நன்றியின் தீபங்கள்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டிங் டிங் டிங்…
வெளியல் மணிச்சப்தம்
சுள்ளிகளை அடுப்பில் திணித்துக் கொண்டிருந்த ரம்ஜியா சட்டென எழுந்து வாசல் திரைச்சீலையை கொஞ்சம் விலக்கி லேசாக முகம் வெளியில் தெரிய எட்டிப்பார்க்கிறாள்.
தபால்காரன் புஞ்சி பண்டா கடிதக் கவர் ஒன்றை நீட்டிக் கொண்டிருந்தான்.
“துவட்ட லியூமக்!”
“மகளுக்கு ஒரு கடிதம்! ஒரு தபால் அட்டை” பண்டா சொன்னான்.
கையில் எடுத்ததை வாசித்துக்கொண்டே திரும்புகிறாள்.
“என்ன காயிதம் மவேள்?”
“ஏஜன்சியால அனுப்பி இருக்கி வாப்பா!”
அனீபாவின் முகம் மலர்கிறது.
”என்னவாம்! என்னவாம்!” என ஆனந்தம் வழிந்தோடும் பரபரப்புடன் கேட்கிறார்.
“காயிதத்தையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு வரட்டாம்!”
“எப்ப?”
“அடுத்த செவ்வாய்க்கிழமை.”
ரம்ஜியா மெதுவாகச் சொன்னாள். தந்தையிடம் காணப்பட்ட ஆனந்தம் அவள் குரலில் கொஞ்சம்தானும் இல்லை. போஸ்ட் கார்டை வாப்பாவின் கையில் கொடுத்து விட்டு அடுப்படியில் குந்திக் கொண்டாள்.
விரல்கள் சுள்ளிகளை அடுப்பினுள் தள்ளுகின்றன. காய்ந்து நரநரவென்றிருக்கும் சுள்ளிகள் சடசடவென் எரிகின்றன. கண்கள் நிலைக்குத்தி குத்தூசிகளாகின்றன.
நெருப்பின் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் மகளின் முகத்தையே பார்த்த வண்ணம் இருக்கிறார் அனீபா.
நெற்றியில் யோசனைக்கோடுகள், வரண்டு ஈரப்பசையற்று கிடக்கும் உதடுகள் பீடியொன்றினை உறிஞ்சி புகையைக் கக்குகின்றன.
“என்ன வாப்பா?”
யோசனையிலிருந்து மீண்ட அனீபா பெருமூச்சு விட்டார்.
“ஒன்னுமில்லை மவேள்.”
“ஒன்னுமில்லையா… அப்ப என்னத்த யோசிக்கிய…?”
“ஏஜன்சி கொழும்பில் இரிக்கி. கொழும்புக்கு பெய்த்திட்டு வார என்டால் லேசா நோனா அதுதான் யோசிக்கியன்.”
“கொழும்புக்கு பொய்ட்டு வர இவ்வளவு யோசிக்கிய. நீங்க துணியா தொங்கல்ல இருக்கிய அரபு நாட்டிற்கு என்னை அனுப்பிவைக்க எவ்வளவு தூரம் யோசிக்கோனும்.”
அடுப்படியிலிருந்து எழுந்து வந்து தந்தையின்முன் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவள் குறும்பாகத்தான் கேட்டாள். ஆனால் அந்தக் கேள்வி கூர்மையான ஒரு விஷமுள்ளாக அனீபாவின் நெஞ்சை ஊடுருவிப் பாய்கிறது. மரண வலியில் ஒரு கணம் கண்களை மூடிக் கொள்கிறார். கையில் உள்ள பீடித்துண்டை வீசியெறிந்துவிட்டு எழுந்து நிற்கும் அவர் திகைப்புடன் வெளியுலகில் பார்வையைச் செலுத்துகின்றார்.
நெடுக ரப்பர் மரங்கள். அதற்கும் அப்பால் பள்ளத்தில் நதி ஓடுகிறது. அக்கரையில் மாணிக்கக்கல் தேடி வட்டிகளில் மணல் அரிப்பு நடக்கிறது. கடூர வெயில்- மேனி வியர்வை முத்துக்களால் பளபளக்க பகீரதப் பிரயத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மனித ஜீவன்கள்.
‘யா அல்லாஹ்! எத்தனை காலம் கஷ்டப்பட்டேன். ஒரு சிறு கல்லைத்தானும் நீ எனக்குத் தரவில்லையே…!’
அனீபாவின் இதயம் அதிர்வுடன் அழுகின்றது. மனவிம்மல் விழியோரங்களில் நீர்மணிகளாக திரட்சியுற்று முத்தென ஒளிர்கின்றன.
தந்தையின் மனநதியில் சலனமிடும் நீரலைகளை ரம்ஜியா அறிவாள். இதயம் நல்வாழ்வை ‘துவா’ வாக்கிக் கொள்ள பரிசுத்த தளிர்களாகத் துளிரும் கண்களால் தந்தையைப் பாசத்துடன் நோக்குகிறாள்.
“கொழும்பு மிச்சம் தூரமா வாப்பா?”
“இல்லை கிட்டத்தான்.”
“அப்ப ஏன் சும்மா கவலைப்படுற….”
“பஸ்ஸுக்குப் பணம் வோணும். அது எப்படி போனாலும் ஒங்களுக்கு உடுத்துக் கொண்டு போவ நல்ல பொடவ ஒன்னு வோணும்.” அனீபா சாதாரணமாகவே சொன்னார். எனினும் அவர் நெஞ்சில் பிரவாகமெடுத்துப்பாயும் துயரம் குரலை கம்மச்செய்து சன்னமாக ஒலிக்கின்றது. தந்தையின் வேதனையான குரல் ரம்ஜியாவை விசனமுறச் செய்கின்றது. அவள் மௌனமாக கண்களில் யோசனையை நிறைத்துக் கொள்கிறாள்.
பாங்கின் ஓசை செவிகளில் விழுவதற்கு முன்னரே ரம்ஜியா எழுந்துவிடுவாள். ‘சுபஹ் ‘ பொழுது அள்ளி வழங்கும் சுகந்தமான குளிர்காற்றை நெஞ்சார சுவாசிப்பதில் அவளுக்கு எல்லையில்லா ஆனந்தம். கிழக்கின் வைகறை கரைசலில் அடர்ந்த காடுகளைப் போல ரப்பர் மரங்கள் நிழல்களாகத் தோன்றும். அந்த மெலிதான இருளுக்குள் விடிவுகாலப் பட்சிகளின் குக்கூ, கிச், கீச் சங்கீதம் ஒலிப்பதை அவள் செவியாற ரசிப்பாள். கிணற்றின் விளிம்புவரை நடனமிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த நீரை சளார், சளார் என கைகளினால் அள்ளியள்ளி முகத்திலடித்து ‘ஒழு’ வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பாங்கின் ஓசை ஒலிக்க வாப்பாவின் குரலும் கேட்கிறது.
“மவேள் தொழுகை முடிச்சி அப்படியே ஹாஜியார் வீட்டுப்பக்கமும் பெய்த்திட்டு வாறன்…”
குரலில் பெருமையும் பதற்றமும் காணப்படுகிறது. ஏஜென்சியிலிருந்து கடிதம் வந்த நேரத்திலிருந்து அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். இன்று கொழும்புக்குப் போக வேண்டுமல்லவா?
வாப்பா ஊனக் காலை இழுத்து இழுத்து நடப்பதை ரம்ஜியாவின் கண்கள் பரிவுடன் பார்க்கின்றன. நெஞ்சில் துயரம் முகிலென சூழ கண்களில் நீர் நிறைகின்றது.
அவர் பிறவி ஊனரல்லர். ஒரு விபத்து அவரை அப்படியாக்கிவிட்டது. ரம்ஜியா குடும்பத்தில் மூத்தவள். அவள் தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் குமராகி மூலையில் முடங்கிய சில நாட்களில்தான் அந்தக் கொடூர விபத்து நிகழ்ந்து அவர் இந்நிலைக்கு ஆளாகினார்.
மலையேறி பாறைகளுக்கு வெடி வைத்து பெயர்ப்பது வாப்பாவின் தொழில். ஒரு நாள் பெரும் பாறையொன்று கடகடவென உருண்டுவந்து பூமியோடு சேர்த்து கால்களை நைத்து விட்டது. குடும்பம் இடிவிழுந்த தென்னையாகிப் போனது. சயமுடன் போராடிக் கொண்டிருந்த உம்மா மௌத்தாகிப் போனாள்.
காலத்தின் வோட்டத்தில் ஏழெட்டு வருடங்களின் கரைசல். வாழ்க்கை எப்படியோ ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மரம் நட்டவன் நீர் ஊற்றாமலா இருப்பான்.
தொழுகை மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றுகிறது எனும் புனித குர்ஆனின் அருள் வாக்கினை நெஞ்சில் விதைத்துக் கொண்டவள் ரம்ஜியா. பிறவியிலேயே மத சம்பிரதாயங்களில் ஊறிப்போன அவள் ஐவேளை தொழுகையினையும் தவறாது நிறைவேற்றி வருவதனால் பசுமையாகிவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு வயதில் ரப்பர் தோட்டத்திலும், ஆற்றங்கரை மணல் வெளியிலும் ஓடியாடி விளையாடிய ஜமால், ஜெய்நூர் எல்லோரும் இப்பொழுது வளர்ந்த வாலிபர்கள். இதே தோட்டத்தில்தான் வாழ்கிறார்கள். எனினும் அவர்கள் முகம் கூட அவளுக்கு மறந்துவிட்டது.
‘பிற ஆடவர்களைப் பார்ப்பதும் அவர்கள் நினைவில் வாழ்வதும் கூட பாவம்’ எனும் ஹதீஸ் விதைகள் அவள் நெஞ்ச மணலில் விழுந்து வேரோடி விருட்சமாகி இன்று கனிகொடுக்கும் காலம். வெளிநாடு சென்று அன்னியர் ஆடவர் முன்பாகத் தொழில் செய்யலாமா என்றதொரு சலனம் நெஞ்சக்குழியில் விழுந்து அவளைக் கலக்கமுறச் செய்கிறது.
வெளிச்சம் பொல பொலவென விழுந்து விட்டது. ரப்பர் மரங்களின் நெடிய நிழல்களினூடே வாப்பா கால்களை இழுத்து நடந்து வருகிறார். அவர் கையில் ஒரு பார்சல் இருக்கிறது.
‘ஹாஜியாருக்கு நல்ல மனசு. வாப்பா மகளின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிச் சொன்னதும், ஒரு சாறியும் கொஞ்சப் பணமும் கொடுத்தனுப்பியிருக்கிறார். அப்படியானால் வெளிநாடு போவதும் அங்கே தொழில் செய்வதும் ‘ஹராம்’ அல்ல. இது தவறானால் ஹாஜியார் வாப்பாவை ஏசியிருப்பாரே. ரம்ஜியா ஒரு குமர்ப் பெண்ணல்லவா. அவளை வெளிநாடு அனுப்பலாமாவென கண்டித்திருப்பாரே. ஒருபோதும் உதவமாட்டார். அதிலுள்ள தீமைகளைப் பற்றிச் சொல்வார் அல்லவா! இதுவரையில் அவளை ஆட்டிப்படைத்த சஞ்சலங்கள் நெஞ்சக்கடலிலிருந்து கரை ஒதுங்கின.
அரபு நாட்டின் அழகிய தோற்றம் அவள் கண்களின் முன்னே திரைவிரிக்கின்றது.
கொழும்பைக் கண்டதும் ரம்ஜியா மிரண்டுவிட்டாள். பரபரப்பான அதன் நடைபாதைகள் வெலவெலக்கச் செய்கின்றன. அமைதியே வடிவான ஒரு கிராமத்தில் வாழ்பவள் அவள். இந்தக் கொழும்பு நகரமோ… திருவிழாக்கோலமாகத் திரண்டு நடைபயிலும் சனநெரிசல் இடிகளும், தள்ளுகளும், அயிங்வென்ட், அயிங்வென்ட் என்ற அலறல்களும் அவளை கலக்கியடிக்கின்றன. பிரதான வீதியில் நடக்கவே முடியவில்லை. எப்படியெல்லாமோ நடந்து வந்தாயிற்று. இனி சந்து பொந்து வழியாக ஏஜென்சியைத் தேடி அலைய வேண்டும். அனிபா நானா மிகவும் பரபரப்புடன் இயங்கினார். போகிறவர் வருகிறவர் என ஒருவரையும் விடாமல் கடிதக்கவரைக் காண்பித்து விசாரிக்கிறார்.
“இந்த ஏஜென்சியைக் காட்டேலுமா!”
அப்பாடா ஒருவனுக்குத் தெரிந்துவிட்டது.
அவன் ஒரு நடுத்தர ஆசாமி. மெலிந்த தோற்றமுடையவன். சிகரட்டை ஊதித்தள்ளிக் கொண்டிருந்த அவன் தன் பூச்சியரித்த பற்களை வெளியில் காண்பித்துக் கொண்டு –
“தெரியும், தெரியும். நான் அங்கே சப் ஏஜன்டாக இருக்கேன்” எனச் சொன்னான். அவனுடைய பெரிய சிவந்த கண்கள் ரம்ஜியாவை விழுங்கின.
‘ஆ! எவ்வளவு அழகான பெண்!’ என மனதிற்குள் எச்சில் ஊறிக் கொண்டான்.
ரம்ஜியாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனுடைய அசிங்கமான பார்வை அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தியது. அவன் ஏஜன்சிக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவள் மீது இடித்தும் உரசியும் நடக்க முயன்றான். லேசான திகில் ரம்ஜியாவின் உடலில் ஊறத் தொடங்கியது.
அவர்கள் வெகு சீக்கிரமே ஏஜன்சியை அடைந்து விட்டார்கள்.
முகவர் நிலையம்.
பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஒரே அமளி துமளி, பரபரப்பு.
அடக்கவொடுக்கமாகவும் இரண்டு பெண்கள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாடு போவதற்காக வந்திருக்கிறார்கள் போலும். ரம்ஜியா அவர்களுடன் போய் அமர்ந்து கொள்கிறாள்.
கண்ணாடி அறைக்குள் இன்டர்வியூ நடைபெறுகிறது. வாட்டசாட்டமான ஓர் ஆள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
“உன் பெயர் என்ன?”
“ஜமீலா!”
“வாப்பா பெயர்!”
‘ரகுமத்துல்லா.”
“கலீமா சொல்லு பார்ப்போம்…”
“லாயிலாஹ இல்லல்லா முகமது ரசூலில்லா!”
“சரி, போ, பொஸ் முஸ்லீம்தான். மூன்று முறை சவுதி போனவ…!” கேள்வி கேட்டவன் நையாண்டியாகச் சொல்கிறான்.
இன்டர்வியூ முடிந்து அப்பெண் வெளியில் வருகிறாள். கலீமா சொன்ன அவள் மீது ரம்ஜியாவின் கண்கள் படர்கின்றன.
“யா அல்லாஹ்” என அவள் தன்னையறியாமலே சொல்லிக்கொள்கிறாள். அந்தளவுக்கு அவள் ஆடைகள் இருந்தன.
ஜன்னல் வழியாக வாகன வீதி தெரிகிறது. ஒரு மையத்து போகிறது. சந்துக்கை தூக்கிக்கொண்டு நான்கு பேர் வேகமாக நடக்க அவர்கள் பின்னால் தலையில் லேஞ்சியும் தொப்பியுமாக ஒரு சிறு கூட்டம் வேகமாக நடக்கிறது.
ரம்ஜியாவின் கண்கள் அதில் லயித்துவிட்டன.
கண்ணாடி அறைக்குள்ளிருந்து அவள் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது.
ரம்ஜியா தயக்கமுடன் உள்ளே சென்றாள். அவளிடமும் அந்த மூன்று கேள்விகளைக் கேட்கிறார்கள்.
கேள்விகள் விழுந்த முறை, தலையிலிருந்து கால்வரை அந்த அறைக்குள்ளிருந்த இருவரின் கண்களும் மேய்ந்த விதம்….
அவளால் பொறுக்க முடியவில்லை.
என்னை ஓர் இஸ்லாமியப் பெண்ணா என்று கேட்கிறார்களே இதென்ன கொடுமை.
ஓதி ஓதியே புனிதமானவள் அவள், தொழுது தொழுதே பசுமையானவள் அவள், நோன்பு நோற்றே பொன்னிறமானவள் அவள்…
கலங்கிய கண்களுடன் வெளியில் வருகிறாள்.
அனீபாவின் கண்கள் நெருப்பை கக்கிக் கொண்டிருக்கின்றன. மகளைக் கண்டதும் கண்கள் பனித்து விடுகின்றன. பெருமூச்சுடன் மகளின் மிருதுவான கைகளைப் பற்றினார்.
”உம்மா! வாங்க வீட்டிற்குப் போவோம்” ஏதோ திடசங்கல்பத்துடன் சொன்னார்.
“வாப்பா!”
“ஆமா நோநா எங்களுக்கு வெளியூர் வாணாம்!”
வாப்பாவின் குரலில் உறுதியின் தொனிப்பு.
இன்டர்வியூ நடைபெற்ற அறைக்குள் இடம் பெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அவர் கண்கள் அவதானித்தவாறுதானிருந்தன. கேள்விகள் உதிர்ந்த முறை, கேட்டவனின் கண்கள் ரம்ஜியாவின் தலையிலிருந்து கால்கள் வரை சேற்றெருமையாக உழன்ற விதம்!
நெஞ்சு வேகிறது. கண்கள் அக்கினிச் சேறாகின்றன.
கண்ணாடி அறையின் கதவைத் திறந்துகொண்டு மகள் வெளியில் வந்தவுடன் வேகமாக அவள் அருகில் சென்று நிற்கிறார். கொதிப்பான கண்ணீர்த் துளிகள் சட் சட்டென அவள் வெண்கரங்களில் விழுந்து கொதிநீரெனச் சுடுகின்றன.
‘மன்னித்துவிடு மகளே!’ என கண்கள் கதறின.
அதைத் தொடர்ந்துதான் ‘வெளியூர் எங்களுக்கு வாணாம் நோநா’ என்ற வார்த்தைகள் பிறந்தன.
கண்களில் முத்தென முகிழ்ந்த நீர் மணிகளுடன் ரம்ஜியாவின் உதடுகளில் புன்னகை அரை பிறையெனத் தோன்றுகிறது. கண்கள் நன்றியின் தீபங்களாக ஒளிர்கின்றன.
சந்தூக்கை தூக்கிச் செல்பவர்களின் தல் ஒலி வெகு தொலைவில் முனகளாக ஒலிக்கிறது. அச் சந்தூக்கினுள் இஸ்லாத்தின் புனிதமெல்லாம் சடலமாகக் கிடப்பதாக அவளுக்கொரு பிரமை, நடுக்கம்.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |