துணை





(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பையன் கூட வந்துட்டான்!” என்று நான் உள்ளே நுழைந்து, செருப்பை மாடத்திற்குள் கழட்டும் போது, என் தகப்பனார் சொல்லிக் கொண்டிருந்தார்.
“வந்துட்டானா, பேஷ்.”
“ஏண்டா, மார்க்கட்டுக்குப் போயிருந்தியா?”
“ஆமாம்ப்பா,” என்று சொல்லிவிட்டு, அப்பாவோடு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த சின்னக் குழந்தையைப் பார்த்து, “வாங்கோ!” என்று வரவேற்றேன்.
“சௌக்யம்தானே, தாத்தா? இதோ வந்துவிட்டேன்,” என்று கறிகாய்ப் பையை உள்ளே கொண்டு வைக்கப் போனேன்.
“யாருடா வந்திருக்கா கூடத்துலெ?” என்று அம்மா கேட்டாள். அம்மாவுக்கு அரைக்கண். சதை வளர்ந்திருந்தது.
“சின்னக் குழந்தைத் தாத்தா.”
“சின்னக் குழந்தையா, நானும் நெனச்சேன், குரல் அதுமாதிரிருக்கேன்னு.”
கூடத்திற்கு வந்தேன்.
“தாத்தா சௌக்யமா இருக்காரா?”
”யாரு, தோப்பனாரைத்தானே கேக்கறே?”
”ஆமாம்.”
“சௌக்யமா இருக்கார். நல்ல வேளையா குளுரு நாள் போயிட்டுது. இந்த பிப்ரவரி, மார்ச்சு தாண்டி யாயிடுத்துன்னா ஒரு கண்டம் தாண்டினப்போலே.”
“ஏன்?”
“எங்கப்பாவுக்கு ஆஸ்த்துமான்னா. குளிர் வந்துடுத்தோ, இழுப்பு, இரைப்பு எல்லாம் வந்து விடும். அப்ப அவர் படற அவஸ்தையைக் கண் கொண்டு பார்க்க முடியாது.”
“டாக்டர் பார்க்கிறாரோல்லியோ?”
“பார்க்கறான். நல்ல டாக்டர்தான் பார்க்கறான். நம்ம கலியாண சுந்தரம்தான் பார்க்கறான். மருந்து செட்டு எப்பவும் தயாரா இருந்துண்டேதான் இருக்கு. எவ்வளவு இருந்தால் என்ன? வியாதி ஒரு கை பார்த்து விட்டுத்தானே போகிறது! அப்படித்தான் என்ன ளம் ரத்தமா, டக்குனு மருந்து புடிச்சு வேலை செய்ய? எனக்கே இந்த மாசிக்கு எழுபத்தொன்பது முடிஞ்சுடுத்து. அப்பாவுக்குக் கேட்பானேன்!”
“அப்பன்னா உங்கப்பாவுக்கு”

“தொண்ணூத்தெட்டு முடிஞ்சுடுத்து….. என்ன பார்க்கறே?… ம். அந்தக் காலத்திலே பதினேழு வயசுக் கெல்லாம் சாந்திக் கலியாணம் ஆயிடும். எனக்கும் பதினேழு வயதிலேதான் ஆச்சு. என் பையனுக்குத்தான் இருபது வயசு. என் பேரன்தான் கலியாணம் வாண்டாம் வாண்டாம்னு சொல்லிப்பிட்டு கடைசியிலே இருபத்தஞ்சு வயசிலே பண்ணிண்டான். அந்தக் காலத்திலே இருபது வயசுக்குள்ளே கலியாணம் ஆகலேன்னா, ஏன் ஆகலே, ஏன் ஆகலேன்னு லோகம் முழுக்க நச்சரிக்கக் கிளம்பிவிடும். அப்பாவுக்கும் இந்த ஆஸ்த்துமா நாற்பது வயசுக்கு மேலேதான் பிரகோபமா வந்தது. அவர் சரீரம்தான் இவ்வளவு உபாதைகளையும் தாங்கிண்டு நிற்கிறது. பால்யத்திலே கொஞ்ச பலமா அவருக்கு? ஏ, அப்பா! ஆஜானுபாகுவா இருப்பர். தலையிலே கருகருன்னு சுருட்டை சுருட்டையா இருக்கும் மயிர். தொடையில் வந்து இடிக்கும். மத்தியானம் படுத்துண்டார்னா அந்த மயிரையே பந்தாக முடிஞ்சு தலைக்கு அடியிலே தலையணையா வச்சுனுடுவர். லேடி, லேடின்னு அதனால்தான் பெயர் வந்தது அவருக்கு. பளபள பளபளன்னு இருப்பர். அசாத்ய பலம். ஊர்லே இருந்தபோது இருட்டுப் பிரியறதுக்கு முன்னாடி படுக்கையை விட்டு எழுந்து கிளம்பி விடுவாராம். மார்கழி மாசக் குளிரோ, ஐப்பசி மழையோ, லக்ஷியம் பண்ண மாட்டார். நேரே நாயக்கன் சாவடிக்குப் போயிடுவர். எங்க ஊரிலே கோபால்சாமி நாய்க்கர்னு பெரிய மனுஷன். அவர் பையன் அப்பாவோடு வாசிச்சிண்டிருந்தான். அவன் ஒரு கொட்டகை போட்டு கர்லாக் கட்டை கிர்லாக் கட்டை எல்லாம் வச்சிருந்தான். அங்கே போய், ராக்ஷஸ கர்லாவா ஒரு கட்டையை எடுத்து, இந்தக் கைக்கு நானூறு, அந்தக் கைக்கு நானூறு சுத்துச்சுத்தி, தண்டாலில் இருநூறு எடுத்து, பஸ்கி முந்நூறு எடுத்து பிரளயமா வேர்த்து ஊற்றினாலொழிய, அவர் உடம்பு சரி வராது. அப்பா முள்ளாத்துலே ஸ்நானத்தைப் பண்ணி விட்டு ஜபத்துக்கு ஆரமிப்பார். பாட்டி தோச்ச தயிரைப் போட்டுப் பழயதை, பிசைந்து, எரிச்ச குழம்பையும் வச்சுண்டு காத்திண்டிருப்பள். அப்பாவோடு நானும் உட்கார்ந்துனூடுவேன், ஈ மாதிரி. ஆனை ஆனையா உருட்டி அப்பா கையிலே சாதத்தைப் போடுவாள் பாட்டி…. ஹ்ம்.. அதெல்லாம் போச்சு….. நானும் பதினாறு வயசு வரையில் இருந்து கர்லா பஸ்கி எல்லாம் எடுத்துண்டுதான் இருந்தேன். அப்புறம் என்னமோ விட்டே போயிடுத்து. ஆனால் ஒரு நல்ல பழக்கம் மாத்திரம் இன்னும் வச்சுண்டிருக்கேன். என்ன உடம்பு வந்தாலும் வெந்நீரிலே குளிக்கிறதில்லை; வெந்நீர் குடிக்கிறதுமில்லை. இப்பதான் இரண்டு வருஷமா கால் குடைச்சல் வந்து மாசம் ஒரு தடவை இரண்டு தடவை வெந்நீரில் ஸ்நானம் பண்ணுகிறேன். என் பிள்ளை மணிக்கொடி யாண்டானும் அப்படித்தான். அவனுக்கும் வெந்நீர்ப் பழக்கம் கிடையாது. பேரனுக்குத்தான் இந்த சம்பிரமங்களெல்லாம் வேணும். அவன் பிறக்கற போதே குத்துயிரும் குலை உசிருமாகப் பிறந்தான். நாலு வருஷம் வரையில் உட்கார்த்தின இடத்திலேயே களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பான். சூணா வயிறா, கைகால் எல்லாம் காத்துலெ கோடு கிழிச்சாப்பலே குச்சி குச்சியா இருக்கும். மனுஷ்ய அவயவமாகவே இராது. ‘இது பாலாரிஷ்டம், ஆறு வருஷம் வரையில் அப்படித்தான் இருக்கும்!’னு சொன்னான் ஜோசியன். அவன் சொன்னாப் போலவே ஆறு வருஷம் கழிச்சு அவன் உடம்பு தேற ஆம்பிச்சுட்டுது. என்னதான் தேறினாலும், நான், எம் பிள்ளை மாதிரி யெல்லாம் அவனாலெ இருக்க முடிஞ்ச தேயில்லை. ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது சீக்குப் படுத்திக் கொண்டே தானிருக்கும். தலைவலி, வயத்துவலி, மார்வலி, கண் குடைச்சல், மூச்சுப் பிடிப்பு, இப்படி ஏதாவது வந்த வண்ணமாகத் தான் இருக்கும். கணைச்சூட்டுச் சரீரங்களே இப்படித் தான். ஒரு நாளாவது சீக்கில்லாமல் இராது. இப்பத்தான் என்ன, தாசீல்தாரா இருக்கான்னு பேருதான். வாங்கற சம்பளமெல்லாம் மருந்துக்குத் தான் சரியா இருக்கு…”
மணி அடித்தது.
“மணி என்ன ஒன்பதா?”
”ஆமாம்.”
“அப்ப எனக்கு நாழியாச்சு. ஒண்ணுமில்லே. உங்கப்பா கிட்டக்கூட சொல்லிட்டிருந்தேன். இன்னிக்கி ‘மஸ்டர் டே”
“மஸ்டர் டேயா?”
“ஆமாம்; பென்ஷன் வாங்கிண்டு இருக்கோ மோல்லியோ? வருஷத்துக்கு ஒரு தரம் அவன் கிட்ட உசிரோட இருக்கோம்னு தலையைக் காண்பித்து விட்டு வரணும். அப்பாவும் நானும் போகிறோம். கொஞ்சம் எங்களை வண்டி வச்சு அழச்சிண்டு போய்க் கொண்டு வந்து விடணும். நாங்க இரண்டு பேரும் மாத்திரம் போகலாம், பிரமாதமில்லே. இருந்தாலும் தள்ளாத உடம்புகள் தானே. கூட ஒருத்தர் இருந்தா தெம்பா இருக்கும்னு நினைக்கிறேன். எம் பிள்ளையும் இல்லையா….”
“எங்கே அவர்?”
“அவன் காசிக்குப் போயிருக்கிறான். ஆறு மாசமாச்சு”.
“நீங்கள்?”
“நானா? எனக்கு நாலு தடவை ஆயிடுத்து காசிப் பயணம். தெம்பு இருக்கிற போது முடிச்சினுட்டேன் அதெல்லாம்.”
“ஏன் இப்ப போனால்தான் என்னவாம்?”
“ஏதுக்கப்பா வம்பு? எண்பது வயசுக் கிழவனை இரண்டா யிரம் மூவாயிரம் மைல் ரயில்லேயும் வண்டிலேயும் அழச்சிண்டு போறதுன்னா லேசா இருக்கா? சம்பாதிச்ச புண்யம் போருமே. ஆசையாய்த்தான் இருக்கு. கங்கையிலே ஸ்நானம் பண்றதுன்னா யாருக்குத்தான் ஆசையா இராது? சரீர தர்மம் இடங்கொடுக்க வாண்டாமா? பிள்ளையை மாத்திரம் போகச் சொன்னேன். அவனும் என் மாட்டுப் பெண்ணும் போயிருக்கா…… ஆகக்கூடி இந்த வருஷம் மஸ்டருக்கு அவன் இல்லை. கொள்ளுப் பேரன் வந்திருக்கான். அவனை அழச்சிண்டு போகலாம். ஆனால் அவன் ரொம்பப் பொடிப்பயல்.”
“ஏன், இவன் அழச்சுண்டு போறான். சும்மாதானே இருக்கான்,” என்று என் தந்தை சொன்னார்.
“பேஷா அழச்சிண்டு போறேன், தாத்தா,” என்றேன்.
“எல்லாம் உங்க பேரன் மாதிரி அவனும்னு நெனச்சுக் குங்கோ. ஏய், ஜாக்கிரதையாய் அழச்சிண்டு போயிட்டுவா.”
“ம்.”
“இந்த மாதிரி பெரியவாளுக் கெல்லாம் செய்யறதுன்னா கொடுத்து வைக்கணும். இப்படி ஒரு சமயம் எங்கே வாய்க்கப் போகிறது?”
“ம்.”
“எத்தனை மணிக்கு வரணும்?”
“பத்தரை மணிக்குக் கிளம்பணும்.”
“அப்படியானா, பத்தே கால் மணிக்கு வந்து விடறேன்.”
“நல்லது, வரட்டுமா அப்ப?”
“சரி, நீங்க கவலைப்பட வேண்டாம். பத்தே கால் மணிக்கு சரியா வந்துடறேன்.”
“நல்லதுப்பா. யார் செய்யப் போறா! க்ஷேமமாயிருக்கணும் டாப்பா.”
சின்னக்குழந்தை கைத்தடியை எடுத்துக் கொண்டு, கால் கட்டையையும் மாட்டிக் கொண்டு படி யிறங்கினார்.
“ஏ அப்பா, ஜாம்பவான்கள்!” என்று என் தகப்பனார் சின்னக் குழந்தை வம்சத்திற்கே ஒரு சிரக்கம்பம் கொடுத்தார்.
“ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை, அவருக்கு ஒரு அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை…”
“என்னப்பா சொல்லிண்டே போறேளே?”
“ஏதுடா, அதான் நிறுத்திப்பிட்டேனே. அஞ்சு தலைமுறை. கடைசி இது தாசீல்தார் வயிற்றுப் பிள்ளை – பிள்ளையாய்ப் போயிட்டுது. பெண்ணா யிருந்திருந்தா அதுக்கும் ஒரு குழந்தை பிறந்து ஆறாவது தலைமுறை முளை விட்டிருக்கும்.”
“நினைக்கிறபோதே ஜோராயிருக்குப்பா, இல்லையா? நல்ல வளமான வைரமான இனங்கள்.”
“இவர் அப்பாவுக்குத் தொண்ணூற்றெட்டு வயசுன்னு சொன் னாரே, கேட்டியா? நாலைந்து வருஷமா இப்படியே சொல்லிண் டிருக்கார். இந்த மாமாங்கம் வந்துதே, அதுக்கு முதல் வருஷமே தொண்ணூற்றெட்டுன்னு சொன்ன ஞாபகம் எனக்கு. இப்ப நூற்று இரண்டு, நூற்று மூன்றுக்குக் குறையாது. தொண்ணூற்று எட்டாம்!”
“ஞாபகம் இல்லையோ என்னமோ இவருக்கு?”
“ஞாபகம் இல்லையா? யாருக்கு, கிழத்துக்கா? போன ஜன்மாவெல்லாம் சொல்லுவார் இவர். அதெல்லாம் ஞாபகப் பிசகில்லை. வயசைச் சொன்னா திருஷ்டி பட்டுடுத்துன்னா?”
“திருஷ்டியா?”
“ஆமாம், வயசாக ஆக, வயசைச் சொல்ல மனசு வராது மனுஷனுக்கு… தொண்ணூற்றெட்டாம்… இவர் பிள்ளை காசிக்குப் போயிருக்காரே, அவர், இவர், இவர் அப்பா மூணும் சேர்ந்துதான் ஒரு ஒற்றை மாட்டு வண்டியிலே மஸ்டர் டே யன்றைக்குப் பென்ஷன் வாங்கப் போகும். நாலு வருஷமா இப்படித்தான் நடக்கிறது. பெரிய கிழம் இருக்கே, அது உத்யோகம் பார்த்தது இருபத்தாறு வருஷம். ஐம்பத்தாறு வருஷத்திற்கு மேல் பென்ஷன் வாங்கி விட்டது. இந்தக் கிழமும் இருபத்திரண்டு வருஷம் பென்ஷன் வாங்கியிருக்கும். குட்டிக் கிழம் காசிக் கிழம் ரிடயராகி நாலு வருஷமாகிறது.”
“தாசீல்தாரும் சேர்ந்துக்கிற வரையில் பெரிய கிழம் இருக்குமோ…”
“ம். அவன் ரிடயராக இருபது வருஷம் இருக்கு…… ஏன்? ஆஸ்த்துமாதானே அதுக்கு வியாதி! ஆஸ்த்மா ஆளை வச்சு வச்சுக் கொல்லும். ஆஸ்த்மாக்காரர்கள் அஸ்வத்தாமா, பலி, வியாசர், ஹனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர் இவர்களைப் போல சீரஞ்சீவிகள். காலபாசம் கொஞ்சம் சிரமப் படக் கூடிய இடம்தான். அப்படியே பெரிய கிழவர் போயிட்டாலும் அவர் ஸ்தானத்துக்கு சின்னக் குழந்தை வந்துடறார். என்ன பிரமாதம்? மேலும் பெரிய கிழம் வாழாது என்று சொல்ல முடியாது. அது காப்பியை மூந்துகூட பார்த்த தில்லை. பிள்ளைக்கும் காப்பி தெரியாது. காசி யாத்திரைக் கிழத்திற்கும் காபி, டீ கிடையாது. தாசீல்தாருக்குத்தான் இந்தப் புது மோஸ்தரெல்லாம் உண்டு. அவன் இந்த மாதிரி பென்ஷன் வாங்க மாட்டான்னு நிச்சயமாச் சொல்லலாம்.
அப்பா நிறையச் சொல்லுவார். ஆனாலும் அம்மா ‘கிட்டு’ கிட்டு என்று பறந்தாள்.
“அம்மா கூப்பிடறா. போய் வெந்நீர் சுட்டுப் போச்சா பாரு, குளிச்சுப்பிடுவம்.”
நான் போகும் போது சின்னக் குழந்தை சாப்பிட்டுவிட்டு வாய் நிறைய வெற்றிலையை மென்று மென்று கொண்டு திண்ணையில் உட்கார்ந்து ‘தினமணி’ படித்துக் கொண்டிருந்தார்.
“என்ன தாத்தா?”
“வாப்பா, வா. அடெ! பத்தே காலுக்கே வந்துட்டியே. சொன்னாப் போலே. ஒரு நல்ல வண்டியாக் கூப்பிடேன்.”
வண்டிப்பேட்டை பக்கத்தில்தான் இருந்தது. ஒரு குரலுக்கு நல்ல வண்டி வந்து சேர்ந்தது.
“உள்ளே, வாப்பா.”
கூடத்தில் ஒரு பெஞ்சின் மீது லேடிக் கிழவர் சின்னக் குழந்தையின் தகப்பனார் உட்கார்ந்திருந்தார். லேடியென்று இப்போது சொல்ல முடியாதுதான். தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் விபூதி யிட்டாற் போல் மூன்று கோடு சந்தனம். கையில் உத்ராக்ஷ மாலை. வாயில் பாக்குரலில் இடித்த வெற்றிலை பாக்கு. அவர் வெகு நாழியாகக் கிளம்பச் சித்தமாகி விட்டார் என்று அல்பாகா கோட்டும், கழுத்தில் வளைந்த பழுப்படைந்த வெண்பட்டும் மணிக்கொடி சொல்லின. நூற்றிரண்டு வயசாகி விட்டதற்காக ஒரு அங்கமும் இதழ் தொகுப்பு குறைந்து விடவில்லை அவருக்கு. சாதாரணக் கிழவர்களைப் போலத்தான் இருந்தார். அவர் மனம் வெற்றிலை மணத்தில் லயித்திருந்தது.
அருகில் போய், “தாத்தா, சௌக்யமா?” என்று கேட்டேன்.
”யாரது, எனக்குக் கண்தான் சரியாகத் தெரியாது. காது கேட்கும்!” என்று பதில் வந்தது. இந்தக் கிழங்களுக்கு முன் இயல் பாகவே குரல் உச்ச ஸ்தாயியில்தான் பேசுகிறது நான். தவறு என்று உணர்ந்து கொண்டேன்.
“ஸப்ரிஜிஸ்ட்ரார் பையனப்பா. துணைக்கு வந்திருக்கிறான்.”
“ஓஹோ, அப்படியா, உன்பேர் கிருஷ்ணசாமிதானே?”
“ஆமாம்.”
“நீதானே புனா மிலிடரி அக்கௌண்ட்ஸிலே இருக்கே.”
“ஆமாம்.”
“லீவு எடுத்திண்டு வந்திருக்கியோ?”
“ஆமாம்.”
“ஒரு மாசமா?”
“ஆமாம்.”
“சரிதான். கல்யாணத்தைப் பண்ணிண்டு குடித்தனம் வைக்கப் படாதோ?”
“…”
“என்ன வயசாறது உனக்கு?”
“இருபத்தேழு.”
“என்னடாப்பா இது? இன்னும் சும்மா இருந்தா?”
“மணி பத்தரையாகப் போறது.”
“பத்தரையாகிறதா! அப்படீன்னா கிளம்பலாமே. என்னடா சின்னக் குழந்தை, கிளம்பலாமோல்லியோ?”
மணி சொன்னது பெரியவரைப் பரபரப்புக் குள்ளாக்கி விட்டது.
“சின்னக் குழந்தை!”
“இதோ, ஆச்சுப்பா. சட்டையைப் போட்டுண்டு வந்துடறேன்.”
“சட்டை போட்டுக்கப் போறியா? பேஷ். முன்னாடியே போட்டுக்க முடியலியா?”
“…”
“என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப் போறியோ, தெரியலை. சரி சரி, வா, சட்டுனு.”
சின்னக்குழந்தை புன்முறுவல் பூத்துக் கொண்டே உள்ளே போய் ஒரு ஒட்டுப் போட்ட கறுப்புக் கோட்டும், அதைச் சுற்றி ஒரு நாட்டுத் துணுக்கும் போட்டுக் கொண்டு வந்தார். கோட் ஸ்டாண்டிலிருந்த ஒரு வெண்பட்டை எடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு முண்டாசு – அல்லது தலைப்பாகை கட்டிக்கொண்டு, “போகலாமா?” என்றார்.
“ம்.”
“யாரங்கே, போயிட்டு வந்துடறோம் நாங்க. அம்மா, வரட்டுமா?”
இப்பொழுதுதான் அவர் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்திலேயே ஒரு மூலையில் நீட்டின காலோடு உட்கார்ந் திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் பெரிய சம்புட அகலத்திற்கு ஒரு சிகப்புத் தோடு தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.
பூஜை அலமாரியைத் திறந்தார் பெரியவர். பிரார்த்தித்துக் கொண்டார். சின்னக்குழந்தையும் நெடுஞ்சாங் கட்டையாக நமஸ் காரம் செய்துவிட்டுக் கிளம்பினார்.
”குழந்தே, ஜாக்ரதையாப் பாத்துக் கோடாப்பா,” என்று சின்னக்குழந்தை சம்சாரம் வந்து சிபார்சு செய்தாள். அவளுக்கும் மாமியார்க் கிழவிக்கும் அதிக வித்யாசம் தெரியவில்லை. பெரிய கிழவி நடக்க முடியாமல் மூலையில் கிடந்ததுதான் குறை.
சின்னக் குழந்தை தகப்பனாரின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தார்.
“காலைத் தூக்கி வச்சு வாங்கோப்பா.”
“தூக்கித்தாண்டா வக்யறேன். தெரியலியா?”
“நிலை. குனிஞ்சு வாங்கோ.”
“தெரியறது.”
“திண்ணையைப் புடிச்சிண்டுக்குங்கோ.”
“ஏன், இல்லாட்டா விழுந்துடுவேனோ? ஏண்டாப்பா!”
“இல்லே, சொன்னேன்.”
“என்னத்தைச் சொன்னே?”
வண்டியில் அவரை முன்னால் ஏற்றி விட்டு, சின்னக் குழந்தை ஏற, நானும் உட்கார்ந்து கொண்டேன்.
கஜானாவுக்கு அருகில் கூட்டத்திற்கா பஞ்சம்? அதுவும் பக்கத்தில் கலெக்டர் ஆபீஸ், கோர்ட்டுகள், நெல் கொள்முதல் ஆபீஸ் இவ்வளவு ஆபீஸுகளும் இருக்கும்போது, அந்தக் கஜானாவில் கூட்டத்திற்கு என்ன குறைச்சல்! பெரிய காம்பவுண்டு. தூங்கு மூஞ்சி மரங்கள் பரந்து நெருங்கி வளர்ந்து நிழல் எறிந்து இருந்தது. நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலைக் கட்டி அமர்ந்திருந்தன. போன வருஷம் பதவி விட்ட கிழம் முதல் சின்னக் குழந்தை வரையில் எவ்வளவோ கிழங்கள்.
வண்டி காம்பவுண்டுக்குள் நின்றது. மெதுவாக லேடிக் கிழவரைக் கீழே இறக்கி ஒரு தூங்குமூஞ்சி நிழலில் உட்கார வைத்தோம்.
“என்னப்பா, லேடி, சௌக்யமா? மஸ்டர் நாளைத்தவிர மத்த நாளில் உன்னைப் பார்க்க முடியாதுன்னு ஆயிட்டுது இப்ப.”
“யாருடா அது, கேதாரிராமனா?”
“ஆமாம்பா, ஆமாம்.”
“என்ன போ, இந்த வருஷம் ஆஸ்த்மா என்னைப் போட்டுக் கொன்னுடுத்து. ஏதோ போ, இழுத்துண்டு கிடக்கேன்.’
“யாரு நீயா? காந்தி போயிட்டார், நூத்திருவத்தஞ்சு, நூத்திருவத்தஞ்சுன்னு சொல்லிப்பிட்டு. நீ கட்டாயமா இருந்துதான் காமிக்கப்போறே.”
“எதுக்காக? என்னடாப்பா முடை? தேசோத்தாரணம் பாழாப் போறதே. அதுக்காகவா?”
“தேசோத்தாரணம் பண்ணினாத்தான் இருக்கணுமா, இல்லாட்டா இருக்கப் படாதா என்ன? ஏன் பிள்ளையை மாத்திரம் அழைச் சிண்டு வந்திருக்கே? பேரன் எங்கே?”
“காசிக்குப் போயிருக்கான்.”
‘காசிக்கா? போடு சாம்பிராணி. ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ?”
“நானுமா? பேஷ். ஹூசூர் கஜானாதான் காசியா இருக்கு நமக்கு. நன்னாச் சொன்னே போ. உன் பேத்தி பிரசவிச்சுட்டாளா?” “என் பேத்தியா? குழந்தை பிறந்து எத்தனை மாசமாச்சு! அடுத்த மாசம் ஆண்டு நிறைவு.”
“பிள்ளையா, பொண்ணா?”
“பிள்ளை.”
“பேஷ். உன் பிள்ளை லீவிலே வந்திருந்தானே. டூடியிலே ஜாயினாயிட்டானா?”
“போன ஏப்ரல்லெ வந்தானே, அதைச் சொல்றயா?”
“அதுதானே எனக்குத் தெரியும்.”
“ஜாயினாகி, இப்ப வேறே இரண்டு மாசம் மெடிகல் லீவிலே வந்துட்டு, மறுபடியும் போன மாசம் ஜாயினாயிட்டான். இன்னும் என்ன கேட்கப்போறே?”
“என்னத்தைக் கேக்கறது! வருஷத்துக்கு ஒரு நாள் சந்திக்கிற போது கேட்டுத்தானே ஆகணும்.”
அப்போதுதான் நானும் கவனித்தேன். லேடிக் கிழவரை எவ்வளவோ பேர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி ஒரு கூட்டம். பிரமாதமான வியப்போடு அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இது யார் பையன்? கொள்ளுப் பேரனா?” என்று கேதாரி ராமன் கேட்டார்.
“நாலு வீடு போட்டு அந்தண்டை இருக்கான். சப் ரிஜிஸ்ட்ரார் பிள்ளை, துணைக்கு வந்திருக்கான்.”
“போடு சாம்பிராணி! துணை வேறயா? நீ அவனுக்குத் துணையா? அவன் உனக்குத் துணையா?”
“என்னடாப்பா இது, எனக்கு உசிர் இன்னும் இருக்குன்னா, பலம் கூட இருக்கணும்னு அவசியமா என்ன? ஏண்டாப்பா?”
“அதுசரி, இதோடே எத்தனை மஸ்டர் ஆச்சு?”
“ஞாபகம் இல்லையே.”
“அறுபது இருக்குமா?”
“அறுபதா? 55-ம் 60-ம் நூத்திப் பதினைந்துன்னா! என்னடா இது ? நூத்திப் பதினஞ்சு வயசா ஆயிடுத்து எனக்கு?”
“பின்னே சொல்லேன்.”
“என்னமோ போ. இதெல்லாம் என்ன கேள்வி?”
“ஏன், கேக்கப்படாதோ?”
“கேட்டுண்டே இரு, போ.”
சின்னக் குழந்தை ஆங்காங்கு நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. ஆனால் தெரியவில்லை. நிழலில் படுத்தேன். தூக்கம் வந்து விட்டது.
சின்னக் குழந்தை எழுப்பிய போதுதான் மணி மூன்று என்று தெரிந்தது. சுயராஜ்யத்தைத் திட்டிக் கொண்டே வண்டியைக் கட்டச் சொன்னார் அவர்.
வண்டிக்காரன் மாட்டைப் பூட்டும் போது நான் கண்ட கனவு ஞாபகம் வந்தது. நான் ரொம்பக் கிழவனாகப் போய் விட்ட தாகவும், ஆனால் ரிடயர் ஆகாமலே பென்ஷன் கொடுக்கும் குமாஸ்தாவாக இருப்பது போலவும் ஸ்வப்பனம்.
எனக்கே சிரிப்பு வந்தது.
“என்னடா குழந்தே சிரிக்கறே?” என்று கேட்டார் சின்னக் குழந்தை.
“ஒண்ணுமில்லே.”
“என்ன, சொல்லேன்.”
“எல்லோரும் ஏன் ரிடயர் ஆறா?”
“அப்படின்னா?”
“ரிடயர் ஆகாமலே வேலை பார்க்கறது?”
“வயசாயிடுத்துன்னா என்ன பண்றது?”
“அப்படீன்னா இப்ப வேலை செய்ய முடியாதா உங்களுக்கு?”
திடீரென்று லேடிக் கிழவர் குறுக்கிட்டார். “ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங் கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுத் துன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியாப் போயிடறான்னு கவண்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக் கேத்தாப்போலே வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டுமேனிக்கு 55ன்னு வக்யறது மகா பேத்தல்.”
“சரி, வண்டியிலே ஏறுங்கோ.”
எல்லோரும் ஏறிக் கொண்டோம். வண்டி கிளம்பிற்று. காம்பவுண்டு தாண்டியதும் பறந்தது. மெயின் ரோட்டைக் கண்டால் தான் இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக் காரன் சொன்னான்.
நல்ல மேற்குத்திக் காளை. வண்டிக் குடமும் நல்ல அழுத்த மான குடம். குடு குடு வென்று, அமர்ந்து கேட்கும் இடிபோல முழங்கிக் காதில் இனிமை ஊற்றிற்று.
“என்னப்பா விலை மாடு?” என்று லேடிக் கிழவர் கேட்டார்.
“முந்நூறு ரூபாய்ங்க.”
“வண்டி?”
“இருநூற்றைம்பது.”
“பேஷ், இரண்டும் நல்ல அமைச்சல்.”
“பாவ் பாவ், டேய். க், க ஆவ்.”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கீழே கிடந்தேன். எனக்கு மேல் சின்னக்குழந்தையும் லேடிக் கிழவரும்தான் கிடந் திருக்க வேண்டும். வேறு யார் கிடப்பார்கள்? வண்டி பின் பக்க மாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டிற்று. மாட்டுக் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.
“ஏலே கொசப்பயலே, வண்டியைத் தூக்குடா, கூறு கெட்ட கொசப் பயலே.”
லேடிக் கிழவரின் குரல்.
எனக்குக் கை வலித்தது.
வண்டியை இழுத்தார்கள்.
லேடிக் கிழவரைத் தூக்கினார்கள். சின்னக் குழந்தை எழுந்து கொண்டார்.
எனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைந்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்தது தான் எனக்குத் தெரியும். கண் திறந்த போது எல்லாம் மெதுவாகத் தான் விளங்கிற்று.
கண்ணாடி போட்ட ஆசாமி; டாக்டர். பிறகு நர்ஸு.
ஜெனரல் ஆஸ்பத்திரி என்று தெரிந்தது. சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தார்.
“எக்ஸ்ரே எடுக்க வேண்டும்!” என்றார் டாக்டர்.
எக்ஸ்ரே அறைக்கு என்னைக் கொண்டு செல்லும்போது நடையில் ஒரு பெஞ்சில் லேடிக் கிழவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.
எக்ஸ்ரே எடுத்தார்கள். இரட்டை முறிவாம். பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு கையைக் கழுத்தோடு மாட்டி விட்டார்கள். வேறு ஏதோ வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு லேடிக் கிழவரும் சின்னக் குழந்தையும் ஏறிக் கொண்டனர்.
வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. எல்லோரும் இறங்கிய பிறகு இறங்கினேன்.
வண்டி நிற்கும் சத்தத்தைக் கேட்டு அம்மா வாசலுக்கு ஓடி வந்தவள், என் கோலத்தைக் கண்டதும், “என்னடா குழந்தே, என்னடா இது கோலம்?” என்று பதறி அருகில் வந்தாள்.
“ஒண்ணுமில்லேம்மா, சும்மா கத்தாதே வாசல்லே நின்னுண்டு… வண்டி குடை சாஞ்சுது. கை லேசா முறிஞ் சிருக்கு. தாத்தா அழைச்சிண்டு போய் க்ளீனா கட்டி அழச்சிண்டு வந்துட்டார்.”
சின்னக்குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்குப் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அவர் வெறும் சிராய்ப்போடு பிழைத்து விட்டார். லேடிக் கிழவருக்குக் குதிரை முகத்தில் மாத் திரம் அடியாம். வேறு காயம் இல்லை.
”அம்மா, எங்களோடு வந்ததுக்குத் தண்டனை உங்க குழந்தைக்கு. படுகிழவர்கள் இருக்கோமே, எங்களுக்கு ஏதாவது வரப் படாதோ. ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை…..”
“நாம் அழச்சிண்டு வந்துட்டோம்!” என்று முடித்தார் லேடிக் கிழவர்.
அம்மா மெத்தையைப் போட்டாள். படுத்துக் கொண்டேன்.
“மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடப்பா, ஆமாம்,” என்றார் லேடிக் கிழவர்.
“சரி, தாத்தா.”
– 1950, மணிக்கொடி இதழ்தொகுப்பு.