நல்லது நாலு தான்!





சிறுவன் பரமனுக்கு உறக்கம் வர மறுத்தது. பனிரெண்டு வயதை சிறுவனாகக் கடப்பவனுக்கு பிடித்த சக வயது சிறுவர், சிறுமிகளோடு விளையாட வேண்டும், விரும்பியதை சாப்பிட வேண்டும், திருவிழாவுக்குச்சென்று பொம்மைகளை வாங்க வேண்டும் எனும் நினைப்பு, ஆசை வருவது தான் இயல்பு.

‘மனிதர்களின் வாழ்வு ஏன் வேறு பட்டு, மாறு பட்டு இருக்கிறது? ஒருவர் வசதியானவராக, இன்னொருவர் ஏழையாக வாழ்வது ஏன்? ஒருவர் அழகானவராக, இன்னொருவர் அழகற்றவராக, ஒருவர் அறிவாளியாக, இன்னொருவர் முட்டாளாக இருப்பது எதனால்?’ எனும் யோசனை சிந்தையில் எழுந்தாலும் பள்ளிப்பாடத்தில் இக்கேள்விகளுக்கான பதில் கிடைக்காமல் தன் தந்தையிடம் வினவினான்.
நாற்பது வயது வாழ்ந்த வாழ்க்கையில் இப்படியொரு கேள்வியை இதுவரை யாரும் கேட்காததாலும், தானும் இது போன்றதொரு கேள்வியை யாரிடமும் கேட்காததாலும் இதற்கான விடை தெரியாததால் “ஒரு தாத்தா இருக்கறாரு. அவருகிட்ட கூட்டீட்டு போறேன். நீ இத மாதிரி கஷ்டமான என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாரு. எனக்கு பதில் தெரியலை” என தந்தை ஓதியப்பன் சொன்னதைக் கேட்டு பரமனது மனம் நிறைவாகவில்லை.
‘நம்மை விட மூன்று மடங்கு வயசு உள்ள அப்பா இத்தனை வருசமா இதையெல்லாம் தெரியாமையா, தெரிஞ்சுக்க விரும்பாமையா வெறும் சோறு மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்…?’ எனும் யோசனையோடு அப்பாவின் சைக்கிளை குரங்கு பெடல் போட்டு ஓட்டியவாறு அப்பா சொன்ன வீட்டின் முன் சென்று நின்றான்.
“மிருகங்கள் மாதிரி சாப்பிட்டு தூங்கவா பூமில பிறந்தோம்….? பணம் கேட்காம மேகங்கள் மழையக்கொடுக்குது. பணம் கேட்காம மரங்கள் பழங்கள் கொடுக்குது. அப்புறம் எதுக்கு அதையெல்லாம் நாம காசு கொடுத்து வாங்கனம்….? படிச்சு வேலைக்கு போயி சம்பாதிக்கிறது இதக்காசு கொடுத்து வாங்கிறதுக்குத்தானா? மனுசங்க ஏன் சாப்பிட இன்னொரு மனுசங்க கிட்ட பிச்சை கேட்கனம்? நீங்க பதில் சொல்லுவீங்கன்னு அப்பா சொன்னாரு” அப்பாவியாக ஜோதிடர் கந்தனிடம் கேட்டான் சிறுவன் பரமன்.
பரமனைப்பார்த்து சற்று திகைத்தவர், தன் நரைத்த மீசையை முறுக்கி விட்டபடி கைகூப்பி வணங்கினார். ” பேராண்டி, அந்த பழனி முருகன் ஔவையார் கிட்ட சிறுவன் உருவத்துல வந்து கேட்ட மாதிரி கேள்விகள புத்திசாலித்தனமா நீ என்ற கிட்ட கேக்கறே…. நானும் உன்ன மாதிரி சின்ன வயசுல பல பேரு கிட்ட கேட்பேன். ஏன் என்னோட வகுப்பு வாத்தியாரு கிட்ட கேட்டாலும் படிச்ச பாடத்திலிருந்து மட்டும் தான் கேள்வி கேட்கனம், மாத்திக்கேட்டா பெயில் பண்ணிடுவேன்னு கண்டிசன் போடுவாரு. எனக்கு ஆராய்ச்சியாளர்னு பேரே வெச்சிட்டாருன்னா பார்த்துக்குவே. இப்ப ஜோதிடத்துல ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கறேன். குரு வாக்கு பலிச்சிருச்சு” சொன்னவர் அருகிலிருந்த வெங்கலச்சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.
“ஒருத்தர் நல்லா ஆரோக்யமா, சந்தோசமா இருக்கிற மாதிரி எல்லாரும் இருக்கனம்னு நெனைச்ச எனக்கு ஜோதிடம் படிச்ச பிறகுதான் அப்படி இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. வசதியா ஒருத்தரும், வறுமையா ஒருத்தரும் வாழறதுக்கு காரணம் இருக்குன்னு தெரிஞ்சதும் அந்த நெனப்பையே விட்டுட்டேன். அந்தக்கேள்வியவே மறந்துட்டேன்” எனக்கூறியவரை ஆச்சர்யமாகப்பார்த்த பரமன்” அப்புறம் ஏன் ஸ்கூல் பாடத்துல ஜோதிடத்த சேர்த்துக்க கூடாது?” என கேட்டதும் பரமனை இழுத்து அணைத்துக்கொண்டார்.
“இந்த வயசுலயே கடவுள் உனக்கு இத்தனை அறிவைக்கொடுத்திருக்காரு. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரோணும். இந்த உலக மக்களுக்கு நல்ல விசயங்கள கண்டு புடிச்சுக்கொடுக்கோணும். பொதுவா ஒம்பது கிரகங்கள் நூத்தி இருபது வருசங்களுக்கு தெசை நடத்தும் போது நாலு தெசை நல்லதும், அஞ்சு தெச கெட்டதும் பண்ணும்கிற அமைப்புலதான் நாம வாழறோம். இந்த அமைப்புனாலதான் கஷ்டமான வாழ்க்கை, இஷ்டமான வாழ்க்கைன்னு வாழறோம். கடவுளே மனுசனா பொறந்தாலும் நல்லது நாலும் , கெட்டது அஞ்சும் வேலை பண்ணும். இப்படித்தான் நாம வாழோணும். மோசமான தெச அறிவாளிக்கும் கஷ்டமான வாழ்க்கையக்கொடுக்கும். நல்ல தெச முட்டாளுக்கும் இஷ்டமான வாழ்க்கையக்கொடுக்கும். அதுக்கு நல்லவன் கெட்டவன் தெரியாது. சூரிய வெளிச்சம் திருடனுக்கு கொடுக்க மறுக்குமா…? தென்றல் காத்து கெட்டவன் மேல வீசாமப்போகுமா…?” தன் தந்தையை விட ஜோதிடரது பேச்சின் பொருள் புரிந்தவனாய் ஆச்சர்யப்பட்டு தலையாட்டினான் பரமன்.
“சாமி வரும்போது சாட்டை போடோணும், காத்துள்ள போதே தூத்திக்கோணும் னு நம்ம முன்னோர்கள் சொன்னது என்னன்னா நல்ல தெச நடக்கும் போது நல்லா பூமி வெளையும். அந்த சமயத்துல தானியத்த சேமிச்சு வெச்சு மோசமான நேரத்துல பூமி வெளையாத போது முன்ன வெளைஞ்ச தானியத்த வெச்சு சமைச்சு வாழோணும்னு அர்த்தத்துல தான் சொல்லியிருக்கறாங்க. ஆனா இப்ப எப்பவுமே வருமானம் வந்துட்டே இருக்கோணும்னு ஆசப்பட்டு தொழில் பண்ணி நல்ல நேரத்துல சம்பாதிச்சத கெட்ட நேரத்துல இழந்து போட்டு கவலப்படறாங்க”என்று கூறிய பெரியவர் கந்தனை ஆச்சர்யமாகப்பார்த்தான்.
“நீங்க தான் உண்மையான வாத்தியாரு. ஜோதிடம் தான் நல்ல வாழ்க்கைப்பாடம். ஒன்னி மேல் உங்க கிட்டவே வந்து என்ற சந்தேகத்த கேக்கறேன்” என கூறிய சிறுவன் பரமன் தனது கேள்விகளுக்கு பதில் கிடைத்த திருப்தியில் மகிழ்ச்சியோடு மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு தந்தைக்கு முன் தன் வீட்டிற்கு கிளம்பினான்.