துலா(ளை)க் கிணறுகள்




யாழ் குடாநாட்டையும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும், ஒரு மெல்லிய நிலப்பரப்பே இணைத்துக் கொண்டிருக்கின்றது. நிமிர்ந்து நிற்கும் யாழ் குடாநாட்டின் வடமேல் முனையில் சுரண்டினால் கடலினுள் உதிர்ந்துவிடும் அளவில் உள்ள ஊர் பொன்னாலை. கடல், குளங்கள், வயல்கள், காடு, பிரசித்தமான கோயில் என பல சிறப்புக்களை கொண்டதாக காணப்படுகின்றமை ஊரின் சிறப்பாகும்.
இலங்கையின் மேல்முனைப்பகுதியில் அமைந்துள்ள பொன்னாலையின் கடலை அண்டி இருப்பது சுடலை. அத்துடன் பெரியவர் என்றழைக்கப்படும் சித்தர் ஒருவரின் சமாதியுடன் கூடிய சிவன் கோயில், அதில் இருந்து ஊரினுள் அரைக் கிலோமீற்றர் தூரத்தில் பிரசித்தி பெற்ற பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம். ஆலயத்தைத் தொடர்ந்து குடிமனைகள். இக்கதையின் நாயகன் தம்பரின் வீடும் ஆலயத்தை அண்டியதாகவே காணப்படுகின்றது.
தம்பரின் புத்திசாதுரியத்தை விளக்க பல நிகழ்வுகள் உண்டு. தம்பரின் நெல்வயல் சற்று மேட்டுப்பாங்கானது. மழைகூடி வயல்களுக்கு நீர்மட்டம் அதிகரிக்கும் போது சிறிய தடி ஒன்றினால் தனது வயல் நீர்மட்டத்தைக் குறைத்துவிடுவார். வரம்பில் சிறியதொரு ஓட்டை அந்தச்சிறிய தடியினால்: அதிலும் வளைவான துளை. ஏனென்றால் துளை எலிவளைபோல் இருந்தால்தானே பக்கத்து வயல்காரன் சண்டைக்கு வரமாட்டான்.
அதிகாலை நான்கு மணிக்கே பக்கத்து வளவுகளில் உள்ள பனம்பழம் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துவிடுவார். மம்மலுக்குள் கறுப்பாக தெரிவதையெல்லாம் பனம்பழம் எனப்பொறுக்கி அசிங்கப்பட்டும் இருக்கின்றார்.
என்ன இருந்தாலும் தம்பர் கொஞ்சம் பொதுநலவாதி. தனக்கு என்றில்லாமல் ஊருக்கு, சந்ததிக்கு என்று யோசிப்பவர். கிணற்றில் இருந்து தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்காக, தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வந்தபோதுகூட, அதை வேண்டுவதற்கு வசதியிருந்தும் துலாவினால் நீர்பாய்ச்சியவர். இயந்திரம் நிலத்தண்ணீரை வேகமாக உறிஞ்சிவிடும் கடல் தண்ணீர் நிலத்தடி நீர் ஓட்டடத்துடன் வந்து கிணற்றுநீரை உவர் ஆக்கிவிடும் என்பார்.
ஊர்மக்கள் துலாவினை மறந்து இயந்திரத்தால் இறைக்க இறைக்க ஆவேசத்துடன் பேசியபடி இருப்பார். அறிவுரையை கேட்பார் இல்லாது போயினர். கடைசியில் விசர்த்தம்பர் என்ற பெயரே கிடைத்தது. அந்தப்பெயரை உண்மையாக்கும் நிகழ்வு அவரது மூத்தமகனாலேயே கிடைத்தது. தனது கொள்கையை உண்மைத்தன்மையை ஊரவர் விளங்கிக் கொள்ளாததை விட தனது புத்திரனே விளங்கிக் கொள்ளாதது தம்பரின் மனவேதனையை அதிகரித்தது. ஒருவரைப்பற்றி அவர்சார்ந்தவர்களே விளங்கிக் கொள்ளாதபோது ஏற்படும் வலி அவரை நடைப்பிணமாக்கிவிடும் என்பது தம்பரின் மூலமே நிதர்சனமாய்க் காணக்கூடியதாக இருந்தது.
தம்பரின் மகன் இயந்திரத்தால் நீர் இறைக்க கிணற்றுத் தண்ணீர் வேகமாக வற்றியது. கிணற்றில் தண்ணீர் குறைய கிணற்றுக்குள்ளேயே குழாய்க் கிணறு அடித்தார்கள். நீளமான இரும்பு கம்பி கிணற்றுள் போடும் துளையெல்லாம் தன்மீதும் தன் பரம்பரையின் மீதும் விழும் துளையாகவே பட்டது தம்பருக்கு. இருந்தும் வாய்மூடி மௌனமானர், திறந்தாலும் செவிமடுப்பார் இல்லை..
ஊரே அதிசயிக்கத்தக்கவாறு கிணற்றிலிருந்து தண்ணீர் குபுகுபுவென்று வந்தது. தாராளமாக இறைத்தார்கள். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போர். போரும் இடம்பெயர்வுகளும். பொன்னாலையை கடற்படையின் வசமாக்கியது. ஊர் வெறிச்சோடியதல்லாமல் வரண்டும் போனது. கடற்படைக்கு ஏற்கனவே சொந்தமான நல்லதண்ணீர் கிணறு பொன்னாலையில் இருந்தது. போரினால் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க அவர்களினால் நீர் உறிஞ்சலும் அதிகரித்திருந்தது.
சில வருடங்களில், யுத்தத்தின் தீவிரம் யாழ்குடாநாட்டில் குறைவடைய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீளக்குடியமர்ந்தனர். நல்ல தண்ணீர் கிணறுகள் பெரும்பாலானவை உவராக, ஊரில் குடிப்பதற்கான நல்லதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இடைப்பட்ட காலப்பகுதியில் தம்பரின் குழாய்க்கிணறும் உவராகியிருந்தது. ஒருசில பொதுக்கிணறுகளில் இருந்து குடிதண்ணீர் குழாய்வழியாக வழங்கப்பட்டது. மக்கள் குடிதண்ணீரில் பூக்கன்றுகளும் வளர்த்தனர்.
இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு தம்பர் இல்லை. அவர் இடம்பெயர்ந்து வன்னிவரை சென்றிருந்தார். யாழில் சுருண்ட தம்பர் வன்னியில் நிமிர்ந்தெழுந்தார். வன்னி ஆட்சியினரின் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும், வன்னியின் இயற்கையும் தம்பரை நிமிர்ந்தெழ வைத்திருந்தது. வயல்களைக் குத்தகைக்கு எடுத்து பெரும்போகம் சிறுபோகம் என விளைச்சசல்களை பெருக்கிக்கொண்டார். யுத்தம் படிப்படியாக உக்கிரமடைந்து வன்னியினுள் செல்லத்தொடங்க, தம்பர் குடும்பமும் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து கொள்ளத்தொடங்கியது. இடம்பெயர்ந்து இருக்கும் இடமெல்லாம் வீட்டுத்தோட்டங்களை வைத்து தன் குடும்பத்துக்கும் அயலவருக்கும் மரக்கறிகளை கொடுத்துக்கொண்டிருந்தார். அடிக்கடி ஏற்பட்ட இடம்பெயர்வுகளால் காலப்போக்கில் அதுவும் முடியாமல் போனது.
2009 இல், உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடிய தம்பரின் குடும்பத்தில் இராணுவத்தினரின் எறிகணையில் தம்பரின் மனைவி உடல் சிதறிப்போனதுடன், தம்பரின் கால்ஒன்றும் பறிபோனது. மனைவியின் இறுதிச்சடங்குகள் கூட செய்யமுடியாது தடுப்பு முகாம்களுக்குள் சிக்கிக்கொண்டது தம்பரின் குடும்பம். சில மாதங்கள் தடுப்புமுகாமினுள் அடைபட்டு பலவிதமான கஸ்டங்களையும் அனுபவித்த பின்னர் ஒற்றைக்காலில்லாத தம்பரின் நிலையைக் காட்டி வெளியே வந்தனர் தம்பரின் குடும்பத்தினர்.
தன் ஊரை வந்தடையும் போது தம்பர் முழு நடைப்பிணமாகியிருந்தார். வயதின் பலவீனம் ஒருபுறம், மனைவியின் இழப்பு ஒருபுறம், காலின் இழப்பு ஒருபுறம் என தம்பர் தன்னிலை இழந்திருந்தார். வீட்டுக்கு சுகம் விசாரிக்க வருவோர்களின் பேச்சுக்கள், ஊர்ப்பிரச்சினைகள் என்பன, ஊரின் பழைய நிலை மாறியிருப்பபதை தம்பரால் உணரக்கூடியதாக இருந்தது.
அதிகாலையில் இருந்து இரவு வரை ஓடிஓடி உழைத்தவரால் ஒரிடத்தல் இருக்க முடியவில்லை. மெதுவாக செயற்கைக்காலின் உதவியுடன் வீதிக்கு வந்தவரின் கண்கள் வீதியில் தண்ணீருக்காக பிளாஸ்ரிக் பரல்களுடன் செல்பவர்களைப் பார்க்க பழைய ஞாபகங்கள் வந்துபோனது. அந்தக் காலத்தில் ஊரில் ஆங்காங்கே சில கிணறுகள் நல்ல தண்ணீரைக்கொண்டிருந்தன. பெண்கள் பித்தளை, அலுமினியக் குடங்களில் நீர் அள்ளிச் செல்வார்கள். அப்பபடியான நல்ல தண்ணீர் கிணறுகளுள் தம்பரின் கிணறும் ஒன்றாக இருந்தது. இன்று ஓரிரு கிணறுகளே நல்ல தண்ணீரைக் கொண்டனவாக இருக்கின்றன. இப்போது தண்ணீர்க் குழாய்கள் அருகில் தண்ணீருக்காக பாத்திரங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.
தம்பர் மெதுமெதுவாக தன் வயலை நோக்கி நடந்து சென்றார். பிள்ளையார் கோயில் கிணற்றுக்கருகில் அன்று நல்ல தணண்ணீருக்காக துளையிடப்பட்ட குழாய்க்கிணறைக் காணவில்லை, அதனால் கிணற்றுத் தண்ணீர் மேலும் உவராகியதுதான் மிச்சம்.
வயல் வரம்புகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. அவைகளும் வறுமைக்குட்பட்டு மிக மெலிந்தும் தேய்ந்தும் காணப்பட்டன. தம்பர் வரம்பு கட்டும்போது அதை ஒரு கலையாகவே பார்த்திருந்தார். வரம்புகள் உயரமாகவும் அகலமானதாகவும் இருந்தன. எத்தனை? எத்தனை? வரம்புச்சண்டைகள். இன்று வரம்புகள் அனாதையாக இருப்பது போன்ற உணர்வு தம்பருக்கு ஏற்பட்டது.
சண்முகம் என்றொருவர், தனியாக பல வருடங்களாக வெட்டிய கிணறு இன்று சிறு பள்ளமாக காட்சியளித்தது. ஏனோ அந்தப் பள்ளத்தைப் பார்க்கையில் தம்பரின் கண்களில் கண்ணீர் தானகவே வந்தது. சண்முகம் என்றொரு மனதனின் அயராத பலவருட கடின உழைப்பு இன்று சிறு பள்ளமாக தேடுவாரற்றுக்கிடந்தது.
தம்பரைத்தாண்டி குழாய்க்கிணறு தோண்டும் இயந்திரம் ஒன்று உழவு இயந்திரத்தினால் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது வயலுக்குள். “கெடுகுடி சொற்கேளாது…” என்ற வார்த்தையை தம்பரின் வாய் முனுமுனுத்துக்கொண்டது. இயற்கையின் சுகங்கள், கொடைகள் மீள அறவிட முடியாத அளவுக்கு சென்றுகொண்டிருப்பதை தன் வாழ்க்கைப்பயனத்தில் இவ்வளவு விரைவாகக் காணக்கூடும் என்பதை தம்பர் எதிர்பார்க்கவில்லை. எமது அழிவுக்கு போர் மட்டுமல்ல, போரும் ஒரு காரணம் என்று விளங்கியது.
தன்வயலுக்குள் தனது ஒருகால் பட்டதுமே உடம்பு சிலிர்த்துக்கொண்டது. தன் வயலில் ஏதேனும் ஒரு சிறு இடத்திலாவது தன் கால்கள் படாத இடம் இருக்குமா என யோசித்துக்கொண்டே கிணற்றடியை நோக்கி மெல்ல நடந்தார். துலாமரங்கள் இருந்த இடமே தெரியவில்லை. ஆனாலும் தம்பரின் மனக்கண்ணுக்கு அவை தெரிந்தன. பக்கத்து வயலில் குழாய்க்கிணறு தோண்ட ஆரம்பித்திருந்தது இயந்திரம். அதன் சத்தம் பூமித்தாயின் அவலக்குரலாகவே தம்பருக்கு கேட்டது.
அருகில் இருந்த சிறிய பிளாஸ்ரிக் வாளியால் சிறிது தண்ணீரை அள்ளி வாய்க்குள் விட்டவர் மறுகணமே முகத்தை சுழித்தவாறு தண்ணீரைத் துப்பினார். கண்களில் இருந்து வந்த கண்ணீரும் உப்புக்கரித்தது. பக்கத்து வயலில் யாழ்ப்பாணத்துக்குரித்தேயான மழைத்தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் மயோசின் பாறையையும் துளைத்துக்கொண்டிருந்தது. இயந்திரம்.
தம்பரின் தலை சுற்ற, கண்களில் தெரிந்த துலாக்கொடியைப் பிடிமானத்துக்காக பற்றியவர் கிணற்றினுள் விழுந்துகொண்டார். நீச்சல் தெரிந்திருந்தும், வயோதிபமும், அங்கவீனமும் சேர்ந்ததால் தம்பரால் நெடுநேரம் தாக்குப்பிடிக்க முடியவல்லை. குழாய்க்கிணறு தோண்டும் இயந்திரத்தின் இரைச்சலாலோ? பூமித்தாயின் அலறலாலோ? தம்பரின் அவலக்குரல் வெளியில் யாருக்கும் கேட்காமலேயே மெதுவாக அவரின் துலா(ளை)க் கிணற்றுக்குள்ளேயே அடங்கிப்போனது.