தெய்வ சாட்சி
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,129

மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா?
அக்கா, அக்கா என்று உடன்பிறந்தவள் போல் பழகினேனே! கடைசி யில் பணத்திற்காக அந்த உறவையே கொச்சை ப்படுத்திவிட்டாளே!
ஊதாரிப் புருஷனை நம்பாமல் அக்கா -தங்கை போல் பழகியதை உண்மை என்று நம்பி சிறுவாடு பணம் எல்லாவற்றையும் அக்கா என்று நம்பியவளிடம் கொடுத்து சேர்த்து வைத்தேனே, ஐந்து வருஷமா வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி மகளின் கல்யாணச் செலவிற்காக கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேனே, ஆனா இன்னைக்கு நாக்கூசாம இப்படி புளுக எப்படி மனசு வந்தது.
சற்று முன் நிகழ்ந்தவற்றை மீண்டும் மனக்கண் முன் கொண்டுவந்தாள் ராணி.
மகளுக்கு வரன் குதிர்ந்த மகிழ்ச்சி யோடு கமலாவின் வீட்டை அடைந்தாள் ராணி. கமலாவிடம் தான் சிறுகச் சிறுக சேர்த்த பணம் கிட்டத்தட்ட. ஒரு லட்சம் ஆகியிருந்தது. கல்யாணத்திற்காகச் சேர்த்த பணம்.
குதுகலத்தோடு செய்தியை கமலாவிடம் சொன்னதும், அவள் உடனே ஆவேசமானாள். என்ன, ஒரு லட்சமா? நீ குடுத்தது பத்தாயிரத்தையே தாண்டல.
அதிர்ச்சி அடைந்த ராணி, நல்லா கணக்கு பாருக்கா, நான் எப்பவெல்லாம் பணத்தை கொண்டு வந்து கொடுத்தனோ, அந்த தேதி யோட நம்ம மீனா குறிச்சி வச்சிருக்கா, நாந்தான் படிக்காத மூதி, ஆனா எம்பொண்ணு வெவரமானவக்கா, நீ கொஞ்சம் கணக்கு பாத்து சொல்லுக்கா, இந்த பணத்தை நம்பித்தான் எம்பிள்ளையோட வாழ்க்கையே இருக்குக்கா, மன்றாடும் ராணியைக் கண்டு கிஞ்சித்தும் இளகாத கமலா,
உன் பணம் பத்தாயிரம் தான் சேர்ந்து இருக்கு, தரேன் எடுத்திட்டு போ, அவ்வளவுதான், இதுக்கு கூட என்ன சாட்சி இருக்கு, இல்லன்னு கூட சொல்லலாம், பழகிட்டியேன்னு பார்க்கிறேன். கறாராய் சொன்னாள்.
தன் மேல் இடி விழுந்தாற் போன்ற வலியை தாங்கியவளாய்,அசையாது நின்ற ராணி, கமலாவை நேருக்குநேராய் பார்த்தவளாய்,
இன்னாக்கா கேட்ட சாட்சியா, மனுசாளுக்குத்தான் சாட்சி வேணும், தெய்வத்துக்கு சாட்சியே தேவையில்ல. அந்த. பத்தாயிரத்தையும் நீயே வச்சுக்க
வீராப்பாய் பேசிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள் ராணி.
நினைக்க, நினைக்க படபடப்பு கூடியது. மனதின் ஆற்றாமை வியர்வையாய் வழிந்தது.அதே வேளையில் கையிலிருந்த போன் அழைக்க, அடுத்த. பக்கத்தில் அவசர அவசரமானகுரலில் கமலா,
டவுனுக்கு போற பைபாஸ்ல இருக்கேன் வந்து உன் பணத்தை வாங்கிக்க என்றதும் ஒன்றும் புரியா அதிர்ச்சியில் அடுத்த நொடியே வந்த வழி திரும்பி பைபாஸை அடைந்தாள்.
அங்கே டூவிலருடன் கமலாவும் அவள் கணவனும், அவர்கள் எதிரே போலீஸ் இருவரும் இருந்தனர்.
ராணியைப் பார்த்த கமலா வேகவேகமாய் பேசினாள்.
ராணி, உன் பணம் ஒரு லட்சத்தை கொடுக்க உன் வீட்டுக்கு வந்துகிட்டிருந்தோம், வழியில தேர்தல் நேரம் என்கிறதால எங்களை இவங்க செக்கப் பண்ணாங்க, பணத்தை பார்த்துட்டு அதுக்கு ஆதாரம் கேட்டு மிரட்டினாங்க அதான் உண்மை யை ச் சொன்னேன்.
சொல்லிவிட்டு காவலர்களைப் பார்க்க அவர்கள், நீங்க போகலாம், மேற்கொண்டு இந்தம்மா கிட்ட விசாரிச்சிக்கிறோம்.
என்றதும் கமலாவும் அவளது கணவனும் விட்டால் போதும் என்ற கதியில் உடனடியாய் அங்கிருந்து கிளம்பினர்.
காவலர், கையிலிருந்த பணத்தை ராணியிடம் நீட்ட மரத்தின் பின்னே அதுவரைமறைந்திருந்த கமலாவின் மகன் ரவி ராணியின் முன் வந்து நின்றான்.
என்ன ஆன்ட்டி , எதுவும் புரியலயா, இங்க நடந்தது எல்லாம் என்னோட நாடகம், இவங்க என் பிரண்ட்ஸ், காலையில நீங்க அம்மா கிட்ட பேசிட்டு போனதைப் பார்த்தேன்,
பணத்தாசை பிடிச்ச அம்மாகிட்டயிருந்து நேர்மையா உங்க பணத்தை மீட்க முடியாது, அதான் இந்த மாதிரி நடிக்கவேண்டியதாயிடிச்சு, இந்தாங்க உங்க பணம் என்றான் ரவி.
இப்படி எல்லாம் கூட நடக்குமா என்கிற ஆனந்த அதிர்ச்சியுடன் தன் பணத்தை பெற்றுக் கொண்ட ராணியின் கண்களுக்கு ரவி தெய்வசாட்சியாய் தெரிந்தான்.