துளிர்விடும் சொந்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 6,326 
 
 

அந்திநேரத்துச் செவ்வானம் நிர்மலமாக இருந்தது. உறைவிடந்தேடி மரங்களை வட்டமிடும் பறவைகளின் கூட்டுக்கீசல்களும், எப்போதாவது ஒரு தரம் சாலையில் விரையும் பாரவுந்துகளின் இரைச்சலும் இக்கிராமத்தின் அமைதியைக் குலைக்கின்றன. இதுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த எங்கள் குடும்ப நண்பரான நல்லையாப்பத்தர் சால்வையை உதறித்தோளில் போட்டுக்கொண்டு எழுந்து போகையில் “உனது வாழ்க்கை, உனது இஷ்டம், ஏதோ நல்லபடி யோசித்து நல்ல முடிவுக்குவா மகன்” என்பதில் நல்ல நல்லவென்பதை அழுத்திப்பலுக்கிவிட்டு மென்னிருளில் கலந்துபோனார். மேற்குத்திசையிலிருந்து சோகம் சுமந்த மாங்குயிலின் கூவலொன்று விட்டுவிட்டு மிதந்து வந்துகொண்டிருக்கிறது. குயிலின் கூவலோடு பத்தர் சொல்லிவிட்டுப்போன ‘விஷயம்’ என் மனதைக்கலைத்துப்போடவும் அது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பதான முன்நிகழ்வுகளுக்கு நடைபோடுகிறது. என்னால் எதுவித முடிவுக்கும் வரமுடியவில்லை.

பல்கலைக்கழகம் புகுமுக வகுப்புவரைதான் படித்திருந்தேன், பல்கலையினுள் புகமுடியவில்லை. பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் விற்பனையாளர் போன்ற சிற்றூழியங்களைப் பெற்றுக்கொள்ளக்கூட முடியாமலிருந்தது. தந்தையும் அகாலமாகச்சென்று மறைந்துவிட்டார், வாழ்ந்த காலத்தும் பொருண்மிய மேலாண்மையறியாத வெள்ளந்தியாக இருந்ததேதவிர குடி, அபினியன்ன லாகிரிப்பழக்கங்கள் எதுவுமில்லை, என்ன உழைத்த செல்வங்கள் எதையும் சேமித்துவைக்கத்தெரியவில்லை. தன் நட்புவட்டத்தில் நம்பிக்கியானவர்கள் என்றெண்ணிச் சிலரோடு சில சீட்டுக்களையும் கட்டியிருந்தார். அப்பா மறைந்துவிடவும் சீட்டுப்பிடித்தவர்கள், அதைவிடவேகத்தில் காணாமலாயினர்.

சுற்றுவட்டாரத்திலுள்ள தென்னந்தோப்புகளில் மரங்களுக்கு இயற்கைப்பசளை பதித்தல், தொட்டிகளில் ஊறப்போட்ட தென்னை/தேங்காய்மட்டைகளை அடித்துத்தும்பாக்குதலன்ன என் உடலுழைப்பிலான ஊதியத்தில் எனதும், அம்மா, தங்கை தேன்மொழியின் வயிறுகள் கழுவப்படும். அப்போது என் மடியில் கனமில்லை, என்னுடைய உடமையென்று துருவேறிய ஒரு மிதியுந்தும் இரண்டு நாலுமுழம் கதர் வேட்டி, ஷேர்ட்டுகளும் மட்டுமே இருந்தன. டீ-ஷேர்ட், ஜீன்ஸ் எல்லாம் யாரும் வசதியான வீட்டுப்பையன்கள் அணிவதைப் பார்ப்பதோடு சரி.

எங்களுக்கு நெருங்கிய உறவென்று இருப்பவர் எம் தாய்மாமன். அவரது முழுப்பெயர் மட்டும் தீனதயாளன் முத்துக்குமாரு. ஊரவர் அவரை ’முத்துக்கும்மாறு’ என்பர். அத்தை கோதுமை நிறத்தில் அழகாக இருப்பார் மாமா முதல்த்தர எழுதுவினையராகத்தான் அரசபணியிலிருந்தவர். அத்தை

நயினாதீவெனும் சிறு தீவகத்திலிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் கோரும் அளவுக்கு, ஏராளம் சீதனம் கொண்டுவந்து மாமாகுடும்பத்தில் சங்கமமாகியவரென்பதைத் தவிர அத்தையைப்பற்றி மேலதிகமாக எதுவும் எங்களுக்குத் தெரியாது. இந்த முத்துக்குமாறான மாமாவின் தங்கையை எங்கள் அப்பா காந்தர்வமணம்புரியப்போன காலத்திலிருந்தே இரண்டு குடும்பங்களுக்குமான ஒட்டுறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. எங்கள் மாமாவைப்போல அல்லாமல் எங்கள் தாத்தாவை ஊருக்கே நியாயஞ்சொல்லக்கூடிய ஒரு நியாயவான் என்பர்கள். இருந்தும் இவ்விரிசல் எப்படி ஆழமாயிற்றென்பது இற்றைவரை எமக்குப்புரிவதுமில்லை. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதே தாத்தாவும் பாட்டியும் காலகதி அடைந்துவிட்டதால் அவர்களின் மடியில் தவழ்ந்து ஒட்டி விளையாடும் பாக்கியமும் நமக்குக்கிருக்கவில்லை. விரிசலும் வெளியும் மட்டும் வாழ்ந்திருந்தன.

மாமா பொதுவேலைகள் திணைக்களத்தில் முப்பது ஆண்டுகள் எழுதுவினையராகக் கதிரையைத் தேய்த்து ஓய்ந்த வயதில் இப்போதுதான் தலைமை எழுதுவினையராகியுள்ளார். அவரது பணி ஓய்வுக்கு இன்னும் நாலைந்து ஆண்டுகளே உள்ளன. அவர்களின் மூத்தமகன் மாதவன் கொழும்பில் ‘ஆர்பிகோ’ எனும் இறப்பர், தும்பு மெத்தைகள் ஏற்றுமதிக்குழுமத்தின் ஆலோசனை அலுவலராகப் பணியாற்றுகிறான். அக்குழுமமே வழங்கியுள்ள வளமனை, சீருந்தென வசதியான வாழ்வு அவனது.

அடுத்தவள் கோசலையை தீவுமுழுவதுக்கும், நீரிறைக்கும் இயந்திரங்கள், மிதியுந்துகள், உழவு இயந்திர உதிரிப்பாகங்கள் விநியோகிக்கும் ஒரு குழுமத்தின் சொந்தக்காரனின் குடும்பத்தில் திருமணஞ்செய்து கொடுத்திருந்தனர்.

அடுத்தவள்தான் அருவி தாயின் கோதுமை நிறத்தைக் கொண்டிருக்கும் அழகி, எங்காவது எம் வழிதெருக்களில் குறுக்கிட்டாலோ, எங்கள் செங்காரிப்பசு அறுத்துக்கொண்டு அவர்களது தோட்டத்துக்குள் புகுந்துகொண்டு அதை நான் பிடித்துவரப்போகும் வேளைகளிலோ ஒளிந்துகொள்வாள், வெட்கமாம். எனக்கும் அவள்மீது ஒரு ஈர்ப்பிருந்தும், மாமாவை வழிக்குக்கொண்டுவருவது வல்லையாக இருக்குமென்பதால் ‘சாய்க்…அப்படியொன்றுமில்லை’யென்று என்னைத் தேற்றிக்கொண்டிருந்து விட்டேன்.

அடுத்தது அயன், கவின் என்று அங்குல வித்தியாசத்தில் இரண்டு பையன்கள் ஐந்தும், ஆறும் வாசிக்கிறார்கள்.

நல்லையாப்பத்தர் எங்கள் வீட்டுக்கு வரும் ஒவ்வொருதடவையும் தேநீரோ, கோப்பியோ குடித்தானதும் ஆலாபிப்பதைப்போல் “எதுக்கும் நீங்கள் மாதவனைக் கைநழுவவிட்டிடப்படாது, எப்பிடியும் ஆளை மடக்கித் தேன்மொழி கழுத்தில மாட்டிவிடவேணும்” என்பார். அப்பாவின் இறுதிச்சடங்குகளில் மாமா செலவு செய்த ஆயிரத்தைநூறு ரூபா பணத்தைக்கூட நான் முப்பத்தோராம் நாட்காரியங்கள் கழித்துக் கொண்டு போய்க் கொடுத்தபோது வாங்கி உள்மடியில் சொருகிக்கொண்ட மாமாவின் உள்மனம் பத்தருக்கு இன்னும் சரியாகப்பிடிபடாததில ஒருநாள் போய் மாமாவிடம் லேசாகக் கதைவிட்டுப்பார்த்திருக்கிறார்.

“இதென்ன விசர்க்கதை காணும் நீர் பறையிறது…அவன் வெளிநாட்டுக்காரங்களோட பிஸினெஸ்செய்யிற, அவங்கள் வந்துபோற பெரீய கொம்பனியில டிறெக்டேஸ்ர்ஸ் றேஞ்ஜில வேலை பார்க்கிறான். இவள் பத்தாவதே அரும்பொட்டில பாஸ் பண்ணியிருக்கிற கிராமத்துப்பெட்டை இங்கிலிஸும் வராது, இவள் கொழும்புக்குப் போய் அவன்ட ஸ்டேட்டசுக்குச் சமாளிப்பளே.”

“ஒரு தாய்மாமனே இப்படி ஸ்டேட்டஸ் பாத்து சுற்றத்துக்குள்ள ஒரு தகப்பன் இல்லாத பிள்ளையைக் கைகழுவிவிடுறது அறமில்லைத் தம்பி.”

“சீதனங்கூட எங்களுக்கு இரண்டாம்பட்சந்தான், ஆனால் அவனுக்கு அந்த இடத்தில சமாளிச்சு வாழக்கூடிய ஒரு படிச்ச பிள்ளையைத்தான் நாங்கள் கட்டி வைக்கோணும். எப்படி விளங்கப்படுத்தினாலும் நிலமையைப் புரிஞ்சுகொள்ளிறியளில்லையே மாமா”.


என்னதான் எனக்கு நானே சமாதானங்கள் கூறிக்கொண்டிருந்தாலும் அதலபாதாளத்திலிருக்கும் என் பொருண்மியசோகம் என்னை அரித்துக்கொண்டிருந்தது. நிரந்தர வருமானத்தோட ஒரு வேலையைத்தேடி அலைந்துகொண்டிருந்தேன். ஒருநாள் மதியம் நல்லையாப்பத்தர் தன் மிதியுந்தில் வீட்டுக்கு வந்திருந்தார். நடப்பில் அவர் எங்கள் வீட்டுக்கு மாலையிலோ இரவிலோவந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்புவதுதான் வழமை. அன்று முகத்திலொரு பிரத்தியேக விகசிப்பு பூசியிருந்தது, அவர் தன்வியாபார விடயங்களுக்கோ, திருமணங்களுக்கோ போகும்போது விசிறிக்கொள்ளும் குனேகா மருக்கொழுந்து வாசமும் அவர்கூட வந்திருந்தது. என்மனதுக்குத் திருமனசு ஏதோ நல்லசெய்திதான் கொண்டுவந்திருக்கிறார் என்றன சமிக்ஞைகள். அம்மாவோ தங்கையோ கொடுத்த பால்க்கோப்பியை ரசித்துக்குடித்தபின் “ இந்தக்காலத்தில் என்னால்க்கூட ஒருவருக்கு ஒரு வேலையை வாங்கிக்கொடுக்க முடியுதென்பதை நம்பமுடியாமலிருக்கு” என்றார். மேலே என்னதான் சொல்லப்போகிறார் என்கிற ஆவலில் நானும் அம்மாவும் அவரது முகத்தைப் பார்க்கவும், அவர் தொடர்ந்தார்.

“நித்தியகல்யாணி ஜுவெல்லேர்ஸ்காரர் என்று நான் ஓடருக்கு வேலைகள் செய்துகொடுக்கிற குடும்பமொன்று கன்னாதிட்டியில இருக்கு. அவர்களுக்கு எக்கவுண்ட் செக்ஸனில வேலை செய்ய ஒரு நேர்மையான கணக்காளர் தேவையாம், அதுதான் நான் தம்பியின்ர பெயரோட, குடும்பப் பின்னணி யெல்லாம் எடுத்துச்சொல்லி உரக்கப் பரிந்துரைத்திருக்கிறேன், அந்த முதலாளிக்கு வேணுகோபாலென்று பெயர், பூர்வீகம் திருச்சி மாவட்டம், நம்ப, தியாகராஜாபாகவதர் தனக்கொரு சித்தப்பாவாம். தங்கமான மனுஷன், இன்றைக்குப் பின்னேரமே உம்மைக் கூட்டிவரச்சொல்லியிருக்கிறார், அதுதான் சமாசாரம்” என்றுவிட்டுச் சிரித்தார்.

அன்றே சுணக்காமல் வெள்ளைக்குட்டி என்பவருடைய வாடகைவண்டியை அமர்த்திக்கொண்டு வேணுகோபாலாச்சாரியின் வீட்டையடைந்தோம். அவரே எழுந்துவந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப்போனார். முதற்பார்வையிலேயே என்னை அவருக்கும், எனக்கு அவரையும் பிடித்துப்போய்விட்டன. அடுத்த திங்களே வேலையில் சேரச்சொல்லிவிட்டார், நான் கல்லூரியில் படித்திருந்த கணக்கியல் அவர்கள் வணிகத்தின் நிதி முகாமைத்துவத்தைக் கற்றுக்கொள்ள உதவியது. நடைமுறையில் கணக்கியல் அறிவை எப்படிப்பிரயோகிப்பதென்ற யுக்திகளையும் கணக்குப்பதிவேடுகளைப் பயன்செய்யும் விதங்களையும் இரண்டுமூன்று மாதங்களிலேயே அவர்களிடம் கற்றுக்கொண்டுவிட்டேன். தங்கநகைகள், சவரின்கள், பிஸ்கெட்டுகள் அவற்றின் விலை எப்போது ஏறும் எப்போது இறங்கும் என்பதுபோன்ற நுணுக்கங்கள், நகைத்தொழிலாளருக்கு தங்கத்தை நிறுத்துக்கொடுப்பது, தயாரிப்புகளான பின் நிறைகளை சேதாரங்கள்தள்ளி மீளச்சரிபார்த்துப் பெற்றுக்கொள்வதென நகைவியாபாரத்தின் சூக்குமங்கள் எல்லாம் எனக்கு மெல்லமெல்ல அத்துபடியாயின.

காலவோட்டத்தில் வேணுகோபாலாச்சாரியாருக்கும் எனக்குமான உறவு முதலாளி, ஊழியன் என்ற நிலையிலிருந்துமாறி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவைப்போலாகியது. என்னை மனசு நிறைந்து ‘அப்பன்’ என்றுதான் அழைப்பார். நாம் ஒரே மேசையில் எதிரெதிரே இருந்து சாப்பிடுவதிலிருந்து, ஊர்ப்பாடுகள், உலகப்பாடுகள் அரசியல் அரட்டைகள், பத்திரிகைகளில் படித்த கடிவகையான அங்கதங்கள் பகிர்தல் என்றாகி, எங்கள் குடும்பத்துக்கும், அவர்களது குடும்பத்துக்குமான உறவும் நெருக்கமும் வளர்ந்து அத்தியந்த பந்துக்களைப் போலானோம். ஆசாரியார் கடைச்சிப்பந்திகளுடனோ, தொழிலாளர்களுடனோ ஏதும் முரண்பாடென்றால் முகத்துக்குநேரேயே உச்சியால் இரத்தங்கசிய வைதுவிட்டு மாலையில் அவர்களிடம் அப்படி ஒன்றும் நிகழாததுபோல் ‘வீட்ல ஒண்ணும் விஷேசமில்லையாப்பா…பொண்ணு, மருமோள் எல்லாரும் இன்னும் முழுகிட்டுத்தான் இருக்காளவையா…’ என்பார். அவர்கள் வீட்டில் காலை ஆகாரமாக இட்லியோ தோசையோ வார்த்தால் அவர்கள் வீட்டுப்பணிப்பெண்ணிடம் தனியாக எனக்குக் கடைக்கே கொடுத்து அனுப்புவார் முதலாளிவீட்டு மங்களம்மாமி. ஊழியம் ஆரம்பமாகிய ஆறுமாதகாலத்தில் 750ம் இலக்கத் தடத்தின் பேருந்தைத் தவறவிட்ட சிலநாட்களில் நான் தாமதமாகப் பணிக்கு வந்ததைக் கவனித்தவர் தங்கள் வீட்டுத்தாழ்வாரத்தில் பாவிப்பின்றி நின்றிருந்த BSA 250 CC ரக உந்துருளியை என்னை எடுத்துக் கொள்ளச் சொன்னார். கதர்வேட்டிசட்டை அணியும் என் முதலாளி காந்தீயத்தில் மட்டுமல்லாது நேரம் கிடைத்த வேளைகளிலெல்லாம் சிவஞான போதத்திலும், திருவருட்பயனிலும், சிக்கெடுத்து, தம்மபதத்திலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிலும் தோய்ந்திருப்பார். அதீதமான தமிழறிவோடு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்த அதிமானிடர்களில் ஆச்சாரியாரும் ஒருவர் என்பது மிகையல்ல.

நித்தியகல்யாணி நகைமாளிகையின் பின்னான வளவில் அவர்களது வீடும் நகைவேலைகள் செய்யும் பட்டறையும் இருந்தன. மக்களுக்கு நகைக்கான தேவைகள்கூடி வியாபாரம் சூடாகும் தை பங்குனி வைகாசி ஆவணி மாதங்களில் நல்லையாப் பத்தரும் அவ்வப்போ அங்கே வந்து அவர்களுடன் சேர்ந்து பட்டறையில் பணிசெய்வார். பதக்கங்கள், மோதிரங்களுக்கு எனாமல் மருவுதல், அட்டிகை, நெக்கிலஸுகளுக்குக் கற்கள் பதித்தலில் வித்தகர் அவர். பட்டறைக்குள் பணிசெய்யும் ஆசாரிமார்களின் ’டொக்குடொக்குடொக்கு’ என்ற தட்டல் தறைச்சல்ச் சத்தங்களும் விதூஷகப் பேச்சுக்களும் வெடிச்சிரிப்புகளுமாக எந்நேரமும் கலகலப்பாகப் பட்டறை இருக்கும்.

நல்லையாப்பத்தர் வேலைசெய்துகொண்டிருந்த ஒரு சக ஊழியரிடம்–

“காணும் சுந்தரி…நானெல்லாம் எளந்தாரியா வேலை பழகிற காலத்தில பவுண் என்ன விலை போயிருக்குமெங்கிறீரு…”

சுந்தரம் நாடகீயமாக போலிப்பௌவியத்தோட வாய்பொத்தி

“திருமனசே நவின்றாக்க…நாம தெரிஞ்சுப்போம்ல”

“பர்மா, சிங்கப்பூரிலிருந்துவாற ஒவ்வொரு கப்பல்லயும் பிஸ்கெட்டாயும் சவரனாயும் தங்கம்வந்து கொட்டினப்போ, ஒரு சவரன் பத்துரூபாய்தான் காணும், மிஞ்சிப்போனால் இருபத்தைஞ்சு சதம் மேல கீழ இருக்கும். அதுதான் இப்பவும் சில பழசுகள் பத்து ரூபாயைப் பவுண் எங்கிறது”

சுந்தரம் வாயைப்பிளந்திருக்க “அப்போ நீரு நெனைக்கப்படா நல்லையா அம்மான் பத்துவிரலுக்கும் மோதிரங்கொளுவி, பத்துப்பிடிசங்கிலியும் சூடிப் பகுமானமாய்த் திரிஞ்சிருப்பாரெண்டு”

“திரிஞ்சிருக்க மாட்டீகளா பின்னே…”

“என்ர வயசுக்கு இதுவரை ஒரு இலக்ஷம் மோதிரங்களாவது இணக்கியிருப்பன் காணும்”

“நமக்கென்றொரு மோதிரம் அப்பவுமில்லை, இப்பவுமில்லை, நமக்குப் பகவான் அப்பிடி எழுதிவிட்டிருக்கான்” என்று சலித்தவர் சற்று யோசித்தவர்போல் இடைவெளிவிட்டு-

“மூத்தக்காவுக்குத் திருமணமானபோது அத்தான் ஒண்ணேகால் வீசத்தில தோழன் மோதிரமொன்று எனக்கு இணக்குவித்துப்போட்டவர்தான், அதுவுமெங்கேயோ காத்தாடியேத்த நான் விரசாஓடினனா…அது கழன்று காத்தில பறந்திட்டிதுகா” என்று விட்டு மௌனித்து இருக்கவும்

முழுப்பட்டறையும் சிரிப்பால் குலுங்கி ஓய்ந்தது.

நான் வேணுகோபாலாச்சாரியாரின் நகைமாளிகையில் பணிக்குச்சேர்ந்த ஐந்துவருட காலத்தில் அவர்களின் வியாபாரம் ஓங்கிவளர்ந்திருந்த காலத்தில் சென்னையில் தாத்தா பாட்டியோடிருந்து படித்துக்கொண்டிருந்த அவரது ஒரே மகள் அகிம்ஷா சொவுக்குத் அரச உயர் அலுவலர் ஒருவருடன் திருமணமாகிப் பெயரன் பெயர்த்திகளைப் பெற்றுக்கொண்டனர். மகளின் திருமணத்துக்குச்சென்று ஒரு மாதத்தில் திரும்பிவிடுவதாகத் தாயகஞ்சென்றவர்கள் யாழ்ப்பாணம் திரும்ப நாலைந்து மாதங்களாகின. அவர் இங்கேயே இருந்தமாதிரிக்கு நான் வியாபாரத்தைச் செவ்வனே நிர்வகித்து, கணக்குகளையும் பணத்தையும் செம்மையாகக் கையாண்டதில் அவர்களுக்குப் பரிபூரண திருப்தி.

சொத்துக்களையும் ஆஸ்த்திகளையும் ஆயுள்பூராவும் சேர்த்துக்கொண்டிருப்பது வேணுகோபாலாசாரியாரின் நோக்கமல்ல. இன்னும் ‘எதுக்கப்பா நாங்கள் சொத்தும் சுகமும் தேடவேணும்’ என்று அகிம்ஷாவும், மருமகனும், இன்னும் மீதமிருந்த சொந்த பந்துக்களும் ’சீக்கிரம் ஊருக்கே வந்திடுங்க’ என்று அழுத்தத்தொடங்கவும், நாளடைவில் அவர்கள் வியாபாரத்தில் ஆர்வமும் ஊக்கமுங்குன்றி ’மனதளவில் தாயகத்துக்குத் திரும்பத் தயாராகுவதை அவரின் செயல் சாங்கியங்கள் பிரதிபலித்தன.

1970 இல் நடந்த பொதுத்தேர்தலின் பின் ஸ்ரீமாவோ பண்டாரநாயகவின் தலைமையிலான எஸ்.எல்.எஃப். பி கட்சி, சமசமாஜ / கொம்மூயூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. வந்த ஆறே மாதத்தில் செலவாகும் அந்நியச்செலவாணியைக் கட்டுப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு பம்பா வெங்காயம், மசூர்பருப்புத்தொடங்கி, உள்ளி, கொத்துமல்லி, சீரகம், வெந்தயம் வரை உபவுணவுப்பண்டங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியது. அடுத்ததாக வாகனங்களின் இறக்குமதியையும் நிறுத்தவும், எனக்குள் ஒரு பட்சி ’அடுத்தது தங்கந்தான்’ என்று தினமும் என் காதில்வந்து கீசத்தொடங்கிற்று.

தங்கம், வெள்ளியின் சந்தைவிலை சுபகாரியங்கள் அருகலாயிருக்கும் தமிழ் மாசி, சித்திரை ஆடி புரட்டாதி ஆகிய மாதங்களில் சில ரூபாய்கள் இறங்கினாலும் இறங்குமே தவிர பெரிதாகச் சரிந்து முதலீட்டாளர்கள் எவருக்கும் நட்டமேற்படுத்தாது. தங்கநகை வாணிபத்தின் அனுகூலம் அது.

வேணுகோபாலாச்சாரியாரும் தன் வியாபாரம் முதலீடுகள் விடயத்தில் எவரதும் ஆலோசனைகளைக் கேட்பவராக நானும் அறிந்திருக்கவில்லை.

என் கணிப்பை மிகுந்த தயக்கத்துடன் ஆசாரியாரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லலாமென்று அவர் காப்பிகுடித்துத் தாம்பூலம் தரித்து முகம் விகசிப்போடிருந்த ஒரு பொழுதில் அவரை அணுகினேன்.

“சமூகம்…கோவிச்சுக்கலேன்னா சிறியவன் ஒண்ணு சொல்லலாமா…”

“விஷயம்…சின்னதா பெரீஸா…”

“அது நீங்க எடுத்துக்கிற விதத்தில இருக்கு”

“பெரிஸாய்ப் பீடிகை போட்டிட்டு என் பொண்ணைக் கேட்கலேன்னாச் சரிதான்…அவளுக்கு எப்போதோ ஊர்ல கல்யாணம் ஆயிடிச்சுப்பா உனக்குத்தெரியாதா…”

வழக்கம்போல் என்னைக்கலாய்த்து அங்கதம் பண்ணினார். அதன்திசையைத் திருப்பி சந்தைநிலவரத்தின் போக்கையும், தர்க்கரீதியாகத் தங்கம் விலையேறப்போவதுபற்றிய என் அனுமானத்தையும் எடுத்துச்சொன்னேன்.

என் அனுமானத்தை ஒத்துக்கொண்டார். சுணங்காது தொலைவரிகள் சிங்கப்பூருக்கும் பாங்கொக்கும் அனுப்பி பிஸ்கெட்டும், சவரினுமாக ஐந்துகிலோ தங்கம் இறக்குமதி செய்விக்க ஊக்குவித்தேன். நாம் அனுமானித்ததைப்போல் அரசு தங்கத்தில் கையைவைக்க, அதே மாதத்தில் 180 <-> 190 ரூபாய்களிடையில் துடித்துக்கொண்டிருந்த தங்கம் திடுப்பென 400 ரூபாய்க்கு எகிறவும் நான் ஒரு தேவதூதனைப்போல ஆசாரியார் குடும்பத்தால் ஆகர்ஷிக்கப்பட்டேன்.

அவர்களின் தாயகத்துக்குத் திரும்புவதான தயாரிப்புகள் மெல்ல மெல்ல ஆரம்பித்துவிட்ட ஒரு நாளில் நாம் சம்பாஷித்துக்கொண்டிருந்தபோது வேணுகோபாலாச்சாரியார், நாடுதிரும்பும் தமக்குக்கூட எடுத்துச்செல்லும் சொத்துக்களின் அளவுக்கு எல்லைவரம்புகள் உள்ளவிஷயத்தை எனக்கு ஒரு தகவலாகச்சொன்னார். பின்னர் ’வயதில் சின்னப்பிள்ளையாக இருந்தாலும் உனது வாய்மூர்த்தமும் ஆலோசனையும், எனக்கு அனுகூலாமாயமைந்ததும். அதைக்கொண்டு நான் ஐம்பது லெட்சம்வரையில் சம்பாஷிக்க நீதான் கருவியாக இருந்தாய், இந்த மண்ணில் தேடியவை இந்த மண்ணுக்குத்தான் என்று என் அந்தராத்துமா சொல்லுது, ஆக உன் ஊழியத்தால் அமைந்தநிதி உனக்கான சம்பாவனை’ என்றார், அவரது தத்துவார்த்த பூடகப்பேச்சு எனக்கு உடனடியாக விளங்கவில்லை. நானும் வேறுவிதமாக அர்த்தம் கற்பித்துக்கொண்டு நானுண்டு என்பாடுண்டென்று என் ஊழியத்தில் ஊன்றி உழன்றுகொண்டிருந்தேன். ஒரு சனியன்று திடீரென்று–

“இன்றைக்கு மாலை வக்கீலை வரச்சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கேன், அம்மாவையும் தங்கையையும் அழைச்சிண்டு வீட்டுக்கு வந்திடுங்க அப்பன்” என்றொரு ஆக்ஞைத்தொனியில் சொன்னார்.

“என்னையா சொல்றீங்க…” என்று தலையைச்சொறிந்தேன்.

“ஆமா…கண்ணா இந்தக்கடையை உனக்கே எழுதித்தந்திடறதா இருக்கோம்” என்றார்.

“சும்மா…கலாய்க்காதீங்கையா என்னால தாங்கேலா…” என்றேன்.

“சொல்றதைக்கேள். எல்லாமே சத்தியம், உன் நாணயத்துக்கும் ஒழுக்கத்துக்கும் என் காரையும் எங்க பரிசாகத் தந்திடறோம் எடுத்துக்கோ”

என் நினைவுப்புலத்தில் முன் எப்போதும் நிகழ்ந்திராதபடிக்கு என்னவெல்லாமோ செய்தது. உள்ளுக்குள் சத்தமில்லாதவொரு நிலவதிர்வு ஏற்பட்டதைப்போலிருந்தது. இதெல்லாம் என் வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகள்தானா…. அவரைத் தொழுவதைத்தவிர எனக்கு வேறொன்றுஞ் செய்யத்தெரியவில்லை.

“உன்னை என் பெற்றுக்கொள்ளாத மகனாக என்றைக்கோ நானும் மங்களமும் வரித்துக்கொண்டுவிட்டோம்”

“நான் அதை உணராமல் இருக்கிறேனா…”

எனக்கு அழுகை முட்டித்தொண்டையை அடைக்கப்பேசவரவில்லை.

“எங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாமலிருக்கிற சொத்தை ஆதனத்தை விற்று வேணுமின்னா இங்கே சின்னதாயொரு கோவில் கட்டலாம், குளதைவெட்டலாம். மிஞ்சிப்போனா ஏலவே இருக்கிற கோயில் ஒண்ணுக்குக் கோபுரம் கட்டலாம், அதனால சமூகத்துக்குப் பெரிசா ஒண்ணும் நன்மை கொழித்திடப்போவதில்லை. தேவையிருக்கிற ஒரு குடும்பத்துக்கே கையளித்தோம்னா சந்ததிக்கும் அது கஞ்சி குடிச்சிட்டிருக்கும். எனக்குத்தெரிஞ்ச வட்டத்தில அதைப்பெறக்கூடிய தகுதி ஆனந்தவர்த்தன் குடும்பத்தைத்தவிர இன்னொன்று இருப்பதாக எமக்குத்தெரியவில்லை.”

‘அப்பன்’ என்பதை விடுத்து அன்று இரண்டாவது தடவையாக என் பெயரை முழுமையாகச்சொன்னார்.

நல்லதொரு மிதியுந்தேயில்லாமல் நலிந்திருந்தவன் நித்தியகல்யாணி நகைமாளிகையின் உரிமையாளனாகிய கதைச்சுருக்கம் இதுதான்.


விதி, பகவான், அறம், மறம், பாவம், புண்ணியம் இதுகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைத்திருக்கும் நல்லையா ஆசாரியார்: “இந்த வணிகஸ்தலத்தை உனக்கென்றே பகவான் நமோவெனப் படைச்சிருக்கார் இடையில கொஞ்ச நாள் வேணுகோபாலாச்சாரியாரும் அனுபவிக்கட்டுமேயென்று அந்தாள் கையில கொடுத்து வைச்சிருந்திருக்கார் தெரியுமோ…எல்லாம் அவன் சித்தமும் விளையாட்டும் கண்ணா” என்பார் . என் வாழ்க்கையின் திருப்பத்துக்குக் காள்கோலாயமந்தவர் அவர்தான். நடக்கவிருக்கும் அவரது மகளது திருமணத்துக்கு, நகைநட்டுகளோடு, சேர்ந்தான இதர செலவுசித்தாயங்களையும் நானே செய்வதாக உள்ளேன்.

இப்போ எனக்கு ‘மங்களயோசனை’ ஒன்று சொல்கிறேனென்று வந்திருக்கிறார். ‘உறவுகள் அறுந்துபோகப்படாதாம்’, அது சந்தேகமில்லாமல் மாமன்விட்ட தூதாகத்தானிருக்கும்

“மாமன்மேல இருக்கிற தனிப்பட்ட காய்ச்சல்ல உன்னையே நம்பியிருக்கிற அருவியை ஒதுக்கிவிட்டு நீ இனிப்புதிதாக ஒரு ஒருத்தியைக் கொணாந்து அந்த இடத்தில உன் குடும்பத்துக்குள்ள வைக்கிறது, அறஞ்சார்ந்த காரியமல்ல, தேன்மொழியைக்கூட மாதவனுக்கு எடுக்க அவர்கள் தயாராகிட்டார்கள் தெரியுமோ…மனுசனுக்கு வாழ்க்கையின் அநித்தியம் லேசில புரிஞ்சிடறதில்ல, அதனாலதான் அவன் அகம்பாவங் கூடி ஆடறதும், செல்வசுகத்தால லோகத்தையே புரட்டிடுவேங்கிறதும், சமயத்தில அவனே தப்பு – வஞ்சனை- இகழ்ச்சி – ஏன் ஆராதனை பண்ணிக்கறது கூட…நீ படிச்ச பையன், சாமானியனல்ல, என்னடா மாமா எங்கிட்டயே காலேட்ஷேபம் பண்றாரேன்னு நெனைச்சுடப்படாது. லோகத்தில தப்பு, தவறு என்று இருக்கிறதாலதான் தர்மத்தைப்பற்றின பேச்சே வருது…எல்லாத்தையும் எல்லாரையும் மன்னிக்கத் தெரிஞ்சவந்தான் அதிமானுஷன். எல்லாத்தையும் நல்லாய்ப்புரிஞ்சுப்பே ஏதோ நல்லமுடிவுக்குவா மகன்” என்றுவிட்டு மறுபடியும் சூதானமாகத் தட்டத்துள் நல்ல சீவலாகத்தேடி, வெற்றிலைச்சுருளுள் வைத்து வாய்க்குள் திணித்துக்கொண்டு, சால்வையை உதறித்தோளில் போட்டபடி கிளம்புகிறார் நல்லையா ஆசாரியார்.

மாமா குடும்பத்துக்கு அருவிக்கு நான் பொருத்தமான்வன்தான் என்கிற நினைப்பையும், ஆங்கிலந்தெரியாத தேன்மொழி மாதவன்கூடக் கொழும்பில் குடும்பம் நடத்துவாள் என்கிற நம்பிக்கையையும் தந்த மாயாவி எது? உலர்ந்து கொண்டிருந்த சொந்தங்களின் வேரில்பரவித் துளிர்விட வைக்கும் அந்த உயிர்ப்பூக்கி எது…என் சிந்தனை குழம்புகிறது. நான் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொள்கிறேன். அந்திச் செவ்வானத்தில் அப்போதுதான் பிறந்த சில தாரகைகள் துள்ளி மின்னத் தொடங்குகின்றன.

– நீர்வேலி காமாட்சியம்பாள் சனசமூக நிலைய வெள்ளிவிழா மலர்.

– இது எழுதப்பட்ட ஆண்டு 1975. என் இருபதுகளில் எழுதியது. அச்சில் வெளிவந்த என்னுடைய இரண்டாவது சிறுகதை இது. ‘அம்ருதா’வில் பெப்ரவரி 2025 இப்படைப்பு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *