தேயிலை தேசத்து ராஜா





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தோட்டத்து அகராதியில் ‘P.D’ என்று சொன்னால் அது பெரிய துரையைக் குறிக்கும். பி.டி.தான் சக்தியின் சின்னம்…அவர்தான் தோட்ட ராஜ்ஜியத்தின் இளவரசன்…. பதவிக்கும் அதிகாரத்துக்கும் வைக்கப் பட்ட பெயர் தான் பி.டி……
பி.டி.ஆட்சி அதிகாரத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டவராக இருந்தார், அந்தக் காலத்து ராஜாக்களைப் போல!….

அவர்தான் சட்டம்….. அவர்தான் நீதிமன்றம்….! அவர் வலிமை எங்கும் வியாபித்திருந்தது. அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் பெயர் மட்டும் ஆட்சி செய்யும்…!
பி.டி.ஏனைய மனிதர்கள் போலல்லாது வித்தியாசமாகவே வாழ்வார்…..வித்தியாசமாகவே மூச்சு விடுவார்…. வித்தியாசமாகவே பேசுவார்…. வித்தியாசமாகவே நடப்பார்….. துரைமார் வர்க்கங்கள் தோட்டத்தில் வாழும் சராசரி மனிதர்களைப் போல் வாழ மாட்டார்கள்…. அவர்கள் வாழ்க்கை செயற்கையாகவும் ஆணவம் நிறைந்ததாகவும் இருக்கும். இப்படி எத்தனையோ பி.டி.க்கள் வாழ்ந்து விட்டார்கள். நூறு பி.டி.க்கள் வாழ்ந்த அதே வாழ்க்கையைப் பாரம்பரியம் கெடாமல் ஒவ்வொரு பி.டி.யும் வாழ்ந்து காட்டுவார்கள்.
அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினரும்… துரைமார் மரபு வழுவாது அதே ராஜ வாழ்க்கையை, அதிகாரத் தனத்தைப் பின்பற்றி பாதுகாக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பி.டி.யினதும் ஆழ்ந்து பதிந்த எண்ணமாகும்.
அவரது ஆட்சியின் எல்லைகள் டிவிசன்களாக இருந்ததால் ஒவ்வொரு டிவிசனிலும் சிற்றரசர்களாக ‘S.D.’ எஸ்.டி. மார்கள்…. சின்ன துரைமார்களும், கண்டக்டர்மார்களும் பொறுப்பாக இருப்பார்கள்….. அந்த ராஜ்ஜியம் குளறுபடி நிறைந்த ஒரு ராஜ்ஜியமாகும்…
தலைமைக் காரியாலயம்….. ஒரு தோட்டத்திலும், டிவிசன் காரியாலயங்கள்…. வெவ்வேறு தோட்டங்களிலும் அங்கங்கே தொழிற்சாலைகள்.. மருந்துச் சாலைகள்…. மின்சாரம் உண்டாக்கும் வீடுகள் (Power House) அரிசிக் காம்பராக்கள். கன்றுத் தவறணைகள்…. போக்குவரத்துப் பிரிவுகள்…. கட்டிட நிர்மாணங்கள் இவைகளைப் பேணி பாதுகாக்கும் பணிகள்….. இப்படி எல்லா வேலைகளும் ஆங்காங்கு அனுபவசாலிகளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. கொழுந்து மலையில் கங்காணி கூட அப்படியேதான் பேசுவார்…! “யாரங்கே………? தொரவுட்டு வேலைய கெடுத்துப் புடாதே…..! வெரட்டிப் புடுவேன் லயத்துக்கு….! ரொம்ப கவனம்!”
கவ்வாத்துக் காட்டில் இன்னும் மோசமாகக் கங்காணிமார்கள் பேசுவார்கள்……. “மனுசன் மாதிரி வேல செய்ய சொல்லி தொர மவன்…ஓடர் போட்டிருக்காரு….. கேட்டுக்கிட்டியா…. சோம்பேறிப் பண்டிகளா……….!”
தோட்டங்களில் சின்னதுரைமார்களும் கங்காணி கண்டக்டர்மார்களும் ஒரு ‘விதமாக’ பேசுவார்கள்…… ஆனால் மொழியும் அதன் அர்த்தங்களும் ஒன்றாகத்தான் இருக்கும்……..! ஒரு செயற்கைப் பாஷையில் அதிகாரத் தொனியை வெளிக் கொணர்வதற்காக அப்படிப் பேசப்படுகிறது.”அப்படி செய்யவாரா?…… இப்படிச் செய்யறதூ…… யாரதூ இப்படிப் போறது….. பெரிய தொர நாளைக்கு மல ரவுண்டு வர்றாரு……. வேல சரியில்லாட்டி தொலஞ்சே………!’ பெரிய துரை வாரத்தில்… குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வேலை பார்க்க வருவார்.
அவர் வேலையைப் பார்க்க, வரப்போகும் டிவிசனில் அவர் உபயோகிக்கும் பிரத்தியேகப் பாதையை ஒரு வயதான தொழிலாளி புல், பூண்டு,தூசி, துப்பு இல்லாமல் துப்பரவு செய்து வைத்திருப்பான்….. அந்தப் பாதையில் வேறு எவரும் நடக்க முடியாது…. அது ‘தொரை பாதை’ துரை மட்டுமே நாய்கள் சகிதம் குதிரை சவாரி செய்து வருவார்.
பெரிய துரை மலை ‘ரவுண்டு’ வருகிறார் என்றால் தகவல் அறிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. இயற்கையே அவர் வருகையைக் கூறிவிடும்.
காலைக் காற்றிலே…. அவர் பாவிக்கும் சுங்கான் புகையிலையின் நறுமணம் மலையெல்லாம் பரவிவிடும்…… காற்றோடு கலந்த அந்த வாசனையைச் சுவாசிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பான்.
வாசத்தை மோப்பம் பிடித்த கங்காணி சும்மா சரி… சத்தம் போடத் தொடங்கிவிடுவான். “ஏய் …… யாரங்கே?…..என்னா செய்யறே நீங்களெல்லாம்…. ஒன் வேலய ஒம்பாட்டுக்கு செய்! நல்லம்…….. காது கேக்கிறதா..
கண்டக்டரும் சின்னத் துரையும் பேயறைந்தவர்களாக விறைத்துப் போயிருந்தார்கள். அவர்கள் வேலையைப் பார்ப்பதில் மும்முரமாகினர்.
நாய்கள் கூட்டம் வேகமாக ஒடி வந்தன……. பளபளக்கும் நாக்குகளை நீட்டிக் கொண்டு வெள்ளைக் கருப்பு நிறத்தில் பெரிய பெரிய நாய்கள் கூட்டம் . பெரிய துரையின் பாதையின் முன்னால் பவனியாக ஓடிவந்தன…..ரொம்ப தூரத்தில் குதிரையின் ‘டொக்கு டொக்கு’ என்ற சத்தத்துடன் குதிரை வந்தது.
குதிரைக்காரச் சவரிமுத்துவும் ஓடிவந்தான். அவன் பெரிய துரை கொடுத்த காற்சட்டையும் வேட்டைக்கார கோட்டையும் மாட்டிக் கொண்டு சிவப்பு தலைப்பாகையோடு காட்சி தந்தான்……
மலைக் காடுகளில் ஓடி வரும் குதிரைக்கும் நாய்களுக்கும் நன்றாகத் தெரியும், துரை வந்து எங்கே நிற்பார் என்று…..! கவ்வாத்துக் காடாக இருந்தாலும் சரி….. கொழுந்து பறிக்கும் மலைகளாக இருந்தாலும் சரி…… துரைக்காக பாதுகாக்கப்படும் அந்த பாதையில் அகலமான ஒவ்வொரு இடத்திலும் அவர் நின்று வேலை பார்ப்பதற்கான விதத்தில் இடம் அமைக்கப் பட்டிருக்கும்.
அந்த இடத்திலும் நாய்களும் குதிரைகளும் வந்து நிற்கும். துரை அந்த இடத்தில் நின்று கொண்டு வேலைகள் ஒழுங்காகச் செய்யப் பட்டிருக்கிறதா? என்று நோட்டமிடுவார்…… சின்னத் துரை, கண்டக்டர், கணக்கப்பிள்ளை மூவரும் துரையின் அருகில் பக்தியோடு சென்று ‘குட்மோனிங் சேர்’ என்றார்கள்.
‘மோணிங்……!’ ‘ஹவ் இஸ் யுவர் வேர்க்?’ என்றார்….., துரை….
‘வெரி வெல் சேர்!’ என்றார்கள் மூவருமாக… ‘எஸ்ட்டி மேட்டுக்குள்ளேயே (Estimate) வேல நடக்குதா……..?’
‘வெரிவெல் சேர்!’
‘ரவுண்ட்ஸ் ஒழுங்காப் போகுதா…..’
‘வெரி வெல்சேர்!’
இந்த ‘வெரிவெல் சேர்’ பாஷை ஒடுக்கப் பட்ட தாக்கத்தின் ஒரு வெளிப்பாடு! தோட்டத் துரை அப்புவைப் பார்த்து ‘உதைப்பேன் ராஸ்க்கல்’ என்றாலும் ‘வெரிவெல் சேர்’ போடுவான் அப்பு!
வேலைக்காடு……
பெரிய துரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்……… நாய்கள் கூட்டம் தேயிலைச் செடிகளுக்குள் நிற்கின்றன. மலைக்கு வந்திருந்த கணக்கப்பிள்ளையின் பெரிய நாய், ‘இது எஜமான் வீட்டு நாய்கள்’ என்ற அதிகார சக்திக்குப் பயந்து வாலைச் சுருட்டிக் கொண்டு எங்கோ ஓடி மறைந்தது!
பெரிய துரை அந்த நாயைப் பார்த்து விட்டார். அவர் முகத்தில் அருவருப்புத் தெரிந்தது….. தனனுடைய நாய் கீழ்ச்சாதி நாய்களுடன் பழகி விடும் என்று மிக ஜாக்கிரதையாக இருந்தார்.
அவர் பெரிய துரைக்கே உரிய……. அவரது மூதாதையருக்கே உரிய தொனியில் அடித் தொண்டையில் சத்தமிட்டார். ‘வா நாய்களே!….. கம் எலோங் டோக்ஸ்!’ இது நூறு வருஷத்து பெரியதுரைமார் பாஷை!
நாய்களை அதட்டி அழைத்த குரலும்…. துரை புறப்படுவதற்கு ஆயத்தமாகிவிட்டார் என்பதைக் காட்டியது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் வேலைத் தலங்களில் எதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.
நாய்கள் கணக்காக வந்து கூடின….. குதிரையும் திசை திரும்பி நின்றது…. வேலைத் தலத்திலிருந்து துரை போகப் போகிறார் என்ற ஒரு மீட்சி தென்பட்டது. இந்தச் சோதனை மிகுந்த நேரத்தில் கண்டக்டரும் பெரிய கணக்கப் பிள்ளையும் துரையிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தனர். துரையிடம் இவர்கள் பேசுவதை தொழிலாளர்கள் பார்க்க வேண்டும் என்ற ஓர் ஆசையும் பெருமையும் அவர்களிடம் இருந்தது.
உருக்கின் பிரகாசத்தைப் போன்ற அவரது சாம்பல் நிறக் கண்கள்….. தொப்பிக்கு அடியிலிருந்து அவர்களை ஏளனமாகப் பார்த்தன……..
தனக்கு கீழ் பணிபுரியும் அவர்களின் ஆதரவான பார்வை கூட அவரிடமிருந்து விழவில்லை.
அடுத்த மலைக்கு அவர் கிளம்பினார். நாய்களும் குதிரையும்……….. முன்னால் பவனி… கணக்கப்பிள்ளையும் கண்டக்டரும் அசடுவழிய குழம்பிப் போய் நின்றார்கள்……. நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைப் புறங்கையால் ஒருவர் துடைத்துக் கொண்டார்.
டிவிசனிலுள்ள எல்லா மலைகளிலும் ஏறி வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு தேவை பெரிய துரைக்குக் கிடையாது. அவை எல்லாம் ஓர் வேண்டாத வேலையாகவே அவர் தீர்மானித்துக் கொண்டவர்.
அவர் ஓர் ஆதிக்கப் பரம்பரை! அவருக்கு நன்றாகத் தெரியும்…. தன்னுடைய வருகை ஒரு ‘வேலைக்காட்டு’க்கு தெரிந்து விட்டால் போதுமானது…… ஏனைய எல்லா வேலைக் காடுகளிலும் மும்முரமாகவே வேலை நடைபெறும்…..
ஆகையால் அவர் திடீரென்று தனது நிகழ்ச்சி நிரலை நேரத்தோடு சுருக்கிக் கொண்டு தொழிற்சாலைக்குத் திரும்பினார்.
தோட்டத்திலுள்ள எவருமே பெரிய துரைக்கு ஒதுக்கிய பாதையில் அடி எடுத்து வைத்தது கூட கிடையாது! அது ஒரு நேர் பாதை…. துரையின் குதிரை ஓடி வருவதற்காக உருவாக்கப் பட்ட பாதை……..
பெரிய துரை நேராகத்தான் சவாரி செய்வார். கிறிஸ்துவின் கடைசி விருந்துக் கிண்ணத்தைத் தேடிச் சென்ற கலகப் பிரிவைப் போல……….!
கடைகளுக்குச் சென்று வருபவர்கள் தொழிற்சாலையிலிருந்து மலைகளிலிருந்து திரும்புபவர்கள் துரையைக் கண்டதும் போச்சு கானுக்குள்ள இறங்கிவிடுவார்கள்.
நூற்றுக்கு இருநூறு வீதம் நிச்சயம்…… அந்த இறுமாப்பிலும் மமதையிலும் வரும் பெரிய துரை தொழிலாளர்களை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை!
நாலாயிரம் பேர்களுக்கு மத்தியில் என்னவெல்லாமோ நடக்கலாம். யார் எதைக் கண்டது என்று வாழா விருப்பார்.
எவனாவது ஒருத்தன் ஒரு றாத்தல் தேயிலையை களவெடுக்கலாம்…. பலகை மடுவத்திலிருந்து பலகைகளைத் திருடலாம்…. திருடிய பலகையை கானுக்குள் பதுக்கி வைக்கலாம்….. அவைகளைப் பற்றி எல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டது கிடையாது. தன் பார்வையை அலைய விட்டதில்லை. அவரது மேம்போக்கும் எதையும் பார்த்து அறிய விரும்பாத தன்மையுமே அவரது கௌரவத்தைக் காப்பாற்றி வந்தன.
பெரிய துரையின் கார் வண்டி தொழிற்சாலையை வந்தடைந்தது. ஸ்டோருக்கு இன்றைக்குப் பெரிய துரை வரவேண்டிய நாளே அல்ல. இருந்தாலும் டீமேக்கருக்குத் துப்பு வந்துவிட்டது…! ஸ்டோரின் நான்காம் மாடியில் நிற்கும் கழுகுக் கண்ணன் வாட்டக்காரன்….. பெரிய துரை கார் ஸ்டோர் ரோட்டில் வருவதைக் கண்டு டீமேக்கருக்குச் சொல்லிவிட்டான்.
திடீரெனத் தொழிற்சாலை விளக்குகள் எரிந்தன…இயந்திரங்கள் உறுமின…….. எஞ்சின் காம்பரா, றோல் காம்பரா எல்லாம் உயிர் பெற்று விழித்தன.
-தொழிற்சாலை
சவரிமுத்து பெருமிதத்தோடு குதிரையிலிருந்து இறங்கி நின்றான். காரை நிறுத்திய டிரைவர் டக்கென்று இறங்கி நின்றான். அவனைச் சுற்றிய நாய்கள் காருக்குள் ஏற்றும்படி முனகின…..
குதிரையும் கனைத்துக் கொண்டு காரை நெருங்கியது. சவரிமுத்து குதிரையை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.
காருக்குள்ளேயிருந்து குதித்த துரை நேராக ஸ்டோர் ஆபிஸை நோக்கி விரைந்தார்.
டீமேக்கர்…. காக்கி ‘கிட்டில்’ இருந்தார். சட்டைக் கைகளை முழங்கை வரை சுருட்டி எந்த நேரமும் ‘பிஸி’யாகவே தோன்றுவார்.
“குட்மோணிங் சேர்!’
“மோணிங் டீமேக்கர்!”
“கொட் த சாம்பல்?”
“வெரி வெல் சேர்”
அந்த நீட்ட மேசையில் தேனீர் கோப்பைகள் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன… ஆரஞ்சு நிறத்திலும் தங்க நிறத்திலும் தேனீர் தயாரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு ரகத் தேயிலையும் ஒவ்வொரு கோப்பையில் வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்ட தேயிலையின் தரத்தையும் சுவையையும் அறிவதற்குப் பெரிய துரை ஒவ்வொரு கோப்பைத் தேனீரையும் உற்று நோக்கினார்.
ஒரு காலைத் தூக்கி நாற்காலியில் வைத்தார். ஒரு கப் தேனீரைச் கையில் எடுத்தார். துரையின் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு டீமேக்கர் ஒடுங்கி நின்றார்.
துரை இப்போது….. தேயிலையை ருசிக்கத் தொடங்கினார்…… ஒரு கோப்பையை எடுத்து உதடுகளில் வைத்து…. லேசாகச் சப்பி… சப்பிச் சுவைத்தார்………. பிறகு கொஞ்சம் நிறுத்திச் சப்பினார்……. பிறகு உறிஞ்சி ருசி பார்த்தார்…..
அங்குள்ள அத்தனைக் கோப்பை தேனீரையும் சப்பி…. சப்பி….. உறிஞ்சி உறிஞ்சி……… ருசி பார்த்து முடிவதற்கு இருபது நிமிடங்கள் பிடித்தன. தேயிலையை ருசி பார்த்த அவர் அந்த நிமிடங்களில் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை….. அவரது உன்னிப்பான கவனமும் நிதானமும் நிசப்தத்தைக் கொடுத்தன….
டீமேக்கர் பூமியதிர்ச்சியை எதிர்ப்பார்த்தவாய். ‘ஆட்டம் கண்டு’ கொண்டிருந்தார்.
கடைசியாகவே……. வார்த்தைகள் வந்தன…..
P.D. பேசினார்.
‘பீ.ஒ.பி …..இஸ் நொட் …. டு…….. குட்! (B.O.P. is not too good!)… வாட் இஸ் ரோங் தெயர்………?
“பி.ஒ. பி. கொஞ்சம் கொலிட்டீ குறைவு…….’ என்று தட்டுத் தடுமாறி இரண்டொரு வார்த்தைகளை உளறினார்……… டீமேக்கர்.
பி.டி.கண்களை அரைவாசி மூடிக் கொண்டு டீமேக்கரைப் பார்த்தார்…… ‘ரைட் யூ ஆர்’ என்றார்.
டீ. மேக்கர் தூக்கி வீசப்பட்டவராய்த் துடி துடித்து நின்றார்.
‘கொழுந்து வாட்டம் எங்க நடக்குது……..?
‘மூன்றாம் தட்டிலும் நாலாம் தட்டிலும்……. சேர்!’
‘வெல்… கம் எலோங்’
ஐந்து நிமிடத்துக்குள் பெரிய துரை மூன்றாவது தட்டில் ஏறி விட்டார். ‘டீமேக்கர்…… யுவர் எஸிஸ்டன்ட்….?
ஒரு காக்கி சட்டை இளைஞன் இருபது அடிக்குப் பின்னால் நின்றான். கூராகச் சீவிய பென்ஸில் ஒன்றை இடது காதிலே செருகியிருந்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டடி முன்னால் வந்து நின்றான்.
அவனிடம் பெரிய துரை பேசினார். எதுவுமே புரியாத படி என்னமோ சொன்னார். அவர் வார்த்தைகள் அவனது காதுகளில் நுழையவில்லை. ஒன்று மட்டும் விளங்கியது. ‘எஸிஸ்டன்ட்……. பீல்ட் கிளாஸ்!’ என்று தொலை நோக்கியைக் கேட்டார்.
அன்றைய மலை ரவுண்டில் அவர் பார்க்காத மலைகளையெல்லாம் துருவித் துருவிப் பார்த்தார்.
அங்கே….. அவரது கண்டக்டரை… கணக்கப்பிள்ளையை வேலை செய்த தொ மிலாளர்களைக் கண்டு பிடித்தார்!
அவர்கள் அவரின் கண்ணெதிரே நின்றார்கள். அவருக்கு இன்று எல்லாம் திருப்தி…….
“எஸிஸ்டன்ட்!” தொலை நோக்கியை இரண்டாவது டீ மேக்கரிடம் கொடுத்துவிட்டு படிகளில் இறங்கினார்.
அவரிடம் பின்னால் திரும்பிப் பார்க்கும் பழக்கமே கிடையாது. எதையாவது அவர் விட்டுவிட்டுச் சென்றால் அது அவர் பின்னால் வந்துவிடும்!
ரெடியாக நின்ற காரில் P.D. ஏறினார். வெள்ளைச் சீனியாய் பரவிக் கிடைக்கும் சரளைப் பாதையில் கார் ஓடியது. தேயிலை மலையிலிருந்து பங்களாவுக்கு மூன்று மைல் தூரம்…..
பறந்தோடும் காரின் ஜன்னலினூடாகப் பார்வையை மேயவிட்டுக் கொண்டே சென்றார். அவருடைய கார் ஆசனம் வசதிக்கேற்றபடி அமைக்கப் பட்டிருந்தது.
அவரது அதிகாரப் பார்வை….. பள்ளம் மேடுகளில் ……. பச்சை பசேலென்ற மலைத் தொடர்களில்……. அங்கே வாசம் செய்யும் அத்தனை ஜீவராசிகளின் மேலும் ஆட்கொண்டிருந்தது.
பெரிய துரை கூலிகள் வசிக்கும் சூழலுக்கு அப்பால் வெகு தூரம் ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.
அவரது பங்களா……. அவரைப் போல அந்தஸ்திலும் கௌரவத்திலும் உயர்ந்து நின்றது……… மலை உச்சியில் ஏனைய மனிதர்கள் வசிக்கும் உறைவிடங்களை விட மிக உயரமான நிலையில் குடிகொண்டிருந்தது….. அந்த மாளிகையின் சூழலும், சுற்றுப்புறமும், மண்ணும் கூட இங்கிலாந்து தேசத்தின் ஓர் பகுதியாகவே காட்சி தந்தது!
அழகான மரங்கள்…. அரச அணிவகுப்பாக நிமிர்ந்து நின்றன. அந்த மாளிகையைச் சுற்றி கம்பளம் விரித்தது போல் பசுமை நிறைந்த நீல நிறப் புற்கள் படர்ந்திருந்தன.
டென்னிஸ் கோர்ட் அருகே மஞ்சள் நிற மூங்கில்கள் அடர்த்தியாக குவிந்திருந்தன. மலைப் பாறைகளும் வகை வகையான மீனாச் செடிகள் நிறைந்த தோட்டமும்……. நீச்சல் தடாகத்தின் அருகில் இருந்தன.
கோடைக்கால குடிசைகளில் (Summer House) மலர்க்கொடிகள் தோரணங்களாகத் தொங்கின…… ஜன்னல்களின் அருகில்……… கூடைகளில் வளர்ந்துள்ள ஓகிட் மலர்க்கொத்துக்கள் கொள்ளை அழகைக் கொட்டிக் கொண்டிருந்தன.
அந்த இன்பச் சூழல் ஜொலிக்கும் கனவு உலகத்தைக் காட்டி மனதை மயக்கிக் கொண்டிருந்தது.
பெரிய துரையின் மாளிகை எத்தனையோ அறைகளைக் கொண்டது! அந்த மாளிகை. இயற்கை எழிலால் ஆகர்ஷிக்கப் பட்ட ஓர் ஏகாந்தமான சூழலில் நிர்மாணிக்கப் பட்டிருந்தது…… மாளிகை என்னும் அந்தப் பெரிய பங்களாவில் தான் பெரிய துரையின் வாழ்க்கை நிறைந்திருந்தது. ஏகாந்தமான அந்த மாளிகையின் அரசியாகத் தான் துரையின் மனைவி ‘துரைசாணி’ இருந்தாள். அவளின் கட்டுப்பாட்டிலும் காவலிலும் தான் பெரிய துரை வாழப்பட்டார் என்றும் ஒரு குசு குசு கதையும் இருந்தது!
துரைசாணி
அவள் ஆம்பளையை விட ஒருபடி உயர்ந்தவள் என்றும், அந்த அரண்மனையைச் சுற்றிப் ‘பட்டுக் கயிற்றினால் வேலி கட்டிப் பெரிய துரையை அடைத்து வழி நடத்தும் சாதுரியம் நிறைந்தவள் என்றும் பேசிக் கொண்டார்கள்!
அந்த அரண்மனைச் சேவகர்களை ஊசிமுனையில்…. அல்ல ஈட்டி முனையில் வைத்திருந்தாள். அவளுடைய ஏவலாளிகளாக…. பட்லர் என்ற பெரிய வேலைக்காரனும், கோக்கி அப்பு என்ற சமைல்காரனும்…. இரண்டாவது அப்பு என்ற உதவியாளனும், ஹவுஸ் கூலி என்னும் வீட்டைச் சுத்தம் செய்பவனும்….. இன்னும் தோட்டக்காரன், குதிரைக்காரன், மாட்டுக்காரன்,நாய்க்காரன், இறைச்சி பெட்டிக்காரன், டிரைவர், கிளீனர் என்று விதத்தால் ஒருவர் வேலையில் இருந்தார்கள். இவர்கள் யாவரும் துரைசாணியின் நேரடிக் கணட்காணிப்பில் தான் சேவகம் செய்ய வேண்டும்.
இந்த இன்ப ராஜ்ஜியத்துக்குள் எந்த வித குறைவும் இன்றிப் பெரிய துரையின் வாழ்க்கை மிதந்தது.
பெரிய துரைக்குச் சில விசேஷ தினங்களை துரைசாணியே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள். ஓய்வு நேரங்களைப் போக்குவதற்கான நாட்கள்……. பறவைகள், மிருகங்கள், பிராணிகளோடு கொஞ்சுவதற்குச் சில நாட்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. ஒரு நாளில் இரண்டு முறை குழந்தைகளைப் பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது…….! குழந்தைகளின் கன்னத்தைத் தட்டிக் கொஞ்சவோ…….. அவர்கள் ஊஞ்சலில் ஆடுவதை….. போனி சவாரி செய்வதை தூரத்தில் இருந்தே இரசிப்பதற்கு….. அவருக்கு நேரம் ஒதுக்கியிருந்தாள்………
அவர் குடும்ப விவகாரங்களில் அதிகமாக நாட்டம் வைத்துக் கொள்வதற்கு உரிமையற்று இருந்தார்.
பெரிய துரையின் காரியாலயத்தைப் பற்றியும் அதன் காரியங்கள் பங்களாவின் பற்றியும் நிறையச் சொல்லலாம். காரியாலயம் அருகிலேயே கட்டப் பட்டிருக்கும். பங்களாவுக்கும் காரியாலயத்துக்கும் ஒரு சாலை இணைக்கப் பட்டிருக்கும். அந்த வழியே பெரிய துரையின் காரியாலயப் பாதையாகும். அவருடைய காரியாலய அறை பெரிய கிளாக்கரின் அறையோடு திறந்து இணைக்கப் பட்டிருக்கும். அதன் பின்னால் தான் பொதுக்காரியாலய வேலைகள் இயங்கிக் கொண்டிருக்கும்.
அந்தக் காரியாலயம் தான் அந்தத் தோட்டத்தின் உயிர் நாடி….அந்த முழுத் தோட்டத்தின் வேலைகள் யாவுமே பெரிய கிளாக்கர் எனும் இயக்குனரால் இயக்கப்படும்…. பெரிய கிளாக்கர் தோட்டத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதில் கவனமுள்ளவர்….. ஒரு தகவல் களஞ்சியம்…..! ஈவு இரக்கமற்ற பேர்வழி…..! பெரிய துரைக்கு உண்மையை காட்டும் ஒரு கணித இயந்திரம்!
-லேபர் டே!
மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொழிலாளர் சந்திப்புக்கள் நடக்கும்….. தொழிலாளர் தினம் இந்திய வழக்கப் படி தர்பார் என்ற ராஜ சபையாக பெயர் பெற்றிருக்கும்!
சிற்றரசர்களான சின்ன துரைகள், உத்தியோகத்தர்கள், பெரிய கங்காணிமார்கள் என்று இரு பிரிவுகளாக ஆஜர் ஆகியிருப்பார்கள்…!
சின்ன துரைமார்களுக்கே அந்த ராஜ சபையில் முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கும். உத்தியோகத்தர்களும் பெரிய கங்காணிமார்களும் ஒழுங்கு விதிப்படி கவனிக்கப் படுவார்கள். தோட்டத்துக்குள்ளே உருவாகிய இந்த உள்ளூர் முக்கியஸ்தர்கள், பெரிய துரையை வசியப்படுத்திக் கொள்வதற்கு மந்திரம் செய்து வைத்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் எல்லோரும் இடுப்பில் தாயத்து கட்டியிருப்பார்கள்…….!
பெரிய துரையின் மனதைக் கவர்ந்து கொள்வதற்கு இப்படிப் பல மனோவசிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களுடையதை விடப் பெரிய கிளாக்கருடைய தாயத்து, எதையும் சாதித்துக் கொள்ளும் சர்வ வல்லமை பெற்றது என்று பேசிக் கொள்வார்கள்.
வழமைபோல தர்பார் முடிவதற்கு ஒரு மணித்தியாலம் எடுத்தது…. அந்த அறுபது நிமிடத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்தன….. மழைக் காலத்துக்கு கம்பளி வாங்குவது, புடவைகள், உணவுத் தானியங்கள், கைக்காசு வேலை, கொந்தராத்து வேலை என பல விசயங்களும் துரையின் சம்மதத்துக்கு கொண்டுவரப்பட்டு அவைகளை குறித்த நேரத்துக்குள் நடைமுறைப்படுத்துவதற்குப் பெரிய கிளாக்கரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டன.
வனாந்தர வேட்டை!
ஆறுமாதத்துக்கு ஒருமுறை காடுகளுக்குப் போய் வேட்டையாடுகது என்பது தோட்ட வழக்கமாக இருந்தது.
வேட்டைக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து ஒருவரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கும். அப்பு, சமையல்க்காரன், காட்டு வழி காட்டுகிறவன், நாய்க்காரன், வேட்டைக் கோஷ்டிகள் எல்லோரும் பெரிய துரைக்கு முன்பதாகவே காட்டுக்குச் சென்று விடுவார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பெரிய துரை தனது சக பீ.டீ.மார்களுடன் வேட்டை நாய்களோடு புறப்படுவார். பெரிய துரைசாணி துரையைக் கட்டியணைத்து, முத்தம் கொடுத்து, கொஞ்சி, “ஹேவ் எ குட் டைம்……. பை…….பை…….” என்று வாழ்த்தி அனுப்பினாள்.
பெரிய துரை கையசைத்து விட்டு வாகனத்தில் ஏறினார்.
பெரிய துரைமார்கள் யால காட்டிலும் மகாவலி காட்டிலும் மிருகங்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள்.
பெரிய துரைசாணிமார்கள் தோட்டத்துக் கிளப்புக்குச் செல்வார்கள். தங்கள் கணவன் மார்களின் களியாட்ட விபரங்களைச் சோதிப்பார்கள். இந்தப் பரிசோதனை ஒவ்வொரு மூன்று மாதமும் நடைபெறும்.
துரைசாணி புது வருசப் பிறப்பை ஆடம்பரமாகக் கொண்டாடுவாள். தோட்ட பங்களாவைக் களியாட்ட கூடமாகவோ…….. கண்டி குயின்ஸ் ஒட்டலாகவோ மாற்றி அமைப்பாள்…….!
கிறிஸ்மஸ் முடிந்தவுடனேயே துரைசாணி தனது சினேகிதிகளுக்கும் பெரிய துரை மட்டத்திலான நண்பர்களுக்கும் சின்னதுரை, பெரிய கங்காணிமார், கணக்கப்பிள்ளை, கண்டக்டர் என்று சகலருக்கும் அழைப்புகள் அனுப்பி விடுவாள்.
பங்களா அறைகளிலுள்ள பழைய பொருட்கள் அப்புறப்படுத்தப்படும்……. பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
அங்கேயுள்ள அத்தனை அறைகளிலும் உணவுப் பெட்டிகளும் குடிவகைகளும் விசேஷமாக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட வான் கோழிகளும் நிறைந்து கொண்டிருக்கும். துரைசாணி பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பாள். அவளது அதிகாரத் தொனிகளும் கட்டளைக் கணைகளும் தீச் சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும்.
“அதை அங்கே வை இதை இங்கே வை……! இதை அங்கே கொண்டு போ…..! ஏய்…..! ஹோய்……..!”
விதவிதமான உணவுகள் தயாராகின……. சமையலின் நறுமணம் காற்றோடு கலந்து பங்களாவைச் சுற்றி மிதந்தன…. துரைசாணி இளம் சின்ன துரைமார்களை ஓடும்பிள்ளையாக வைத்திருந்தாள். ‘டு திஸ் என்ட் தட்!!’ என்று அவர்கள் கால்கள் நொண்டியாக்கும் வரை வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனைய சின்னத்துரைகள் தாங்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.
அங்கே எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைத் தன் கைக்குள் வைத்திருந்தாள் துரைசாணி. பெரிய துரையும் பங்களா வேலையாட்களும் வேர்த்து விறுவிறுத்துப் போனார்கள். அவர்கள் வேலைகளும் அப்பழுக்கில்லாமல் நடந்தன.
இரவு ஏழு மணி….. விருந்து ஆரம்பமாகின…. பெரிய துரைகள், பெரிய துரைசாணிகள் வந்தமர்ந்தனர். சின்னதுரை. சின்னதுரைசாணிகள் வந்தனர்.
உணவுகளும் குடி வகைகளும் மேசைகளை அலங்கரித்தன. அவர்கள் ஆடி…. குடித்து…. பழைய வருசத்தை அனுப்பினார்கள்…… சாப்பிடவும் வீசவும் உணவுகள் குவிக்கப் பட்டிருந்தன.
குடிக்கவும் கொட்டவும் குடி வகைகள் நிறைந்திருந்தன…. சின்னதுரைமார்கள் பதமானார்கள். அவர்கள் பாடி ஆடினார்கள்…….
”யூ ஆர் எ ஜொலிஹுட் பெல்லோ….”
“யு ஆர் எ ஜொலிஹுட் பெல்லோ…..”
வான் கோழியின் வறுவல் வாசம் புதுவருசத்தை வரவேற்றது….! ஆட்டமும்….. பாட்டமும்….. நடனமும்….. கூச்சலும்… கும்மாளமும் ஆடி அடங்கின…..
கொண்டாட்டத்தில் குளித்து மூழ்கிய சின்னதுரை ஒருவன்…. கரெஜ் கூரையின் மேல் படுத்திக் கிடந்தான்….! விருந்து முடிந்தது…….
பரிசில்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும் நடைபெற்றன.
தோட்டத்துப் பெரிய மனிதர்களும்… உத்தியோகத்தர்களில் குறிப்பிடக்கூடியவர்களும்….. பெரிய கங்காணி மார்களும்…. பரிசில்கள் வழங்கி…..வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம். அவர்களுக்கென்று ஒழுங்கு செய்யப் பட்டிருந்த வழியாக வந்து……. முகப்பு மண்டபத்தில் வீற்றிருக்கும் துரைசாணியை வாழ்த்திக் கௌரவிக்க அவர்கள் வந்தார்கள். பெரிய துரை….. மகாராணியின் அருகில் கணவராக….. அரசகுமாரனாக….. நிகழ்ச்சிகள் முடியும் வரை துரைசாணியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
பி.டி. பல விஷயங்கள் அறிந்த ஒரு பண்டிதன்…….!
மனதையும் உடலையும் கொஞ்சம் ஆறுதலாக வைத்துக் கொள்வதற்கு பி.டீ நுவரெலியாவிற்கு போவார். அங்கே அந்த அமைதியான குளத்திலே மீன் பிடிப்பார். துரையும் துரைசாணியோடு இவ்வாறு மீன்பிடிக்கச் சென்று விட்டால் அவரது சிரேஷ்ட சின்ன துரை ஆட்சிபீடம் ஏறுவார்!
அவர் ஒரு “டஃப் மேன்….. ஹார்ட் நட் ” என்று பேசப்பட்டார்.
கூடுமான வரை…பெரிய கிளாக்கரும் மற்றவர்களும் அவரிடம் அகப்படாமல் தங்கள் வேலைகளில் நிதானமாக நடந்துகொள்ள முயற்சித்தார்கள்.
இருந்தாலும் அந்தத் தற்காலிக சக்கரவர்த்தி அவர்களைப் பிடித்து எண்ணெய் இல்லாமலேயே பொரித்து எடுத்தான்………!
பி.டீ. அவர்களைக் காப்பாற்றுவதற்கு நேரத்தோட வந்து விட்டார். பருவக்காலங்கள் வந்து போயின…. பீ.டீ.யும் அவைகளைப் போல ஒரு திருப்பத்தை சந்திக்க வேண்டும்……
அவர் கம்பெனி காரியாலயத்துக்குப் பதவி உயர்வைப் பெற்று கொழும்புக்குச் செல்ல வேண்டும். அல்லது பெரிய தோட்டம் ஒன்றுக்கு இடமாற்றம் பெறவேண்டும்….. ஒரு மாயமான சைகை இந்த மாற்றத்தை முன்கூட்டியே காட்டும் அறிகுறியாக ஆகாயத்தில் தெரிந்தது.
ஒரு செங்குத்தான மலைப்பாறையின் மேல் தனித்து வளர்ந்திருக்கும் ஒரு ஒற்றை மரத்தில் உட்கார்ந்துகொண்டு, அந்த ‘உத்தியா குருவி’ அந்த நடுநிசியில் ரெண்டும் கெட்ட நேரத்தில் அந்தச் சகுனத்தை முன்கூட்டிச் சொல்லிச் சொல்லிக் கத்தியது…. பேய்கள் உறங்கும் அந்தப் பயங்கரமான நேரத்தில் குருவி சத்தம் கேட்டு குதிரைக்காரனின் நாய் ஊளையிட்டது. இவையெல்லாம் நல்ல சகுனமாகவே தென்படவில்லை.
இறுதியாக விசயம் வெளிவரத் தொடங்கியது…. பெரிய துரை என்னும் பி.டி. கம்பனி காரியாலயத்திற்கு….. கொழும்புக்கு செல்லவிருக்கிறார் என்ற செய்தி முழுத்தேட்டத்தையுமே உலுக்கியது….
பெரிய கிளாக்கர், பெரிய டீமேக்கர், பெரிய கங்காணி யாவரும் சோகத்துடன் தங்கள் வேலைகளைக் கவனித்தார்கள்.
சிலர் தங்கள் எஜமானைப் பிரியப் போகிறோம் என்ற துயரத்தில் கண்ணீர் விட்டார்கள். பிடீ. வழமைபோல இதையெல்லாம் கவனத்துக்குக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
தோட்டத்துத் தொழிற்சாலை மைதானத்தில் துரை போவதற்கு முன்பதாக ஒரு பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது
சின்ன துரை மார்கள், உத்தியோகத்தர்கள், பெரிய கங்காணிமார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பெரிய துரைக்கு நன்றி கூறினார்கள். இவ்வளவு காலம் தங்களையெல்லாம் பாதுகாத்தமைக்காகத் தங்கள் நன்றிக்கடனை வெளிக்காட்டினர்.
பிரமாண்டமான கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பல பேச்சாளர்கள் பேசினார்கள். பலர் வாழ்த்து மடல்களை வாசித்தார்கள். பெரிய கிளாக்கர் பரிசு வழங்கினார்.
பெரிய துரையும் பெரிய துரைசாணியும் கழுத்து நிறைய மாலைகள் அணிவிக்கப் பட்டு எல்லோருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் உள்ளடக்கிய பெரிய புகைப்படம் பிடித்தார்கள்.
-பெரிய துரை – பீ.டீ. சென்று விட்டார்…….! இன்னுமொரு பெரிய துரை வந்துவிட்டார்.
“அந்த ராஜாவின் காலம் முடிந்தது….!”
“ராஜா நீடுழி வாழ்க…..!”
ஆமாம்….! அந்த துரைமார் இராச்சியத்தை ஆளுவதற்குப் பெரிய துரை என்பவன் பிற்ந்தே வருகிறான்……! இந்தத் தேயிலைத் தேசத்தில் அந்த ராஜாக்கள் வாழ்ந்த தடையங்கள் எண்ணத்திலும் எழுத்திலுமிருந்து ஒருபோதும் அழியாது……!
– ஆங்கில தொகுதி: Periya Dorai, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.