தொழில் – ஒரு பக்க கதை





சாப்பிட்டு முடித்துக் கிளம்பினான் சேகர். எதிரில் ஜோதிடக் கடை. ஜோதிடர் அவன் அப்பா. ‘இங்கு கைரேகை பார்க்கப்படும். ஜோதிடம், ஜாதகம் கணிக்கப்படும்’ என்ற போர்டு. பைக்கை தள்ளிக்கொண்டு போய் கடை எதிரில் நிறுத்தினான். உள்ளே போனான்.
என்னப்பா…இன்னும் ஜாதகம், ஜோதிடம் கணிக்கப்படும், கைரேகை பார்க்கப்படும்னு போர்டு போட்டுக்கிட்டு….இப்போ உலகம் கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு போயிட்டு இருக்கு. மனுஷன் வேற கிரகத்துல ஆள் இருக்கான்னு தேடிட்டு இருக்கான்….இன்னும் நீங்க இதே ஜாதகம்,ஜோசியத்தை கட்டிக்கிட்டு அழறீங்க’ என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் கோபம் வந்துவிட்டது அப்பாவுக்கு. ‘அடேய்…தொழிலை கேவலமா பேசாதேடா, நீ படிச்சிருக்கியே பெரிய கம்ப்யூட்டர்…அது இதுல சம்பாதிச்சு படிச்சதுதான்…மறந்துடாதே!” என்றார் ஆவேசமாக.
‘ஹூக்கும்…ஏதாவது சொன்னா, உங்களுக்கு கோபம் வந்துடுமே பெரிசா…சரி, நான் வர்றேன்’ என்றபடி கிளம்பினான்.
தன் அலுவலகத்துக்கு வந்தவன், பைக்கை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து உள்ளே வந்தான்.
அங்கிருந்த போர்டில், ”கம்யூட்டர் நிலையம்…இங்கு கம்ப்யூட்டர் ஜோதிடம் பார்க்கப்படும்…கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கப்படும்’ என்று போட்டிருந்தது!
– கே.ஆனந்தன் (14-6-10)