தூது




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தூது செல்வார்க்குரிய தன்மைகள்
தகடூரில் இருந்த அதியமானை ஔவையார் கண்டார்;. அவன் அவரைக் காஞ்சியில் உள்ள தொண்டைமானின் செயலைத் தூதாகச் சென்று அறிந்துவர வேண்டினான். அவரும் காஞ்சிபுரம் போய் அரசனைக் கண்டு அன்போடு பழகினார். அதிகமானிடம் இருந்து வந்ததாக அவனிடம் அறி வித்தார். காஞ்சி அரசன் தன்னுடைய படைக் கலங்களைப் பார்த்து வருவதற்கு ஒளவையாரை அழைத்தான். அவர் உடன் சென்று பார்க்கும் போது இவ்வரசனிடம் தாம் அதிகமானின் காரண மாகச் செய்யும் முறை யாது? என்பதை அறிந்து அதை இவ்வரசன் விரும்பிக் கேட்கக்கூடிய காலத் தையும், இடத்தையும் ஆராய்ந்து படைக்கலங்களைப் புகழும் விதமாகக் காஞ்சி அரசரே! ”உன் படைக் கலங்களோ? எண்ணெய் பூசி, மாலை அணிந்து, வேலின் வலிய அடிக்காம்புகள் தேயாமல் அழ காகப் பெரிய மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகமானின் அம்புகளோ வளைந்து ஒடிந்து கொல்லனின் உலைக்களச் சிறு இடத்தில் கிடக்கின்றன,” என்று அதிகமானின் வீரம் விளங்க அம்புகளைப் பழிப்பது போலப் புகழ்ந்தார். இதைக்கேட்ட அரசன் தன் செருக்கடங்கி அதிக மானின் வீரத்தை அறிந்து, அவன் பகையை மறந்து நட்புக்கொள்ளத் தொடங்கினான். இவ்விதம் “சென்று பேசவல்லவர்கள் தூது செல்லவேண்டும்” என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (52)
கடன் = (வேற்றாசரிடத்துத் தான் செய்யும்) முறைமையை
அறிந்து = தெரிந்து
காலம் கருதி = (அவர்) சமயம் பார்த்து
இடன் = (சென்ற காரியம் சொல்லுதற்கு ஏற்ற) இடத்தை
அறிந்து = தெரிந்து
எண்ணி = (சொல்லும் வழியை முன்னே) விசாரித்து
உரைப்பான் = அவ்விதம் சொல்பவனே
தலை = முதன்மையான தூதனாவான்.
கருத்து: முறை தெரிந்து அதனோடு காலத்தையும் இடத்தையும் பார்த்துச் சொல்பவனே அரசனாவான்.
கேள்வி : சிறந்த தூதன் என்று எண்ணப்படுபவ னிடம் உள்ள தன்மைகளும் செயலும் எவை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.