கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2025
பார்வையிட்டோர்: 4,235 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்தவிதக் கலகலப்பும் சலசலப்பும் இல்லாமல் அந்த லயம் பாழடைந்து கிடந்தது. அந்த லயத்தில் வசிக்கும் மாணிக்கம் ஒரு கெட்ட சகுனம் தென்படுவதாக யூகித்தான் அது அவனது ஆறறிவுக்கு எப்படியோ எட்டியது…

இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஏதோ கூடாததொன்று நடக்கப் போகிறது என்று திடமாக நினைத்தான். 

உண்மையிலேயே அதுவும் நடந்தது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிருக்கும். மாணிக்கம் வீட்டுக்கு இடது பக்கம் அந்த இரட்டை லயம் இருக்கின்றது. இரட்டை லயத்துக்குப் பின்னால் இருந்து தான் அந்த அலறல் சத்தம் கேட்டது. வயதான பெண்களின் சத்தம் தான் அதிகமாகக் கேட்டது. 

வழமை போலவே மாணிக்கம் அவசரப்படவில்லை. இஸ்தோப்பிலேயே நின்றுக் கொண்டிருந்தான். 

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் கற்பனையில் கூட நினைக்காத படி வேகமாக ஓட வேண்டிய நிலை ஏற்படும். 

ஆண்களும் பெண்களும் மற்ற லயன்களில் இருந்து இரட்டை லயத்தை நோக்கி ஓடிக் குவிந்தனர். கூக்குரல் இடும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்த மாணிக்கத்துக்கு இரண்டு வார்த்தைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. 

‘முருகன் தாத்தா……. முருகன் தாத்தா…….!’ 

‘அடடா…….! அவரு போயிட்டாரா? மாணிக்கம் முணுமுணுத்தான்.

முருகனுக்கு எழுபது வயது. உடல் இளைத்துப் போன பெருசு…….

இரட்டை லயத்தின் பின்பக்கம்தான் ‘கிழவாடி’ மகனோட இருந்தா…….கொஞ்ச காலமாகச் சுகயீனமாகத்தான் இருந்தார். தோட்ட மருந்துக்காரன் எல்லா மருந்துகள் கலந்து கலர் மிக்சரைத்தான் கொடுத்திருக்கிறான்! அதனால் தான் பெரிய மனுசன் போயிட்டான் என்று மாணிக்கம் நினைத்ததிலும் தவறில்லை. 

நோயில் கிடந்து சித்திரவதைப்படுவதைவிட சாவு வருவது நல்லதுதானே…? பிறகு ஏன் இந்தச் சனங்களுக்கு இப்படிக் கொந்தளிப்பு…….? மாணிக்கம் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டான். 

தோட்டங்களில் சும்மா சுற்றித் திரியும் சில ஊதாரி இளைஞர்கள் மாணிக்கத்திடம் ஓடி வந்து, 

‘அண்ணே! அண்ணே! ‘கெழவனுக்கு’ச் சோறு திங்கிற நேரந்தான் உயிரு போயிருக்கு!’ என்றார்கள். 

‘என்னா மடத்தனம்…….! எப்படி சாப்பாடு நஞ்சாகும்? அவன் அதிர்ச்சி அடைந்தான். 

அப்படின்னா….. அவரு தான் சாந்தியடைஞ்சியிருக்காரு! நமக்குத்தான் நரகம்…….. 

ஆமாம்…….அந்த காலத்தில் திடீர் சாவு……. மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கியிருந்தது. அந்த பயம் இன்னும் கூட மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

திடீர் சாவு……என்பது ஒரு பூமி அதிர்ச்சி மாதிரி…….! 

முருகனின் திடீர் சாவை அறிந்த பெண்களும் பிள்ளைகளும் வீட்டுக்குள்ளே போய்க் கதவுகளைச் சாத்திக் கொண்டார்கள். அவர்கள் பல கதைகளைக் கேட்டிருக்கிறார்கள். 

இறந்த மனிதனின் ஆவி….. பட்டப் பகலில் கூடக் காலை எட்டி எட்டி வைத்து மிகக் கர்வமாக நடந்து வருமாம்…….! சில சமயங்களில் பதுங்கிப் பதுங்கி வருமாம்…….! 

அதோட……. செத்தவங்களை வெட்டிப் பார்ப்பாங்களாம்…….!

இப்படி உயிரோட இருக்கிறவர்கள் கதை கட்டிக்கொண்டு இருப்பார்கள். 

அவர்களுக்கு தொடர்ந்து இன்னும் பல தொல்லைகள் இந்த சாவினால் உண்டு……. 

வயதானவர்கள் நடுச்சாமம் வரை தூக்கம் மறந்து தேவாரப் புத்தகங்களை விரித்து வைத்துக் கொண்டு தெய்வப்பாடல்களைப் பாடிக்கொண்டு இருக்க வேண்டுமாம். இப்படிச் செய்வதால் சித்திரவதைக்குள்ளான மனித ஆவிகளை நடமாடவிடாமல் தடை செய்யலாம் என்று அவர்கள் நம்பினார்கள். 

இந்த மனக் குழப்பங்களையெல்லாம் தொடரவிடாமல் மாணிக்கம் ஆகவேண்டிய வேலைகளில் இறங்கினான். 

தோட்டத்துப் பரியாரியையும் சில பெரியாட்களையும் அழைத்து இந்தத் துக்கச் செய்தியை பெரியங்கங்காணியிடம் போய் அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெரியவர் தான் முன் நிற்க வேண்டியவர். 

பெரியவர் தன்னிடம் வந்த கோஷ்டி மூலம் எல்லா விசயங்களையும் விளங்கிக் கொண்டார். 

‘நல்லது…….! போய்……. மாணிக்கத்தை ஒடனே அனுப்புங்க…….!’ என்றார் கங்காணி. 

15 நிமிடத்துக்குள் பெரியவர் முன்னால் மாணிக்கம் வந்து நின்றான். மாணிக்கம் கைகளைக் கட்டிக் கொண்டு……. தலையை ஒரு மாதிரிச் சரித்துக் கொண்டு பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என்று விறைத்து நின்றான். 

‘அப்பு……. கூப்பிட்டீங்களாமே…….?’

‘ஆமா! லயத்துல என்னா நடந்திருக்குன்னு ஒனக்கு தெரியுமா….?’ 

‘ஆமாங்க அப்பு…….!’ 

“நீங்கெல்லாம் என்னா செய்ய போறீங்க…….?’ 

‘பொதைக்கலாமுன்னு இருக்கோம்…….!’ 

அது அவ்வளவு லேசான காரியமில்லே ..! இப்ப பொதைச்சீங்கனா விசயம் வெளியே போயிரும். அப்புறம்……. பொதைச்ச பொணத்த திரும்பவும் தோண்டணும்” 

‘அப்பு…….! அப்படீனா……. டக்டர்கிட்டே என்னய அனுப்புங்க……..’

‘டாக்டர்கிட்ட போயி என்னா சொல்லப்போற…….?’ 

‘அவர இங்க கூட்டிக்கிட்டு வாரேன் அப்பு’ 

‘ரொம்ப நல்லம்…….! ஒன் நாக்கு பத்தரம்…….! கண்டத கிண்டத ஒலறிப்புடாத…..! அப்புறம் முருகன வெட்டிக் கொத்தி திரும்பவும் பொதைக்கனும்……! வெளங்கிச்சா…….? 

பெரியவரின் ஆசீர்வாதத்தோடு டிஸ்பென்சரிக்கு ஓடினான் மாணிக்கம். 

லயத்து ‘ரவுண்’டை முடித்துவிட்டு வந்த டிஸ்பென்சர்……. மருந்து கலக்கிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தின் நிழல் டிஸ்பென்சரி ரூமுக்குள் விழுந்தது. டிஸ்பென்சர் ஏறிட்டுப் பார்த்தார். 

‘என்னா மாணிக்கம்…….? 

மாணிக்கம் உடனே பதில் சொல்லவில்லை முகத்தைச் சுடுக்கிக் கொண்டு தலையைப் பலமாகச் சொறிந்தான். 

‘நல்லது…….! மாணிக்கம்…….. என்ன வேணும்…..?’ 

‘தொர! எங்கத் தாத்தாவுக்கு என்ன மருந்து குடுத்தீங்க…….? 

‘ஏன் மாணிக்கம் ஒன் தாத்தா யாரு…….?’ 

‘வயசாலி……. முருகன்…….!’ 

‘ஏன் அத பத்தி தெரிஞ்சிக்கனும்…..?’ 

‘ஐயோ சாமீ…… மருந்துக்காரன்கிட்ட மருந்து வாங்கி குடிச்ச பொறவுத்தான் எங்க தாத்தாவுக்கு விக்கல் வந்து…….. செத்திருக்காரு’ 

‘கேலி பேசுறதுக்கு நேரமில்ல…… நடந்த உண்மய சொல்லு…….!’

‘நானு…….உம்மைய தான் சொல்லுறேன் சாமீ…….! அவரு கொஞ்ச நாளா சொகமில்லாம இருந்தாரு மருந்துக்காரன் கிட்டத்தான் கலர் மருந்து வாங்கி குடிச்சாரு. அதுனாலத்தான் விக்கல் வந்திச்சு…….! கலர் மருந்து தான் சாவுக்கு காரணம்!’ 

ஐய்யாவு…….! தயவு செஞ்சி சொல்லுங்க……. ரொம்ப வயசாகிப்போன ஒரு மனுசனுக்கு மருந்து தேவையா..? அவன……. அப்பிடியே……. ‘அனுப்பனுங்கற ‘……. நோக்கமா…..? நான்… அதுக்கு மேல பேசமாட்டேன்…….!’ என்றான் மாணிக்கம். 

அவன் பேச்சை நிறுத்திவிட்டு தலையை மீண்டும் சொறிந்தான்.

மாணிக்கம் கதையை எங்கே கொண்டு போகிறான் என்று டிஸ்பென்சர் புரிந்து கொண்டார். 

‘குருட்டுதனமா கதைக்க வானாம் மாணிக்கம்…….!’ என்றார். லயத்தில் கதைகள் எப்படி திரிக்கப்படுகிறது என்பதை விளங்கிக்கொண்ட அவர் குழப்பமடைந்தார். 

‘முருகன்……. ரொம்ப வயசு போன……. ஆளா..?’ ‘ஆமாங்க தொரே! எழுவதுக்கு மேல இருக்கும்!’ 

‘எழுவது வயசுல ஒரு மனுசன் சாக வேணும் மாணிக்கம்!’

‘அதுக்காக மருந்து குடிச்சப்பொறகு சாகனுமுன்னு இல்ல தொரே…….! சாவுக்கு காரணம் என்னானு தெரிஞ்சுக்கனும்…….!’ 

‘அப்படின்னா வெட்டிப் பாக்கணுமா? 

‘ஆமாங்க தொர!’ 

‘அது என்வேல மாணிக்கம்…… ஆளப்பாப்போம்!’ 


மரணவீடு……. 

முருகனைத் தரையில் கிடத்தி கிழிந்த போர்வையால் மூடி வைத்திருந்தனர். 

வயதான பெண்களெல்லாம் சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். 

டிஸ்பென்சரைக் கண்டவுடன் அழுகை ஒப்பாரியெல்லாம் ஒரு நொடியில் நின்றது. பிணத்தைச் சோதித்த டிஸ்பென்சர் பெரியங்கங்காணியின் வீட்டுக்குப் புறப்பட்டார். 

பெரியவர் டிஸ்பென்சரை ஆழ்ந்த அமைதியோடு வரவேற்றார். 

‘நான் முருகன எழந்துட்டேன் டாக்டர்…….!’ மிக சோகத்துடன் கூறினார். 

அங்குள்ள நிலைமைகளைக் கவனித்தபோது……. எந்த வித அபிப்பிராயங்களும் தென்படவில்லை. இருந்தாலும்……. மிக்சருக்குப் பிறகுதான் முருகன் இறந்திருக்கலாம் என்று டிஸ்பென்சர் யூகித்தார். 

‘முருகனுக்கு வயசு சரிங்க சீப்! (Chief!)’ 

‘ஆனா……. தெம்பும் தைரியுமா நேத்து இருந்தாருன்னு எல்லாரும் சொல்றாங்களே……?? கங்காணியார் சொன்னார். 

வயசு போன காலத்தில் திடீரென்று அப்படி இருப்பாங்க…….! ஆனா மாணிக்கம் வேடிக்கையான ஒரு கருத்த சொல்றான். அது அவ்வளவு நல்லதல்ல! சீப்..!’ 

பெரியங்கங்காணி டிஸ்பென்சரின் விளக்கத்துக்குப் பிறகு அந்த கதையை விட்டுவிட்டார். ஆனால் மாணிக்கம் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்து கொண்டான் என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போனது. 

…….மாணிக்கம் ஜன்னலுக்கப்பால் கடுமையான யோசனையில் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். 

‘டேய் …….! மாணிக்கம்…….!’ 

‘அப்பு…….??’ 

‘வாடா இங்க’ தொரைக்கிட்ட என்னடா சொன்ன? 

‘வந்து…….வந்து…… நான் கேள்விப்பட்டிருக்கேன் சாமீ……. டாக்டர்மாருங்க வயசுபோன நோயாளிங்கள கொணமாக்க. முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டா… ஒரு……. ஜாதி மருந்து…….. குடுப்பாங்களாம்…….!’ 

‘மாணிக்கம் நீ எவ்வளவு பெரிய மடையன….! ஓன் இடிஞ்சிப்போன தலவுள்ளுக்கு ஏதாவது இருக்குமுன்னு நானும் நெனச்சேன்……! ஒன்னும் கெடையாது….. இந்த மாதிரியெல்லாம் இனிமே பேசிக்கிட்டுத் திரியாத…….!’ 

‘அப்பு …….! நான்தான் என் சம்சாரத்துக்கிட்ட இப்படி நடந்திருக்குமானு கேட்டேன்……’ 

‘வாய் மூடு……! மூச்சுக்காட்டாத…….!’ 

‘நல்லதுங்க அப்பூ…….!’ 

‘இது ரொம்ப ஆபத்தான பேச்சு…… ‘ சீப்…….! யாராவது கதைய கட்டிவுட்டுட்டா……. எல்லாருக்கும் தொந்தரவுதான்…….!’ டிஸ்பென்சர் ஆதங்கப்பட்டார். 

‘உண்மதான்.. ரொம்ப வயசாலி செத்துட்டா ஏன் கவலப்படனும்? 

‘அப்ப…….பொதைக்க ஏற்பாடு செய்யட்டுங்களா அப்பு…….? மாணிக்கம் குழைந்தான். 

‘ஆமா…….!ஆமா……! பொதைச்சிப்போடு…… அப்புறம் லயத்துல வேற கத இருக்கக் கூடாது’ என்றார் டிஸ்பென்சர். 

‘மாணிக்கம்……..வாய மூடிக்கிட்டு டாக்டர் தொர சொன்னத செய்யணும்!’ என்றார் கங்காணி 

மாணிக்கம் லயத்தை நோக்கி ஓடினான். 

‘நாம இப்படி செஞ்சிக் கிட்டது தான் நல்லது. இல்லாட்டிப் போனா நீங்க சொன்ன மாதிரி சனங்க கலர் மருந்துதான் காரணமுன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க…….!’ கங்காணி கூறினார். 

‘ஆமாங்க ‘சீப்……! மனுசன வெட்டிக் கொத்துறது…….சாதாரண காரியமில்ல…… எல்லா விசயமும் அப்புறம் தலைகீழா போய்டும்…….’ ‘அப்புறம் பழி நம்ம ரெண்டுபேரு மேலதான் வுழும்…….!’ கங்காணி கூறினார். 

‘மாணிக்கம் ஒரு வாயாடி இல்லீங்களா சீப்..? டிஸ்பென்சர் கேட்டார். 

அவன நான் கவனிச்சிக்கிறேன்…….!’ கங்காணி ஆறுதலாக சொன்னார். 

பெரியங்கங்காணி தனக்குக் கொடுத்த ஆறுதல் வார்த்தையாலும் உறுதிமொழியாலும் திருப்தி அடைந்த டிஸ்பென்சர் நிம்மதியோடு வீட்டுக்குத் திரும்பினார். 


சோகத் தப்பு முருகன் வீட்டு வாசலில் முழங்கியது……. அது…… சாவுத் தப்பு……… அழுகைச் சத்தம்…… புலம்பல்…… ஒப்பாரி……. ஓங்காரமாகின…….சங்கு…… சேகண்டி……. பொரி……. தீச்சட்டி……. தயாராகியது. 

அலங்கரிக்கப்பட்ட பாடையில் முருகனைச் சுமந்து சென்றார்கள்.

அந்த கடைசிப் பயணம் தேயிலைச் செடிகளை நோக்கிச் சென்றது. 


அடுப்பங்கரையில் மாணிக்கம் மனைவியோடு நெருக்கமாக உட்கார்ந்து கூதல் காய்ந்து கொண்டிருந்தான். 

கங்காணி ஆள் அனுப்பியிருந்தார். 

‘தம்பீ…….! எனக்கு ரொம்ப சொகமில்லன்னு ஐயா கிட்ட சொல்லு…….விடியக் காலையில வந்துர்றேன்……’ என்றான் மாணிக்கம். 

என்னண்ணே …….! நீங்க நல்லாத்தானே இருக்கீங்க… பொறப்படுங்க……..!’ என்றான் வந்தவன். 

‘இந்தா தம்பி…….! நான் கொஞ்சம் ‘தண்ணி’ பாவிச்சிருக்கேன்……. எனக்கு சொகமில்லன்னு சொல்லு. பெரியவருக்கு புரியும்…….!’ என்றான் மாணிக்கம். 

வந்தவன் சென்றான். 

மாணிக்கம்…..அடுப்பங்கரையில் லேசாக மனைவியைப் பார்த்துச் சிரித்தான். 

– ஆங்கில தொகுதி: Manikkam saves a situation, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *