தேன் சிந்துமோ வானம்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 280 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவிலின் வெளிவாசல் பக்கமாக செருப்புகள் வைத்த இடத்திற்கு வந்தபோது தான் என் பெயரை அழைத்த வாறே தாரத்தே எவரோ ஓடி வருவதை என்னால் அவதானிக்க முடிந்தது. 

“எட சீலன்! கனகாலத்துக்குப் பிறகு.” அண்மித்தவனைப் பார்த்துக் கூறியவாறே செருப்புக்களைத் தேடிப் பிடித்து காலில் மாட்டிக் கொள்கிறேன். 

“உள் வீதியிலையே உன்னை நான் கண்டுட்டன். நீ கும்பிட்டு முடியக் கதைப்பம் எண்டிருந்தன், அதுக்கிடையிலை வெளிவீதிக்கு வந்திட்டாய்.” மூச்சிரைக்க சீலன் கூறுகிறான். 

“இவ்வளவு காலமா நீ எங்கை இருந்தனீ?”அவனது தோளில் கையைப் போட்டவாறே நான் கேட்கிறேன். 

“எயிற்றித் திறீ கலவரத்தோடை சவுதிக்குப் போய் போனமாதம் தான் திரும்பி வந்தனான்.” 

“ஓ! அப்ப நீ அதிஷ்டசாலி தான். இப்ப சில வருஷங்களா நாங்கள் பட்ட துன்ப துயரங்கள் எல்லாம் உனக்கு கதைகளாகத்தான் அங்கை வந்திருக்கும். இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாத்தையும் நீ ‘ரெலிவிஷனிலை’ தான் பார்த்திருப்பாய்.” 

“இன்னும் உன்ரை சில குணங்கள் மாறேலை வேலோன்.” 

“கொண்டு பிறந்த கொள்கையும் குணங்களும் கட்டையிலை போகு மட்டும் மாறாது சீலன்.” 

“நீ என்ன என்னை ‘றோட்’டுக்கு கூட்டிக் கொண்டு போறாய் போலை?” வாசலை அண்மித்துக் கொண்டிருந்த போது சீலன் கேட்டான். 

“பிறகுமென்ன கோயிலுக்குள்ளேயே தஞ்சம்? அந்த நிலை இப்ப எங்கடை சொந்த ஊர்களிலே தான்.” 

“நிகழ்காலங்களை பற்றி நீ சொல்லுகிறாய். என்ரை நிலையைப் பற்றி நான் சொல்லுறன். கோயிலுக்குள்ளை அம்மாவும், ‘சிஸ்ரேசும்’ நிற்கினம். கொஞ்சம் பொறு. அவையளும் வரட்டும்.” 

“அப்ப குடும்பமே கொழும்பிலை தானோ?’ 

”இரண்டு ‘சிஸ்ரேஸ்’ இங்கை ‘வேக்’ பண்ணு கினம். அதனாலை அம்மாவும் வந்து துணையாக நிக்கிறா. கொட்டகேனாவிலை அனெக்ஸ்’ எடுத்து இருக்கிறம்.” 

நடந்து சென்ற நான் வாசலோடு அமைந்த இருக்கையில் அமர்கிறேன். அருகில் சீலன் வந்து இருந்தான். கல்லுாரியில் பின்னர் கணக்கியல் நிறுவகத்தில் இவன் என்னருகே இருந்த அந்த நாட்கள் மின்னலாக ஒரு கணம் மனதில் ஒளிர்ந்தது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியில் ‘அட்வான்ஸ் லெவல்’ படித்தபோதே சீலனை நான் சந்தித்தேன். படிப்பு முடிந்து பின்னர் ‘எக்கவுண்டன்சி’ செய்வதற்காக கொழும்பிற்கு வந்த பின்பும் ‘ரியூஷன் சென்ரர்’களிலும் சில நாட்கள் இவனுடன் பழகியிருக்கிறேன். படிப்பை ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளேயே கலவரம் வெடித்தது. பின்பு தொடர்புகளே இன்றி உறவுகள் விடுபட்டுப் போனது. ஐந்து வருடங்கள் கடந்து பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் இன்று. 

“என்ன நீ செய்யிறாய்? ‘எக்சாம்’ ஏதாவது ‘பாஸ்’ பண்ணினியோ?” 

“சாட்டெட்டிலை பிறிலிமினெறி பாஸ் பண்ணி இப்ப ‘லைசன்சியேட்’ படிக்கிறன். அத்தோடை வேலையும் பார்க்கிறன். அது சரி சவுதியிலை உன்ரை முயற்சி என்ன மாதிரி?” 

“ஹொட்டேல் ஒண்டிலை ‘நைற் ஓடிற்றரா’ இருந்தனான் மச்சான். ஐந்து வருஷத்திலை உழைச்சதிலை ஒரு மாதிரி நல்லூாரிலை இரண்டு ‘சிஸ்ரேசுக்கும்’ வீடுகட்டி, சின்னவளுக்கும் அத்திவாரம் போட்டுட்டன். அத்தோடை ஆளுக்கு இரண்டு லட்சம் ‘பாங்கிலையும்’ போட்டிருக்கிறன். இனித் திரும்பப் போய்த்தான் எச்ச சொச்சங்கள். அது சரி உன்ரை ‘லைவ்’ எப்பிடி, வேலோன்?” 

எண்பத்திமூன்று ஆவணியில் கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறிப்போய் காங்கேசன்துறை மண்ணில் காலடி வைத்தது தொட்டு எண்பத்தியேழு ‘மே’ யில் நடந்த வடமராட்சித் தாக்குதல் வரை என் வாழ்வில் நிகழ்ந்த மாறுதல்களை ஒன்றுமே விடாது இவனுக்கு ஒப்புவித்தேன். 

கதைகளைக் கேட்டதும் நண்பன் எனக்கு வாழ்த்துக் கூறும் தோரணையில் கைகொடுத்தான். “என்னடாப்பா? இன்னமும் உயிரோடை இருக்கிறதுக்கா கைகொடுக்கிறாய்?” என்று நான் கேட்ட போது, அமைதியாகச் சிரித்தவாறே தனது சரிதையையும் சொல்ல ஆரம்பித்தான். 

கலவரத்தில் இவனது தந்தை தவறிப்போனது. அதனால் படிப்பைத்தொடர முடியாத நிலையில் தந்தையின் பொறுப்பை தான் ஏற்று அதை நிறைவு செய்யும் நோக்கிற்காக சவுதி சென்றது. இப்போ சகோதரிகளின் சங்கதிகளைப் பார்க்க லீவில் வந்திருப்பது. 

“இவதான் அம்மா. இது வான்மதி. இவள் பாமினி. அம்மா நான் முந்தி அடிக்கடி சொல்லுவன் புலோலிப் பொடியன் ஒண்டு என்ரை ‘பிறண்ட்’ எண்டு. அவன்தான் இவன்.” பரஸ்பரம் நிகழ்ந்த அறிமுகங்களின் பின்னர் அமர்ந்திருந்த இருவரும் எழுந்து நின்றோம். 

ஆலய வளவை விட்டு வெளியேறி கொச்சிக்கடைச் சந்தியால் திரும்பி சீலனின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 

எனது தொழில் நிலவரங்கள் பற்றி சிரத்தையுடன் சீலனின் அம்மா கேட்டு அறிந்து கொண்டா. என் வயதை ஒத்த எங்களுர் பையன்கள் சிலரது பெயர்களைச் சொல்லி அவர்களது இனத்தவரா நான் என்றும் வினவினா. ஓரளவிற்கு அவவிற்குத் தெரிந்த ஒரு பொடியனின் பெயரை அடிப்படையில் வைத்து என் குடும்பத்தை இனங்காட்டினேன். 

“உம்மடை ‘பிறண்ட்’ சீலனாலை தான் நாங்கள் இப்ப தலை நிமிர்ந்து நடக்கிறம் தம்பி. பாருமன் இந்த முறை வந்து நிக்கிறதுக் கிடையிலேயே தன்ரை சகோதரிகளின்ரை அலுவலுகளையும் முடிச்சுப்போட வேணு மெண்டு வலு பிரியப்படுகிறார். கடவுளே எண்டு இதுகளை இந்த முறை கரைசேர்த்துப் போட்டாரெண்டால் இனி ‘ஜவ்னாக் கம்பஸ்சிலை’ படிக்கிற இளைய பொடிச்சியின்ரை அலுவல் ஒண்டுந் தானே? அதை ஆறுதலாகவும் முடிக்கலாந் தானே?” 

இப்போ வாகன இரைச்சல்கள் சற்றுமே இல்லாத குச்சொழுங்கை வழியாக நாம் திரும்பிக் கொண்டிருந்தோம். பொழுது சற்று இருட்டிவிட்டிருப்பதைக் கூட இந்த ஒழுங்கைக்குள் வந்த பின்புதான் நான் உணர்ந்து கொண்டேன். குச்சொழுங்கை சிறிது தூரம் சென்றதும் ஓடையாக உருமாறியது. இரண்டு பக்கங்களிலும் சுவர்கள் நிமிர்ந்து நிற்க நிலத்தில் வலது பக்கமாக சாக்கடை ஒன்று நீண்டு சென்றது. மலசல வாசனை மிக்க தாராளமாகவே சாக்கடையிலிருந்து மிதந்து கொண்டிருந்தது. சிவப்புத் தகரக் ‘கேற்’றுக்களில் வெள்ளை இலக்கங்கள் தம்மை வெவ்வேறு வீடுகளாக வேலி போட்டுக்கொண்டு வந்தன. ஏழாம் இலக்கம் ‘ஐ’ ப்பிரிவு என வந்ததும் எங்கள் குழுவின் வேகம் குறைந்தது. நீண்ட நேர மௌனத்தை சீலனின் அம்மாதான் முதலில் கலைத்தா. “தம்பி, நாங்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளை போறம். நீ போய் சந்திக்கடையிலே ஒரு ‘பக்கெட்’ பால் வாங்கி வா. நீங்கள் இரண்டு பேரும் போனால் இப்போதைக்கு வரமாட்டியள். இவர் நிக்கட்டும். நீ மட்டும் போட்டு ஓடிவா” 

‘கேற்’றைத் திறந்து உள்ளே நு ழைகிறோம். வாசல் கதவையும் திறந்த போது தான் அந்த ‘அனெக்ஸ்’ தன் அழகை அள்ளிக் கொட்டியது. ஒரு பெரிய ‘ஹோல்’ பின்பக்கமாக அறைக்கு வழி விட்டிருந்தது. அறையின் வாசலில் அழகான திரைச்சேலை ஒன்று தொங்கிக் கொண்டிருக்க, ‘ஹோலின்’ வலது பக்கமாக வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இடது புறத்தே ‘சோக்கேஸ்,’ குளிர்சாதனப் பெட்டி, மேசை, எதிரும் புதிருமாகக் கதிரைகள். முன்பக்கத்தில் வட்டமாக நான்கு பெரிய நாற்காலிகள். நவீன ஓவியங்கள் சுவரை நிரப்ப, சுவர் ஓரங்களை “ஒக்கிட்ஸ்” செடிகள் அலங்கரித்தன. 

முன்புறமாக இருந்த ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து கொண்டேன். பெண்கள் அனைவரும் உள் சென்றனர். சிறிது நேரத்தின் பின் சீலனின் அம்மா வந்தா. தொடர்ந்து வந்த பாமினி மூலையில் இருந்த ரெலிவிசனை ‘ஓன்’ பண்ணி, சத்தத்தைச் சரி செய்துவிட்டு, மீண்டும் உள் நுழைகிறாள். ‘ரி.வி.’ யில் விளம்பரங்கள் போய்க் கொண்டிருந்தன. 

“இவ மகள் வான்மதி. ‘வெற்னறி சேஜன்ரா’ மொரட்டுவவில் வேலை பார்க்கிறா. இனிச் சம்பளமும் ஆறுக்கு மேலை எடுக்கிறா. நாங்கள் ‘டொக்டர்,”என்சினியர்’ எண்ட ‘லெவல்’களிலை எல்லாம் எதிர்பாக்கேலை. உமக்குத் தெரிஞ்ச இடமேதாவது இருந்தால்….” 

எனது மூளைக்குள் ‘சட்’டென எந்த இடமும் தட்டுப்படவே இல்லை. எனது வயதை ஒத்தவர்கள் இவவுக்கு தோதுவராது. இனி என்னை விட சற்று வயதில் கூடிய பலரும் குடியும், குடித்தனமுமாக இருப்பவர்கள். எஞ்சியிருப்பவர்கள் சிலருக்கும் அசைய முடியாத குடும்பப் பொறுப்பு. இந்த லட்சணத்தில் நான் யாரை என சிபார்சு செய்வது? 

எதையுமே சொல்ல முடியாதவனாக நான் இருந்த போது, திரைச்சேலையை விலக்கியவாறே தட்டில் பிஸ்கட், பழங்கள் சகிதம் பாமினி வந்தாள். என் அருகிலிருந்த மேசையில் அவற்றை வைத்த போது ரி.வி.யில் அடுத்த விளம்பரம் ஒளிர்ந்தது. 

“இவ சீலனுக்கு நாலு வயது இளையவ. ‘கொம்பனியில’ ‘எக்கவுண்ஸ் கிளார்க்கா’ வேலை பார்க்கிறா. அத்தோடை இப்பத்தான் ‘ஏ.ஏ.ரி எண்டு ‘எக்கவுண்டன்சி கோஸ்’ செய்ய ஆரம்பிச்சிருக்கிறா. ‘அட்வான்ஸ் லெவலிலை கொமேஸ்’ செய்ததாலை முதலாவது சோதனை எடுக்கத் தேவையில்லையாம். இப்ப இரண்டாவது சோதனைக்கு ‘அப்பிளை’ பண்ணியிருக்கிறா. ‘எக்கவுண்சிலை’ கொஞ்சம் கஷ்ரப்படுகிறாள் தம்பி. நீர் ‘சாட்டெட்’ தானே செய்யிறீர்! முடிஞ்சால் இடையிடை வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணு வீரோ?” 

“ஓ யேஸ் எனக்குப் ‘புறபுளம்’ இல்லை. ஆனால், ‘எக்சாம் வருகிற நேரங்களிலைதான் கொஞ்சம் சிரமமாக இருக்கும். மற்றபடி வந்து சொல்லிக் குடுக்கிறன்.” நான் சொன்னதை உள்வாங்கிய பாமினி ஒரு புன் சிரிப்புடன் உள்சென்று விடுகிறாள். வலது பக்க மூலையிலிருந்த மின் விசிறி திடீரென சுழல ஆரம்பிக்கிறது. அப்போ சீலன் உள் நுழைந்தான். சிகரெட் வாசனை அவனில் ‘குப்’ பென வீசியது. “அம்மா பக்கட் பால் முடிஞ்சு பேரச்சுதாம். 

“பரவாயில்லை. நேற்று உடைச்ச ‘ரின் மில்க் பிறிச்’சுக்குள்ள கிடக்கு. நான் போய் ‘f’ போட்டுக் கொண்டு வாறன். நீ உன்ரை ‘பிறண்டோடை’ கதைச்சுக் கொண்டிரு. ஏன் தம்பி, நீர் ‘பிஸ்கட்’ எடுக்கலையே? பழங்களும் இருக்கு. பார்த்து எடும்.” 

“ஓ, எடுப்பம்…. என்ன அவசரம்?” 

சீலன் மீண்டும் கதைக்க ஆரம்பித்தான். எனது மட்டுப் படுத்திய வருமானத்தை வைத்து நான் வாழ்க்கை நடத்தும் விதம் இவனுக்கு வியப்பாக இருந்தது. இவனது வெளிநாட்டுப் பார்வையில் இது வில்லங்கமான விடயந்தான். 

“என்னடாப்பா வேலோன்? ‘கொலிச்சிலை’ எங்களோடை படிச்ச ஒரு பொடியங்களையுமே இப்ப கொழும்பிலை காணேலை? நெட்டை ரவி, சடையப்பன், சிங்கன், முத்துலிங்கன், மூத்தண்ணன், தவத்தான், ஏ.ஆர்.வி எண்ட எங்கடை ‘கிளிக்’கையே காணக் கிடைக்குதில்லையே!” 

“ஒருத்தருமே இப்ப இங்கை இல்லை சீலன். இயக்கமெண்டு கொஞ்சப்பேர் போனாங்கள். வெளிநாட்டுக்கு சிலர் பறந்தாங்கள். கலவரங்களிலை சிலர் காணாமல் போயிட்டாங்கள். இப்ப என்னைப் போல ஓண்டு, ரெண்டு பேர் தான் மிஞ்சியிருக்கிறம். மேலும் நாங்களும் இருக்கப் போகிறதும் எத்தனை நாளைக்கெண்டதை நிச்சயமாக சொல்ல முடியாது. ஒரு வேளை நீ அடுத்த தடவை வரக்குள்ளை நான் கூட இல்லாமல் போய்விடலாம் சீலன்.” 

“ஏன் வேலோன் அப்பிடி விரக்தியாகச் சொல்லுறாய்? அதுபோக நீயும் ஏன் வெளிநாடு போக ‘றை’ பண்ணக்கூடாது?” 

“அதுக்குப் பல காரணங்கள் சீலன். ஆறு, ஏழு எண்டு கட்டி அகதிகளா வெளிநாட்டுக்குப் போறளவிற்கு எனக்கு வசதியில்லை. சவுதிப்பக்கம் போகிறது பற்றியதும் இன்னமும் தீர்மானிக்கேல்லை. கொஞ்சநாள் போகட்டும் பார்ப்பம். அதுசரி உன்ரை ‘சிஸ்ரேசின்ரை’ பிரச்சினைகளை எப்படி நீ ‘ரைகிள்’ பண்ணப் போகிறாய்?” 

“நானும் சிலோனுக்கு வந்து இண்டையோடை மூண்டு கிழமை முடியுது.சம்மந்தம் ஒண்டுதானும் பொருந்தி வருகுதில்லை. கடைசி வான்மதியின்ரை விஷயத்தையாவது முடிப்பமெண்டு பார்த்தால், வாற ‘புறப்போசல்கள்’ எல்லாம் பாதியோட போயிடுது.” 

“ஏன் என்ன பிரச்சனை?” 

“சாதி, சாதகம், பதவி, அந்தஸ்து எண்டு நாங்களே ‘கிறியேற்’ பண்ணுகிற பிரச்சனைகள் தான். கலியாணத்தை முடிச்சு வைக்க வேண்டு மெண்டு அவசரங் காட்டுகிறாவே தவிர, அம்மா இன்னும் பழைய நுணுக்கங் களை கைவிடுகிறாவே இல்லை” என்று சீலன் சொன்ன போது, சற்றே செருமியபடி தாயார் வந்து எதிரில் அமர்ந்தா. 

‘சட்’டென சீலன் எழுந்து உள்ளே செல்ல, தாயார் கதையை ஆரம்பித்தா. “தம்பி என்ன கடைச்சாப்பாடு தானே? ஆளைப் பார்க்கத் தெரியுது. நாளைக்கு நீர் ‘பிறீ’ தானே? மத்தியானம் ‘லஞ்சுக்கு’ வாருமன்.” 

தாயை மறைத்த படி என்முன் பாமினி வந்த போது சற்று நிமிர்ந்து பார்த்தேன். முகங்களில் புன்சிரிப்பும், கைகளில் தேநீர்க் குவளையும் பரிமாறின. 

தாய்க்குப் பதில் சொல்ல நான் வாயெடுத்த போது, சிகரெட்டும் கையுமாக இருமியபடி சீலன் உள்ளிருந்து வந்தான். ‘ரி.வி.’யில் நிகழ்ச்சி ஒன்று மாறிக்கொண்டிருந்தது. 

“அம்மா, நான் அப்போ சொல்லவே மறந்து போனன். இவனுக்கு போன மாதம் ஒரு பெண் குழந்தை கிடைச்சிருக்கு. மீரா எண்டு பெயர் வைச்சிருக்கிறான். தொடக்கு கழிய குழந்தையை கோயிலுக்குக் கொண்டு போக வேணு மாம். முப்பத்தொண்டுக்கும் போகேலாமல் போச்சுதாம். இரண்டுக்கும் பொதுவா நாளைக்கு காலமை ஊருக்குப் போகிறானாம்.” 

சிரிப்பும், கதையுமாக இருந்த சீலனின் அம்மாவின் முகம் திடீரென ‘சீரியசான’ பாவம் காட்டியது. ஒருசில விநாடிகள் மௌனம். பின் வார்த்தைகளைக் கூட்டிக் கதைக்க ஆரம்பித்தா. வார்த்தைகளில் ஒரு தொய்வு தெரிந்தது. “எட உமக்கு ‘வெடிங்’ முடிஞ்சுதே? அப்ப உன்ரை ‘பிறண்ட்’ பெரியாள் தான் சீலன்.” 

“சாந்தி எண்டு மாமன்ரை மகளைத் தான் ‘மறி’ பண்ணியிருக்கிறானாம். வடமராட்சி அற்றாக்’குள்ளை தான் ஆளுக்கு ‘வெடிங்’ நடந்ததாம். கலியாண வீடு நடந்த அடுத்த நாளே ‘பங்கருக்குள்ளை’ போக வேண்டி வந்துட்டுதாம்.” சொல்லியவாறே சீலன் சிரித்தான். ஆனால், தாயோ பாமினியோ அதை ரசிக்கவில்லை. மூலையில் ஒளிர்ந்த ‘ரெலிவிஷனை’ ‘ஓவ்’ பண்ணிவிட்டு தாய் உள்ளே சென்றா. தொடர்ந்து பாமினியும் சென்றாள். சற்று நேரத்தில் சுழன்று கொண்டிருந்த மின் விசிறியும் ஓய்வுக்கு வருகிறது. 

“போறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு வேலோன். அதுக்கிடையிலை வான்மதியின்ரை விஷயத்தை எப்படித்தான் ஒப்பேற்றப் போகிறேனோ?’ அமைதியைக் கலைத்தவாறே சீலன் தான் ஆரம்பித்தான். சிகரெட் புகை வளையம், வளையமாக வெளி வந்தது. 

“கறண்ட் புறபுளம் இதுதான் மச்சான். வீடு ‘ரெடி,’ ‘டவுரி ‘டொனேசன் ரெடி,’ காணி பூமி நகை நட்டு எல்லாமே ‘ரெடி.’ ஆனால், மாப்பிள்ளை தான் இல்லை. பொடியங்களின்ரை பற்றாக்குறையை நிகழ்ந்து போன அழிவுகளை இப்பத்தான் புரிய முடியுது சீலன்.” காலியான தேநீர்க் குவளையை மேசையில் வைத்து விட்டு, சீலனின் முகத்தைப் பார்த்தவாறே நான் நிமிருகிறேன். இப்போ சற்று புழுங்க ஆரம்பிக்கிறது. 

“திரைகடலோடி எல்லாம் திரவியங்களைத் தேடிக் கொள்ள முடியுது. பொருளாதாரம் வசதிகளையெல்லாம் பெருக்கிக் கொள்ள முடியுது. ஆனால், எங்களாலை அக்கா தங்கைகளுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளைத் தேடிக் கொள்ளேலாமல் இருக்கே?” நீண்ட பெருமூச்சொன்றுடன் சீலன் சொல்கிறான். 

“எங்கடை சமூகத்திலை வந்திருக்கிற இந்தச் சாபக்கேட்டிற்கெல்லாம் ஆர் சீலன் காரணம்? இதுகளுக்கெல்லாம் ஒரு முடிவு ஆருடைய கையிலை தங்கியிருக்கு?” 

எதையும் பேசாமல் சீலன் எழுந்து உள் சென்று இன்னொரு சிகரெட்டினைப் பற்ற வைத்தபடி வருகிறான். மூலையில் கிடந்த ‘கசெற் றெக்கோடர்’ இப்போ இவனால் இயங்க ஆரம்பிக்கிறது. 

“பழங்கள் எல்லாம் அப்பிடியே இருக்கு. நீ ‘ரச்’ பண்ணவே இல்லை போலை கிடக்கு?” என்று கேட்டவாறே, சீலன் இப்போ என்னருகே கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்கிறான். 

“பரவாயில்லை. இப்ப இதுகளை எடுத்தால் பிறகு இரவைக்குச் சாப்பிடேலாது, மச்சான்.” 

‘ரேப்பில்’ மேளக் கச்சேரி ஒன்று மெதுவான சத்தத்தில் போய்க் கொண்டிருந்தது. என் குடும்ப வாழ்க்கை பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி இப்போ எமது உரையாடல் அமைந்திருந்தது. இது பற்றி நீண்ட நேரமாகவே நாம் மனம் விட்டு கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளிருந்து சமையல் வாசனை இதமானதாக வெளி வந்து கொண்டிருந்தது. 

”உன்ரை ‘மறேச்’ என்ன மாதிரி சீலன்?” 

“உனக்கு விளக்குமாறு காவின மூஞ்சூறுவின்ரை கதை தெரியுந்தானே?” கேட்டவாறே சீலன் சிரித்தான். 

“தம்பி, நீர் இங்கை எங்கை இருக்கிறனீர்?” திரைச் சேலையை விலக்கியவாறே தாயார் வந்தா. இப்போ உள்ளிருந்து வந்த பொரியல் வாசனை மூக்கைத் துளைத்தது. 

“வெள்ளவத்தையிலை.” 

“பிறகேன் மினக்கெடுறீர்? இந்த நாளையிலை வேளை காலையோடை வீட்டுக்குப் போயிட்டால் வீணான பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றது நீர் வெள்ளவத்தையிலிருந்து இஞ்சை வந்த போறது உமக்கும் சிரமமாயிருக்கும். அதோடை நீரும் ‘எக்சாம்’ எடுக்கிறனீர். இவ பாமினி தான் ‘கிளாஸ்மேற்றோடை’ ‘கொம்பயின் ஸ்ரடி’ போட்டு ‘மனேஜ்’ பண்ணு கிறாவாம்.” 

“அப்ப சரி… நான் போயிட்டு வாறன்.” எழுந்தவாறே நான் செல்கிறேன். 

“இரு சாப்பிட்டுட்டுப் போகலாம்.” என்றவாறே சீலன் தாயைப் பார்த்தான்.”ஓம்… உமக்காகத்தான் இவ்வளவு அவசரப்பட்டு சமையல் முடிச்சனாங்கள். சாப்பிட்டுட்டுப் போம்.” வார்த்தைகள் இழுபட்டன. 

“நான் வரக்குள்ளை ‘பாம் மேற்’ ரஞ்சித்திட்டை எனக்கும் ‘டினர்’ எடுத்து வைக்கச் சொல்லிப் போட்டு வந்தனான். பிறகு அது வீணாப் போயிடும். பிறகு ஒரு நாளைக்கு வாறன்.” சொல்லியவாறே நான் வாசல் கதவைத் தாண்டுகிறேன். 

“ஊருக்குப் போய் நீ எப்ப திரும்புகிறாய்?” வாசலைத் தாண்டி வந்து சீலன் வினவினான். 

“அடிக்கடி பிரயாணம் பண்ணு றதாலை அதிக நாட்கள் அங்கை நிக்கேலாது. அடுத்த கிழமைக்குள்ளை திரும்பி விடுவன்”மழை மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. 

“அப்ப இனி அடுத்த சந்திப்பு எப்ப?” 

“இனி நீ வெள்ளவத்தைப் பக்கம் வந்தால் என்ரை ‘றுாமுக்கும்’ ஒருக்கால் வந்து போவன்” என்று சொன்னபடி எனது முகவரியைக் கூறுகிறேன். மழைத் தூறலின் பாரம் சற்று அதிகரிக்கவே “சீயூ” பரிமாறிக் கொண்டு, சீலனை விட்டு விலகுகிறேன். 

பேரிரைச்சலுடன் மழை பொழிய ஆரம்பிக்கிறது. அப்போ வெள்ளவத்தைக்கான பேருந்து ஒன்று வலு வேகமாக வந்து கொண்டிருந்தது.

– வீரகேசரி வாரவெளியீடு.

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *