நல்ல வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 195 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு நல்ல கிராமம். வீடுகளெல்லாமே வரகு தட்டை போட்டு வேயப்பட்டிருந்தன. ஒரு வீடு மட்டும் விதி விலக்கு. செமென்டால் தரை மெழுகி, மரம் போட்டு, மங்களூர் ஓடு மாற்றியிருந்தார்கள்; பளிச்சென்று சுண்ணாம்பு அடித்திருந்தார்கள். வாசலிலே, தேனீ வீடு கட்டுவதைப்போல ஆறு பட்டையாகக் கலியாணப் பந்தல் போட்டிருந்தார்கள். கிராமமாயிருந்த போதிலும் இங்கிலீஷ் காரரது ஆட்சியின் பழுத்த கனிகளாகிய போலீஸ் ஸ்டேஷன், தபாலாபீஸ், தாலுக்கா கச்சேரி இவ்வளவும் இருந்தன. 

அந்த ஊருக்கு மாற்றி வந்த புதுசில், உத்யோகஸ்தர்களின் மனைவிகள் குடியிருக்க நல்ல வீடு கிடைக்காமையால், முதலில் ரொம்பத் தவிப்பார்கள். டவுன்களில் மின்சார விளக்கும் விசிறியும் கண்டு சுகம் அனுபவித்தவர்கள், கூரை வீட்டில் வசிக்க வேண்டுமென்றால், சூரியன், சாக்கடை ஜலத்தில் குளிப்பதைப்போல் ஆகாதா? ஆனால், ஆகாச மட்டும் இவர்கள் துள்ளிக் குதித்தாலும் கடைசியில் மண்ணின் மடிமீது வந்து விழும் கல்லைப்போல, கூரை வீட்டு வாசத்திலேயே கதியின்றிச் சமாதானம் அடைவார்கள். விதி விலக்கிென்றோமே அந்த வீடு முதலில் ஒவ்வொரு உத்தியோகஸ்தர் மனைவியையும் கவரும். ஆனால், அந்த உற்சாகம் வெகு நாள் நீடிப்பதில்லை. காரணம் காட்டாமல், ஒரு வாரத்திற்கெல்லாம் அந்த வீட்டைக் காலி செய்துவிடுவார்கள். 

ஹெட் கான்ஸ்டேபிள் மருதநாயகம் பிள்ளை அன்றுதான் மாற்றலாகி அங்கே வந்தார். வரும் பொழுதே ஒரு பெரிய அசட்டுத்தனத்தைச் செய்து விட்டார். 

கற்பகவல்லி வண்டியை விட்டு இறங்கியது தான் தாமதம்; பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல ஒரு பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது – கிராமத்து ஆண், பெண், ‘அரை டிக்கட்’ அடங்கலும் கூட்டத்துக்குப் பின்புறத்திலிருந்தவர்கள் கற்பகவல்லியைப் பார்த்துக் கிசு கிசுத்துக்கொண்டிருந்தார்கள். 

பெண் பிள்ளை : ஆமாம், ஹேட் பெண்ஜாதியா இவங்க?’ 

ஆண் பிள்ளை : ‘இருக்கும்.’ 

பெண் பிள்ளை : ‘பார்த்தா, ஹேட் பொம்பிள்ளையாத் தெரியல்லே. அதிலேயும் குடுத்தனக்காரியாத் தோணல்லே.’ 

ஆண் பிள்ளை : ‘ரொம்பக் கண்டூட்டே! இந்த நாளிலேதான் குடுத்தனக்காரிக்கும் மைத்தவாளுக்கும் வித்தியாசமே தெரியறதில்லையே!’

உண்மையில், பெண்பிள்ளை சொன்னதில் ஓரளவு மெய் இல்லாமலில்லை. இன்றைக்கெல்லாம் ஹேட்டுக்குச் சம்பளம் முப்பதுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால், அவர் மனைவியைப் பார்த்தால் நாஸுக்கான நகரத்துத் தாசி, கிராமம் பார்க்க குறைந்த சுருதியில் ஆடைஆபரணம் அணிந்து வந்திருந்தது போலிருந்தது. காலிலே பாதசரம். இடுப்பிலே ஒட்டியாணம். கழுத்திலே காசுமாலை. மூக்கிலே, காதிலே,வெள்ளை. நெற்றியிலே விபூதி. புருவ நடுவே குங்குமம். அள்ளிச் சொருகிய தலை மயிர். வயதுக் கேற்ப கொய்யாக் கொம்பு போன்ற வழ வழப்பான உடல்; அதை எடுத்துக் காட்டும், பாடி-ஜாக்கெட். கராச்சிப் புடவை. பின்னே அப்படிப் பேசமாட்டார்களா? 

ஹேட் மனைவி கும்பலைத் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. வண்டியை விட்டு இறங்கியதும் இறங்காததுமாக ‘நல்ல வீடு பாருங்க; எல்லாம் கூரையாக் கிடக்குதே’ என்று உத்திர விட்டாள். 

ஊருக்கு வந்த பதினைந்து நிமிஷத்துக்குள் எட்டுத் தெருவையும் சுற்றியாகி விட்டது. சுமார் என்று நினைக்கக்கூடிய வீடுகளில் ஒரு வீடு சாணி வாசனையாய்ப்போய் விட்டது. ஒன்று நெல்குதிரும் அந்துப் பூச்சியுமாகி விட்டது. மற்றொன்று வீடா முள்ளுப் படுக்கையா என்ற சந்தேகத்தைக் கிளப்பிற்று.வேறொன்று நடவுக்கு லாயக்காயிருந்தது. சை! ஒன்றும் உபயோகமில்லை! மிஞ்சி நின்றது விதிவிலக்கு என்றோமே அந்த வீடுதான். அதைப் பார்த்ததும், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை’ என்றாள் கற்பகவல்லி. 

அடுத்த அரைமணிக்குள் அந்த வீட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் ஹேட்டும் மனைவியும். 

அன்றிரவு அடுத்த வீட்டு மாட்டுத் தரகனின் பெண்ஜாதியுடன் ஊர்ச் சங்கதிகளை விசாரித்துக் கொண்டிருந்தாள் கற்பகவல்லி, 

‘இந்த வீடுகூட இல்லாத போனா வந்த வண்டியிலேயே திரும்பிப் போயிருப்பேன்! நல்லவேளை! இதுவாவது கிடைத்தது’ என்று இவள் கூறினாள். 

‘ஆமாம், ஆமாம்’ என்று ஊக்கக் குறைவோடு பதில் சொன்னாள் தரகனின் மனைவி. 

‘அதேன் அரை மனசாச் சொல்றீங்க?’

‘அரை மனசெல்லாம் இல்லே’ என்று மழுப்பினாள் அடுத்த வீட்டுக்காரி? 

மறுநாள் வாரச் சந்தை. காலை மணி எட்டு இருக்கும், ஹேட், ஆபீஸுக்குப் போயிருந்தார். கற்பகவலலி உள்ளே ஏதோ பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். 

‘அம்மா!’ என்று ஒரு குரல் கேட்டது.

‘யாரது?’ என்று வெளியே வந்தாள் கற்பகம். 

ஒரு கிராமத்தான். காலிலே கனத்த செருப்பு. தலைமுதல் முழங்கால் வரையில் மறைக்கும் அழுக்குப் படிந்த பெரிய துப்பட்டி போர்த்தியிருந்தான். 

‘என்ன?’ 

‘ரெண்டு இட்லி குடுங்க’ 

ஹேட் மனைவிக்குத் தூக்கிவாரிப் போட்டது. பொறுக்கி எடுத்த வீடு கூட உதவாமல், ஆப்பக்காரி யாகும் கதி வந்துவிட்டதே! ரௌத்திரம் பொங்க ‘இல்லை’ என்று வெட்டினாற்போல் பதில் சொன்னாள், 

கோபத்தின் கருத்து கிராமத்தானுக்குப புரிய வில்லை. 

‘பின்னே,உப்புமா இருக்குதா?’ என்றான் பொறுமையாக. 

‘இது கிளப்பில்லே’ என்று முகத்திலடித்தாள் கற்பகம்மாள். 

‘இருந்துச்சே. எங்கே போயிடுச்சு?’ 

‘எமலோகம்’ என்று கதவைப் படாரென்று சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள் 

கிராமத்துக் கிளப் இருந்த இடமே தாங்கள் வசிக்கும் வீடு என்று தெரிந்தது முதல் கற்பக வல்லியின் மனசு அலை புரண்டது. தன் நாஸுக்குக்கும் ஹேட் மனைவியின் அந்தஸ்துக்கும் அதனால் எவ்வளவு இழிவு ஏற்பட்டுவிட்டது! சந்தைக்குச் சந்தை இதே தொல்லையாகவல்லவா போய்விடும்! பதில் சொல்லியே வாய் நோகுமே! ஆதியில் பக்கத்து வீட்டுக்காரி ஊக்கக் குறைவுடன் பேசினாளே. இதனால்தானோ?.. 

பகல் ஒரு மணிக்கு ஹேட் வீடு திரும்பினார்.

‘நம்ப வேறே ஊடு பாக்கணும்’ 

அவளைத் தொட்டுத் தாலி கட்டினது முதல் ஹேட்டுக்கு ஏற்பட்ட அனுபவமல்லவா இது? அமைதியை இழக்காமல் ‘ஏன்? வந்து முழுசாக ஒரு நாள்கூட ஆகவில்லையே’ என்றார். 

‘அதெல்லாம் முடியாது. காலையிலே வந்து இட்லி, காபி கேக்கறானுங்க. இது எப்பவோ காபிக் கடையாய் இருந்துச்சாம்.’ 

ஹேட்டுக்கு மனைவியை மீறிப் பேசும் வழக்கமே கிடையாது. இருந்தாலும் முதலில் இருவருமாக ஊரைச் சுற்றிப் பார்த்த தைரியத்தில் ‘இங்கே தான் நல்ல வீடு ஒண்ணுமே காணலியே’ என்றார் மெதுவாக. 

‘என்னை ஆப்பக்காரின்னு பார்த்திங்களா?’

ஹேட் என்ன பதில் சொல்வார்? ‘கோவிச்சுக் காதே’ என்று தாழ்ந்துபோனார். 

இரண்டு பேருமாக மறுநாள் வீடு பார்க்கப் பறப்படும் நேரம். மேகத்தில் காணும் மின்னல் போல் 182-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் திடீரென்று எதிரே முளைத்து, கைகாட்டி மரம் ஏறுவது போல சலாம் வைத்தான். 

‘டி. எஸ். பி. வந்திருக்காங்க. எங்கேயோ காம்ப் போகணுமாம். கூட்டிவரச் சொன்னாங்க.’

எனவே,வீடு பார்க்கும் வேலை அப்பொழுது தடங்கல் பட்டுவிட்டது… 

ஹேட் ஊருக்கு போன அடுத்த நாள் காலை மணி ஏழு இருக்கும். கற்பகவல்லி தெருவைப் பார்த்து. தலை வாரிக்கொண்டிருந்தாள். எதிர்ச் சாரியிலிருந்த வேப்பமர நிழல், வெயிலை வெட்டும் அரிவாளைப் போலக் குறுக்கே விழுந்துகிடந்தது. அவள் மனம் எந்த உலகில் மூழகிக் கிடந்ததோ! சாம்பல் வர்ணத்துப்பட்டி போர்த்தியிருந்த ஆள் ஒருவன் ‘தோசை இருக்கா’ என்றான். அயர்ந்திருக்கும் சமயத்தில் அடி வயிற்றில் அடித்தது போல் திடுக்கிட்டுத் தெருப் பக்கமாய்ப் போனாள் – அந்த ஆளுடன் சண்டை போட. ஆனால் தெருவில் ஒரு ஆளைக்கூடக் காணோம். லேசான காற்றில் வேப்ப மர நிழல் மட்டும் அசைந்து கொண்டிருந்தது. வீட்டைப் பற்றிய நினைப்பு எவ்வளவு தடித்திருந்தது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி! 

புருஷன் திரும்பி வந்ததும் வேறு வீடு பார்த்து விட்டுத்தான் மறு காரியம்!… 

அடுத்த வாரச் சந்தை. இரவு எட்டுமணி வரையில் போன ஹேட் திரும்பி வரவில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு ரேழியில் உட்கார்ந்து கற்பகவல்லி வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தாள். 

யார் யரோ தெருவில் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் வீட்டு ஓரமாகத் தயங்கித் தயங்கிச் சென்றான். கிராப்புத் தலை, வெள்ளைச் சட்டை, சிவப்பு உருமாலை – இவ்வளவும் தென்பட்டன. வீட்டுக்கு அப்பால் அந்த ஆள் எட்டிப்போன பிறகும் ஸெண்டு வாசனை மரத்தைவிட்டுப் போக மனமில்லாத பிசாசைப் போல் அங்கே சுற்றிக்கொண்டிருந்தது. அந்த ஆள் யார்? வீட்டைக் குறிப்பாய்ப் பார்ப்பானேன்? கிளப்புக்கு வரும் ஆசாமியோ? ஆனால் நல்ல வேளை! டீ இருக்கா என்று கேட்கவில்லை யல்லவா? அதுவே கற்பகவல்லிக்கு ஆறுதலா யிருந்தது. 

அரை மணி ஆயிற்று. கை விளக்கைக் குறைத்துச் சுவரருகே வைத்துக் கதவைத் தாளிட்டு விட்டுப் பாயில் படுத்தாள்: ‘மண்ணாய்ப் போன டி.எஸ்.பி. காம்ப் என்றால் இவர்களுக் கெல்லாம் மாமியார் வீடு மாதிரி ‘ஓச’ல்லவா? ஒரே கொண்டாட்டம். வீடு பார்க்கத் தடங்கலாய்ப் பூனையாய் முளைத்தானே படுபாவி! 

இப்படி வைது கொண்டே பெருமூச் செறிந்தாள்.  

‘அம்மா’ என்று லேசாகக் கூவிற்று ஒரு குரல்.

வாசல் கதவைத் திறப்பதற்கு யோசனை. ‘அரைச் சாப்பாடு போடுங்க என்று யாராவது வந்து விட்டால் -? அப்படிக்கின்றி ஹேட்டினிட மிருந்து சமாசாரமா யிருந்தால் -? எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும் என்று நினைத்து, உள்ளே இருந்த படியே ‘யாரது?’ என்றாள். 

‘ஐயா சாவடியிலே இருக்காக.’ 

கற்பகவல்லிக்கு ஒரே ஞாபகம்- வீடு மாற் றுவது. அதற்காக ஹேட் ஞாபகம். ஆகையால் கதவைக் கூடத் திறக்கத் தோணவில்லை. 

‘வந்தூட்டாங்களா?’ 

‘ஹும்,’ 

‘அங்கே ரொம்ப ஜோலி இருக்குதா?’

‘இல்லை. இதோ வருவாரு.’ 

அப்புறம் தெருவில் குரல் கேட்க வில்லை. கற்பகவல்லி எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள். பதினைந்து நிமிஷம் ஆகியிருக்கும். வாசல் கதவிலே லேசான தட்டு விழுந்தது. 

அவசரமாக எழுந்து போய், கதவைப் பாதி கூடத் திறக்கவில்லை. கதவைத் தட்டினவ ஓசைப்படாமல் விறுக்கென்று உள்ளே நுழைந்தார். கம்மென்ற வாசனையும் கூட நுழைந்தது. கற்பகவல்லி பதறிப்போனாள். வீட்டு ஓரமாகப் போனானே அதே பேர்வழி! 

அவளுக்குண்டான திகிலைவிட வந்த ஆளின் திகில் பலமடங்கு அதிகமா யிருந்தது மெதுவாக, ஒன்றும் பேசாமல், வாயை மூடிக் காட்டி விட்டு, பின்னால் நகர்ந்து, தெருவை எட்டி, வேகமாக நடையைக் கட்டினான் கிராம மைனர். 

‘இது கிளப்பாக இருந்ததா அல்லது -‘ 

இந்த யோசனைக்கு முடிவு காணும் முன்பே அடுத்து வீட்டுக்காரி வாசல் கதவண்டை வந்து விட்டாள். 

‘யாரது? உங்கள் ஊட்டிலே திருடன் மாதிரி நுழைஞ்சூட்டு ஓடறது? புருசன் வந்துட்டாரா?’ 

அளவு கடந்த அவமானத்தால் கற்பகவல்லி வாயைத் திறக்கக் கூட வில்லை. 

‘ஒங்களுக்குத் தெரியாதாங் காட்டியும்! இந் ஊட்டுலே முன்னே ஒருமாதிரி பொம்பிள்ளை இருந்துச்சு. பேருக்குக் காபிக் கடை’ என்று இழுதாற் போல் விளக்கினாள். 

கற்பகவல்லி மௌனமாகத் தலையில் அடித்துக் கொண்டாள். 

‘அந்துப்பூச்சி வீடானாலும் சரி. ஆலமரத்தடியானாலும் சரி, இனிமே இது இல்லே’ என்று சொல்லிக் கொண்டே வீட்டுக் கதவைப் பூட்டுகிற சமயம். பூட்ஸும் காக்கிச் சட்டையுமாக ஹேட் குறடு ஏறினார். 

‘தூக்குங்க சட்டி பானையை’ என்றாள் கற்பகவல்லி.

– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப்‌ பதிப்பகம்‌, திருத்துறைப்பூண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *