நகர மறுத்த மேசை





(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னங்க..நாஞ்சொல்லிக்கிட்டே இருக்கேன், உங்க காதுல விழலியா?” சுகுணா மீண்டும் சொன்ன போது கண்ட்ரோல், ஆல்ட், டெலீட் அடித்துவிட்டு எழுந்து கொண்டான் ரவி.
‘ம், சொல்லு. என்ன செய்யணுங்கிறே?’
‘வந்ததும் வராததுமா கம்ப்யூட்டர்ல போயி உக்காந்துக்கறீங்க. நாம எல்லாரும் ராத்தங்கலுக்குத்தேன் வீட்டுக்கே வர்றோம். அப்பச் செய்ய வேண்டியதச் சொன்னா ஒங்களுக்குக் கோவம் வந்துருது’.
‘அதான் வந்துட்டேன்ல… சொல்லு.’
‘நாளைக்கி சனிக்கெழமை. இமிக்கிரேசன் அர நாள்தேன். கூட்டம் அதிகமா இருக்கும். நீங்க காலையிலயே போனாத்தேன் ஒங்கம்மாவுக்கு லாங் டேர்ம் விசா வாங்கிக்கிட்டு வரமுடியும். நீங்க வரப் பதினொரு பன்னண்டாயிரும். பத்துக்கெல்லாம் பர்னிச்சர் வண்டிக்காரன் டெலிவரிக்கி வந்து கால்ல வெந்நிய ஊத்திக்கிட்டு நிப்பான். இன்னக்கி இடத்த ஒதுக்கி வச்சாத்தானே புதுசப் போடமுடியும். பழச என்ன பண்றதுன்னு பாருங்க…’
அவள் சொன்னதும்தான் போனவாரம் பிள்ளைகள் இருவருக்கும் இரண்டு மேசைகள் உட்லண்ட்ஸ் காஸ்வேயில் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத் துக்கு வர எழுந்தான் ரவி. ஸ்டெடி ரூம் பளிச்சென்று ஊதாக்கலர் புதுப்பெயிண்ட்டோடு அவனை வரவேற்றது. அந்த ரூமுடன் ஒட்டாமல் அந்தப் பழைய மேசை அஞ்சுக்கு மூனு சைஸ்ல விஸ்தாரமாகப் பரப்பிக்கொண்டு ‘என்னைப் பார்க்க வந்தாயா? பார்’ என்றது. சுவரோடு ஒட்டிக்கிடக்கிறதை நடுவில் இழுத்துவிட்டுச் சுத்தி சுத்தி வந்து பார்த்தான். கீழே இரும்புச் சட்டம். மேலே வெள்ளை சன்மைக்கா ஒட்டின மர டாப்பு. நடுவில் லேம்ப் போஸ்ட் இரண்டடிக்கு வாழைத்தண்டு லேம்ப். கீழே இரண்டு பக்கமும் நான்கு இழுப்பறைகள். நான்கு வருசத்துக்கு முன்னாடி ஸ்பெசலா டிசைன் போட்டு ஆர்டர் பண்ணி வாங்கியது. நன்கு உழைத்து விட்டது.
மேல இருக்கிற வெள்ளைச் சன்மைக்கா மட்டும் மூலையில் கொஞ்சம் பேந்திருந்தது. சன்மைக்காவில் ராமு ‘ஏ பிளஸ் பி ஹோல் ஸ்கொயட்’ பார்முலா எழுதிப் பார்த்ததெல்லாம் இருந்தது. செல்வியின் பக்கம் ‘செல்வி, கே 1, வெரி குட் கேர்ள்’ என்று அவளே எழுதி அதைச் சுத்தி பூவெல்லாம் வரைந்து வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது ரவிக்கு.
மேசை நடுக்கோடு அழியாமல் இருந்தது. பெரியவன் ராமுக்கும், சின்னவள் செல்விக்கும் சண்டை வரும் அடிக்கடி. ‘டாடி, இவனே எல்லா எடத்துலயும் புக்கப் பரப்பி வெச்சுக்கிறான்’ செல்வி சொல்ல, ‘இல்ல டாடி இவதான் பென்சிலால ராமு கோமுன்னு எழுதி வெக்கிறா’ என்று ராமு சொல்ல, ‘சண்ட போடாமெ நல்லாப் படிச்சீங்கன்னா தனித்தனி மேசை வாங்கித் தாரேன்’ என்று சொல்லியிருந்தான். அடுத்த நாளே ‘டாடி மேசை’ என்று பிள்ளைகள் கேட்க ஆரம்பிக்க, ‘இப்ப இது போதும். பெரிய கிளாஸ் போகும்போது பாத்துக்கலாம்’ என்றதற்கு செல்வி ‘மறுபடி சண்டை வந்தா..?’ என்று திருப்பிக் கேட்டாள். ரவி ‘நீ ஏன் சண்டக்கிப் போறே?’ என்று கேட்டுச் சிரித்துவிட்டு பெர்மனண்ட் மார்க்கரால மேசை நடுவுல கோடு போட்டுக் கொடுத்தான். ‘ஒருத்தர் பக்கம் இன்னொருத்தர் போகக்கூடாதின்னு’ சொன்ன அந்தக் கோடு இன்னும் அழியாமல் இருந்தது.
இரும்புச் சட்டம் துருப்பிடிக்காமல் நன்றாக இருந்தது. மேசையின் கால்களில் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருந்த ஜிகினா பேப்பர்த் துண்டு காற்றில் படபடத்தது. செல்வியின் பிறந்த நாளுக்கு ஹாலுக்கு இந்த மேசையைத் தூக்கிப் போய்ப் போட்டு ஜிகினா ஒட்டி அலங்காரம் பண்ணி கேக் வெட்டியது ஞாபகம் வந்தது. அன்றைக்குத்தான் எவ்வளவு கூட்டம். சாப்பாடு பத்தாமல் போய் மீண்டும் பீட்சா ஆர்டர் பண்ணிய தெல்லாம் ஞாபகம் வந்தது. அந்த ஜிகினாவின் மிச்சம் தான் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ட்ராயரை இழுத்து பார்த்தான். கை நிறைய அள்ளலாம் போல குட்டையும் நெட்டையுமான பென்சில்கள், ரப்பர் அழிப்பான்கள். தான் படிக்கும்போது ஒரு பென்சில்தான், அதுவும் புழுக்கையாகி இனி கையில் பிடிக்க முடியாது என்கிற நிலை வரை பயன்படுத்திய காலத்தையும், இப்போது பிள்ளைகள் அளவுக்கதிகமா ஸ்டேசனரி பயன்படுத்துவதையும் நினைத்துக் கொண்டான். இன்றைக்கும் புளுக்கைப் பென்சில்கள் வைத்திருக்கும் பிள்ளைகள் இருப்பார்களா? புதுப் பென்சில் வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோர் இன்றைக்கும் இருப்பார்களா? தான் மாறிவிட்டதால் உலகமே மாறிவிட்டதாக நினைத்துக் கொள்கிறோமா? இல்லை, காலம்தான் மாறிவிட்டதாக நினைத்துக் கொள்கிறோமா?
எத்தனை ரப்பர் அழிப்பான்கள். இங்கிருக்கிற அத்தனை அழிப்பான்களாலும் அழித்துவிட முடியாமல் நினைவுகள். தான் படித்தபோது ஒன்றுக்கே அல்லாடிய அந்த ஏழைக் கணக்கப் பிள்ளையின் மகனை எந்த அழிப்பானால் அழித்துவிட முடியும்? அவன் முதன் முதல் மேசை வாங்கியதை மறக்காதிருப்பது போல. அதற்கு என்ன விலையாகும் என்று கீழராஜ வீதி முருகன் பர்னிச்சர் மார்ட்டில் கேட்டு வந்ததும், அவர்கள் முன்னூற்றி ஐம்பது ஆகும் என்று சொன்னதும், அதற்கு பிள்ளைகள் மூவரும் தங்களுக்கு வாங்கித்தின்னத் தருகிற காசை உண்டியலில் சேர்த்ததும், அடிக்கடி எண்ணி எண்ணிப் பார்த்ததும், ஒரு வருடம் காத்திருந்து முன்னூற்றைம்பது ரூபாயும் சேர்ந்தபோது சந்தோசப் பட்டதும், பின் சில்லறை மூட்டையைக் கொண்டு போய்க் கடையில் கொட்டியபோது அதன் விலை ஏறிப்போயிருந்ததும், பிறகு கடைக்கார அண்ணாச்சி மனமிரங்கி அதே விலைக்குத் தந்ததும், அதில் மூன்று பிள்ளைகளும் முறை வைத்துக் கொண்டு படித்ததும் மறக்கமுடியுமா என்ன? இன்றைக்குத் தன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கச் சுகமாகத்தான் இருந்தது ரவிக்கு.
ஒரு முடிவுக்கு வந்தவனாகப் பிள்ளைகளைக் கூப்பிட்டான் ரவி. ‘ராமு, செல்வி இங்க வாங்க..’
‘என்ன டாடி?’
‘புது மேசைய எங்க போட்டுக்கப் போறீங்க?’
ஆளுக்கொரு மூலையைக் காட்டினார்கள்.
‘சரி நடுவுல இருக்கிற இடத்துல இது கெடக்கட்டும்.’
‘இல்ல டாடி. எம் பக்கம் வேணாம். அவ வேணா வச்சுக்கட்டும்.’
‘ஐயோ, எனக்கும் வேணாம்பா. இந்தப் பழச யாரு வெச்சுக்குவா?’ செல்வியின் மறுப்பு.
‘பிள்ளைங்களுக்கு வேண்டாமின்னா விடுங்களே’
கிச்சன்லேர்ந்து சுகுணா.
‘வேற எங்க போடலாம்? ஹால்ல?’
‘முடியாது. ஹால்ல ஏற்கனவே ஷோபாவும் டீப்பாயும், இன்னொரு கம்ப்யூடர் டேபிள் வேற இருக்கு. எடத்த அடச்சிக்குங்க.’
‘மேசை ஒன்னும் கெட்டுப்போயிடல்ல. நல்லா இருக்கேன்னு பாக்குறேன்.’ ரவிக்கு அந்த மேசையை விட மனசு வரவில்லை.
‘அப்பறம் ஏன் புதுசு வாங்குனீங்க?’
‘இது பத்தல. புள்ளைகளுக்குத் தனித்தனியா இருக்கட்டுமேன்னுதான். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா இருந்தாச் சண்ட வராதுன்னு நீயும் நானுந் தானே முடிவு பண்ணுனோம்’.
‘ஆமாங்க. இது நல்லா ஒழைச்சுருச்சு. போதும். பழசாயிருச்சு. அந்த ரூமோட அழகையே கெடுக்குது பாருங்க. தூக்கிப் போட்டுரலாங்க. அடைசலாப் போட்டு வெச்சுக்க மச்சா இருக்கு.’
ரவி அந்த மேசையைப் பார்த்தபோது அது ‘என்னை வெளியே போடப்போகிறாயா?’ என்பது போலக் கேட்பதாக நினைத்துக் கொண்டான்.
‘என்னங்க, தூக்கிப்போட மனசு வரலையின்னா ஒண்ணு செய்ங்க. பெட் ரூம்ல போட முடியுமான்னு பாருங்க.’
பெட்ரூமில் ஏற்கனவே இடமில்லை என்று அவனுக்குத் தெரியும். பெட்ரூமுக்குப் போனான். முக்கால் ரூமை அடைத்துக் கொண்டு இரட்டைக்கட்டில், பக்கத்தில் நடந்து போகிற அளவுக்கு இடம். அங்கே அவன் அம்மா ராஜம்மா ஒரு மூலையில் துண்டை விரித்து மூட்டை போல சுருண்டு படுத்துக் கிடந்தவள் எழுந்து கொண்டு ‘என்ன?’ என்றாள். கணவன் இறந்த பிறகும் மகனோடு வந்து இருக்காமல் தனியாகவே இருந்து வந்தவள் இப்போது மகன் வீட்டுக்கு சிங்கப்பூருக்கு வந்திருக்கிறாள். இந்தமுறை ரவி ஊருக்குச் சென்றபோது ‘நீ ஏன் தனியா இருக்கே? எங்களோட வந்துரும்மா’ என்று இந்தியாவிலிருந்து கூட்டி வந்திருந்தான்.
அவள் வயதாகியிருந்தாள். சுகுணா பயந்தது போல முன்பிருந்த மாமியாராக அவள் இல்லை. வீரியம் குறைந்திருந்தாள். ஊரிலிருந்து வந்த இந்த இரண்டு வாரத்தில் பார்த்த வரை மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப்போய்க் கொண்டுதான் இருந்தது.
‘நீங்க படுங்கம்மா. இங்க, பழைய மேசையப் போடமுடியுமான்னு பாக்குறேன்’ என்றான் ரவி.
அவன் கண்கள் அளந்து பார்த்துவிட்டு ‘முடியாது’ என்று சொல்லிவிட்டன. ‘சரி வெளிய தூக்கிப் போட்டுருவோம்’ என்றான்.
ராஜம்மா எழுந்து வந்து பார்த்துவிட்டுக் கையை முகவாய்க்கட்டையில் வைத்துக் கொண்டு ஆத்துப் போனாள், ‘ஆத்தாடி, இந்த மேசை நல்லாவுள்ள இருக்கு. இதயுந்தேன் தூக்கிப் போடலாமா? மனசுந்தேன் வருமா? பிருச்சுக்குடு. நா எடுத்துக்கிட்டுப்போறேன் ஊருக்கு.’
அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
ராஜம்மா சொன்னாள், ‘என்னடா சிரிக்கிறிய, எம்புள்ளய உண்டியல்ல காசு சேத்து வாங்கின மேசை இன்னம் பத்தரமா காபந்து பண்ணி வச்சிருக்கேன். நீங்கல்லாம் இங்க வந்துட்டாலும் அந்த மேசையப் பாக்கும் போதெல்லாம் எம்புள்ளைக எங்கூடவே இருக்கிறாப்புல நெனச்சுக்குவேன். அவ்வளவு ஏன்? எம் மாமனார் காலத்து கைப்பொட்டி இன்னும் இருக்குடா பேராண்டி.. அவகளுக்குப் பொறகு என் வீட்டுக்காரக உங்க தாத்தா அதுலதேன் கணக்கெழுதுவாக.. அவுக செத்தப்புறம் அவுக வெச்சிருந்த பேனா, கைப்பொட்டி, ரூல்தடி, குரிச்சி எல்லாத்தயும் அப்பிடியே பத்திரமா வெச்சிருக்கேன்டா. அதப் பாக்கும்போதெல்லாம் அவுக நெனப்பு வரும். அது ஒரு ஆறுதலா இருக்கும் அவுகளோடவே இருக்குற மாதிரி.’ பாட்டி சொல்லச் சொல்ல செல்வி கதை மாதிரி கேட்டுக் கொண்டிருந்தாள்.
ராமுதான் யோசித்து பதில் சொன்னான், ‘இங்க எல்லாரும் புதுசு வாங்கினா, பழசக் கொண்டுபோயி பிளோக்குக்கு அடியில வச்சிருவாங்க பாட்டி.’
‘ஆமா அத்தை. இங்க இடப் பற்றாக்குறை இருக்கிறதால வேற வழியில்லை.’
அவனோடு சுகுணாவும் சேர்ந்து கொண்டாள்.
எதையும் நினைத்தவுடன் டெலீட் செய்து ப்ளோக்குக்கு அடியில் கொண்டு வைத்து விட எப்படித்தான் முடிகிறது?
‘ஆத்தி வெல பெத்த மேசையில்ல. யாரும் எடுத்துக் கிட்டுப் போவாகளா?’ ராஜம்மாவால் ஜீரணிக்கமுடியாத நடைமுறையாய் இருந்தது.
‘இல்லாதவுக யாராவது தேவையின்னா எடுப்பாக. பெரும்பாலும் குப்பை வண்டில போயிரும் அத்தை.’
‘சரி. என்னங்க.. சீக்கிரம் ஒரு முடிவெடுங்க.’ சுகுணாவுக்கு வேலை முடிஞ்சாச் சரி என்கிற அவசரமாய் இருந்தது.
‘அதேன். கீழே கொண்டு போய் வெச்சிர வேண்டியதுதான். ஆளுக்கொரு கை புடிங்க’ ரவி கடைசி யில் மனதை மாற்றிக் கொண்டு இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருந்தது.
ரவி, பிள்ளைகள் ஒருபுறமும், சுகுணாவும், ராஜம்மா வும் இன்னொரு புறமும் பிடித்துக் கொண்டு மெது மெதுவாக நகர்த்தினார்கள். அந்த மேசை நல்ல கனமாக இருந்தது. படிக்கிற அறையிலிருந்து ஹாலுக்கு வந்தது மேசை.
‘ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த எடத்துலதான் இந்த மேசையப் போட்டு, பலூன் கட்டி பொறந்தநாள் கொண்டாடுவோம் இல்ல டாடி’ என்றான் ராமு.
செல்வி சொன்னாள், ‘ஆமால்ல.. எம் பொறந்த நாளுக்கு இந்த மேசை கொள்ளாம எவ்வளோ கிப்ட்டு வந்துச்சு’. ‘எல்லாத்தயும் இவளே வச்சுக்கிட்டா பாட்டி’ என்றான் ராமு. ‘இந்த மேசையில இவனுக்கும் பங்கு இருக்குன்னு பாதி கிப்ட்ட இவனுக்குத் தரணுமாம். பொறந்த நாளு எனக்குத்தானே பாட்டி. இருந்தாலும் போனாப் போவுதுன்னு ஒரு கலர்ப்பென்சில் பாக்ஸ அவனுக்குக் கொடுத்தேன் பாட்டி.’
ஹாலை விட்டு வெளியே போக மறுத்தது மேசை. மேல தூக்கினாப்புல தள்ளு. ம் அப்பிடித்தென். ரைட்டுல. லெப்ட்டுல. பாத்து… கால்ல போட்டுக்காம. இப்போது வராண்டாவுக்கு வந்தது மேசை.
லிப்ட்டு வரை தள்ளிக்கொண்டு போனார்கள். ஊர்கூடித் தேர் இழுப்பது போலத்தான் அமைந்தது அந்த நிகழ்வு. வராண்டாவில் போகிறவர்கள் பார்த்துக் கொண்டு போனார்கள்.
‘தெரிஞ்சவுகளுக்காவது கொடுக்கலாமே?’ என்றாள் சுகுணா.
‘யாரக் கேக்குறது? எப்படிக் கேக்குறது?’ என்றான் ரவி.
‘ஏங்க சால்வேசன் ஆர்மிக்கு கால் பண்ணிச் சொல்லுங்களேன்.’
‘அட நீ ஒண்ணு. அதெல்லாம் ரெம்பொ பர்னிச்சர் இருந்தாதான். ஒரு மேசைக்கெல்லாம் வரமாட்டாங்க. அப்பிடி வந்தா, வந்து எடுத்துபோற வண்டிக்காசு நாம குடுக்கணும் தெரியுமா?”
‘இதென்ன? மேசையும் குடுத்து, தூக்கிபோற கூலியும் கொடுப்பாகளா?’ ராஜம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
‘இல்ல பாட்டி. அவுங்க ஏழைங்களுக்குக் கொடுத்துருவாங்க.’
லிப்ட்டுக்குள் நுழைய மறுத்தது மேசை. ‘ஆறு மாடி தூக்கணுமே. இங்கேயே வச்சிரலாங்க’ என்றாள் சுகுணா.
‘நடைபாதைல வைக்கக் கூடாது. மெது மெதுவாத் தூக்கி போயிடலாம். புடிங்க’ என்றான் ரவி. படிகள் வழி யாக இறக்குவது சிரமமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு மாடியிலும் இளைப்பாறிக் கொண்டு ஒருவழியாகக் கொண்டு சேர்த்தார்கள். படிக்கட்டுக்குப் பக்கத்திலே, ப்ளோக்குக்கு அடியிலே இருந்த காலியிடத்திலே ஒதுக்கமாகப் போட்டார்கள் மேசையை. எல்லோருக்கும் அப்பாடா என்று இருந்தது. மூச்சு இறைத்தது போல ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். ரவி அந்த மேசையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டான் சற்றுநேரம்.
பிள்ளைகள், சுகுணா, ராஜம்மா எல்லாரும் மேலேறிப் போய்விட்டார்கள். போகும்போது ராஜம்மா பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டே போனாள், ‘ஒங்க தாத்தா ரொம்பச் சிக்கனம். ஒன்னையும் தூக்கிப்போட மனசு வராது. ஒரு துரும்பக்கூடச் சேத்து வைப்பாரு.’
ரவிதான் கடைசியாய்ப் போனான் மேசையைப் பார்த்துக் கொண்டே. அவனுக்கு மேசையோடு, நினைவுகளையும் விட்டுப்போவது போல இருந்தது.
காலையில் ரவி இமிக்கிரேசனுக்குப் புறப்பட்டுப் போனான். லிப்டில் இறங்கிப் போகும்போது ஞாபகமாகப் படிக்கட்டுக்கு பக்கத்திலே வந்து மேசை இருக்கிறதா? என்று பார்த்து விட்டுப் போனான். யாரும் எடுக்காமல் அது அங்கேதான் இருந்தது.
இமிக்ரேசனில் வேலை முடிந்தது. ராஜம்மாவுக்கு ஒரு வருடத்துக்கு விசாக் கொடுத்திருந்தார்கள். திரும்பி வந்து கொண்டிருக்கையில் கைத்தொலைபேசி அடித்தது.
சுகுணா பேசினாள் ‘உங்கம்மா பேசனும்கிறாங்க.’
‘என்னம்மா, சொல்லு.’
‘இல்லப்பா. நா ஊருக்குப் போறேன். விசா எடுக்க வேண்டாம்.’
‘அதெல்லாம் எடுத்திட்டேன். ஏன் போறேங்கறீங்க?’
‘இல்லப்பா. அங்க எல்லாத்தயும் அப்பிடி அப்பிடியே போட்டுட்டு வந்தேன். எல்லாம் கெட்டுப் போயிரும். எம் பேரன் பேத்தியப் பார்த்துட்டேன். விசா எடுத்தா என்ன. நான் ஊருலதானே போயி இருக்கேன். என் வீட்ட விட்டுட்டு இருக்க முடியலைப்பா. நீ என்னய பிளேன்ல ஏத்திவிட்டுரு தொணையோட.’
‘சரி. நான் வீட்டுக்கு வர்றேன். அதப்பத்தி அப்பறம் பேசலாம்.’
ரவி அவன் அம்மா பேசியதையே நினைத்துக் கொண்டு வந்தான். ஏன்? அம்மா இப்படி… உண்மையிலேயே அவள் சொல்வது போல வீட்டை, அதன் நினைவுகளை விட்டு அவளால் இருக்க முடியவில்லையா? அப்படி இருந்தால் அது தப்பென்று நினைக்கிறாளா? அல்லது அவள் தன்னையும் ஒரு மேசையைப் போல இவர்கள் நினைக்கக்கூடும். என்று நினைத்துக் கொண்டாளோ…?
அவன் ப்ளோக்கிற்கு வந்து சேர்ந்தான். லிப்டில் ஏறப் போகுமுன் மேசை இருக்கிறதா? என்று பார்த்தான். அது இன்னும் இருந்தது. அதன் மீது அவன் நேற்று கண்ட்ரோல், ஆல்ட், டெலீட் அடித்தானே அதேபோல ஒரு கணினியையும் யாரோ கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.
– தமிழ்முரசு.
– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.
![]() |
புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுதி. எழுத்துலகம் சிறுகதை, கவிதை என விரிகிறது. படைப்புகள் இணைய இதழ்களிலும், சிங்கை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது க கவிதைகளும் பல பரிசுகளை வென்றுள்ள…மேலும் படிக்க... |