துக்கம்




“ஏல, வேலா வண்டிய எடு புள்ள மயங்கிடுச்சு என்னமோ தெரியல ஆஸ்பத்திரிக்கி போவணும் சீக்கிரம் எடு ல” பேரனைக் கைகளில் சுமந்து கொண்டு கத்தியபடியே ஓடி வந்தார் பெரியப்பா. வேலன் சித்தப்பா அவசர அவசரமாய் ஓடி டி வி எஸ் எக்சலை மிதித்தார். பெரியம்மை அப்பாவை போனில் அழைத்து கணேசன் அண்ணனின் மகன் மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததாகவும் பெரியப்பாவும் சித்தப்பாவும் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் சொல்ல மருத்துவமனை நோக்கி விரைந்தோம்.
பெரியப்பாவின் முரட்டுத் தனங்களை வியப்பவர் அப்பா. என் தோளை இறுகப் பற்றியபடியே அமர்ந்திருந்தார். மருத்துவமனைக்குள் அப்பா நுழைவதைக் கண்ட பெரியப்பா “ஏல தம்பி என்னமோ தெரியல திடீர்னு காத்தடிச்சு சாஞ்ச முருங்கைக் குச்சியா சாஞ்சிட்டான். எனக்கு ஒன்னும் ஓடல வேலன கூட்டிட்டு ஓடியாந்துட்டேன். அவன் அப்பனுக்கு என்ன பதில் சொல்வேன் நான் அந்தா அழுறாளே ஆத்தாக்காரி என் சட்டைய உலுக்கிக் கேப்பாளே என்ன பதில் சொல்வேன்” பெரியப்பாவின் கண்களில் இருந்து வழியத் தொடங்கியிருந்தது அவரது முரட்டுக் கண்ணீர். நான் அவர் கைகளைத் தயக்கத்தோடு பற்றினேன். பற்றியது தான் தாமதம். என்னைத் தோளோடு சேர்த்தணைத்து “ஏல செல்வம் போய் அந்த டாக்டர பாரு என்னனு கேளு” என்று அழுதார். “ஒன்னுமில்ல ப்பா சரியாய்டும்” என்று மேலும் இறுகப் பற்றினேன் மூட்டை தூக்கிக் காய்த்துப் போயிருந்த அந்தக் கைகளை.
செய்தியைச் சொல்லி கணேசனை அடுத்த ரயிலுக்கு புறப்படச் சொன்னேன். பெரியப்பாவுக்கும் அவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் பிள்ளையின் நிலை. இதற்கு முன்னும் இப்படி மயங்கி விழுந்து பிழைத்தவன் அவன். சின்கோப் என்றனர். இரத்த அழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறையும் பொழுது இப்படி மயக்கம் வரலாம் சில நேரங்களில் உயிரிழப்பும் நேரும் என்று சொல்லியிருந்தனர். அன்றிலிருந்து பெரியப்பா அவனை பொன்னோ பூவோ என்று தான் பார்த்துக் கொள்கிறார். அப்படி அவரைக் காணும் பொழுதெல்லாம் அப்பாவிற்கு வியப்பாய் இருக்கும். “சுருக்குனு கோவப்படுபான் பொசுக்குனு கை நீட்டுவான் மதினி வந்து மாத்த முடியல மவனும் மவளும் வந்து கூட மாறல. இந்தப் பொடிப் பய எப்படி பொட்டிப் பாம்பாக்கிட்டான் பாத்தியா. ஏல மொரடா அவன் குஞ்சான் மணில இருந்து வர ஒன்னுக்குக்கு பயந்து போய் கெடக்கியா” என்று சிரிப்பார். எல்லாவற்றையும் அசைபோட்டபடியே நான் அமர்ந்திருந்தேன். அழுகையை அடக்க அடக்க மனம் கனமாகவும் ரணமாகவும் ஆனது. என்னை என்னால் அசைக்கக் கூட முடியாத கனமானேன்.
மருத்துவர் வெளியில் வந்தார். நான் போய் விளக்கங்களைக் கேட்டேன். இதயத்துடிப்பு குறைந்திருப்பதாகவும் மருந்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை அல்லவா என்று கேட்டுக் கொண்டேன். நம்புவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பெரியப்பா வேலன் சித்தப்பாவின் அருகில் சென்றமர்ந்தார். ஏல மயக்கமா வருதுல என்று சாய்ந்தார். நான் போய் கொஞ்சம் தேநீர் வாங்கி வந்து கொடுத்தேன் எல்லோருக்கும். பெண்களெல்லாம் மறுபுறம் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர். யார் யாரோ எதை எதையோ சொல்லி அழுதனர். திடீரென “அய்யோ என்ன பாவம் செஞ்சேனோ எம்புள்ளைகள வாட்டுதே” என்று பெருங்குரலெத்து அழுதார் பெரியப்பா. அப்பாவின் கண்களிலும் கண்ணீர். சித்தப்பா இருவரையும் மேலும் நெருங்கி அமர்ந்தார்.
மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கவும் மருந்துகளைக் கொடுப்பதுமாகவுமே இருந்தனர். அதற்குள் கணேசன் வந்திருந்தான். எதுவும் பேசவில்லை. நேராக உள்ளே போய் மகனைப் பார்த்தான். வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டான். மருத்துவர் என்னை அழைக்க நான் அவரது அறைக்குப் போய் வந்தேன். எல்லோரும் அழுது வீங்கிய கண்களோடு அமர்ந்திருந்தனர். பெரியப்பா தனது பெரிய கண்களால் என்னைப் பார்த்தார். அந்தக் கண்களைக் கண்டும் அவரது அடர்ந்த மீசையைப் பார்த்தும் பயந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டது நினைவுக்கு வந்தது. “ஏல செல்வம்” என்று அவர் குரல் கம்மியது. நான் கணேசனின் தோள்களைத் தொட்டுத் தட்டினேன். அவனுக்கு என் சொற்கள் நான் சொல்லாமலேயே புரியும். “ஒக்காலி கொன்றுவேம்ல உன்ன” என்று எழுந்தான். நான் ஓவென்று அழுதேன் பெரியப்பாவைப் பார்த்து. பெரியப்பா அந்தப் பெரிய கண்களால் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா அவரின் முரட்டுக் கைகளைப் பற்றி நரம்புகள் புடைத்த அவரது சுருங்கிப் போன புறங்கையைத் தடவிக் கொண்டிருந்தார். எய்யா எய்யா என்றொரு விசும்பல் மட்டும் எனக்குக் கேட்டது.