தொட்டி!





“ ஏண்டி! நேற்று நம்ம வீட்டில் முன் பக்கம் காலியாய் இருந்த போர்ஷனைப் பார்த்தவங்க ‘எங்களுக்குப் ரொம்பப் பிடிச்சுப் போச்சு………….நாளைக்கு அட்வான்ஸோட வருகிறோம்.’….’.என்று சொல்லிவிட்டுப் போனாங்களே அந்தப் பார்ட்டி இன்னைக்கு வந்தாங்களா?…”.”
“அவங்க அட்வான்ஸோட நம்ம வீட்டுக்கு வந்த பொழுது, உங்க அம்மா தான் நம்ம வீட்டிலே முன் பக்கம் இருந்தாங்க….அவங்க கிட்டே என்னவோ சொல்லி அவங்க மனசைக் கலைச்சு வேறு பக்கம் குடி போக வச்சிட்டாங்க!….”என்று வழக்கம் போல் மாமியார் மேல் குற்றம் சொன்னாள் மருமகள்.
“அம்மா!……”..”என்று கோபத்தோடு கூச்சல் போட்டான் கணேசன்.
கணேசனின் அம்மா மரகதம் அங்கு வந்தாள்.
“ஏம்மா…உனக்கு இப்படி புத்தி போகுது?…..வந்த நல்ல குடித்தனத்தை கெடுத்து விட்டாயாமே?…..”..”என்று கத்தினான்.
“டேய்!….நான் சொல்லறதைக் கொஞ்சம் பொறுமையா கேளுடா…….நம் முன் பக்க போர்ஷன் வந்த அந்த தம்பிக்கு ஒத்து வராதடா!….அந்த போர்ஷனில் குடியிருக்கிறவங்க எதற்கெடுத்தாலும் பின் பக்கம் தான் போக வேண்டும்…..சமையல் ரூம் கூட பின்னாலே தான் இருக்கு….அவங்க குழந்தைக்கு ரெண்டு வயசு தான் ஆகுது…..அந்த பொண்ணு சமைக்க…துவைக்க….பின்னாலே தான் போகும்…..பின் பக்கம் வேலையா போகும் பொழுது அந்த பொண்ணு நாலு விளையாட்டு சாமான்களை குழந்தைக்கு முன்பு போட்டு விட்டு போய்விடும்….அந்த குழந்தை இப்பத்தான் நடந்து பழகியிருக்காம்.!….நம்ம வீட்டிலே தண்ணீர் பிடிக்கும் தொட்டி அந்த போர்ஷனுக்கு நேர் முன்னாலே தான் இருக்கு…..அது கிட்டத்தட்ட எட்டடி ஆழம்….நாமே படிக்கட்டில் இறங்கித் தான் தண்ணீர் பிடிக்கிறோம்!…விளையாட்டுக் குழந்தை சும்மா இருக்குமா…….தத்தி தத்தி நடந்து போய் தொட்டியை எட்டிப் பார்க்கும்….ஒரு நாள் போல் எல்லா நாளும் இருக்காது…..தவறி விழுந்திட்டா…நாம தான் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்….ஆழ் துளை கிணற்றில் விழுந்து உயிர் விட்ட குழந்தைகளைப் பற்றி அடிக்கடி பேப்பர்களில் செய்திகள் வருது!…அதே போல நம்ம வீட்டுத் தொட்டியிலேயும் விழ வாய்ப்பு இருக்கு!….அதனாலே தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்!…”
அம்மா சொன்னா சரியாத்தானிருக்கும்!
– பாக்யா டிசம்பர் 13-19