கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 5,199 
 
 

“பொன்னு! இதென்னப்பா திடீர்னு இப்படி ஒரு முடிவு? அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு இருந்த இப்ப அவனப் பாக்க ஓடிப்போற? செத்துப்பொன உன் தங்கச்சி புருஷன்ற தவிர அவனுக்கு வேறேன்ன யோக்கியத இருக்குது? அவனப் போயி பாக்கணும்னு சொல்றியே?”

வேலுசெட்டியார்திகைப்பும் குழப்பமுமாய் பொன்னுரங்கனிடம் கேட்டார்.

பள்ளிப்படிப்பு முடித்ததும் பத்துவருடம் முன்பு செட்டியார் கடைக்கு கணக்கு எழுதும் வேலைக்கு வந்தவன் பொன்னுரங்கன். அன்றிலிருநதே அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன். இன்று ஓமலூர் பிரதான சாலையில் செல்வி மளிகைக்கடை,யை சொந்தமாய் பொன்னு ரங்கன் துவங்கும் வரை பல விதத்திலும் உதவி புரிந்தவர், இன்னமும் அவனுக்கு உற்ற துணையாய் தகப்பனைபோல உடன் இருந்து காப்பவர்.

பொன்னுரங்கன் வேறு சமயமாயிருந்தால் செட்டியாருக்கு உடனே பதில் சொல்லி இருப்பான்,

இப்போதுஅவன் மனசு உலைகலனாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.

எட்டுவருடமாய்நெஞ்சை நெருடிக்கொண்டிருக்கும் வடு.

வெறுப்பில்வாய் அடைத்துப்போனாலும் கைகள் மட்டும் அந்த இரும்புக்கம்பியை அழுந்தத் தடவின.

“என்னப்பா இதென்ன கைல இரும்புகுச்சி? எதுக்கு?”

குழம்பியவராய்கேட்டார் வேலுசெட்டியார் .

“காரணமாத்தான் முதலாளி…சிகரட்டு நெருப்பிலேயும், கொதிக்கும் வெல்லப்பாகு கொப்பரைலயும் வேலை செய்யவிட்டு திராவகத்துளியா சுரீர்னு தெறிக்கற பாகுலயும் என் தங்கச்சிய சித்திரவதை செய்தவன். அந்த கன்னையன்….அனாதை நாய்ன்னு வார்த்தைக்கு வார்த்தசெல்விய நெரு ப்பா சுட்டவன்.கீரனூர்லகரும்பு வியாபாரம் ,கரும்பச்சாறு எடுத்து அதைக் காச்சி வெல்ல உருண்டை பிடிச்சி விக்கறவியாபாரின்னு சொல்லி வெல்லமா பேசி செல்வியக் கல்யாணம் கட்டிகிட்டான். பதினெட்டு வ யசு அப்பாவிப்பொண்ணு அவ வாழ்க்கய ரெண்டே வருஷத்துல முடிச்சிட்டான். அவனைப்பழி வாங்க….இந்தஇரும்புக் குச்சிய பழுக்கக் காய்ச்சி அவன் உடம்புல பக்கம்பக்கமா இழுக்கப்போறேன், வயித்துவலி தாங்கா ம தற்கொல பண்ணிக்கிட்டா செல்வின்னு அன்னிக்கு எல்லாரையும் ஏமாத்தினான்.. நான் நம்பலே. கதறினேன் என் தங்கச்சி கோழை இல்லேன்னு அடிச்சி சொன்னேன்..ஏழைச் சொல் அம்பலமேறுமா? அந்த அறியாப் பொண்ணு மேல சீமண்னை ஊத்தி அவளைக் கொளுத்தியிருக்கான். எட்டு வருஷமென்ன எத்தினி வருஷமானாலும் மறக்குமா முதலாளி? “

“அந்தக்கடவுளே அவனுக்கு சொத்தயெல்லாம் அழிச்சி சொந்தமெல்லாம் விலக்கி,கைகால்விளங்காமச் செஞ்சுட்டாரு …அவனை நீ இப்போ அடிக்கப் போவது செத்தபாம்ப அடிக்கற மாதிரிதான்.. உன் பொண்சாதி பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கிற நேரம் இப்படி நீ பழி வாங்கப் புறப்படணுமா? யோசிப்பா…. நீ புத்திசாலி ஒனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்ல …”

செட்டியார் போனதும் பொன்னுரங்கன் கீரனூருக்கு பஸ் ஏறினான்.

ஜன்னலோரஇருக்கை, காற்று வேகமாய் வீசியதில் தூக்கம் கண்களைச் சுற்றியது.

“செல்வி என்னமா இது கன்னத்துல தீ கொப்புளமாயிருக்குது? கைல தழும்பு இத்தினி இருக்குதேம்மா”

“ஆஅதுஅதுஒண்ணுமில்லேண்னே…..கொப்பரைல பாகு கொதிக்கறப்போ பாலாத்திக் கட்டைய பாகுல ஒட்டிப் பதம் பாக்கணும் . பாகை அடிபிடிக்க விடக் கூடாது. பாகு சுத்தம் வேற கோழையா மேல மிதக்கும். கோழை அள்ளூற போதும் பாகுல கட்டைய ஓட்டற போதும் பாகு தெறிக்கத் தான் செய்யும் பழகினா சரியாவும்..”

“செல்வி… விரல்கணுவுல எல்லாம் என்னமா இப்படி தீஞ்சி புண்ணா இருக்குது?”
“கரும்புசக்கை அடுப்பு சரி யா எரியலேன்னு தவறிபோயி கைல தொட்டுட்டென்ணே..’

“யேய் அனாதை நாயே …சொல்லேண்டி நாந்தான் சிகரெட்ல சுட்டேன்னு..எனக்கு போதை தலக்கேறினா அப்டிதான் செய்வேன் . அதுக்குதானே அனாத ஒன்னத் தேடி வந்துகட்டிகிட்டேன் . சொல்லு அதையும் உங்க அருமை அண்ணங்கிட்ட ..கலெக்டர் உத்தியோவம் பாக்ற நெனப்பு. கடைல பொட்லம் கட்டறவன்..கேள்வி கேக்குறான்..அவனும் அனாதை நாய்தானே?’

“யே..ய்ய்ய்ய்..?”

“அண்னே வேணான்னே….அவரு மேல கோபப்படாதீங்க… இன்னிக்கில்லேன்னாலும் ஒரு நாள் அவரு திருந்திடுவாரு…அப்போ எனக்கும் புது ஜன்மம்தான் கிடைக்கும்..”

‘செல்வி குடிச்சி குடிச்சி அவன் உன்ன இப்டி தினம் சித்ரவதை செய்றத இன்னும் எதுக்கு தாங்கணும்? எங்கூட வாம்மா…கூழோ கஞ்சியோ. இப்டி அடிமையா கிடந்து திங்கவேணாம்மா….’

“அண்ணே……மனசால நான் உங்க கூடவேதான் இருப்பேன்..கிளம்புங்க அண்ணே”

“கீரனூர்பஸ் ஸ்டாப்பு..இறங்குங்க எல்லாரும்..” நினைவுகளிலிருந்து ம் சுதாரித்து எழுந்தான் பொன்னுரங்கன்.

கீரனூர் பிரதான சாலைக்குவந்தவன்கடைத்தெருபக்கம் போனான்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் குடிசைக்கு வந்து நின்றான்.

ஒருகாலத்தில்எட்டுகட்டுவீடும், வில்வண்டியும், கரும்புத்தோட்டமும் வைத்து ஆட்டம்போட்ட கன்னயன் அடங்கி ஒடுங்கி ஆள் துணை ஏதுமின்றி பக்கவாதம் வந்து பரிதாபமாய் படுத்திருந்தான் .

இவனைப்பார்த்ததும்”பொ…பொழ்னு?’ என்று வாய் குழறினான்.

அவனை உக்ரமாய் ஒருக்கணம் பார்த்தான் பொன்னுரங்கன்.

‘அனாதை நாயே’

செல்விய எத்தனை முறை அழைத்திருக்கிறான் ஒரு அண்ணன் இருக்கும்போதே அழைத்த மகாபாவி. இப்போது கன்னையனை அப்படிக் கூப்பிடவேண்டும் போல வெறியானது.

‘அண்ணே… அவருமேல கோபப்படாதீங்க..’

செல்வியின்குரல் காதோரம் கெஞ்சியது.

பொன்னுகைப் பையினைத் திறந்தான்.

கன்னையன் திடுக்கிட்டுப் பார்ககும் போதே அவன் காலடியில பழம் வேஷ்டி துண்டு இனிப்பு முதலியவற்றை வைத்தான் .

மௌனமாக வெளியேறி மறுபடி ஓமலூருக்கு பஸ் ஏறினான்.

ஊர் வந்ததும் செட்டியார்,”பொன்னு! இப்பதான் போன் வந்திச்சி..உனக்கு குழந்தை பொறந்திடிச்சாம்.செல்வி மறுபடி வந்துட்டதா உன் பொஞ்சாதி லட்சுமி சொல்லச் சொல்லுச்சிப்பா!” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *