தென்றல் வந்து தீண்டும் போது




தென்காசி 25 கி.மீ. என்ற அறிவிப்பு பலகையை தாண்டி, நண்பர்கள் இருவருடன், நான்கு சக்கர வாகனத்தை தென்காசி நோக்கி செலுத்திக் கொண்டிருந்தேன்.
“மச்சி இவன் என்னமோ தென்காசினா அப்படி காத்து அடிக்கும், இப்படி சாரல் அடிக்கும்னு விதம் விதமா கத விட்டான், ஆனா வெயில் இப்படி மண்டய பொளக்குது!” என்றான் கௌதம்.
“அட பக்கி… அவன் சொன்னதல்லாம் நீ நம்பவா செஞ்ச? இந்த உலகத்துல எவன்டா அவனோட சொந்த ஊர பத்தி உண்மைய சொல்லியிருக்கான்? கொஞ்சம் எக்ஸ்டிரா பிட் போடத்தான் செய்வானுங்க!” என்று நக்கலடித்தான் வினோத்.
“பேசாம நீ சொன்ன மாதிரி இந்த வீக்எண்டுக்கு நாம கேரளா பக்கம் போயிருந்துருக்கலாம் இவன் பேச்ச கேட்டு இங்க வந்தோம் பாரு…” சலித்துக்கொண்டான் கௌதம்.
“டேய் சும்மா இருங்கடா, இப்பதான் நாம புளியங்குடி தாண்டியிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு கிளைமேட் எப்படி சேஞ்ச் ஆகுதுன்னு” என்றேன் நான்.
நாங்கள் மூன்று பேரும் சென்னையில் உள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் அடுத்தடுத்த கேபினில் பணிபுரியும் பொறியாளர்கள். தென்காசி நான் பிறந்து வளர்ந்த ஊர். எனது பெயர் சதீஷ். தந்தையின் வேலை மாறுதல் காரணமாக சென்னைக்குக் குடி பெயர்ந்து, அங்கேயே பொறியியல் கல்லூரியில் படித்து, பணிபுரிய ஆரம்பித்து என சென்னை வாசியாகவே மாறிவிட்டேன். நெருங்கிய உறவினர்கள் பலரும் சென்னையில் இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தென்காசி வருவதற்கான வாய்ப்பு அமையவில்லை.
கடையநல்லூரை தாண்டியதும், ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டேன்.
“டேய் ஏன்டா விண்டோஸ இறக்குற? வெளிய இன்னும் வெயில்தாண்டா…” என்று கௌதம் சொல்லி முடிப்பதற்குள் ஒரு இதமான தென்றல் வாகனத்திற்குள் நுழைந்து அவர்களை வரவேற்பது போல் வருடியது.
“டேய் கௌதம், என்னடா பாதில நிறுத்திட்ட?” என்றபடி நக்கலாய் சிரித்தேன்.
“என்னடா இது, ஒரே சமயத்துல வெயிலும் இருக்குது, காத்தும் ஜில்லுனு இருக்கு?” என்று ஆச்சர்யப்பட்டனர் இருவரும்.
“தம்பிகளா இதுக்கு பேர்தான் தென்றல்… ரொம்ப ஆச்சர்யப் படாதீங்கடா… இது வெறும் டிரெய்லர்தான்…., மெய்ன் பிக்சர் இனிமேதான்” என பெருமிதமாய் கூறினேன்.
கௌதம், வினோத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள், இருவருமே மதுரையை தாண்டி தெற்கே வந்ததில்லை. நான்தான் எனது சொந்த ஊரான தென்காசியின் அருமை, பெருமைகளை எடுத்துரைத்து இருவரையும் வார விடுமுறையில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்கிறேன்.
இடைகால் வந்ததும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ” டேய் வினோத், இதுதாண்டா நான் படிச்ச ஸ்கூல்” என்று சாலையோரம் இருந்த மீனாட்சி சுந்தரனார் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியை காண்பித்தேன்.
பள்ளி முடிந்து நீல நிற சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
“ஓ… கோ எட்-டா? அப்போ கண்டிப்பா இங்க உனக்கு ஒரு லவ் ட்ராக் ஓடி இருந்துருக்கணுமே”
“அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. மூடு…”
“டேய் எங்க கிட்டயே கத விடுறியா…? வெயில் கொளுத்தி எடுக்குற சென்னைலயே நம்ம வினோத்லாம் +2 முடிக்குறதுக்குல்ல மூணு லவ் பண்ணியிருக்கான்… இந்த ஊரு கிளைமேட்டுல இருந்துட்டு லவ் இல்லன்னா எப்படி?”
நண்பர்களின் பேச்சை காதில் வாங்காமல், வாகனத்திலிருந்து கீழிறங்கி பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களையே பார்த்தபடி நின்றேன். சீறுடையின் நிறம் மாறியிருந்தது, 12 வருடங்களுக்கு முன்பு நான் படித்த போது இருந்த வெளிர் சந்தன நிற சீறுடைதான் அழகு எனத் தோன்றியது.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு +1 படிப்பதற்காக இந்த பள்ளியில் சேர்ந்தேன். ஆண்கள் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு வரை படித்ததாலோ என்னவோ இருபாலர் பயிலும் இந்த பள்ளி தொடக்கத்தில் சற்றே அந்நியமாய் இருந்தது. பள்ளியின் முதல்நாள் இப்போதும் என் நினைவில் இருந்தது.
தென்காசியில் இருந்து 20ஏ பேருந்தில் ஏறினால் 30 நிமிடங்களில் இடைகால் வந்துவிடலாம். முதல் நாள் பள்ளியில் நுழையும் போது வகுப்பறை எந்தப் பக்கம் இருக்கும் என்று சிந்தித்துக்கொண்டே மனம் சொன்ன திசையில் நகர்ந்தேன்.
“அண்ணா… பிளஸ் ஒன் மேத்ஸ், பயலாஜி கிளாஸ் ரூம்-கு எந்தப்பக்கம் போகணும்?” ஒரு மெல்லிய குரல் தயக்கம் கலந்து முதுகுக்கு பின்னால் கேட்டது.
“நானும் அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்” என சொல்வதற்காக திரும்பி அவளை பார்த்த நொடியிலேயே அந்த பதில் “என் கூட வா… காட்டுறேன்” என்பதாக மாறியது.
அவள் கண்களில் இருந்த தயக்கமும், புத்தம் புதிதாய் இருந்த சீருடையும், அவளும் நம்மைப் போல் இந்தப் பள்ளிக்கு புதிது என்பதைக் காட்டிக்கொடுத்தன. அவளது சிறிய நெற்றிக்கு சிகப்பு வண்ண ஸ்டிக்கர் பொட்டுடன், சிறிய மஞ்சள் கீற்றும் இணைந்து அவ்வளவு பொறுத்தமாக இருந்தது.
“தேங்கஸ்ணா…” என்று கூறியவாறே என்னுடன் நடக்க ஆரம்பித்தாள்.
“டென்த் எந்த ஸ்கூல்?”
“தென்காசி மஞ்சம்மாள்-ணா”
“சரி… ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்று கொணடிருந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் எங்களது வகுப்பறைக்கான வழியை கேட்டு வந்தேன்.
“அதோ அந்த கிளாஸ் ரூம்தான், வா போகலாம்” என்றேன்
“இருக்கட்டும்ணா… நானே போய்க்கிறேன்”
“சும்மா இரு.. நீ வேற ஸ்கூலுக்கு புதுசு, யாராவது கிண்டல் பண்ணுணா என்ன பண்ணுவ? நானும் துணைக்கு வர்றேன்” என்றபடி அவளுடன் சேர்ந்து நடந்தேன்.
வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவள் திரும்பி “தேங்க்ஸ்ணா” என்றாள். இருக்கட்டும்மா நானும் இதே கிளாஸ்தான் என்றேன். சற்றே அதிர்ச்சியாய் என்னைப் பார்த்தவள் பேசாமல் அங்கு இருந்த மாணவிகளுடன் போய் அமர்ந்தாள்.
காலை 9:15 மணிக்கு எங்கள் மாஸ்டர் சார் (ஆங்கில ஆசிரியரை மாஸ்டர் என்றுதான் அழைப்போம்) வகுப்பறைக்குள் நுழைந்ததும் கேட்ட முதல் கேள்வி,
“இந்த ஸ்கூலுக்கு புதுசா ஜாய்ன் பண்ணிருக்குற ஸ்டூடண்ட்ஸ்லாம் எந்திச்சு நில்லுங்க?” என்பதுதான்.
“பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் அவளும் எழுந்தாள், நான் மாணவர்கள் வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் தயங்கி, தயங்கி எழுந்தேன்”
“தொரைக்கு எந்திச்சு நிக்க கஷ்டமா இருக்கு போல, கொஞ்சம் தூக்கி விடுங்கடா” என்று அசிங்கப்படுத்தினார் மாஸ்டர் சார்.
நான் சட்டென எழுந்து நிற்கவும், அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்த்தாள். இப்போது அவள் முகத்தில் தெரிவது அதிர்ச்சியா, கோபமா என எண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“தம்பி எந்த ஊருல இருந்து வந்துருக்கீங்க?”
“தென்காசி ஐ.சி.ஐ ஸ்கூல் சார்”
“நெனச்சேன்… ஏன்பா அங்க எல்லாம் பிளஸ் ஒன் இல்லாமலா இங்க வந்துருக்க?”
“இல்ல சார், அந்த ஸ்கூல விட, இந்த ஸ்கூல் நல்லாருக்கும்னு சொன்னாங்க…அதான்…” தயங்கி தயங்கி பதில் கூறினேன்.
“அப்படி சொன்னவங்ககிட்ட போய், நான் சொல்றத அப்படியே சொல்றியா?”
“சரி சார்”
“நான் அந்த ஸ்கூல விட்டு போயிட்டேன், இனிமே அந்த ஸ்கூல் நல்லாதான் இருக்கும்-னு சொல்றியா?”
அனைவரும் சிரித்தனர். அவமானமாய் உணர்ந்ததால் தலை குனிந்தவாறே நின்றேன்.
“சரி, சரி, சிரிச்சது போதும்” அதட்டினார் மாஸ்டர் சார்.
அன்று மாலை பள்ளி முடிந்து தென்காசி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றேன், அவளும்தான்.
திரும்பி அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறு பக்கம் திரும்பினாள்.
காலையை விட இப்போது இன்னும் அதிக அவமானமாய் இருந்தது. எதுவும் பேசாமல் பேருந்தில் ஏறினேன்.
“டேய்.. சதீஷ்… சாரல் அடிக்குது உள்ள வாடா” என்ற கௌதமின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
“டேய்… ரெண்டு பேரும் இன்னும் கார விட்டு இறங்கலயா? மொதல்ல இறங்கி வாங்கடா… இந்த சாரலுக்கு சூடா மிளகா பஜ்ஜி சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா…!” என்றபடி சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடையை நோக்கி சென்றேன்.
“அண்ணே.. ஆளுக்கு ரெண்டு மொளகா பஜ்ஜி”
“தம்பிங்க ஊருக்கு புதுசா?” என்றபடி பிளாஸ்டிக் தட்டில் வாழை இலை வைத்து பஜ்ஜியும், தேங்காய் சட்னியும் வைத்து பறிமாறினார் கடைக்காரர்.
“நாங்க ரெண்டு பேரும்தான் புதுசு, இவனுக்கு தென்காசிதான்” என்றான் வினோத்.
எனக்கு அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது, அவரது மிளகாய் பஜ்ஜியின் சுவையை போலவே பத்து ஆண்டுகளாக அவரது தள்ளுவண்டியும் மாறாதிருந்தது.
பள்ளியில் சேர்ந்த ஒரு வாரத்திற்கு பிறகு மாலை பள்ளி முடிந்து 20ஏ பேருந்தில் தென்காசி சென்று கொண்டிருந்தேன். முன்னிருக்கையில் அவள். எங்களுக்கு இன்னமும் மாணவர்களுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கப்படவில்லை. பேருந்து குத்துக்கல்வலசையை தாண்டி திரும்பவும், அவள் பதட்டத்துடன் என்னிடம் திரும்பினாள்.
“பஸ்ஸுக்கு வச்சுருந்த காச காணோம்… எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துடுறியா…” என்று கேட்கவும், நடத்துனர் “டிக்கெட், டிக்கெட்…” என்றபடி அவளிடம் வரவும் சரியாய் இருந்தது.
“பின்னாடி எடுப்பாங்க” என்றபடி என்னைக் காட்டினாள் என் பதிலை எதிர்பாராமலேயே.
அன்று முதல் நாங்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாய் மாறினோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை என் மனதை அவளிடம் வெளிப்படுத்த முயன்று தோற்றிருக்கிறேன், அவளின் நட்பை இழக்க நேரிடுமோ என்ற பயத்தால். பின்னர், கல்லூரி, வேலை என தொடர்ந்து வந்த சராசரி இளைஞனுக்கான அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான முயற்சிகளில் அவளை முற்றிலும் மறந்திருந்தேன். மீண்டும் அதே பள்ளியைப் பார்த்தவுடன் எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போலிருந்தது.
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் தங்களது புத்தகப்பைகளை தோள்களுக்குள் போட்டு தயாரானார்கள். திரும்பிப் பார்த்தேன். நாங்கள் இருவரும் தினமும் சென்ற அதே 20ஏ பேருந்து, வேறு நிறத்தில் வந்து கொண்டிருந்தது.
“டேய் வினோத்… இந்தா கார் கீய புடி” என்றேன்.
“நீ எங்கடா போற?”
“நான் தென்காசிக்கு அந்த பஸ்ல போறேன், நீங்க ரெண்டு பேரும் கூகுள் மேப்ப புடிச்சு தென்காசி பஸ் ஸ்டாண்டுக்கு போய் வெய்ட் பண்ணுங்க”
“டேய்… நில்லுடா…” என்ற நண்பர்களின் குரலுக்கு பதிலளிக்காமல் வந்து நின்ற பேருந்தில் ஏறினேன்.
பேருந்தில் ஏறியதும் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து நயினாரகரத்தை தாண்டியதும் எனக்கு பின்னால் நடத்துனரின் சத்தம்.
“ஏம்மா… டிக்கெட்..”
“முன்னாடி பிளாக் ஷர்ட் போட்டுருக்குறவரு எடுப்பாரு”
எனது சட்டை கறுப்பு நிறம் என தெரிந்திருந்தும் சட்டென குனிந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். அதிர்ச்சியுடன் பின்னால் திரும்பிப் பார்த்தேன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சீருடையில் பார்த்த அவள் இப்போது சேலையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.
கொடிக்குறிச்சி தாண்டியதும் பேருந்தில் இருந்த மாணவர்கள் மொத்தமாய் இறங்கியதில், பத்து பேர் மட்டுமே பேருந்தில் இருந்தோம்.
அவளாகவே எனது பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
சில அடிப்படை விசாரிப்புகளுக்கு பின்னர்,
“உன்ன நான் முதல் முறையா எப்போ பார்த்தேன்னு தெரியுமா?” என்றாள்.
“தெரியுமே… நம்ம ஸ்கூல்ல வச்சு பிளஸ் ஒன் கிளாஸ் ரூம் தெரியாம நீ முழிச்சுக்கிட்டு இருந்தப்ப” தாமதிக்காமல் சொன்னேன்.
“அது நீ என்ன பாத்தது, நான் உன்ன ஃபர்ஸ்ட் டைம் பாத்தது இதே 20ஏ பேருந்தில்தான்”
நான் அதிர்ச்சியாய் அவளை ஏறிட்டேன்.
“ஸ்கூலோட ஃபர்ஸ்ட் டே அன்னைக்கு நானும் இதே 20ஏ பஸ்லதான் உன் சீட்டுக்கு பின்னாடி உக்கார்ந்து வந்தேன், நீ கண்டக்டர்கிட்ட ‘அண்ணே… இடைகால் வரும்போது கொஞ்சம் சொல்லுங்க’-ன்னு சொன்னது இப்பவும் எனக்கு நியாபகம் இருக்கு.
“அப்போ நானும் ஸ்கூலுக்கு புதுசுதான்னு உனக்கு….”
“நல்லாவே தெரியும்”
“அப்புறம் ஏன் என்ட வந்து கிளாஸ்ரூம் எங்கன்னு கேட்ட?”
“நீ ஏன் ‘என் கூட வா காட்டுறேன்’-னு சொன்ன?”
பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவள் விழிகளில் ததும்பிய நீரை முகத்தை திருப்பி துடைத்தாள்.
“இப்பக்கூட நீ நம்ம ஸ்கூல வெறிச்சுப் பாத்தத பாத்துக்கிட்டுதான் இருந்தேன்”
“நீ அங்கதான் இருந்தியா?”
“ம்… கடையநல்லூர் பஸ் ஏறுறதுக்காக ஆப்போசிட் சைட் பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
“அப்போ இந்த பஸ்ல எப்படி?”
“நீ எப்படியும் இந்த பஸ்ல ஏறுவன்னு தோணுச்சு, உன் பின்னாலயே நானும் ஏறிட்டேன்”
“சரி கடையநல்லூர்க்கு எதுக்கு போற?”
“அங்கதான் என்ன கட்டிக்குடுத்துருக்காங்க” என்றவள் தன் கண்களில் வழியும் நீரை பொருட்படுத்தாமல் குத்துக்கல்வலசை விலக்கில் இறங்கினாள்.
தென்காசி புதிய பேருந்து நிலையம்.
“மச்சி… நீ சொன்ன மாதிரி உண்மையிலேயே தென்காசி செமயா இருக்குதுடா” என்ற வினோத்திடமிருந்து கார் சாவியை பெற்றுக்கொண்டு காரை திருப்பினேன்.
“டேய்… எங்கடா போற?
வருடிச்சென்ற தென்றலொன்று அனலாய் தகித்ததால் கண்ணாடியை ஏற்றிவிட்டபடியே “சென்னைக்கு” என்றேன்.
– பிப்ரவரி 2022