தொண்டர் இருவர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 1,312 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்கழி மாதத்திலே ஒரு நாட் காலைப் பொழுது மலர்ந்தது. பனித்தேவன் வீசியெறிந்துவிட்ட ஒளி முத்துக்களைச் சுமந்து கொண்டு பயிர் பச்சைகளெல்லாம் பூரிப்பாற் சிலிர்த்து நின்றன. ஒவ்வொரு பூண்டும் செடியும் கொடியும் மரமும் பச்சை பட்டுடுத்து முத்தாபரணப் பூண்டு பருவத் தள தளப்போடு யாரைப் பார்த்துக் கொள்ளைச் சிரிப்பு சிரிக்கின்றன! பூமித்தாயின் நெஞ்சு குளிர்ந்து விட்டாலே அவள் மடியிலுள்ள எல்லாமே எவரெவரை எல்லாம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிவிடுமோ! இல்லாவிட்டால் அந்த வெறும் வெளியிடத்துக்கு அத்தனையழகு எங்கிருந்து வந்தது. மரகதக் கம்பளத்தின் மீது அளவாகத் துருவியெடுத்த தேங்காய்ப் பூவைக் கலையுணர்வோடு சிதறி எறிந்துவிட்டது. போலே, முடிதும்பைச் செடிகள் காடாய் வளர்ந்து, மலர்ந்து காட்சியளித்தன. பெற்ற பூமிக்குத் தாய்க்கு முடிதும்பையுஞ்சரி, மோகன எழில் காட்டும் ரோஜாவும் சரி அதற்கு அதற்குரிய தனித்துவத்தை யூட்டி வளர்த்து விடுவதுதான் அவள் தர்மம். 

இந்த முடிதும்பைக்காட்டிவே தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அங்கு இரு பெரும் தொண்டர்கள் சந்தித்தனர். ஒரு தொண்டன் மண்புழு மற்றத் தொண்டன் வண்ணாத்திப் பூச்சி இருவருக்கும் இதுதான் முதற் சந்திப்பு. இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க மூன்றாவது ஆள் அங்கேயில்லை. தனிப்பட்ட முறையில் பரிச்சயம் இல்லாது போனாலும் வண்ணாத்தி இனத்தைப்பற்றி மண்புழு நிறைய அறிந்திருந்தது. மண்புழு இனத்தைப் பற்றி வண்ணாத்தியும் கேள்விப்பட்டிருந்தது. அறிந்ததோடும் கேள்விப்ட்டதோடும் இருவரும் அமைதியடைந் திருந்தனரேயன்றி நேருக்கு நேர் எவரும் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. 

மண்புழு தன் கண்ணோடு மனதையும் கூட்டி வண்ணாத்தியிற் பதித்து அதனழகை ரசித்து அளவிட்டுக்கொண்டிருந்தது. வண்ணாத்தியும் மண்புழுவை கடைக்கண்ணாற் பார்த்துவிட்டு ஒரு மலரை ஊதித் தேன் பருகத் தொடங்கியது. ஆனால் இருவரது உணர்ச்சிகளும் எண்ணங்களும் தத்தம் மனதளவில் அபிப்பிராயங்களாய்ப் பிறந்து பிறந்து மடிந்து கொண்டிருந்தன. 

“ஆகா, என்ன அழகு,என்ன அழகு” என்று வியந்தது மண்புழு 

“சீச்சீ என்ன அவலட்சணம் என்ன கோரம்” என்று மனஞ்சுலித்தது வண்ணாத்தி, றோசாவின் வண்ணமும் அனிச்சத்தின் மென்மையும் செந்தாமரையின் எழிலும் இச்சிறு உடலில் எப்படித்தான் வாய்த்தனவோ முற்றி விளைந்த கருங்காலி மரத்துண்டில், யாரோ ஒரு அபூர்வ சிற்பி இதன் கால்களையும் கொம்புகளையும் வடித்தெடுத்துப் பொருத்தியிருக்கிறான். அந்த பெரிய கருமணிக் கண்கள் மதுரை மீனாட்சி அம்மையின் கண்களையல்லவா நினைவுபடுத்துகின்றன. குழந்தை ஓவியன் ஒருவன் தன் மனப்போக்கின்படி, கரும்புள்ளி, வெண்புள்ளி குற்றிவிட்ட செவ்வரத்தை இதழ்களை இதற்குச் செட்டைகளாகக் கொடுத்துவிட்டான். தன்னை உடையவனை அழகுலகத்துக்கு அழைத்துச்செல்ல அவை துடிக்கின்ற துடிப்பு… அப்பப்பா…? என்று எண்ணிலிருந்து முற்றாக வெளிவந்து, அந்த முடிதும்பை நிழலில் சுருண்டு படுத்துக்கொண்டது அது. 

“மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, தலையும் வாலும் காலுமில்லாமல் அங்குண்டமாய்… துா…. இதுவும் ஒரு சீவனா? நடக்கத் தெரியாமல் பறக்க முடியாமல் வயிற்றை மண்ணில் தேய்த்து இழுத்து கொண்டு போவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இப்படியும் ஒரு வாழ்க்கையோ” என்று எண்ணிக்கொண்டது வண்ணாத்தி. அது மண்புழு கிடந்த முடிதும்பைக்குக் கிட்டப் போக மனம் கூசினாலும் தன் சுவதர்மத்தை காப்பதற்காக, அது அந்த முடிதும்பையின் ஒரு பூவில் மெத்தென வீற்றிருந்தது. மண்புழு ஆனந்தம் பொங்க ஒரு முறை கூசிக் குறுகி நிமிர்ந்து கிடந்தது. 

“தேவனே, நீயார்? சுவர்க்கத்திலிருந்தா வருகிறாய்?” தன்னுடைய மகிழ்ச்சி, வியப்பு, குழைவு, எல்லாவற்றையுஞ் சொல்லிலே தேக்கிக் கேட்டது மண்புழு. 

வண்ணாத்திப் பூச்சி எல்லோரும் தன்னை அழகனென்று எல்லோரும் கூறக் கேட்டிருக்கிற தேயன்றி எவரும் தன்னைத் தேவனாக்கிக் கூறக்கேட்கவில்லை. அதற்குப் பெருமை தாங்கவில்லை. 

“ஆமாம், நான் மலர் மங்கைகளுக்காக படைக்கப்பட்ட அழகு தேவன். இந்த மண்ணைச் சுவர்க்கமாக்குபவன். ஆனால் இந்த மனிதருக்கு எதுவுமே தெரிவதில்லை. என்னை சாதாரணமாக வண்ணாத்திப் பூச்சி என்றே அழைக்கிறார்கள்.” என்றது வண்ணாத்தி. 

“ஓகோ, நீங்களா அந்த வண்ணாத்தி” 

“ஏன் என்னைத் தெரியுமா உனக்கு” 

“இல்லை, உங்களையும் உங்கள் இனத்தாரையும் பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் தான் மண்புழு” 

“என்ன கேள்விப்பட்டிருக்கின்றாய்?” 

“நீங்கள் சமூகத் தொண்டர்களாம், உங்கள் பகட்டையும் பணியாற்றும் பண்பையும் பார்த்து உலகம் உங்களைப் புகழுகிறதாம். புல் பூண்டுகள் கூட வாழ்த்துகின்றனவாம்” 

“ம்… வேறென்ன கேள்விப்ட்டிருக்கிறாய்” மதுவால் மயங்காத வண்ணாத்தி, புகழால் மயங்கி, மீண்டும்அதை குடிக்க அவாக் கொண்டு கேட்டது. 

“கோபித்துக் கொள்ள மாட்டீர்களே” 

“இல்லை, சொல்” மண்புழுவின் பீடிகையைப் பார்த்து வண்ணாத்தியின் மனம் தளர்ந்தது. “உங்கள் தொண்டு வாழ்க்கையிலும் போட்டியுண்டாம், யாரோ தேனீ என்றொரு தொண்டனாம், வருடம் முழுவதும் பூவும் பிஞ்சும் குலுங்க உதவுவானாம்… நீங்கள்….” 

“ஏ,அற்பனே, என்ன சொன்னாய்?…” தன்னையுணர்ந்த உணர்வில் தனக்குப் போட்டியாக தன்னிலும் சிறப்பாக ஒருவனுண்டு என்பதைக் கேட்டதும் வண்ணாத்தியின் உள்ளம் குமுறித் துடித்தது. 

“தேவரீர், என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் அற்ப ஆயுட்காரராம் உங்கள் தொண்டு புல் பூண்டுகளோ மொழிய, அவர்கள் பேதாபேதமின்றித் தொண்டு புரிவார்களாம்” 

வண்ணாத்தியாற் பொறுக்க முடியவில்லை. செல்லாவிடத்துச் செல்ல வேண்டிய தன் சினத்தை செல்லிடமாகிய மண்புழு மேற் செலுத்தித் துடித்தது. 

“ஓகோ, அப்படியா! ஏளனமா பண்ணுகிறாய்? மண்ணைத் தின்று, மண்ணை உழுது, மண்ணுள் வாழும் உனக்கு, மதிமயங்கிவிட்டதா? அற்பபுழுவே” என்றது வண்ணாத்தி. அளவற்ற கோபத்தால் இறக்கைகளை அடித்துக் கொண்டு, மீசை துடிக்க உருத்திர தாண்டவமாடியது வண்ணத்தி. 

சொல்லம்புபட்ட வண்ணத்தியும் மனதுள்ளே துடித்தது. ஆனால், அடக்கமாக, 

“ஆமாம், நான் மண்ணைத் தின்று, மண்ணை உழுது, மண்ணுள் வாழ்ந்து, அந்த வாழ்வையே தொண்டாக்கி கொள்வதில் எனக்கு ஆத்மசாந்தி கிடைக்கிறது. பூமித்தாய் மடியிற் கிடந்து, அவள் செழித்துப் பூத்துக் கொழிப்பதற்கு நானும் அணுப்பிரமாணம் உதவி புரிந்தேனென்றால் அதுவேபோதும்” என்றது. வண்ணாத்திப் பூச்சிக்கு அங்கே, இருக்கச் சிறிதும் பிடிக்கவில்லை. மதுவெறியும் புகழ் வெற்றியும் இன வெறிக்குள் ஐக்கியப்பட்டுவிட உலகையே அழித்துவிடும் எண்ணத்திற் போக எழுந்தது. 

அந்தக்கணத்தில் – யாரோ ஒரு பையனின் வலைக்குள் அது சிறைப்பட்டது. விரும்பியோ, விரும்பாமலோ அவனது கொள்கையை அனுசரித்து அவன் சேமித்து வைத்திருந்த மற்றைய வண்ணாதத்திப் பூச்சிகளுள் ஒன்றாகி விட்டது அது. 

அந்தக் காட்சியைப் பார்த்து மண்புழு பரிதாபப் பட்டது. ஏதேதோ நினைத்துக் கொண்டு மண்ணைத் திண்று, மண்ணை உழுது, மண்ணுக்குள் வாழ்வதற்காக மண்ணுள் நுழைந்தது. 

சு.வே.

ஈழத்தில் உருவகக்கதையின் பிதாமகராகக் கருதப்படுபவர் சு.வே. எனப்படும் சு. வேலுப்பிள்ளையாவார். அமரரான இவர் நல்ல பல சிறுகதைகளையும் படைத்துள்ளர்.அவரது சிறுககைகள் பாற்காவடி என்ற தொகுதியாக வெளிவந்துள்ளன. இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசிலையும் சம்பந்தர் விருதையும் பெற்றது.பாற்காவடி உன்னதமான சிறுகதையாகக் கருதப்படுகின்றது. 

– 13.04.1962

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *