கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 790 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்தும் விடியாத இருள் புலர்ந்தும் புலராத வைகறைப் பொழுது. இதயத்திலும் இருள் புலர்ந்தும் புலராத நினைவுகளோடு கட்டிலில் சற்றே அசைந்து புரண்டு கொண்டிருந்த மதியழகன் தனக்கு மிக அண்மையில் ‘கீச், கீச்’ என்ற இன்னொலி எழவே ஆச்சரியத்துடன் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். நுளம்பிற்காகப் போட்டிருந்த வலையை மெதுவாக விலக்கிவிட்டுப் பார்த்தபோது அவன் கண்ட காட்சி உண்மையிலேயே அவனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முகம் பார்ப்பதற்காக மாட்டியிருந்த கண்ணாடியின் சட்டத்தில் தன்னிரு கால்களையும் பதித்துக் கொண்டிருந்த அடைக்கலங் குருவியொன்று கண்ணாடியில் தன்னை மிகக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அது தன்னழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததோ, இல்லை மறுபுறத்தில் ஒரு குருவி இருப்பதாக கற்பனை செய்ததோ என்னவோ தன் அலகுகளால் கண்ணாடியை இரு முறை கொத்திவிட்டு ‘கீச், கீச் என்று கத்தியபடி பறந்து சென்றது. மீண்டும் வந்து கண்ணாடியில் அமர்ந்து முன்போலவே செய்தது?

குருவியின் செயல்களையே பார்த்து ரசித்து வியந்து கொண்டிருந்த மதியழகன் சிந்தனை வயப்பட்டான். அந்தக் குருவி கண்ணாடியுள் வேறொரு குருவி இருப்பதாக நினைத்தே கொத்தியிருக்க வேண்டும். ஏனெனில் அது முன்னொரு போதும் தன்னைக் கண்டிருக்க முடியாது. அதனால் தன்னுருவையே வேறொரு குருவியாக கற்பனை செய்து விட்டது. மனிதனும் முதல் முதல் தன்னைக் கண்ணாடியில் பார்த்த பொழுது இப்படித்தானே எண்ணியிருப்பான்.

அவனின் சிந்தனை மேலும் தொடர்கிறது. உடலழகைப் பார்ப்பதற்குக் கண்ணாடியை கண்டு பிடித்த மனிதன் தன் உள்ளத்தினை பார்ப்பதற்கு ஏன் எந்தச் சாதனத்தையும் கண்டு பிடிக்காது விட்டான். ஒரு வேளை தன் உள்ளத்து நினைவுகளைக் காண அவனாலேயே நம்ப முடியாமற் போய் விடும் என்பதனாலோ மனத்தை மன எண்ணங்களை எண்ணங்களின் விளைவுகளைப் பார்க்கக் கூடிய ஒரு கண்ணாடியை மனிதன் சிருஷ்டித்ததால் தன் இதயக்கிணற்றின் பாசிகளை இறுகத் துடைத்துத் தன்னைத் துலக்கிக் கொள்வானே. ஏன் இப்படியும் செய்யலாம். முகக் கண்ணாடியைப் பார்த்துத் தன் முகவிகாரங்களை பலவித பூச்சுக்களால் மூடி மறைப்பது போல் அகக் கண்ணாடியை பார்த்து அகத்தின் விகாரங்களையும் மூடி மறைக்கப் பழகலாம். அப்படியானால்……. அகம் பார்க்கும் கண்ணாடியொன்று கண்டுபிடிக்கப்படவே வேண்டாம். அதனாற்றான் அகத்தின் அழகை முகத்திற் பார்ப்பதுடன் திருப்திப் பட்டார்கள் போலும்.

‘கீச், கீச்’ என்ற குரல் கேட்கிறது. மதியழகன் சிந்தனையின்றும் விடுபட்டவனாய் அறையின் மறுபுறம் பார்வையைச் செலுத்துகின்றான். அங்கிருந்த மறுகட்டிலில் அவன் பார்வையைச் செலுத்துகின்றான். அங்கிருந்த மறு கட்டிலில் அவன் நண்பனுக்குப் பதிலாகக் குருவியிருந்து கீதமிசைக்கிறது. நண்பன் எங்கே? விடியுமுன்பே எழுந்து சென்று விட்டானா? இல்லை ! அப்படியிருக்காது. படுக்கைதான் விரித்தபடி அப்படியே சிறிதும் கசங்காது இருக்கிறதே அப்படியானால்… அவன் நண்பன் அன்றிரவு வரவேயில்லையா?

கடந்த நாள் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவன் நினைவுக்கு வருகின்றன. அவன் இதயத்திற் கனக்கின்ற சிந்தனையிற் தீயின் சுவாலை நெடுமூச்சாகமூக்குத் துவாரத்தின் வழியே வெளியேறுகின்றது.

மனிதனின் இதயம் என்ன ஒரு மையொற்றித்தாளா? அவனது அடிமனம் வினாவெழுப்புகிறது. தீய குணங்கள் என்னும் கருமையின் ஒரு துளி பட்டு விட்டாற் கூட அது மனமாகிய மையொற்றித் தாளில் எத்தனை விரைவில் பரந்து ஊறி வியாபித்து விடுகின்றது. என்றாலும் மனிதன் இத்தனை வலுவற்ற தாளாகத் தன்னிதயத்தை வைத்திருக்க வேண்டாம். அவனது அகத்தின் வெறுப்பை முகம் பிரதிபலிக்கின்றது. ஒரு வேளை என்னிதயமும் ஒரு நாள் இப்படி மாறிவிடுமோ? அவன் கண்கள் பனிக்கின்றன. இல்லை ஒரு போதும் இல்லை. அப்படி நான் மாறவே மாட்டேன். என்னிதயமும் என்றும் மென்மையாக வலுவான எழுதும் தாளாகவே இருக்கும். அதில் எந்தத் தீமையும் ஊறமுடியாது. மாறாக அன்பையும் அறிவையும் கலந்து குடைத்துக் கலந்தெடுத்த பண்பெனும் அழியா மைகொண்டு என் இதயத்தாளில் அரும்பெரும் இலட்சியக் கருத்துக்களை அழகாக அழியாது பொறித்து வைத்திருப்பேன். அவன் ஊடல் முழுவதும் புல்லரிக்கிறது. ஒரு கணம் தன்னை மறந்து மகிழ்ச்சியில் மிதக்கிறான்.

‘கீச், கீச்’ சென்ற ஒலி அவனை இவ்வுலகுக்குக் கொண்டு வருகிறது. மீண்டும் திரும்பிப் பார்க்கிறான். குருவி தானாகவே தன்னை வலைக்குட் சிறைப்படுத்தி இருந்தது. நண்பனின் கட்டிலிலிருந்த குருவி நுளம்பிற்காக போட்டிருந்த வலைக்குட். தானாகவே புகுந்து மேலே ஏறிவிட்டு வெளியே வர வழி தெரியாமல் தவிக்கிறது. மனிதனும் இப்படித்தான் சில சந்தர்ப்பங்களில் தன்னையறியாமலே சில சிறைகளுட் தானாகவே புகுந்து, மாட்டிக்கொண்டு வெளியே வர வழி தெரியாமல் தவிக்கிறான். அவன் மனம் சொல்கிறது நானும் இப்படித்தான் நானாக இந்தச் சிறையினுள் வந்து சிறைப்பட்டு விட்டேன். என்னுடன் படித்த நண்பன் எனக்குத் தற்காலிகமாக ஒரு தொழில் எடுத்துத் தருகிறேன் என்றெழுதியதால் இவ்விடம் வந்தேன். ஆனால் நான் நம்பிவந்த நண்பன் நேரில் இத்தனை தூரம் மாறியிருப்பானென்று நான் கனவு கண்டேனா? கட்டிய மனைவியைப் பெற்றோரிடமிருந்து பணம் வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு இங்கு அல்லும் பகலும் மதுவுக்கும், மங்கைக்குமாகத் தன் உடல், உள்ளம், உழைப்பு முழுவதையும் செலவழிக்கிறானே ! அப்பப்பா பார்க்கவே சகிக்கவில்லை. தான் மட்டும் கெட்டது போதாதா? என்னையும் கெடச்சொல்லி புத்தி சொல்கிறானே.

முதல் நாள் மாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவில் மீட்கிறான். அவனின் நண்பன் நீண்ட நேரமாகக் கண்ணாடியின் முன்னின்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறான்.

‘எங்கேயப்பா இத்தனை தடல் புடலாகப் புறப்படுகிறாய்? என வினவுகிறான் மதியழகன் நண்பன் நகைக்கிறான்.

‘இன்பம் எங்கே இருக்கிறதோ அங்கே அதை நாடிச் செல்கிறேன். விருப்பமானால் நீயும் வா’ என்கிறான். மதியழகன் கேட்கக் கூடாததை கேட்டுவிட்டதாக நினைத்தோ என்னவோ தன் காதுகளை விரைந்து பொத்திக் கொள்கிறான்.

‘மன்னித்து விடப்பா நான் உன்னுடன் வருவதற்காகக் கேட்கவில்லை. நண்பன் என்ற முறையில் உனக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். உனக்காக வீட்டில் காத்திருந்த இன்பத்தை காலால் உதைத்தெறிந்து விட்டு இப்போது இன்பத்தை பணம் கொடுத்து வாங்குவதற்காக எங்கோ அலைகிறாயே இற்தப் பணத்திற்காகத்தானே உன் மனைவியை வீட்டிற்கு அனுப்பினாய். அவள் மட்டும் இங்கிருந்தால் உனக்கு இன்பமும் இருந்த இடத்திலேயே கிடைப்பதுடன் பணமும் மிச்சப்படுமே.”

“சீ மூடுவாயை நீ என் நண்பனென்ற படியால் உன்னை மன்னித்து விடுகிறேன். எனக்கு நீ போதனை செய்து என்னைத் திருத்திவிடலாமென்று நினைக்க வேண்டாம். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் நீ. எப்பொழுதுமே நீ அப்படித் தானே படிக்கும்போதும் ஆசிரியர்களுக்கு நல்ல பிள்ளையாய் அடக்கமாய் இருந்தாய். எங்கள் சேட்டைகளிற் கலந்து கொள்ள மாட்டாய். அதனால் பல்கலைக்கழகத்திற்குச் சென்றாய். ஆனால் உன் அடக்கமும் படிப்பும் உனக்கு எதைக் கொடுத்தன. இதோ என்னைப்பார். நான் அன்றும் புரளிக்காரன் தான் இன்றும் அப்படித்தான். அதனாலென்ன? உன்னைப் போற் பட்டம் பெற முடியாவிட்டாலும் நான் தொழில் பார்க்கவில்லையா? ஆனால் நீ? உனது அடக்கமும், அறிவும், நல்லதனமும் உனக்கு எந்தச் சாம்ராஜ்ஜியத்தைக் கொடுத்தன. கவலையையும், துன்பத்தையும் தானே சொல்” நண்பனின் இடிமுழக்கம் ஓய்கிறது.

நண்பனுடைய சொற்களாகிய கூரம்புகளாற் துளைக்கப்பட்ட மதியழகன் துடிதுடிக்கிறான். அவனது எண்சாண் உடம்பு ஒரு சாணாகக் கூனிக்குறுகியது போல அவன் தலை கவிழ்கிறான். அவன் கண்கள் இருண்டு கொண்டு வருகின்றன. தலை சுற்றுகிறது. உடலைச் சுற்றி வெம்மையான அக்கினிக் காற்று வீசுவதை உணர்கிறான். தான் எங்கோ எங்கோ அதளபாதாளத்திற் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு புரண்டு சென்று கொண்டிருப்பது போலவும், மலையுச்சியின் மேலே நின்று தன் நண்பன் தன்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிப்பது போலவும் தெரிகிறது. “உனது அடக்கமும் அறிவும் நல்லதனமும் உனக்கு எந்த சாம்ராஜ்ஜியத்தைக் கொடுத்தன?” இதே சொற்கள் அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் இடி முழக்கம் போல் எதிரொலிக்கின்றன. அதுமட்டுமா, அதே சொற்கள் அவன் கண் முன் சிறிய நெருப்புத் துண்டங்கள் போற் தெரிகின்றன. எங்கோ துாரத்திற் சிறிது சிறிதாகத் தெரிந்த நெருப்புத் துண்டங்கள் பெரிது பெரிதாகிப் பூதாகாரமாகி அவனை மிக மிக அண்மையில் நெருங்கிவிட்டன. “ஐயோ அம்மா” அவனையும் அறியாமல் அவனுடைய வாய் அலறுகிறது. சிறிது சிறிதாக சுய உணர்வு வரப்பெற்றவனாய் அங்குமிங்கும் பார்க்கிறான். அவனுடைய நண்பன் அங்கே இல்லை. அவன் போகவிரும்பிய இடத்திற்குப் போய் விட்டான்.

மதியழகனின் இதயத்தில் மீண்டும் மீண்டும் அதே சொற்கள் வினாவெழுப்புகின்றன. என் நண்பன் கூறியது உண்மைதானே. எனது அறிவும், ஆற்றலும், பண்பும் எனக்கு என்ன நன்மையைச் செய்தன? நான் அறிவோடு படித்தேன். பண்போடு பழகினேன். அதனால் கண்ட பயன்? துன்பம், சோகம், போராட்டம், வேதனை, வேலையின்மை இவைதானே. ஒரு வேளை நல்ல குணங்களோடு இந்த உலகில் வாழமுடியாதோ? வாழ்ந்தாற் துன்பந்தான் கிட்டுமோ? என் நண்பன் படிப்பில் அக்கறை இல்லாதவன். எப்படியோ தட்டித் தவறி எஸ். எஸ். சி. சித்தியடைந்தவன். தொழில் பெற்று இன்பமாக வாழ்கிறான். ஆனால், நான்……? அதிகமாகப் படித்ததினாற்றான் இந்தக் கதி எனக்கு ஏற்பட்டதோ? அப்படித்தான் இருக்க வேண்டும். நான் ஏன் படித்தேன்? கடவுளே நான் ஏன் படிக்க விரும்பினேன். அம்மா நீ ஏன் நான் படிக்க வேண்டுமென்று விரும்பினாய். அக்கா நீ ஏன் என்னை மேலே படிக்க வைத்தாய், படித்ததினால் அல்லவா எனக்கு இத்தனை கவலையும் ஏற்பட்டது. படிப்பை இடையில் நிறுத்திவிட்டு அந்நேரமே ஒரு தொழில் தேடியிருந்தால்..? நிச்சயமாக இப்படித் துடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. ஐயோ ! வீணாகப் பயனற்ற படிப்பிற் காலத்தையும், பணத்தையும் விரயமாக்கிவிட்டேனே. என் படிப்பினால் எனக்கு என் அன்னைக்கு, என்னைப் படிக்க வைத்த என் அக்காவிற்கு எந்தவிதப் பயனுமே இல்லாமற் போய்விட்டதே. மாறாகக் கவலையல்லவா நம்மை வாட்டுகிறது. படித்ததினால் அல்லவா இத்தனை துன்பமும். படிக்காமல் இருந்திருந்தால் கூட ஓரளவு அமைதியாய் இருந்திருப்பேனே. கடவுளே ! எனக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருக்கிறதே. ஒரு வேளை நண்பன் கூறியது போன்ற வழிகளில் ஈடுபட்டால் துன்பங்களை மறந்து இன்பம் பெறலாமோ? ஒரு கணம் அவன் நினைவில் இருள் கவ்வுகிறது. மறுகணம் விழிப்புற்றெழுந்த அவனின் இதயவொளி சுடர்விட்டு மாசுறு நினைவுகளை விரட்டுகிறது.

மாசறு நெஞ்சினனான மதியழகன் தன் சிந்தை தடுமாறியதற்கு நாணியவனாய்க் கண்களை இறுக மூடிக்கொள்கிறான். அவனின் இதய நாவலை மெல்லத் திறந்து தன் இளமைக்கால அத்தியாயங்களை அகக் கண்ணாற் புரட்டிப் பார்வையிடுகிறான்.

அதோ தெரிகிறது ஒரு சிறிய மண் குடிசை. உள்ளே நிலத்தில் கிழிந்த பாயில் நன்கு போர்க்கவும் சேலையற்றுப் படுத்திருக்கிறாள் அவன் அன்னை. அவளருகே கண்ணீருகுத்தபடி வீற்றிருக்கிறாள் அவன் அக்கா. செய்வதொன்றும் அறியாமல் மலங்க மலங்க விழித்தபடி இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கிறான் மதியழகன். அவனுடைய தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிய முடியாத பாலப் பருவம். அக்காவை அருகே வரும்படி மெல்லக் கையசைக்கிறாள் அன்னை அக்கா அருகே செல்கிறாள் அன்னை மெல்லக் கூறுகிறாள்.

”மகளே ! இனி அதிக நேரம் நான் உயிர்வாழ மாட்டேன். என் உயிரைக் கொடுத்து நேர்மையாய் உழைத்து உங்கள் இருவரையும் வளர்த்தேன். உன்னை ஓரளவு படிக்க வைத்தேன். அதற்கு மேல் நான் உங்களுடன் இருக்கக் கடவுளுக்குப் பொறுக்கவில்லை. இனி உன்னையும், உன் தம்பியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது. எப்படியும் நேர்மையான வழியில் உழைத்து உன் தம்பியை நன்கு படிக்கவை இதுதான் என் இறுதி ஆசை”

அன்னையின் வார்த்தைகள் மகளின் இதயத்தைப் பிளக்கின்றன. “அம்மா, உன் ஆசையை நான் எப்படியும் நிறைவேற்றுவேனம்மா ஆனால், இததான் உன் இறுதி ஆசை என்று சொல்லாதே அம்மா உயிரோடு என்னைக் கொல்லாதே அம்மா நீ வாழ வேண்டும் எங்களுடன் இன்னும் நீ வாழவேண்டும். என்னையும் தம்பியையும் தனித்து தவிக்கவிட்டுப் போய்விடாதே”

அன்னையின் கண்களினின்றும் கங்கை வெள்ளம் பிரவாகிக்கிறது. அக்கா கேவிக் கேவி அழுவதைப் பார்த்த மதியழகனும் அன்னையை கட்டிப்பிடித்தவாறு அழுகிறான்.

“அம்மா! அக்கா! அழாதேயுங்கோ நீங்கள் அமுதால் நானும் அழுவேன்” அவனின் பிஞ்சுள்ளம் வாய் விட்டு கதறுகிறது.

அந்நேரம் வாசலில் மணிச்சத்தம் கேட்கிறது. அக்கா சென்று இரு கடிதங்களுடன் திரும்பி வருகிறாள். அம்மாவின் கண்கள் அவளை நோக்கி விரிகின்றன. அக்கா சொல்கிறாள்.

“ஆண்டவன் எங்களை கைவிவடவில்லை அம்மா இதோ ஒரு கடிதம் இதொ ஒரு கடிதம் நான் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டதைத் தெரிவிக்கிறது. மற்றக் கடிதத்தில் என்னை மருத்துவ தாதிப் பயிற்சிக்கு அழைத்துள்ளார்கள்.”

அன்னையின் கண்கள் அண்ணாந்து முகட்டைப் பார்க்கின்றன. அவற்றிடையே வேதனைக் கோடுகள் படர்கின்றன.

“அம்மா நான் மருத்துவ தாதிப் பயிற்சிக்கே போகப் போகிறேன். அதில் பயிற்சி பெறும்போதே சம்பளம் தருவார்களாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நம் குடும்பத்தினரை கவனிக்கலாம். நான் மேற்படிப்பு படிக்கத்தான் பணமில்லை. தம்பியை என்றாலும் எப்படியும் மேற்படிப்பு படிக்க வைப்பேன்.”

மகளின் உறுதிமொழி அன்னையின் கண்களிற் சிறிது நம்பிக்கை ஒளியை தெளிவை ஏற்படுத்துகின்றது.

நாட்கள் கழிகின்றன. அன்னை ஒருவாறு உயிர் பிழைத்து எழுகின்றாள். ஆனாலும் தொழில் செய்ய முடியாத நிலை. அக்காவின் உழைப்பில் குடும்பம் வாழ்கிறது. மதியழகன் அடக்கமாய் வெற்றிகரமாய் படித்து முன்னேறுகிறான். அம்மாவும் அக்காவும் அவனை உயர்ந்த நிலையிற் காண கனவு காண்கின்றனர்.

பல்கலைக்கழகம் புகும் பொழுது அம்மா சொல்கிறாள். “மகனே நாம் ஏழைகள் பணத்தினாற்றான் ஏழைகளானோம். அதற்காக அன்பிலோ, பண்பிலோ, ஒழுக்கத்திலோ, என்றும் ஏழையாகிவிடாதே. உன்னைப் படித்தவன் என்று மட்டுமல்ல, உன்னை உத்தமன் என்றும் மற்றவர்கள் சொல்லக் கேட்டாற்றான் நான் உன்னைப் பெற்றதின் பயனை அனுபவிப்பேன்டா.”

அக்காவும் அவனுக்கு அன்போடும் ஆதரவோடும் கூறுகிறாள்.

“தம்பி, ஏழைக்குடும்பத்திற் பிறந்த காரணத்தால் என்னால் மேற்படிப்புப் படிக்க முடியாமற் போயிற்று. என்னாசை நிறைவேறவில்லை. நீயென்றாலும் ஒழுங்காகப் படித்து எனது ஆசையை நிறைவேற்றப்பா.”

அம்மாவினதும், அக்காவினதும் செவிகளிலிரு புறமும் இடையறாது எதிரொலிக்க மதியழகனும் தன்னிலையினின்று பிரளாது அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்கிறான். ஆனாலும் அவனின் பட்டப்படிப்பின் துணை கொண்டு அவனைப் பயிராக்கி உரமிட்டுப் பேணிக்காத்து வளர்த்தவர்கட்கு கனிதரு மரமாகிப் பலனளிக்க அவனால் முடியவில்லை. விடிவைநோக்கி அலைகிறான். பலன்…..?

பலன் கிட்டுமென்றுதான் இங்கு நண்பனை நாடிவந்தான். ஆனால், வந்த இடத்திற் கண்கள் கண்டவை…….? ஐயோ இங்கு வீணாக வந்து நான் சிறைப்பட்டு விட்டேன். அவன் மனம் வெதும்புகின்றது. இங்கு ஒரு வேளை நண்பனுதவியால் எனக்குத் தொழில் கிடைத்தாலும் கிடைக்கலாம் ஆனால்….. அதற்காக நண்பனின் பழக்கங்களை நான் விரும்பியோ விரும்பாமலோ காலப் போக்கில் அனுசரிக்க வேண்டி நேரிடலாம். என்னால் அது முடியாது. முடியவே முடியாது என் அன்னை என்னை உத்தமனாக காணத்தான விரும்புகிறாள்.

“அம்மா இதோ நீ பெற்ற மகன் உத்தமனாகவே உன்னிடம் திரும்பி வருகின்றேன். அம்மா, ஆனால், வெறுங் கையோடுதான் வருகின்றேன். என்னை மன்னித்து விடம்மா”

அக்காவின் உருவம் அவன் கண்முன்னே தெரிகின்றது.

“அக்கா என்னருமை அக்கா, என் உயிருள்ள வரை உனக்கு உழைத்துப் போடுவேன். வேலை கிடைக்கும் வரை வீட்டை விட்டு ஒரு இடமும் போகாதே என்ற தடுத்தாயே உன் சொல்லைக் கேட்காது வந்தது என் தவறுதான். அந்தோ ! உன் இளமை முழுவதும் நீ எனக்காக உழைத்துப் போட்டதிற் சருகாகிவிட்டதே அக்கா ! உன் இளமை சருகாகியதற்கு இந்தப் பாவி பிறந்ததுதான் காரணமாக்கா? நான் ஆணாகப் பிறந்தும் உழைத்து உன்னை வாழ வைக்க முடியவில்லையே அக்கா. அதோ உன் அன்புக் கரங்கள். என்னை நோக்கி விரிகின்றன. எனக்கு ஆறுதலளிக்கக் கூடியவர்கள் நீயும் அம்மாவும்தானக்கா. இதோ உங்களை நோக்கி நான் ஓடொடி வருகிறேன்.

கட்டிலை விட்டெழுகிறான் மதியழகன். “கீச்கீச்” என்ற ஒலி வலைக்குட் கேட்கிறது. மெதுவாக வலைக்குட் கையை விட்டு குருவியை வெளியே எடுத்து விடுகிறன். குருவி சதந்திரமாகப் பறந்து சென்று சுவரிலுள்ள ஒரு துவாரத்தில் அமர்கிறது. அங்கே இருந்த சிறு கூட்டில் தாய்க்குருவி ஒன்று தன் சேய்கட்கு உணவூட்டிக் கொண்டு இருக்கிறது. தன் சேயைக் கண்டதும் அந்தத் தாய் மகிழ்ச்சியால் அதனை இறுகத் தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றது.

இந்தக் காட்சியைக் கண்ட மதியழகனின் உள்ளம் பூரிக்கின்றது. கண்களில் மின்னொளி வீசுகின்றது. அவனிதயம் மகிழ்ச்சியிற் கூவுகிறது. “அம்மா, என்னை கண்டதும் நீயும் இப்படித்தானே உச்சிமோர்ந்து முத்தமிடுவாய். என் கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. அம்மா உன் அன்பெனும் சாம்ராஜ்ஜியத்தை விட மேலானதாக எனக்கு இவ்வுலகில் வேறு என்னம்மா இருக்க முடியும்? உனது அன்பு ஒன்றிற்காகவே நான் காலமெல்லாம் பண்போடு வாழ்வேனம்மா” தன்னுள்ளக் களிப்பைக் கண்மூடி மெய் மறந்து அனுபவித்துக் கொண்டு நிற்கிறான் மதியழகன்.

“மதி உனக்கு உயர் பதவி கிடைத்திருக்குதடா? ‘நண்பனின் குரலொலி கேட்டுத் தன்னிலையடைகிறான். மதியழகன் நண்பனின் கையில் ஒரு தந்தி இருக்கின்றது. வாங்கிப் படிக்கின்றான்.

“உனக்கு உயர்பதவி கிடைத்திருக்கிறது. விபரம் நேரில். உடனே புறப்பட்டு வா” அக்கா தந்தியடித்திருக்கிறாள், அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அம்மா ! அக்கா ! உங்கள் அன்புக்கும், ஆசிக்கும் இத்தனை சக்தி இருக்கிறதா? என்னையும் கனிதரு மரமாக்கிவிட்டீர்களே அன்னையையும் அக்காவையும் மனதாரத் துதிக்கிறான் மதியழகன்.

“நேற்று ஏதேதோ கதைத்திருப்பேன். அவற்றை மறந்துவிடப்பா” நண்பன் குழைகிறான்.

ஆகா! உயர்பதவி என்றதுமே நேற்றுத் திமிராக பேசி விரட்டிய நண்பன் இன்று குழைகிறானே! என்னே உலகம் இது. பணத்திற்கும், பதவிக்கும், பகட்டிற்கும் அடிமைப்பட்டுக் கயமைசேற்றிற் புதைந்து கிடக்கிறதே.

மதியழகன் தன் நண்பனை நோக்கி அமைதியாக கூறுகிறான்.

“நண்பா ! நேற்று நீ ஏதேதோவெல்லாம் கூறியிருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக ஒரு உண்மையையே உணர்ந்துள்ளேன். அதை நீயும் கேள். என்னுடைய ஒழுக்கத்தினாலும், பண்பினாலும், எனக்கு எந்தச் சாம்ராஜ்ஜியம் கிடைத்தது என்றுதானே கேட்டாய். இதோ சொல்கிறேன் கேள். என் அன்னையின் அன்பென்றும் சாம்ராஜ்ஜியத்தில், அரசன் என்னும் பதவி பெற்று, அவளின் இதயமென்னும் அரியாசனத்தில் நான் என்றென்றும் அழியாமல் அரசோச்சும் பேறு பெற்றிருக்கிறேன். இந்தச் சாம்ராஜ்ஜியத்தை விட வேறு எதையும் சிறப்பானதாக நான் கருதவில்லை. அன்பை விலைக்கு வாங்க முனைபவன் நீ. உண்மை அன்பை உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. உண்மையன்பை ஒரு நாளும் விலைக்கு வாங்க முடியாதப்பா. அது விலை மதிப்பற்றது. விலையுமற்றது. இந்த உண்மையை நீ என்றாவது உணரத்தான் செய்வாய். அப்போது….. உன் மனைவியை அருகே அழைத்துக் கொள்.” நான் வருகிறேன்.

நண்பன் தலை குனிகிறான். மதியழகன் நிமிர்ந்த மார்பினனாய், மலர்ந்த முகத்தினனாய் தெளிவு நினைவுகளோடு அன்னை இல்லத்தை நாடிப்புறப்படுகிறான். “கிச் கீச்” என்ற ஒலி பின்னணியாகக் கேட்கிறது.

சிதம்பரபத்தினி

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இன்னொரு பெண் படைப்பாளி சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆவார். சிதம்பரபத்தினி தன் சிறுகதைகளில் பல்வேறு குணவியல்புகளுடைய பெண்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பெண் விடுதலை, ஆண்களின் அடக்குமுறைகள் என்பன இவரின் சிறுகதைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. நிஜமும் நிழலும் அன்னாரது சிறுகதைத்தொகுதி. குழந்தைக் கவிதைகள் நிறைய எழுதியுள்ளார்.

– 22.10.1970, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *