தீட்டு
என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரில் இருந்து கிளம்பி ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணிக்கு பாலக்காட் சென்றடைந்தோம்.
இந்திர பிரஸ்தா ஹோட்டலில் அருணாச்சலம் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தான். அன்று மாலையில் நானும் சரஸ்வதியும் மலம்புழா அணைக்குச் செல்வதாக பேசி வைத்திருந்தோம்.
மூன்று மணிக்கு என் மொபைல் சிணுங்கியது.
‘அட அருணாச்சலம்’… மொபைலை எடுத்தேன்.
“டேய் கண்ணா, ஹோட்டலுக்கு வந்துட்டியா?”
“ஆமாம்…எப்படிடா இருக்க, கல்யாண ஏற்பாடெல்லாம் ஜோரா?”
“மச்சி எல்லாம் நல்லாத்தான் போகுது… ஆனா ஒரு பெரிய பிரச்சினைடா… நேர்லதான் சொல்ல முடியும். நான் உன்னை உடனே பாக்கணும். நீதான் வித்தியாசமா ஏதாவது ஒரு நல்ல ஐடியா கொடுப்ப. பத்தே நிமிஷத்தில் உன்னை வந்து பார்க்கிறேன்…”
மொபலைத் துண்டித்தான்.
அருணாச்சலமும் நானும் எண்பதுகளில் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் ஒன்றாக வேலை செய்தோம். இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டோம். அவனுக்குச் சொந்த ஊர் பாலக்காட்; நான் திருநெல்வேலி.
அவன் ஐஐஎம் புரொபசரிடம் செகரட்டரியாக இருந்தான். பாலக்காட்டின் புத்திசாலித்தனம் அவனிடம் தெறிக்கும். அப்போது அவன் தன்னுடன் வேலை செய்த ரமாதேவி என்கிற கன்னடப் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். நான் அறை நண்பன் என்பதால் அவர்கள் காதலைப்பற்றி அடிக்கடி என்னிடம் பீற்றிக்கொள்வான்.
இருவரும், மச்சி, பங்காளி, வாத்யாரே, போடா, வாடா என்றுதான் பேசிக்கொள்வோம். சிகரெட்டை பகிர்ந்து கொள்வோம். கோபம் வந்தால் அசிங்கமாக திட்டியும் கொள்வோம்.
நடுவில் எனக்கு பெங்களூரில் ஒரு நல்ல வேலை கிடைத்ததால் நான் அகமதாபாத்தை காலி செய்துகொண்டு பெங்களூர் வந்துவிட்டேன். அதன் பிறகு ஸ்ரீரங்கத்தில் சரஸ்வதியை முறையாகப் பெண் பார்த்து நான் மணந்துகொண்டேன்.
அருணாச்சலம் ரமாதேவியை திருமணம் செய்துகொண்டான்.
அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ஐஐஎம் கேம்பஸ்லேயே வீடு அலாட் செய்தார்கள். நாங்கள் இருவரும் அவ்வப்போது தொடர்பில் இருந்தோம்.
தன் ஒரே மகளை அருணாச்சலம் நன்கு படிக்க வைத்தான். அவளுக்குத்தான் இப்போது கல்யாணம். மும்பை ரிசர்வ் பாங்கில் வேலை செய்கிறாள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடந்த அருணாச்சலத்தின் அறுபதாம் கல்யாணத்திற்கு நானும் சரஸ்வதியும் போயிருந்தோம். அப்போதுதான் ரமாதேவியும், சரஸ்வதியும் அறிமுகமானார்கள்.
ரமாதேவி ஐஐஎம்மில் ஓய்வு பெற்றதும், அருணாச்சலம் தன் சொந்த வீடான பாலக்காட் தொண்டிகுளத்திற்கு குடி பெயர்ந்தான். தொண்டிகுளம் ஒரு அக்ரஹாரம். அந்தக் காலத்து ஆசாமிகள் அதிகம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம். அடுத்தவர்கள் வீட்டு விஷயத்தில் தலையீடும் அதிகம். இதை அருணாச்சலம் அடிக்கடி என்னிடம் போனில் சொல்லி அங்கலாய்ப்பான்.
அறைக்கதவு தட்டப்பட நான் எழுந்து சென்று கதவைத் திறந்தேன்.
அருணாச்சலம் உள்ளே வந்தான். என்னைக் கட்டிப்பிடித்து குசலம் விசாரித்தான். சரஸ்வதியிடம் நலம் விசாரித்தான். சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“சரி, என்னடா இப்ப பெரிய பிரச்சினை?”
“இல்லடா, முந்தா நேத்து எங்க தெருவுல ஒரு எண்பத்திரண்டு வயது கிழவி குளிக்கும்போது பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அவ தலைல பெரிசா அடி பட்டிருச்சு… ஹாஸ்பிடல்ல அவ இப்ப ரொம்ப சீரியஸா இருக்கா…”
“சரி, அதுக்கு என்ன இப்ப?”
“அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா, என் பொண்ணு கல்யாணம் நின்னு போகும்னு வயசான தொண்டிகுளம் ஐயருங்க என்னை பயமுறுத்தறாங்கடா…”
“அந்தக் கிழவிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? அவ வீட்டுலயா உன் மகளுக்கு கல்யாணம்?”
“கிழவிக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. கல்யாணம் வடக்கன்த்ரா கெளரி சங்கர் கல்யாண மண்டபத்துல நாளை நடக்கணும். அது தொண்டிகுளத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி…”
“அடப்பாவி, அப்ப எதுக்கு அவங்க உன்னை காப்ரா பண்றாங்க?”
“அந்தக் கிழவி எனக்கு தாயாதி முறையாம். அதுனால அவ செத்துட்டா எனக்கு தீட்டாம். நாளைக்கு காலேல ஒன்பது மணிலர்ந்து பத்தரைக்குள்ள முகூர்த்தம். இப்ப சனி பகல் மூன்றரை மணி. இன்னமும் இருபது மணி நேரம் அவ உசிரு தாங்கணும் கண்ணா… எனக்கு பொண்ணு கல்யாணம் நல்ல படியா நடக்கணுமேன்னு ரொம்பக் கவலையா இருக்கு…”
“இது என்னடா புதுத் தலைவலி… சரி, இதை நாம பதட்டப்படாம ரொம்ப கெட்டிக்காரத்தனமா ஹாண்டில் பண்ணனும்.. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் பொண்ணோட கல்யாணம் மட்டும் தடைபடக் கூடாது… ஒருவேளை அந்தக் கிழவி இறந்தாலும் சரி…”
“…………………………….”
“சரி, இப்ப அந்தக் கிழவி எந்த ஹாஸ்பிடல்ல இருக்கா? அவளோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் யாரு கூட இருக்கா?”
“Welcare ஹாஸ்பிடல்ல. அவளுக்கு முப்பந்தைந்து வயசுல ஒரேயொரு பேரன் மட்டும் இருக்கான். அவன்தான் அவ கூட இருக்கான்.”
“அவன் எங்க வேலை செய்யறான்?”
“அவன் வேலைக்கே போறதில்லை, எப்பவும் மப்புலதான் இருப்பான்…”
“சரி, நாம உடனே கிளம்பி ஹாஸ்பிடலுக்கு போகணும். இனிமே நான் இதை ஹாண்டில் பண்ணுகிறேன். நீ நிம்மதியா கல்யாண வேலைகளைப் போய்ப் பாரு.. உடனே கிளம்பு. நம்ம ஐஐஎம் நண்பர்கள் யார் யார் வந்துருக்காங்க?”
“ஜெயராமன், குமார், சிவக்குமார், தியாகு வந்தாச்சு… சுந்தரும், ராஜுவும் இன்னிக்கி ராத்திரி வருவாங்க…”
“சரி, நீ இப்ப எதுல வந்திருக்க?”
“சான்ட்ரோ கார்ல..”
மலம்புழா அணை விஸிட் இன்றைக்கு கிடையாது என்கிற உண்மை புரிய, சரஸ்வதி என்னை சோகமாக வழியனுப்பினாள்.
ஹாஸ்பிடல் சென்றடைந்து காரிலிருந்து இறங்கியதும், எங்களை நோக்கி அந்தப் பாட்டியின் பேரன் ஓடிவந்தான். அவனை எனக்கு அருணாச்சலம் அறிமுகம் செய்தான்.
அவன் பெயர் கேசவன். வெகுளியான முகம். நான்கு நாட்கள் தாடியுடன் ஒடிசலாக இருந்தான். அவனுடன் அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் மேத்யூவை சென்று பார்த்தோம்.
அருணாச்சலம் என்னை டாக்டரிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“டாக்டர் நீங்கதான் எப்படியாவது அந்தப் பாட்டியை பிழைக்க வைக்க வேண்டும்… எவ்வளவு செலவானாலும் சரி.”
“ஷ்யூர் மிஸ்டர் கண்ணன். எல்லா பேஷண்டுகளையும் உயிர்ப்பிப்பதுதானே எங்கள் தொழிலே? லெட்ஸ் ஹோப் பார் த பெஸ்ட்.”
“எனி எமர்ஜென்ஸி உடனே கேசவனை கான்டாக்ட் செய்யுங்க டாக்டர்..”
அங்கிருந்து கிளம்பி நானும் அருணாச்சலமும் கெளரி சங்கர் கல்யாண மண்டபம் சென்றோம்.
பெண் வீட்டு சாமா சாஸ்திரிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
“தாயாதி உறவுத் தீட்டு ஆகவே ஆகாது. அந்தப் பாட்டி உசிரு போகாம மட்டும் பாத்துக்குங்கோ… கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நான் நடத்தி வைக்கிறேன்…”
“சும்மா எங்களைப் பயமுறுத்த வேண்டாம். நாமள்ல்லாம் மட்டும் பிராமணாள நடந்துக்கறோமா என்ன? முதல்ல நாம யாரும் சந்தியாவந்தனமே ஒழுங்காக பண்ணுவது இல்லை. பிட்சை எடுத்து எவனும் சாப்பிடுவதில்லை; நீங்க மாப்பிள்ளைக்கு காசி யாத்திரை பண்ணுகிற லட்சணம் எங்களுக்குத் தெரியாதா? மாப்பிள்ளையிடம் ஒரு குடையைக் கொடுத்து, காசிக்கு போய்விட்டு வந்து விட்டான் என்று ஒரு ஐந்து அடிகள் நடந்துவிட்டு வருகிற மாதிரி, உங்கள் வசதிக்கு மாற்றி விட்டீர்களே? சமாவர்த்தனம் சாஸ்திரப்படி அதற்கு உண்டான பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு மாப்பிள்ளை உண்மையாகவே காசிக்கு போய்விட்டு வரவேண்டும். அதற்கு ஸ்நாதகன் என்று பேர். அதாவது பிரம்மச்சாரி கல்யாணத்துக்கு ரெடி என்று அர்த்தம். அவன் கிரஹஸ்தாஸ்ரமத்துக்கு தயாரான பிறகுதான் ஒரு பிரம்மச்சாரிக்கு கல்யாணமே நடக்க வேண்டும். ஆனால் இதை எங்கே நீங்க இப்போ கடைபிடிக்கிறீங்க?”
சாஸ்திரிகள் என்னைக் கோபத்துடன் முறைத்தார்.
“பூணல் போட்டவா கடல் கடந்து பயணிக்கக் கூடாதுன்னு ஒரு காலத்தில் எங்களை பயமுறுத்தினீங்க… ஆனா இப்ப உங்களோட வாரிசுகளே கனடாவுலயும், அமெரிக்காவுலயும், ஜெர்மனியிலயும் போடு போடுன்னு போடறதுகள்… ஆனா இங்க லோக்கல் சாஸ்திரிகளின் பம்மாத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை…”
அருணாச்சலம் சற்று பயந்து என்னை அங்கிருந்து தள்ளிச் சென்றான்.
“அருண், இனிமே எல்லாமே நம்ம கையில்தான் இருக்கு. லெட்ஸ் பிஹேவ் ஸ்மார்ட்… நம்ம ப்ரெண்ட்ஸ் எங்க தங்கியிருக்காங்க?”
“இங்க நாலு வீடு தள்ளி சப்தகிரின்னு ஒரு லாட்ஜ் இருக்கு அதுல…”
“என்னை உடனே சப்தகிரில ட்ராப் பண்ணிட்டு, நீ கையோட அந்தக் கேசவனை சப்தகிரிக்கு இழுத்துகிட்டு வா…. வரும்போது மறக்காம ரெண்டு புல்பாட்டில் அரிஸ்டோகிராட் விஸ்கி வாங்கிகிட்டு வா…”
“நம்ம ப்ரெண்ட்ஸ்ஸோட அவன் எதுக்குடா ட்ரிங்க்ஸ் பண்ணனும்?”
“நான் சொன்னதைச் செய்.. ப்ளீஸ்.”
போனில்பேசி, சரஸ்வதியை, ரமாதேவியுடன் வந்து இருக்குமாறு பணித்தேன்.
சப்தகிரி நண்பர்களிடம் நிலைமையை விளக்கினேன்.
தியாகுவிடம், “நம்ம குரூப்ல குடிக்காதவன் நீ ஒருத்தன்தான். ஆனா இப்ப இங்க வரப்போற கேசவனை முட்ட முட்டக் குடிக்கவைத்து மட்டையாக்கி விடவேண்டியது உன் பொறுப்பு…” என்றேன்.
அடுத்த நாற்பது நிமிடங்களில் அருண், கேசவனுடன் வந்தான். விஸ்கி பாட்டில்களை என்னிடம் ஒப்படைத்தான்.
“ஏதாவது எமர்ஜென்சின்னா வெளில ஒரு அம்பாசிடர் கார் டிரைவரோட இருக்கு…”
“சரி, எல்லாத்தையும் மறந்துட்டு நீ நிம்மதியா போய் கல்யாண வேலைகளைக் கவனி… எங்களுக்கு சைட் டிஷ் மட்டும் தாராளமா அனுப்பிவை.”
அருண் தயக்கத்துடன் அங்கிருந்து அகன்றான்.
கேசவனிடம் நாங்கள் நட்புடன் பழகி நிறைய ஊற்றிக் கொடுத்தோம்.
அவனை மாதிரி ஒரு மொடாக்குடியனை நான் பார்த்ததேயில்லை. கிட்டத்தட்ட ஒரு முழு பாட்டிலை அவனே காலி செய்துவிட்டு மட்டையானான். அப்போது மணி இரவு ஒன்று. அவனது மொபைலை பத்திரமாக என்னுடன் எடுத்து வைத்துக் கொண்டேன்.
மூன்று மணி இருக்கும். கேசவனின் மொபைல் சிணுங்கியது.
உடனே அதை எடுத்தேன். “ஹலோ…”
“கேசவன், டாக்டர் மேத்யூ இவ்விட… பாட்டி மரிச்சுப்போயி…”
என்னை நான் காட்டிக்கொள்ளவில்லை. டாக்டர் மேற்கொண்டு பேசிய மலையாளம் புரியவில்லை.
வெளியே காத்திருந்த காரில் உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றேன்.
“வேர் இஸ் கேசவன்?”
“டாக்டர், அவர் கோயமுத்தூர் ஏர்போர்ட்டுக்கு போயிருக்கிறார்…. பாட்டியின் நெருங்கிய உறவினர் காலை நான்கு மணிக்கு லேண்ட் ஆகணும்… ஆனா ப்ளைட் ரொம்ப லேட்… அவர் வரும்வரை பாடியை லாக்கர்ல ப்ரிசர்வ் பண்ணி வைங்க டாக்டர் ப்ளீஸ்…”
“ஓ ஷ்யூர்… பட் வி வில் சார்ஜ் யூ…”
“நோ ப்ராப்ளம் அட் ஆல்.”
சப்தகிரிக்கு வந்தேன். யாரிடமும் எதையும் மூச்சு விடவில்லை.
அனைவரும் குளித்து ரெடியாகி கல்யாண மண்டபம் சென்றோம்.
காலை பத்து மணிக்கு பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போடப்பட்டன. அருணாச்சலம் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
வெயில் உக்கிரமாக தகித்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் விறுவிறென சப்தகிரிக்குச் சென்றேன். அங்கு ஏராளமான வியர்வையில் ஜொள் விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கேசவனை அடித்து எழுப்பினேன்.
“கேசவா… பாட்டி மரிச்சுப்போயி…” என்றேன்.
அவன் அழ ஆரம்பித்தான். வெளியே காத்திருந்த காரில் அவனைத் திணித்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தேன்.
முகூர்த்த சாப்பாட்டிற்குப் பிறகு, நானும் சரஸ்வதியும் நிம்மதியாக மலம்புழா சென்றோம். அன்று இரவே பெங்களூருக்கு ரயில் ஏறினோம்.
தீட்டாவது சுண்டைக்காயாவது ?
Good and interesting. Days r changing. We have to move forward