கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 2,230 
 
 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நாகம்மாவீட்டு வேலியோரமாக நின்று உள்ளே எட்டிப் பார்த்தான் குமாரசாமி…. 

இனிமேல் தைத்து உடுத்தும் தொழிலை இழந்த வேட்டி; இருபத்திரண்டு வயசாகியும் நாவிதன் கத்தியைக் காணாத முகம்; தன் மூத்த சகோதரி. தமயன், மைத்துனர்-இவர்களால் வஞ்சித்து ஒதுக்கித் தள்ளப்பட்ட அதிர்ச்சியால் ஏற்பட்ட சஞ்சலத் தோற்றம்; சிறுவயதில் தானே, வாய்க்குள் நுழைத்த மரவள்ளிக் கிழங்கை நாகம்மா விரல்விட்டுப் பறிக்கும் போது நகங்கீறிக் காயப்பட்டஉதடுகள்; உடம்பெல்லாம் அழுக்கேறியிருப்பினும் இயற்கையாய் அமைந்த வசீகரத்தோற்றம்; – இவன்தான் குமாரசாமி. இவன் பட்டியிலிருந்து பிரித்து வீட்டில் அன்புடன் வளர்த்த ஆட்டுக்குட்டியைத் தேடி வேலியால் உள்ளே எட்டிப் பார்த்தான். 

நாகம்மாவின் தந்தை நாட்டாண்மைக்காரன். அவர் கூப்பன்மாப்பிட்டுத் தின்னார். எங்கோ இருட்டுச் சந்தையில் முப்பத்திரண்டு ரூபாவிற்கு ஒரு பறை நெல் வாங்கிப் போட்டிருந்தார். அந்த நெல்லரிசியின் ஒரு சிறு ஓலை பகுதியை மாவாக்கி, அதை வறுப்பதற்கு உக்கிப்போன வேலியில் முறிக்கப்போனாள் நாகம்மா. வேலியோடு வேலியாய்க் குமாரசாமி வேலியிற் சாய்ந்து கொண்டு தலையை உள்ளுக்கு நீட்டியதும், வேலியில் உள்ள கறையான்மண் விழுகிற சத்தம் கேட்டு இரண்டு முழத்துக்கு அப்பால் நின்ற நாகம்மா நிமிர்ந்து பார்ப்பதும் சரியாயிருந்தது. முன்பெல்லாம் குமாரசாமியின் தாயாரிருக்கும்போது ஒருநாளுக்குப் பத்துமுறை மாமி என்று கூவிக்கொண்டு ஓடிவருபவள் அல்லவா நாகம்மா? வந்தால் சும்மா இருப்பாளா! குமாரசாமியின் புத்தகங்களை எடுத்து ஒழிப்பாள். அவன் தினம் படுக்கும் சாக்குக்கட்டிலின்மீது மண்ணை அள்ளி மூன்று நாலு குவியலாகக் குவிப்பாள். அவன் கஞ்சிகுடிக்கும் சிரட்டையைத் தேடியெடுத்து, மாமி எச்சில் துப்ப மண்ணை அதில் அள்ளிக் கொடுப்பாள். குமாரசாமி  இதையெல்லாம் பார்த்துவிட்டானோ, தாய்க்கு மறைவில் அவள் வரும்வரை பார்த்திருப்பான். வந்தவுடன் அவள்கன்னத்தில் இரண்டு கிள்ளுக்கிள்ளி, அவள் கண்ணால் இரண்டு சொட்டுக் கண்ணீரையாவது கறந்து விட்டுத்தான் ஆறுதலைடைவான்! 

அவன் என்ன செய்தாலும், நாகம்மா ஒரு நாளைக்கு நாலுதரமாவது மாமியிடம் வராமல் விடவும் மாட்டாள். ஒன்றும் அகப்படாமல் விட்டால் குமாரசாமி சாப்பிடுகிற தட்டுவத்தையாவது ஒழிக்காமல் போகவும் மாட்டாள். 

காலம் சுழலும் வேகத்தை யார் உணருகிறார்கள்? அன்னமுத்து- குமாரசாமியின் தாய், கள்ளங் கபடமற்றவள். புதன்கிழமை மத்தியானம், பிள்ளைகள் நால்வருக்கும் ஒடியற்கூழ் கொடுத்துவிட்டுத் தகப்பனுக்கும் ஒரு பெரிய சட்டியில் கூழை வார்த்து வைத்து, மீதியாயிருந்ததில் இரண்டு மூன்று பலாவிலை கூழைக் குடித்தாள். பாவம்,கூழுக்குப் போட்ட கெழுத்துமீன்முள், தொண்டையில் மாட்டிக் கொண்டது. அன்னமுத்து தன்னாலான மட்டும் பார்த்தாள். கையையும்தான் உள்ளுக்குள் எடுக்க விட்டுப் பார்த்தாள். முடியவில்லை. தேகம் முழுவதும் வியர்வை ஆறாகப் பெருகியது. மனுஷிக்கு விஷயம் விளங்கிவிட்டது போலும்! குமாரசாமியின் அண்ணன் கந்தவனத்தையும் அக்காள் காமாட்சியையும் அருகிலழைத்தாள்: “நான் செத்துப்போவேன். குமாரசாமியின் குறைப்படிப்பை விடாமற் படிப்பித்துப் போடுங்கோ. குழந்தை சரசு….. 

கூக்குரல்!… 

சர்வஅதிகாரமும் காமாட்சி கையில்  வந்தது. பெயருக்கேற்ற தொழிலாளி அவள். வசதியாகக் காமரூபனாகிய கைலாசபிள்ளையும் பொறுப்பற்ற நட்பில் புகுந்து விட்டான். கேட்பானேன்? கைலாசப்பிள்ளை வீட்டிற்கு வர வேண்டியதுதான், குழந்தை சரசு படலைப் பக்கம் விளையாடப் போக வேண்டும்! இச் செய்கையெல்லாம் புத்தியுள்ள குமாரசாமிக்கு நெஞ்சைப் பிளந்தது. எது சொல்லியும் யார் கேட்கப் போகிறார்கள்?…. 

கைலாசபிள்ளை தூரத்தில் வருவதைக் கண்டு கண்ணீர் சொட்டிச் சொட்டிக் குமாரசாமி முற்றத்தில் வெட்டுக்கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தான். கைலாசபிள்ளை சமீபித்துவிட்டான். கத்தி உயர்ந்தது! ‘ஐயோ சண்டாளன் வெட்டுகிறான்! என்று கத்தி விட்டாள் காமாட்சி! கந்தவனத்தின் கைப்பிடியிற் கிடந்து திமிறினான் குமாரசாமி…. 

தப்பிக் கொண்டு திரும்பியோடிச் சென்ற கைலாசபிள்ளை, இருபது யாருக்கப்பால் நின்று கத்தியைப் பார்த்துக் கொண்டு நின்றான். 

“பின்னைத்தான் இதென்ன வேசைவீடோ? உவன் வாறதும் போறதும் உலகம் எத்தனை கதைக்குது!” என்று முணுமுணுத்துக்கொண்டு வந்தாள் அடுத்த வீட்டு ஐயாத்தைக் கிழவி. தெருவாலே போன விதானை சண்முகமும் சத்தம் கேட்டு அங்கே வந்தார். “தம்பி. கைலாயபிள்ளை ஓடாதே, இங்கே வா! நீ என்ன இந்தப் பெட்டையைக் கட்டப்போறியோ, இல்லையோ? உண்மையைச் சொல்லு!” என்று கேட்டார். 

“சரி; நான் கட்டுகிறேன். உவன் இந்த வீட்டில் இருக்கக்கூடாது” 

“ஓ! நான் போகிறேன். நீ இருக்கிற  முறையாய் இரு” என்று வெளியே போய்விட்டான் குமாரசாமி. பின் கலியாணப் பதிவு; கலியாண வீடு; எட்டாம் மாசம் குழந்தை ஒன்று…. 

பக்கத்திலே பள்ளிக்கூடம் ஒன்று. படுக்க இருக்க அது இடம் கொடுத்தது குமாரசாமிக்கு. எஞ்சிய நேரமெல்லாம் ஆடுகள் மேயும் மேய்ச்சல்நில நிழல் மரங்களில் புத்தகமும் கையுமாயிருப்பான் இவன். இந்தக் காலத்தில் நாகம்மாவின் தந்தை அவளுக்கு ஒரு கால்சட்டை மாப்பிள்ளை ஒழுங்குபண்ணி இருக்கிறார்” என்று கூட்டு ஆட்டுக்காரர்கள் சொல்ல நெடுமூச்சுடன் ‘அது நல்லதுதானே’ என்பான் குமாரசாமி. 

வேலியிற்சாய்ந்த குமாரசாமி நோக்கிய இடமொன்று; நாகம்மா நோக்கிய நோக்கியவிடம் இன்னொன்று. இங்கே கண்சந்திப்பு ஏற்பட இடமில்லாமற் போய்விட்டது. 

‘என் நகக்கீறல்பட்ட உதடு; கிழங்கால் நேர்ந்த கீறல்; சின்னத்தான் கிள்ளிய கிள்ளுக்கெல்லாம் கொடுத்த நன்கொடை! முதலில் அவளுக்கு வந்தது அடங்காச் சிரிப்பு. சிரிப்பு மின்னல்போல் மறைந்தது; பிறகு துக்கம் இதென்ன தலை! இதென்ன உடை! ஐயோ, இதென்ன கோலம்! என்ற எண்ணம் உந்த, “சின்னத்தான்! என்ன பேசாமல் நிற்கிறீர்கள்?” என்றாள். குமாரசாமி நிமிர்ந்து பார்த்தான் அவள் முகத்தை. அவன் நெஞ்சு உயர்ந்து தாழ்ந்தது, ஒருமுறை அல்ல பன்முறை. 

‘சின்னண்ணா! என்று கூவிக் கொண்டு கையிலோர் கடிதத்துடன் ஓடிவந்தாள் சரசு. கதாநாயகர் இருவரது கண்களும் ஓய்வு பெற்றன. ஆனால் இருதயம்…! கடிதம் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற உரிமை உணர்த்தும் அழைப்புப்பத்திரம். காலம் மறுபுறமாகச் சுழலுகிறது; நாகம்மாவின் உண்ணாவிரதம் தந்தையின் கடின சித்தத்தை உடைத்து, குமாரசாமிக்கு அடிமையாக்கி அவன் உண்மை மாமனுமாக்கி விட்டது…. குமாரசாமியின் உதட்டிலிருந்த நகக்குறியைத் தடவிக் கொடுத்து. ”உங்களுக்கு இது போதாது சின்னத்தான்!’ என்றாள் நாகம்மா. 

“தெரியுமா? இனிமேல் உந்த சின்னத்தான் பாஷையை விட்டுவிட வேணும்!” 

“பின்னை” 

“இஞ்சாருங்கோ! என்று கூப்பிடவேணும்!” 

‘களுக்’ கென்று நாகம்மா சிரித்தாள். குமாரசாமியின் சிரிப்பொலியும் அதோடு கலந்தொலித்தது.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *