துவேஷம்




“எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம். அவன் எனது சகோதரன் என்று அறிந்தாலும் அவனை கொல்லும் எண்ணத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை. ஆனால் தாயே. உனக்கு கொடுத்த வாக்குறுதியின்படி உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். அர்ச்சுனன் அல்லது நான்”
என்று கர்ணன் குந்தியிடம் சொல்லும் வசனத்தை படித்தவுடன், புத்தகத்தை மூடி கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தார் குமரப்பன். அவருக்கு மனதில் மிக பெரிய ஆச்சர்யம். பாண்டவர்கள் சகோதரன் என்பதை அறியாமல் கர்ணனை ஆக்ரோஷமாக எதிர்த்தார்கள். ஆனால் பாண்டவர்கள் தன்னுடைய சகோதர்கள் என தெரிந்திருந்தும், அவனால் எப்படி சண்டை போட முடிந்தது.
எந்த உணர்வு அவனது பாசத்தை தடுத்த்து. துரியோதனனின் நட்பா? அல்லது அவன் ஆண்டாண்டு காலம் அனுபவித்த அவமான உணர்வின் வெளிபாடா?. இருந்தாலும் இது ஒர் ஆச்சரியமான உணர்வுதான் என்று வியந்த வண்ணம் வாசலில் போஸ்ட்மேன் வந்து நிற்பதை பார்த்து எழுந்தார்.
“என்னப்பா, லெட்டரா? ரொம்ப நாளாச்சு நீ கொண்டு வந்து?
‘ இப்ப எல்லாம் யார் சார் லெட்டர் போடுறா? எல்லாமே மெயில்தான். யாரவது அந்த காலத்து மனுஷங்கதான் லெட்டர் போடுறாங்க” என்று புலம்பி கொண்டே போனான்.
கவரை பிரித்து உள்ளிருந்த பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தார். கடிதம் சித்தப்பா என ஆரம்பித்து இருந்தது. சரிதான் கடங்காரன் இப்ப பையனை விட்டு லெட்டர் போட ஆரம்பிச்சுட்டானோ? இவன் உறவு முறிந்து பல நாள் ஆச்சுன்னு அவன் லெட்டர் எதுக்குமே பதில் போட்டதில்லை. ஆனால் விடாம லெட்டர் போடுவான். இப்ப என்ன தீடிரென அவன் பையன் எழுதுறான் என ஆச்சரியத்துடன் படிக்க ஆரம்பித்தார்.
“சித்தப்பா வணக்கம். வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். ஆனால் அப்பாவின் கட்டாயத்தில் தெரியபடுத்துகிறேன். இங்கு அப்பாவின் உடல் நிலை சரியில்லை. உங்களை பார்க்க வேண்டுமென நினக்கிறார். முடிந்தால் வரவும்” என பெயரை கூட எழுதாமல் முடித்திருந்தான்.
சனி பய, அவன் அப்பா மாதிரி தானே இவனும் இருப்பான் என்று முனுமுனுத்து கொண்டே, நல்லாதானே இருப்பான், என்னாச்சு உடம்புக்குன்னு யோசிக்க ஆரம்பிச்சார்.
“என்னங்க போஸ்ட்மேன் வந்தாரே, என்ன லெட்டர், யார்கிட்டயிருந்து? என்று கேட்டவாறு குமரப்பன் மனைவி உள்ளிருந்து வெளிய வந்தாள்.
“வேற யாரு. அந்த கடங்காரங்கிட்டயிருந்துதான். இப்ப பையன் லெட்டர் போட்டிருக்கான். அவங்கப்பனுக்கு உடம்பு சரியில்லையாம். என்ன பார்க்கனுமாம்.”
“ஏங்க, அவன் தான் நெறைய லெட்டர் போட்டிருக்கானே, நீங்க இந்த தடவை போயிட்டு வந்தா என்ன. எப்பவோ நடந்தது. நம்ம அதனால கெட்டா போயிட்டோம். ஏதோ கடவுள் புண்ணியத்துல நமக்கு சீக்கிரமாவே தெரிஞ்சு அங்கேயிருந்து வந்துட்டோம். அவனுக்கு தப்புன்னு தெரிஞ்சுதானே உங்களை கூப்பிட்டுட்டு இருக்கான். போய் பார்த்துட்டு வாங்க”
‘ஏண்டி வெட்கங் கேட்டவளே, நடந்தது என்ன அப்படி மறக்க கூடிய விஷயமா. இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு தூக்கம் போயிடுது. நீ என்னடான்னா சர்வ சாதாரணமா சொல்ற” என்று சொல்லும் போதே அவருக்கு அதிகமாகும் பட படப்பை பார்த்து பயந்த அவரது மனைவி,
“என்னங்க, நீங்க ஒன்னும் அங்கே போ வேணாம். நான் தப்பா சொல்லிட்டேன், மன்னிச்சுக்கோங்க. இந்த தண்ணியை குடிங்க” என ஆசுவாசபடுத்தினாள்.
இப்ப நினச்சாலும் அந்த தினம் பட்ட அவமானத்தை அவரால் மறக்க முடியவில்லை. வீட்டுக்கு மூத்த பிள்ளை. விவசாய குடும்பம். அப்பாவுக்கு அடங்கிய மனைவி. பெத்த பிள்ளை ஏழு. பெண் 4, பையன் 3. படிப்பு பேருக்குதான். மரம் வெட்டி, மூட்டை தூக்கி, நிலம் உழுது, எடுபிடி வேலை செஞ்சு எவன் கூப்டாலும் வேலை செஞ்சு கிடைச்ச பணத்தை அப்பனுக்கு கொடுத்து வாழ்க்கை போனது. அவருக்கு நினவு தெரிஞ்சு வீட்டில் அவர் சாபிட்டதில்லை. எல்லா சாப்பாடும் அவர் வேலை செய்யும் இடத்தில் கிடைத்ததுதான்.
இந்த காலகட்ட்த்தில்தான், அவர் எடுபிடி வேலை பார்த்த இடத்தில் ஒருத்தர் அவனை காசு கொடுத்து இராக் அனுப்பினார். “நீ போய் பார்க்குற ஆளு. எந்த வேலை சொன்னாலும் செய். நல்லா வருவ” என புத்திமதி சொல்லி அனுப்பினார். போய் சேர்ந்த இடத்தில், ஒரு எண்ணெய் கடையில் வேலை. இந்த வேலையின்னு இல்லை. சீக்கிரமே அவருக்கு வேலை புலப்பட்டது. அவர் இல்லாமல் கடை இல்லை என்ற நிலைமை. நல்ல சம்பளம்.
கிடைத்த பணத்தை எல்லாம் வீட்டுக்கு அனுப்பினார். தம்பிகள் படித்து விவரமாயினர். அவர் இல்லாமலே அவர் தம்பி தங்கைகளுக்கு கல்யாணம் நடந்தது. அப்பா தவறினார். எதுக்கும் அவர் வரவில்லை. எல்லாம் தபால்தான். அவன் தம்பிகள் மூவரிடமும் பணத்தை அனுப்பி நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோசனை சொன்னார். ஆனால் மனுஷனுக்கு புரியாத விஷயம், தன் பெயருக்கு எதையாவது சேர்க்கனும்ன்னு. என் தம்பிகள் எனக்குன்னு செஞ்சு வைச்சிருக்க மாட்டங்களா? என குருட்டு தனமான நம்பிக்கை.
எதுவுமே சரியா போயிட்டு இருக்குன்னு நினைக்கும் போதுதான், கடவுள் ஏதாவது ஆப்பு வைப்பார். அமரிக்காகாரன் இராக்குக்கு வைச்ச ஆப்பு, குமரப்பனுக்கு வைச்ச ஆப்பா இருந்த்து. போருக்கு பயந்து எண்ணெய் கடைக்காரர் கடையை வித்துட்டு, குமரப்பனுக்கு கணிசமான தொகையை கொடுத்துட்டு ஊருக்கு அனுப்பி வைத்தார்.
கெட்ட காலத்திலும், நல்ல காலம். கடைசியா அனுப்பின பணத்தை தம்பிகளுக்கு சொல்லாம, திடுப்பென ஊருக்கு போய் நின்னார்.
நம்ம வீடா இதுன்னு, அவருக்கு ஆச்சர்யம். ரெண்டு வீடு, முன்னாடி கடை. விவசாய நிலம். நான் அனுப்பின பணத்தை நல்லாதான் வளர்த்திருக்காங்க.
“யார் வேணும்?” உள்ளிருந்து வந்த பெண்ணை பார்த்து, எந்த தம்பியின் மனைவி என ஆச்சர்யத்துடன் பார்த்தார். பின்னாடி வந்த அவர் தம்பி, அவரையே உற்று பார்த்தவன், சட்டென சுதாரித்து, அண்ணே நீங்களா? என்னான்னே லெட்டர்ல கூட சொல்லலையே. அம்மா யாரு வந்திருக்காங்கன்னு பாரு என கத்தினான்.
வீடே பரபரப்பானது. அவனது அம்மா ஓடி வந்து கட்டி கொண்டாள். குமரப்பனுக்கு பேச்சே வரவில்லை. அழுகைதான் வந்தது. அப்பா போட்டாவை பார்த்து அழுதான். ரெண்டு நாள் போச்சு. ஊரை சுத்தி பார்த்துட்டு வீட்டிற்க்கு வந்தான்.
‘அண்ணே என்னாச்சு, எப்போ திரும்பி ஊருக்கு போற என கேட்டான்.
“இல்லடா, அங்க சண்டை ஆரம்பிச்சதனால, வேலை போயிடுச்சு. திரும்பி போக முடியாது. வந்துட்டேன். பேசாம இங்கேயே ஒரு கடையை போட வேண்டியதுதான். சொத்து இருக்குல. நீங்களாம் இருக்கீங்க”
இஞ்சி தின்ன குரங்கு மாதிரியாயிடுச்சு அவன் தம்பிகளுக்கு. நாலு நாள்ல எல்லாம் வெளுத்துடுச்சு. வீடு நிலம் எதுவும் அவன் பேர்ல இல்லை. ஏன்னா அவன் இங்க இல்லையே. ஆனா ரொம்ப வீசேஷம் என்னான்னா, தாங்க பேச பயந்துகிட்டு அவனவன் பொண்டாட்டிய விட்டு பேசுனாங்க. அதுதான் ரொம்ப சூப்பர்.
“சொத்த மாத்துறதா? யாருக்கு அனுப்பினீங்க. தம்பிகளுக்கு தானே. எங்க போயிர போறோம். வேளா வேளைக்கு சாப்பாடு போடுறோம். இதை விட்டா நாங்க எங்க போறது. பிள்ளை குட்டின்னு ஆகி போச்சு. உங்க பணம் மட்டும் தான் இருக்கா? நாங்களும் பெருக்கலையா? அதுக்கு இது சரியா போச்சுன்னு சொல்லிடுங்க. இருந்தா இருக்கட்டும், இல்லைன்னா போகட்டும்” விஷம் தோய்ந்த வார்த்தைகள் குமரப்பன் காதை துளைத்தது.
ஏதோ சொல்லனும்ன்னு நினைச்சாலும், அவருக்கு ஆத்திரத்தில் வார்த்தை வரவில்லை. கேடு கெட்ட பயலுங்க இப்படி ஏமாத்திட்டாங்களே. அம்மா அழுகறத தவிர வேற எதுவும் சொல்லவில்லை.
நல்ல வேளை கடைசி தடவை அனுப்பின பணத்தை பத்தி இவங்க கிட்ட சொல்லலை.
“டேய் நான் கஷ்டபட்டு உழைச்சு அனுப்புன பணம்டா. நானா பிரியபட்டு கொடுக்கனும்டா. இப்படி பறிச்சுகிட்டா எப்படிடா உருபடுவீங்க. உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன்னு கோபித்துகிட்டு வந்தவர்தான். எத்தனை லெட்டர் வந்தாலும் படிக்க மாட்டார். அப்படியே படிச்சாலும், தூக்கி போட்டுவார்.
அவரை முதல் முதலாக வெளி நாட்டுக்கு அனுப்பினவரை போய் பார்த்து, அவர் அமைத்து கொடுத்துதான், மனைவி, வியாபாரம் மற்றும் இந்த வாழ்க்கை. இப்ப போய் அந்த பயலுகள பார்த்தா என்ன, பார்க்காட்டி என்ன. கடங்காரங்க. எப்படிபட்ட ஏமாற்றம்? எப்படிபட்ட அவமானம்? எப்படிபட்ட மோசடி? இவ்வளவுக்கு பின்னாடியும், அவங்க என் கூட பிறந்த பிறப்புன்னு, எனக்கு தோணுமா.
ட்க்கென அவருக்கு தான் படிச்ச கர்ண்னை பத்தி நினவு வந்த்து. நிஜமா நடந்ததோ இல்லையோ, என்ன ஒரு சரியான கற்பனை. அவமானபட்ட எவனுக்கும் பாசமாவது பந்தமாவது. அவமானம் மற்றும் ஏமாற்றத்தால் வர துவேஷ உணர்வுக்கு வடிகால் இல்லை. கர்ணனை போல், என்னை போல்.