்தபடியே இருந்துவிட்டது…

சி.வி.வேலுப்பிள்ளை

ஆங்கிலமொழியில் தமிழ் மக்களது சமூகவாழ்க்கையைச் சித்திரித்தவர் சி.வி. வேலுப்பிள்ளை. மலையக எழுத்தாளர். உழைக்கப்பிறந்தவர் அன்னாரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி. அவரது பார்வையும் பரிவும் மலையக மக்களில் பதிந்திருக்கும். 

– 05.12.1959 – தமிழில் – வி.என்.பி.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *