கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 6,039 
 
 

அப்துல்லா மனசை அமைதி படுத்த அரும்பாடு பட்டுவிட்டார். ஆனாலும் லண்டன் வரை தொலைந்து போய்விட்ட அந்த நிம்மதி திரும்பி வருவதாக இல்லை. அது போனது போனதுதான். நாசமாகப் போய்விட்டது.

“யா அல்லா… இந்த சோதன தேவதானா?” இரு உள்ளங்கைகளும் மேல்நோக்கிப் பார்க்க, சுண்டுவிரல்கள் இரண்டும் நெருங்க அப்துல்லா செப்பினார்.

இனி எப்படி வெளியில் தலைகாட்டுவது; இந்தச் சமூகத்துக்கு என்ன பதில் சொல்வது என்பது அப்துல்லாவின் தற்கால கவலை. பாத்திமா கூடவே இருந்தது என்னவோ அப்போதைக்குக் கிடைந்த இலவச ஆறுதல்தான்.

“எனக்கே மனசு இப்படி குலுங்குதே, பாவம் பாத்திமா; பெற்றவள். என்ன பாடுபட்டிருக்கும் அவளது மனசு?”

இபுராகிம் தனக்கு மட்டும் துரோகம் செய்துவிட்டதாகத் தோன்றவில்லை அவருக்கு. ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களுக்கே துரோகம் இழைத்துவிட்டதாய்தான் பட்டது. “இது அந்த இறைவனுக்கே அடுக்காது. நிச்சயம் இபுராகிம் நரகத்துக்குத்தான் போவான்,” என்று அப்துல்லா சபிக்காமல் சபித்தார்.

இதையெல்லாம் பார்க்கப் பார்க்க பாத்திமாவுக்கு உள்ளூர நடுக்கம் கவ்வத் தொடங்கிவிட்டது. ஒற்றைப் புள்ளையைத்தான் பறிகொடுத்தோம்; கணவனது நிலமையும் இப்படி மோசமாகிக் கொண்டே போவதைப் பார்த்து அவளுக்கும் திக் பிரமை பிடித்துவிடும் போலிருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும் எனும் திடமான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஜபமாய் ஒலித்தன அவளது மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்குள்.

ஒரு மாறுதலுக்காகத் தாய்வீடு போய் வரலாம் என்ற சிந்தனை சிந்தையைச் சீண்ட அதை அப்துல்லாவிடம் சொன்னாள். அவனுக்கு இதில் கொஞ்சம்கூட விருப்பமில்லைதான். முகத்தைக் காட்டவேண்டுமே மாமியார்காரியிடம். நெஞ்சு வரைக்கும் எட்டத் துடிக்கும் அடர்த்தியான தாடி வளர்த்து வைத்திருந்து பயன் என்ன? முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆர்வம் சுருட்டை மயிர் தாடிக்கு ஏனோ வராமல் போனது.

பாத்திமாவின் எறும்புச் சொற்கள் ஊர ஊர உபைதுல்லாவின் கல் மனம் தேய்ந்து போயிருந்தது. ஒருவழியாக ஊத்தான் மெலிந்தாங் போகலாம் என்று முடிவு எடுத்து விட்டனர். அப்துல்லாவுக்கு மட்டும் மனம் இன்னும் கல் மாதிரி கனத்துக்கொண்டுதான் இருந்தது. அவருக்கு ஊத்தான் மெலிந்தாங் செல்லும் திட்டத்தில் அவ்வளவாக கவனமும் மனமும் லயிக்கவில்லை.

அவர் இப்போது போகத்துடிக்கும் இடமெல்லாம் பாகான் டத்தோவுக்குத்தான். ஊத்தான் மெலிந்தாங், பாகான் டத்தோவிலிருந்து அதிக தொலைவில்லை என்றாலும்கூட அங்கே செல்ல என்னென்ன தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. எத்தனையோ ஆண்டுகள் தலைதெரிக்க ஓடிவிட்டிருந்தது அந்தப் பூர்வீகத்து மண்ணை ஏமாற்றிவிட்டு வந்து.

அந்தப் பழைய பூமியில் காலடி வைக்க விகாரமான ஏதோ ஒன்று அப்துல்லாவைத் தடுத்துவைத்திருந்தது. ஒருவேளை, இனிமேல் யாரும் கவலைப் படாத அவரது தன்மானமாக இருக்கலாம் அது.

அம்மாவைப் பார்த்ததும் என்ன செய்வாள் பாத்திமா என்று முன்கூட்டியே அனுமானித்து வைத்திருந்தார் அவர். முதல் காட்சி, காரில் எடுக்க வேண்டியதை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு முரட்டுக்காளை துரத்துவதாக நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடுவாள் ஆத்தாளைத் தேடி. இரண்டாவது காட்சி, பார்த்து மாசக்கணக்கில் ஆனதுபோல எக்கச்சக்கத்துக்கு படம் காட்டிக்கொண்டிருப்பார்கள் ஆத்தாளும் மகளும். இந்த இரண்டு காட்சிகளையாவது மூக்கைப் பிடித்துக்கொண்டு சகித்துத் தள்ளிவிடும் அபார ஆற்றல் உள்ள அப்துல்லாவால் இனிவரும் மூன்றாம் காட்சியைத்தான் ஜீரணிக்க முடியாமல் பல நாட்களுக்குக் கிடங்கில் கிடப்பில் கிடந்துவிடும்.

இந்த மூன்றாம் காட்சி இருக்கிறதே; தமிழில் சொல்ல வேண்டுமானால் அ முதல் ன் வரை, ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் ஏ முதல் ஸெட்டு வரை இம்மி பிசகாமல் எள்ளளவுகூட விட்டுவைக்காமல் நடந்த அத்தனை கதையையும் ஓட்டுவாள் பாழாய்ப்போன பாத்திமா. அதை ஊம் கொட்டி வக்கனையாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டு எங்களை வழியனுப்பி வைத்ததும் ஊருக்கு திரைபோட்டுக் காட்டிக்கொண்டிருப்பார் அப்துல்லாவின் மாமியார்காரி ஆயிஷா. அது கையை மீறிப்போன நான்காவது காட்சி.

“மா, மா, இந்தக் கொடும அல்லாவுக்கே பொருக்காதும்மா. பாத்துப் பாத்து வளத்தப் புள்ள வயித்துல எட்டி ஒதச்சிட்டுப் போயிட்டாம்மா…” முன்றாம் காட்சி அறங்கேற்றம் காணத் தயார்நிலையில் இருந்ததை உணர்ந்துகொண்ட அப்துல்லா அங்கிருக்கப் பிடிக்காமல் வெளியே வந்து ஐந்தடியில் ஆயாசமாக உக்கார்ந்து அல்லது படுத்துக்கொள்ள வசதியாக அடித்து வைக்கப்பட்டிருந்த வாங்கில் போய் தன்னைக் கிடத்தினார். எக்கேடாவது போகிறது பிரயோஜனமற்ற மானம் என்ற முடிவின் விரக்தியில் விளைந்த சரணடைவு அது.

உள்ளே பேசுவதும் பேச்சுகளுக்கிடையே எழும் வியப்புக் குறியீடுகளும் அவ்வப்போது கடுப்பைக் கிளப்பின. அதற்குத் தோதாக வேரூன்றி வளர்ந்திருந்த தாடியின் அடர்த்திக்கு வியர்வை வழியத் தொடங்கி பிசுபிசுப்பை உண்டுபண்ண ஆரம்பித்திருந்தது.

உண்மையில் இபுராகிம் செய்த காரியத்தை அவராலும் ஜீரணிக்க முடியாமல் போயிருந்தது. எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன? அந்தச் செல்வச் செழிப்பையெல்லாம் குப்பையில் போடவும் தயார். தன் மகன் மீண்டும் வந்து சேர்ந்தாலே போதும் என்றிருந்தது. மகனை இங்கிலாந்துக்கு விருப்பமில்லாமல் தாரைவார்த்துவிட்ட களைப்பு இனி எப்போதும் நீங்காத அயர்வைத் தந்துவிட்டுச் சென்றிருந்தது.

மருத்துவம் படிக்கச் சென்று திரும்பி வருகையில் இங்கிலாந்து நிரந்தர குடியுரிமையை வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான், அதுகூட ஏற்றுக் கொள்ளலாம்தான். “எவளோ வெள்ளக்காரிய நிக்கா பண்ணிக்கிட்டாம்மா இபுராகிம். மதம் கூட மாறிட்டான். இப்ப அவம்பேரு ஆப்ரகாம்ன்றான்,” பாத்திமா பறைசாற்றினாள். “யா அல்லா! என்னடி பாத்திமா குண்டத் தூக்கிப் போடுற! நம்ம இபுராகிமா இந்தக் கொடுமையப் பண்ணுனான்?” ஆயிஷாவின் குரல். “இனிமே அவன இபுராகிம்னு கூப்புடக் கூடாது. அவன் பேரு ஆப்ரகாம். இபுராகிம்னு கூப்புட்டா கோவம் வந்துருதும்மா…”

அவர்களுடைய அங்கலாய்ப்பு தாராளமாகக் கேட்டது. க்ளாவ்டியா எனும் வெள்ளைக்கார அம்மணியைக் கல்யாணம் செய்து கொண்டதும் அதற்காக இஸ்லாம் மதத்திலிருந்து கிறித்துவ மதத்துக்கு மாறியதும் அப்துல்லாவையும் சுக்குநூறாக உடைத்திருந்தது.

அற்பம் வெரும் கலியாணத்துக்காகவா மதங்களை மாற்றவேண்டும்? வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் பற்றுக்கோட்டுக் கயிராக விளங்கவேண்டிய மதங்கள் திருமணத்திற்கு இடையூறாகிறபோது அதைத் திரித்து இஷ்டத்துக்குப் பின்னிக்கொள்கிற அவலத்துக்கு வந்துவிட்டது என்பதை நினைத்து மனம் ஆர்ப்பரித்தது அப்துல்லாவுக்கு. உலகில் மதமே இல்லாமல் இருந்தால்தான் என்ன என்றுகூட தோன்ற ஆரம்பித்திருந்தது.

மணியாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சபாக் பெர்ணத்துக்குத் திரும்பவேண்டும். பாத்திமா முடித்துவிடுவாளா இல்லை இன்றைக்கு இங்கேயே டேரா போட்டுவிடுவாளா என்று பீதியானது. எட்டி உள்ளே பார்த்தார். இருவரும் சூழலையே ஆதிக்கம் செய்தது போய் இப்போது அடிபணிந்து குசுகுசு குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஹ்ம்ம்ம்….” சலிப்பு.

ஆயிஷாவை அப்துல்லாவுக்கு அவ்வளவாக பிடிக்காது. தனது சுதந்திரத்தில் எப்போதும் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை யாரும் கொடுக்காமலேயே கையிலெடுத்துக்கொண்டவர் ஆயிஷா. அதில் ஒன்றுதான் பாத்திமாவை நிக்கா செய்துகொள்ள வேண்டுமானால் இனிமேல் பாகான் டத்தோ பக்கமே போகக் கூடாது எனும் சத்திய நிபந்தனை. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பிறகு மெல்ல மெல்ல மறந்துபோனது பாகன் டத்தோ நினைவுகளும் சுவடுகளும் தடங்களும். இப்போது மீண்டும் போக வேண்டும் அங்கே என உள்மனது குறுகுறுத்தது. அந்தக் குறுகுறுப்பை இபுராகிம் ஆப்ரகாமாக மாறியதிலிருந்துதான் அதிவேகமாக உணர்ந்தார் அப்துல்லா.

“இனி யாருக்கும் நான் கட்டுப்படப் போவதில்லை. மாமியார் கிடக்கிறார். அவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் வாங்கி வைத்திருந்த சத்தியமும்!”

காரை எடுத்தார். சுர்ரென்று வண்டி சூடேற விர்ரென்று கிளம்பிவிட்டார். நேராக வண்டி பாகன் டத்தோவைத் தேடிப் போகத் துணிந்துவிட்டது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போயிருந்த பழைய வாழ்க்கை வட்டத்தை மீண்டும் நெருங்கி வந்துவிட்டதாக ஓர் உணர்வு. பாகன் டத்தோ கடல் ஜெட்டியில் அம்மாவோடு சின்ன வயதில் கடல் காற்று வாங்கிய ஞாபகம், தற்சமயம் தொடர்புகளைத் தொலைத்திருந்த அன்றைய நண்பர்களோடு ஒன்றாக விளையாடியது, ஒட்டுக்கடைகளின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தந்து தினமும் அம்மாவை ஏமாற்றிவிட்டு வந்து மீ கோரேங், கொய்தியாவ் கோரேங் சாப்பிட்டது, எதற்காகவோ வளர்த்துவிடப்பட்டிருந்த ஆலமரங்கள் நிழல் தர அதன் கீழ் நின்று ஷாலினி போய்வரும்போதெல்லாம் சைட்டடித்தது என்று பட்டியல் வளர ஆரம்பித்திருந்தது. உண்மையை எத்தனை நாள் பதுக்குவது? ஒருநாள் அது வெடிக்காதா?

ஆண்டுகள் பல கடந்திருந்ததில் பல மாற்றங்கள் உருவாகியிருந்தாலும் பாகன் டத்தோவுக்கே உரிய சிறப்பு வாசனை இன்னும் மாறாமல் மறையாமல் அப்படியே இருந்தது. பாகன் டத்தோ எஸ்டேட்டுக்குள் வண்டியை விட்டு பதினொன்றாம் வீட்டைத் தேடிப் போயிருந்தார். இருள் மலேசியாவைச் சூழ இந்த ஏழு மணிதான் சரியான நேரம் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக அந்த வீட்டைக் கண்டுபிடித்துவிட்டார் அப்துல்லா. காரை ஒரு ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு வெளியே இறங்கினார். அங்கிருந்த மூன்று பேர் அவரை வினோதமாகப் பார்த்தனர். அதில் ஒருவன் மற்ற இருவரின் காதுகளுக்குள் என்னத்தையோ ஓதிவைக்க மூவரும் சேர்ந்து முகபாவனையால் எதையோ அவருக்குத் தெரிவிக்க முயன்றுகொண்டிருந்தனர் முறைத்த முகத்தோடு. அது என்ன என்பதும் உபைதுல்லாவுக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் சட்டைசெய்துகொள்ள அவர் விரும்புவதில்லை.

தைரியமாக உள்ளே நுழைய முடியவில்லையென்றாலும் எப்படியோ நுழைந்துவிட்டார். உள்ளே சுருங்கி வதங்கிச் சுவரில் சாய்ந்து கிடந்த பிண்டம் ஒன்று அசைவது தெரிந்தது.

“அம்மா…” சின்ன இடைவெளி. “அம்மா!”

வதங்கிய அந்தப் பிண்டம் முண்டி முனகி எழுந்து உட்கார்ந்தது. “யார்ரா அது?” எவ்வளவோ மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அம்மாவின் வெற்றிலை குதம்பிய வாய் மட்டும் அதன் தோற்றத்தைத் தொலைக்காமல் இருந்தது.

“அம்மா… நான் தாம்மா. என்னப் பாரும்மா,” தலையிலிர்ந்து குல்லாவை நீக்கி அடையாளம் காட்ட முயன்றாலும் நெடுநெடுவென வளர்ந்துவிட்டிருந்த தாடி மட்டும் ஒத்துழைக்க மறுத்தது.

கண்களைச் சுருக்கி நெளித்துப் பார்த்துக் கண்டுபிடித்துவிட்டாள் கிழவி. முகம் மலருகின்ற அந்த கணத்தை மைக்ரோ செகண்டுகளுக்குள்தான் கண்காணிக்க வேண்டும். “டேய், அன்பழகா… நீயாடா?”

“ஆமாம்மா. நான்தான். நீ எப்படியிருக்க?”

“நான் கெடக்கேன் விடு. நீ எப்பிடிறா இருக்குற? உம்பொண்டாட்டி வர்ல? அவபேரு என்னா? கத்திஜாவா?”

“அவ அவங்கம்மா வீட்டுக்குப் போயிருக்கா. ஏம்மா, இத்தன வருஷமா நீ எப்பிடி இருக்கேன்னு கூட பாக்க வராம கெடந்தேனே, ஒரு அறையாச்சும் அறைஞ்சிருக்கலாம்ல…” அப்துல்லா கண்களைக் கட்டுப்படுத்தத் தவறுகிற வேளைபார்த்து தாரைதாரையாக கண்ணீர் ஊற்றிற்று.

சுப்பம்மாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேர நிசப்தம்.

“என்னடா இப்பிடியாயிப்போயிட்ட? உன்ன எப்பிடியோ பாத்த இந்தக் கண்ணு இந்த லச்சணத்துலயா உன்னப் பாக்கணும்?” அம்மா இன்னும் மாறவேயில்லை.

“சாகரத்துக்குள்ள உன்னப் பாத்துடுவேனான்னு சங்கடப்பட்டுக்கிட்டு இருந்தேன். கடவுளா பாத்து உன்ன மறுபடியும் அனுப்பி வச்சிட்டான். இருடா… என் கையால ஒரு காப்பித் தண்ணியாச்சும் குடி. இரு வரேன்,” என்று சமையல் கட்டுக்கு எழுந்து ஓட எப்படியும் பத்து நிமிடப் பொழுது ஓடிவிட்டிருக்கும்.

“அல்லா ஹு அகுபர்” எங்கோ ஒரு மசூதியில் ஒலித்தது.

“அம்மா, பரவால்லம்மா. தொழுகைக்கு நேரமாச்சு. நான் போயாகணும். இந்தா…” என்று மணிபர்ஸில் இருந்து நாநூறு வெள்ளியோ ஐநூறு வெள்ளியோ எடுத்து அவள் கையில் திணித்துவிட்டான். அதை வாங்க அல்லது திருப்பித் தள்ள பலமில்லாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றன எழுபத்தைந்து வயதுடைய கைகள்.

இத்தனை நாளாய் கேட்க வைத்திருந்து பின் மறந்தே போய்விட்ட ஒன்றை எப்படியோ மீண்டும் தேடிப்பிடித்துக் கேட்டாள் சுப்பம்மாள் கிழவி. “டேய், இந்த அநாத பொணத்தக் கொள்ளிபோடவாச்சும் வருவியாடா…”

ஒன்றும் பேசாமல் போகிற அப்துல்லாவை சுப்பம்மாள், அவர் போகிற பாதையை நோக்கி வரண்ட முகம் மாறாமல் கையசைக்காமல் வழியனுப்பினாள்.

இபுராகிமைக் குறைசொல்லும் அப்துல்லாவை மனசாட்சி அளவிட்டுக்கொண்டிருந்தது. அம்மாவைத் திரும்பிப் பார்த்தார். அவர் வெகுதூரத்தில்.

– தமிழ் மலர், மலேசிய நாளிதழ் ஞாயிறு பதிப்பு (27-7-2014)

– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2012ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *