நட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்
அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எனினும் யோகாவுக்கு அது எந்த இனிமையையும் கொண்டு வரவில்லை. யோகா மிகக்கடுமையாக யோசித்தவாறு ஜன்னலுக்கு வெளியே நிண்டிருந்த வீட்டுத்தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அப்போதிருந்த பிரச்சினையெல்லாம் அவளது அப்பாவை எவ்வாறு சந்தோஷமாக வைத்துக்கொள்வதென்பதுதான்.
அம்மா இறந்த பின் அப்பாவை எவ்வாறு தனிமையில் விடுவது என்று யோசித்த யோகா தன் கணவனது அனுமதியுடன் தம் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாள்.. ஆனால் இப்போது யோசிக்கும் போது அவரைக் கூட்டி வந்தது தப்பான தீர்மானமோ என்று மனதுக்குப்பட்டது.
அப்பா வந்த நாளில் இருந்து அவளது ஒவ்வொரு செயலையும் ”அது சரியில்லை இது நல்லாயில்லையென்று” பிழை கண்டுபிடித்துத் திட்டிக்கொண்டே இருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து சண்டை பிடிக்குமளவுக்கு கோபம் வந்தாலும் ”அப்பாவாச்சே” என்று அடக்கிக்கொண்டு தனியாகப் போயிருந்து அழுது தீர்ப்பாள். இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக்கொள்வது. அவள் வாழ்க்கை விரக்தியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
அவளது அப்பா ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தவர். பல்வேறு பந்தயங்களில் கலந்துகொண்டு அவர் வென்று குவித்த பதக்கங்களும் கேடயங்களும் அலுமாரியை நிறைத்துக்கொண்டிருந்தன.
அப்பா வேலையில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்தே வாழ்க்கையில் அதிகம் பிடிப்பற்றவராக இருந்தார். அவருக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது.
காதோரம் மயிர் நரைத்திருக்கிறது என்ற பாணியில் யாராவது பேசிவிட்டால் சடக்கென்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். சட்டென்று போய் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வார்.
அவர் ஒருமுறை வீட்டுத் தோட்டத்தில் தேகப்பியாசம் செய்துகொண்டிருந்த போது ஒரு கனமான மரக்குற்றியை தூக்கினார். ஆனால் அவரால் அதனை தூக்க முடியவில்லை. பின் அதனை எப்படியாவது தூக்கிவிட வேண்டுமென்று பலமான தேகப் பயிற்சியில் ஈடுபட்டார். சில வேளைகளில் அவர் செயல் சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தது.
அவரது அறுபத்தெட்டாவது வயதில் அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டு மார்பில் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டது. அதுவே அவர் வாழ்வை பெரிதும் பாதித்தது. அவர் சிகிச்சைக்குப் பின் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டாலும் அவருக்குள்ளிருந்த ஏதோ ஒரு உணர்வு காணாமல் போய்விட்டது. அவர் தன் வாழ்க்கை முடிந்து போய்விட்டதாகவே கருதினார். வைத்தியர் கொடுத்த மருந்தையும் ஆலோசனையையும் உதாசீனம் செய்தார். அவரைப் பார்க்க வந்த நண்பர்களையும் கடிந்து கொண்டார். அவமானப்படுத்தும் விதத்தில் பேசினார்.
காலகதியில் அவரை பார்க்க வந்தோரின் தொகையும் குறைந்து பின்னர் அற்றுப்போய்விட்டது.
இத்தகைய நிலையில் தான் யோகாவினதும் அவள் கணவனதும் வாழ்வில் நிம்மதியற்றுப்போனது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டனர். வாத விவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில்தான் இது சம்பந்தமாக மனோவியல் மருத்துவ சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றால் என்ன என்று யோகாவுக்குத் தோன்றியது.
அதன் பிரகாரம் பல மனோவியலாளர்களை சந்தித்த போதும் எல்லா வீட்டிலும் இது பொதுவான பிரச்சினைதான் என்று அவர்கள் கையை விரித்து விட்டனர். ஆனால் ஒரு மருத்துவர் சொன்ன ஆலோசனை அவளுக்கு சரியெனப்பட்டது. அது அவருக்கு ஒரு செல்லப்பிராணியை வளர்க்கக் கொடுங்கள் என்பதாகும்.
அடுத்த நாளே யோகா அநாதை நாய்கள் காப்பகம் ஒன்றுக்கு சென்றாள். அங்கே விதவிதமான நாய்கள் குட்டிகள் பல நிறங்களிலும் வகைகளிலும் கூண்டிலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அவள் காப்பக பொறுப்பாளருடன் நாய்களை பார்க்கச் சென்ற போது கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நாயையும் அவள் நோட்டம்விட்ட போது அந்த ஒவ்வொரு நாயும் என்னை அழைத்துச்செல்ல மாட்டீர்களா..? என கெஞ்சுவது போல் அவள் முகத்தைப் பரிதாபமாக பார்த்தன.
அவள் இறுதியாக ஒரு கூட்டின் முன்வந்து நின்றாள். அங்கே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க மெலிந்த உயரமான நாய்க்குட்டி அவளைக் கண்டதும் நட்புடன் துள்ளிக்குதித்து அவள் கூட்டின் ஜன்னலில் வைத்திருந்த அவள் கரங்களை உள்ளிருந்தவாறே நக்கியது.
அந்த நாய்க்குட்டியை அவளுக்கு பிடித்திருந்தது. அதன் விபரத்தைக் கேட்டாள். அது இரண்டு வாரத்துமுன் தமது இல்லத்தின் வாயிலருகே வந்திருந்ததென்றும் அதன் சொந்தக்காரர்கள் தேடி வந்தால் ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது இரண்டு வாரத்தின் பின் அது கொல்லப்பட்டுவிடும் என்றும் சாதாரணமாகக் கூறினார். எல்லா நாய்களையும் பாதுகாக்க அங்கு இடமில்லை என்றும் கூறினார்.
யோகாவுக்கு நெஞ்சில் ஈரம் கசிந்தது. அந்த நாய்க்குட்டியை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அதனை அவள் தன் தந்தைக்கு பரிசாகக் கொடுத்தாள்.
ஆரம்பத்தில் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாய் அவரை விட்டு அகல்வதாக இல்லை. அவரை தன் இடது காலால் சீண்டிக்கொண்டே இருந்தது. அது எப்படியோ அவருடன் நட்புக்கொண்டது. அவர் மனதிலும் இடம்பிடித்துக்கொண்டது.
அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். அவர் அந்த நாய்க்கு ‘ஜனா’ என்று பெயர் சூட்டினார். யோகாவின் தந்தையின் கோபமும் சிடுசிடுப்பு குணமும் அவரை விட்டகலத் தொடங்கின. மன உளைச்சலில் இருந்து அவர் விடுபட்டார். அவர்கள் இப்போது தனிமைப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் இருவரும் சேர்ந்து நாட்டுப்புற களனி கட்டைகளில் எல்லாம் உலாவினார்கள். இடையில் கண்ணில் பட்டவர்கள் எல்லோரும் அவர்களின் இனிய நண்பர்களானார்கள். சுகதுக்கம் விசாரித்தார்கள்.
காலம் விரைந்து உருண்டோடிச் சென்றது. ஒரு நாள் நள்ளிரவில் ஜனா யோகாவும் அவள் கணவனும் உறங்கும் அறைக்கு வந்து அதன் குளிரான மூக்கால் தடவியும் சிணுங்கியும் அவர்களை தட்டி எழுப்பியது. அவர்கள் எழும்பியதும் குலைத்துக் கொண்டே அவர்கள் அப்பா இருந்த அறை நோக்கி அழைத்துச் சென்றது. அங்கே அவளின் அப்பா மீழாத்துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரது முகம் பேரமைதியுடன் காட்சி தந்தது.
மூன்று நாட்களின் பின் யோகாவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஜனா என்ற அந்த விசுவாசமுள்ள நாய் அவளது அப்பாவின் கட்டிலுக்கருகாமையில் தான் வழக்கமாக உறங்கும் படுக்கை விரிப்பில் தன் கால்களைப் பரப்பியவாறு உயிரை விட்டிருந்தது. யோகாவும் அவளது கணவரும் சேர்ந்து அதனை படுக்கை விரிப்பில் இருந்தவாறே சுற்றி அவளின் அப்பாவைப் புதைத்த புதைகுழிக்கருகாமையில் குழிதோண்டிப் புதைத்தனர். யோகா தன் அப்பாவின் வாழ்வில் எங்கிருந்தோ வந்து உறவு கொண்டாடி நட்பு பாராட்டி விசுவாசத்துடன் அவர் இறக்கும் வரை அவரை மகிழ்ச்சியுடன் வைத்திருந்த ஜனா என்ற அந்த ஜீவனுக்கு தன் மனமார்ந்த நன்றிக்கடனை செலுத்தினாள். ஜனா மட்டும் இல்லாதிருந்தால் அவளது அப்பாவின் வாழ்வு நரகமாக இருந்திருக்கும். அவளது அப்பாவின் இறுதிக்கிரிகைகளில் கலந்து துக்கம் விசாரிக்க அத்தனை திரளான நட்புக்கள் வந்திருக்கமாட்டார்கள். அவரது பழைய நட்புள்ளங்களும் கூட அவரது இறுதிக்கிரிகைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை அவளது சோகத்தை சரி பாதியாகக் குறைத்திருந்தது.