தீபாவளி முறுக்கு




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரமா அமர்ந்து இடக்கையினால் முழங்காலைப் பற்றி, மறுகையால் கவனமாக முறுக்கு சுற்றிக் கொண்டிருந்தாள். முதலில் மாவைச் சுற்ற சற்று சிரமப்பட்ட விரல்கள் இப்போது சரளமாகி விட்டன.

“முதுகு வலிக்குதா ரமா?” மாமியார் கேட்டார்கள்.
“இல்லேத்தை, போட்டு முடிச்சுரலாம்” ரமா காரியத்திலேயே கண்ணாயிருந்தாள்.
ஆனால், அவன் மனம் வலித்தது. வரும் தீபாவளிக்காக அவள் வாரமாக மாடாக உழைத்திருந்தாள். வீட்டைக் கழுவி, ஒழுங்குபடுத்தி, பலகாரத்திற்கு வேண்டிய சாமான்கள் வாங்க பல கடைகள் ஏறி, இறங்கி மாமியாரின் மேற்பார்வையில் 4, 5 வகை இனிப்புகளை செய்திருந்தாள். இன்று கடைசியாய் கைமுறுக்கு.
எண்ணெய்யில் இட்டு எடுத்துக் கொண்டிருந்த மாமியார் “யம்மா… காலெல்லாம் பிடிச்சுக்குது” என்று எழுந்து போக வழியும் வியர்வையைத் துடைக்க நேரமில்லாது ரமா ஒருகையால் முறுக்குச் சுற்றிக் கொண்டு, மறுகையால் எண்ணெய்ச் சட்டியையும் பார்த்துக் கொண்டாள்.
நாத்தனார் கெளரியின் தலைத் தீபாவளி அது. விசேஷமாய் பச்சரிசி கரைத்து வீடு முழுக்க கோலங்களை இழைத்து நிரப்பியிருந்தாள் ரமா. பரணிலிருந்த பெரிய விளக்குகளையும் தாம்பாளத்தையும் இறக்கி, கண்ணைப் பறிக்கிறாற்போலதுலக்கி பூஜையறையில் வைத்தாயிற்று.
அவள் உடலும் மனமும் அலுத்து சலித்திருந்தன.
தீபாவளி நேரத்தில் எல்லா வீடுகளிலும் உள்ளதுதானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம்.
விடிந்தால் ரமாவிற்கும் தலைத் தீபாவளி என்பதுதான்!
போன மாதமே கெளரிக்கு 4000 ரூபாய்க்குப் பட்டும், வைர மூக்குத்தியும் தயார்.
தன்தாய் வீட்டிலிருந்து அத்தனை எதிர்பார்க்க முடியாதென்பது ரமாவிற்குத் தெரியும். அவளுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நான்கு நாட்கள் பெற்றோர் வீட்டில் பேசி, சிரித்து, நிம்மதியாய்க் கணவனோடு கழித்து வர வேண்டும் என்பது தான். அதுவும் தட்டிப் போக கண்கள் கசிந்தன.
கணவன் பெருமாள் நல்லவன் தானென்றாலும் தாய் பேச்சு தட்ட மாட்டான். ‘இடங்கொடுத்து மனைவி தலைமீதேறி விட்டால்?’ என்ற நினைப்பின் முறுக்கும் விரைப்பும் உண்டு!
ரமாவின் திருமணம் முடிந்த மாதம் கௌரியின் கல்யாணம். தனது சீரும், 7 பவுன் சங்கிலியும் நாத்தனாருக்குப் போடப்பட்ட போதுதான், தன்னை மாமியார் அவசரமாக மருமகளாக ஏற்றுக் கொண்ட காரணமும் அவளுக்குப் புரிந்தது.
“ஏன் ரங்கம், ரமாவுக்கும் தலைத் தீபாவளி. அவளுக்குப் பத்து நானா உட்காரக் கூட தேரமில்லை.” மாமனார் பரிந்து பேசுவது கேட்டது.
“ஏன்… வீட்டு வேலை, பட்சண வேலை இதெல்லாம் கத்துக்கறது நல்லது தானே?” மாமியாரின் ‘பட்’டென்ற பதில்,
“நல்லது தான், ஆனா 2 நாள் முன் தாய் வீட்டுக்குப் போகணும்னு அந்த பொண்ணு நினைக்காதா?”
“நம்ப கௌரி கல்யாணமாகி போயிட்டா எனக்கு ஒத்தாசையாயிருக்கும்னுதானே நீங்க பையன் கல்யாணத்தை அவசரப்படுத்தினீங்க. இப்ப ஏன் உருகுறீங்க?”
”ரமாவோட காசுமாலை, வெள்ளி சாமான், பத்தாயிரம் ரொக்கம் இதெல்லாம் உம்மக கௌரிக்குப் போட்டு அனுப்ப நீதான் பறந்தே! இப்ப இவளை இப்படி முறுக்கிப் பிழியணுமா?”
“எல்லாம் சாயங்காலமா போனாப் போச்சு” அலட்சியமாக பதில் வந்தது.
“பையனோட சீனியர் வக்கீல் கூட அவனைப் புதுமாப்பிளை, 2 நாள் முன்னாடியே கிளம்பு’னுட்டார். உனக்கு மனசு வராதே”
“இங்கேயிருந்து கோவில்பட்டி போய்ச் சேர 4 நாளா ஆகும்?”
கௌரியும் வந்து இறங்க, ரமாவிற்கு வேலை ஓயாது போனது. ஒரு வழியாக மாமனார் தயவில் அவன் கணவனோடு வீட்டை விட்டு கிளம்பிய போது இரவு மணி 10.
“மறுநாளே கிளம்பிடுங்கப்பா. எனக்கு முடியலை” என்று மாமியார் வழியனுப்புகையில் ரமாவின் மனம் கனத்துப்போனது. பாசமிகு பெற்றோர், தம்பிகளைப் பார்க்கும் பரபரப்பும் கனவுகளும் மெல்லப் பற்றிக் கொள்ள பயணத்தில் தூங்கிப் போனாள்.
இரவு 2 மணிக்கு வீட்டின் முன் ஆட்டோ போய் நின்ற போது வீட்டில் வெளிச்சம் தெரிந்தது. தட்டாமலேயே கதவு திறந்து கொண்டது.
“அக்கா, அத்தான்… வந்தாச்சு.”
“வாம்மா… இத்தனை நேரமாகப் பயந்திட்டோம்.”
“வாங்க மாப்பிள்ளை பெட்டியை நான் எடுத்துக்கறேன்”
“ராஜா, ஆட்டோவைப் பார்த்து அனுப்பு,”
வீடே பரபரப்பும் பாசமுமாக உபசரித்தது.
“முதல்ல படுங்க. ஐஞ்சுக்கெல்லாம் எழுந்துக்கணுமே.”
“ஏம்மா லேட்?” அம்மா ஆதுரத்துடன் கிசுகிசுத்தார்கள்.
“வக்கீல் வேலைன்னா லேசாம்மா? சீனியருக்கு இவர் மேல தனி பிரியம், நம்பிக்கை, ஆசு கடைசி நிமிஷம் வரை இவருக்கு முடியலை.”
முகம், கால் அலம்பி அறைக்குள் நுழையவிருந்த பெருமாள். அப்படியே நின்றான். மனைவியின் குணம் ஓரளவு தெரிந்ததுதானென்றாலும், இன்று அது புதிய பரிமாணத்தில் பளிச்சிட்டது! அவன் மனம் குழைந்து இளகியது.
“லேட்டானா என்னத்தை? 4 நாள் தங்கிட்டுப் போனா போச்சு. என்ன ராஜா.. பட்டாசெல்லாம் தயாரா? ஜமாய்ச்சிடுவோம்.” என்று சசஜமாய் மைத்துனன் தோளில் கணவனின் கை விழ ரமாவின் முதம் மத்தாப்பாய் மலர்ந்தது!
– உயிர் நாடி, பிப்ரவரி 1992.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.