திருவாளர் தண்டபாணி

0
கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2025
பார்வையிட்டோர்: 275 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவாளர் தண்டபாணிக்கு ஒரு அசாத்தியமான தைரியமும் நம்பிக்கையும் வளர்ந்திருந்தது. அவர் அப்படியேதான் நினைத்தார். 

இந்தச் சமுதாயம் அவரை மதிக்க வேண்டும். அவரைத் தாங்க வேண்டும்………! என்று. 

அவர் இல்லாமல் இந்தச் சமுதாயம் ஒரு காலமும் நேர் வழியில் போக முடியாது…….. அதற்காகத் தண்டபாணி என்ன செய்தார் தெரியுமா……..? கதிர்காமத்தில் ஒரு மடம் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அவரது…… தந்திர மூளை வேகமாகச் சுழன்றது… 

அவர் மத்திய மலைநாட்டிலும் ஊவா மாகாணத்திலும் உள்ள ‘பசை’யுள்ள பல கங்காணிமார்களைத் தனது அனுசரணையாளர்களாகப பிடித்துக் கொண்டார். 

தண்டபாணி கங்காணிமார்களின் வீடுகளைத் தனது உல்லாச விடுதியாகப் பாவித்தார். அவர்களின் சம்பாத்தியத்தில் ஒரு பங்கு கட்டிட நிதிக்காகச் சென்றடைந்தது. 

தண்டபாணி தான் செய்யும் தொழிலுக்கு மாறான உடைகளை உடுத்தினார். அவர் ஊர் விஜயம் செய்வதற்குத் தகுந்த படி முடி வெட்டி தலை அலங்காரம் செய்து கொண்டார். அழுக்குத் தூசிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய காவி நிறத்தில் ஒரு கதர் ‘ஜிப்பா’ அவரது கரடுமுரடான பயணத்திற்கேற்றவாறு பாரமான செருப்பு….. ஒரு குடை….. ‘சூட்கேஸ’ாக ஒரு சிறிய தகரப்பெட்டி அவரது முழுத் தோற்றத்தையும் பூரணப்படுத்திக் கொள்வதற்குப் பச்சை நிறத்தில் ஒரு சால்வையையும் தோளிலே போட்டுக்கொண்டார். 

இவர் யார்…? இவரது பூர்வீகம் என்ன என்று எவராலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஒரு மர்மம் நிறைந்த புத்தகம்………! பணம் புழங்கும் சில முக்கிய பருவ காலங்களை மிக அவதானமாக அறிந்து வைத்திருந்தார் 

கதிர்காமம், சிவனொளிபாதமலை யாத்திரைக் காலங்கள்…… தோட்டங்களில் சாமி கும்பிடும்……. திருவிழா காலங்கள்……. கொழுந்து காலங்கள்……… இப்படியான காலங்கள் அவருக்கு வசூல்களைச் சேகரித்துக் கொடுத்தன. 

ஒரு மத்தியானம். 

தண்டபாணி பகல் சாப்பாட்டிற்காக தனது கங்கானி நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். கங்காணி தண்டபாணியை வழமை போல வரவேற்றார். 

தண்டபாணி கதிர்காமத்திற்குப் போகிற வழியில் வந்தவரா………? கட்டிட வேலைகள் எல்லாம் எப்படி நடக்கின்றன…? என்று வினவினார். 

“கட்டிட வேலை முடிவதற்கு இன்னும் இரண்டு வருசங்களாகும்… திறப்புவிழாவிற்கு இந்தியாவுக்கான ஏஜன்ட்டை அழைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார். இந்த வருசம்…….. நிறையக் கதிர்காமப் பாடல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் புத்தக விற்பனையில் கிடைக்கும் காசெல்லாம் கட்டிட நிதிக்காகவே சேர்க்கப்படும்’ என்றார். 

வேலைக்காரன் சாப்பாடு ரெடி என்றான். ‘நெய் கொஞ்சம் கெடச்சா …….. வயித்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்……!’ என்று வேலைக்காரனைக் கேட்டார் தண்டபாணி … 

நெய் மட்டுமல்ல…… தயிர், மோர்…….. பருப்பு, ஊறுகாய், மிளகு, ரசம் ஆட்டுக் கறியெல்லாம் இருக்கிறது என்று வேலைக்காரன் விவரித்தான். தண்டபாணி வேண்டிய மட்டும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தார். 

ஒரு ஏப்பத்தோடு முன்வாசலில் அமர்ந்து சுருட்டைப் பொருத்தி ருசியாக இழுத்தார். 

‘அவசரமாக…….. எங்கேயும் போகவேண்டியிருக்கா…..? கங்காணி தண்டபாணியை கேட்டார். 

‘கொஞ்சம்…….. அவசரந்தான் சார்…. பரவாயில்ல. நான் இருக்கேன்……. ஒங்களுக்கு செரமம் கொடுக்க விரும்பல்ல…….. நீங்க ஜோலிய கவனிச்சிட்டு வாங்க…….!’ என்றார் தண்டபாணி. 

‘அப்ப…….. ராத்திரிக்கு ஒங்க பாடல்கள கேட்கலாம்……..!’ என்றார் கங்காணி. 

கங்காணியார் வேலைதலத்திற்கு ஆயத்தமானார். தண்டபாணி புகழாரம் சூட்டுவதற்காக கொஞ்சம் வார்த்தைகளை….உதிர்த்தார். 

‘வெள்ளைக்கார எஜமான்கள் ஒங்களுக்கு தங்கத்த அள்ளிக்கொடுக்கணும் சார்……..! ஒங்க மாதிரி ஆளுக இல்லாட்டிபோனா பரந்து கிடக்கும் இந்த தோட்டங்கள யார் நடத்துவாங்க..? முடிவில்லாத இந்த பச்ச செடிகளம் பார்க்கிறபோது இந்த அழகான தோட்டங்களையெல்லாம் உண்டாக்கி கொடுக்கும்படி மகான் ஸ்ரீ ராமர் தான் ஒங்கள இங்க அனுப்பி வச்சிருக்காருன்னு நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு. அற்புதம்……..! ஆஹா! என்ன அற்புதம்…….!’ என்றார் தண்டபாணி. 

தண்டபாணியைக் கவனித்துக் கொள்ளும்படி வேலைக்காரப் பையனிடம் சொல்லிவிட்டுச் சென்றார். 


அந்தி நேரம் ஆறு மணி. 

தண்டபாணி குளித்து முழுகிப் புது உடைகள் அணிந்து மாப்பிள்ளை மாதிரி ரெடியாக இருந்தார். தண்டபாணியின் பாடல்களைப் கேட்பதற்கு பெரியங்கங்காணியாரும் வீட்டிலுள்ள ஆள்களெல்லாரும் ஆப்பிஸ் முன் அறையில் கூடினார்கள். மழை, வெயில் என்று சகல சுவாத்தியங்களுக்கும் ஈடுகொடுக்கும் அந்தத் தகரப்பெட்டியிலிருந்து மிகவும் பெருமையோடு பாடல் குறிப்பேடுகளை எடுத்தார் தண்டபாணி. 

சோபாவில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு பாடலை அடித் தொண்டையிலிருந்து எடுத்தார். 

சிறிது நேரத்திற்குள் கோப்பி பரிமாறப்பட்டது. கோப்பியை மெதுவாக உறிஞ்சி குடித்துவிட்டு…… பாடலை மீண்டும் தொடங்கினார். 

இரவு சாப்பாட்டு நேரம் வரை பாடல் தொடர்ந்தது.

மிகத்திருப்தியான உணவுக்கும் நிம்மதியான நித்திரைக்கும் பின்னர் மறுநாள் காலை சுகமாக எழும்பினார் தண்டபாணி. 

காலை உணவு.. மேசையில் நிறைந்திருந்தது. பெறுமதியான ஆகாரம்…….. 

‘காய்ந்த மாடு கம்பிலே பாய்ந்த மாதிரி’ இரண்டு தட்டு உணவுகளை ஒரு ‘பிடி’ பிடித்து ஒரு டம்ளர் பால் காப்பியையும் அருந்தி பதினைந்து ரூபாய் அன்பளிப்போடு கிளம்பினார். 

தண்டபாணி இன்னும் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் பக்கத்து தோட்டத்துக்கு பகல் சாப்பாட்டுக்கு நேரத்தோடு செல்ல வேண்டும். இவ்வாறு இவரது வாழ்க்கை அமைதியான ஓடையாக நகர்ந்தது. 

என்றோ ஒரு நாள்…….. தொழிற்சங்க பலத்தால் தோட்டங்கள் ஆட்டம் காணும் வரை…….. இந்த கதாநாயகர்களின் வாழ்க்கை நிர்மலமான ஓடையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும்……. 

-1940 

கதிர்காமம், சிவனொளி பாதமலை கடவுளர்கள் இப்போது இடம் மாறிவிட்டார்கள்……..! 

அவர்களைத் தொழிற்சங்கக் காரியாலயங்களில் தண்டபாணி பார்த்தார்!. 

தண்டபாணி தோட்டங்களை பற்றி தோட்டத்தில் உள்ளவர்களை பற்றி பரந்த அறிவு பெற்றிருப்பதை மாவட்டத்தலைவர் அறிந்தார். 

இவர் ரொம்பவும் பிரயோஜனமானவர் என்பதை உணர்ந்தார். இவருக்குள்ள திறமைக்கு பிரச்சார வேலைகளுக்குப் பொருத்தமாக இருப்பார். எவரையும் புகழ்ந்து பாடக்கூடியவர், கவர்ச்சியாகப் பேசக்கூடியவர்…….. 

வளர வேண்டிய ஒரு தலைவனுக்கு இவரைப்போன்ற ‘பிரச்சார பீரங்கிகள்……… அவசியம் தேவை…..! என்று நினைத்தார். 

கொழும்பிலிருந்து பெரிய தலைவர் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தபோது தண்டபாணியும் அவர்களோடு இணைந்து கொண்டார். 

தண்டபாணி பிரச்சாரவேலைகளுக்கு ஒரு சிறந்த மனிதர் என்று மாவட்ட முக்கியஸ்தர்கள் பெருந்தலைவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

பெருந்தலைவர் பேசுவதற்கு எழும்பினார். வானதிரப் பரவசக் பெருமை கூச்சல் கரகோசம்……. மகிழ்ச்சி ஆரவாரம்! மிகுந்த பேரொலிகள் இத்யாதி தலைவர் பெருமானை வரவேற்றன……. 

பெருந்தலைவர் ஒரு கணம் பெருமிதத்தில் மிதந்து நின்றார். தலைவர் பேசுவதற்கு முன்பதாக பாடுவதற்கு தண்டபாணி உத்தரவு கேட்டார். பொது மக்கள் மத்தியில் தண்டபாணி ஒரு சிறந்த பாடகர்.! பாட்டாளி மக்களின் சேவகன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். 

மாவட்டத் தலைவர்மார்கள் வியப்படைய………. பெருந்தலைவர் மகிழ்ச்சியில் திகழ… தண்டபாணி பாட்டை எடுத்துவிட்டார்…….! 

‘இது வெற்றி முரசு
கொட்டும் சங்கம் ……..!
எங்கள் தலைவர்………
வீரம் நிறைந்த ஒரு சிங்கம் 
தீரம் நிறைந்த ஒரு சிறுத்தை… 
சூரன் என்ற மலை சிறுத்தை……..! 
வெற்றி முரசு கொட்டும் சங்கம்.. ! 

பாட்டு முடிந்ததும் பாராட்டுக் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தன. பெருந்தலைவர் அசையாது ஆசனத்தில் இருந்து கொண்டு ஆனந்தமாகக் கை தட்டினார். 


பொதுக்கூட்டம் முடிந்து திரும்பும்போது…….. தண்டபாணியைத் தொழிற்சங்கத்தில் ஒரு வேலையை பாரமெடுக்கமுடியுமா என்று கேட்டார்கள். 

ஒரு நடமாடும் பிரதிநிதியாக…… ஒரு வரையறுக்கப்பட்ட வேதனமின்றி செயற்பட விருப்பமில்லாமலே தண்டபாணி சம்மதம் தெரிவித்தார். 

தண்டபாணி தொழிற்சங்கத்தில் கடமையேற்றார். 

அவர் ஒரு இடத்தில் அமர்ந்து எந்தவித கடினமான வேலையையும் வேலையை அவர் செய்தது கிடையாது…….. ஒரே வகையான விரும்பவில்லை…….. 

இன்றைக்கு ஒரு மாவட்டம்… நாளைக்கு ஒரு மாவட்டம்….. என்று போய்விடுவார். ஒரு மாற்றத்துக்காக சில பெரிய தலைவர்களுக்கு சிறு தொண்டு செய்வார். 

கூடுமான வரையில் தண்டபாணி மாவட்ட தலைவர் வீட்டில் காலை, பகல், இரவு சாப்பாட்டை வைத்துக்கொள்வார். 

சாப்பாட்டுக்கு கொஞ்ச நேரம் பிந்திவிட்டாலும் கடிந்து கொள்வர்…….. 

‘சார்! நீங்க உண்மையிலே மக்களுக்கு சேவை செய்ய வேணுமுன்னா ……. ஒங்க ஒடம்ப கவனிச்சுக்கனும்! எல்லா விசயங்களுக்கும் ஒரு நேரம் இருக்கு…….. சாப்பாட்டை மட்டும் அசட்டை செய்யக்கூடாது.’ 

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சங்கக்காரியாலயத்தில் அங்கத்தவர்கள் அதிகமாக வந்துவிட்டால்…….. அவர்களுக்கு அறிவுரை. கூறுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார். 

ஒரே மூச்சில்……. மூன்று ‘கேஸ்’களை கவனித்துக்கொள்வார்.. ‘இது’ களவு கேஸ்! நம்ம சங்கத்த ஒடைக்கிறதுக்கு அந்த ராஸ்கல் பழனியாண்டி கங்காணி சோடிச்ச கேஸ்! அவன எனக்கு தெரியாதா’! அவன் தோட்டத்துல கடை ஒன்னு வச்சிகிட்டு பொய் கணக்கு எழுதி ஏழை தொழிலாளர்களை சொரண்டிகிட்டு இருக்கிறான்……..!’ 

ஆப்பிஸ் க்ளாக்கர் பக்கம் திரும்பி ‘போலிசுக்கு கோல் எடு’ என்பார். 

அடுத்த பிரச்சனையை பார்த்துவிட்டு, 

‘இது பத்துச்சீட்டு கேஸ்’ ‘கிளாக்’! இந்த முழுக் கதையையும் கேட்டு எழுது…….. நம்ம தலைவர் இந்தக் கேஸை கவனிப்பார்…….. அவர் தீர்த்துவைக்காத கேஸ்னு எங்கேயும் இருக்கா….. 

தண்டபாணி கடைசி கேஸ் பக்கம் வருவார். இது குடும்பப் பிரச்சனை …… தோட்டத்துக்கு போய்தான் கவனிக்கணும்……. ‘இங்க பாரு ராமையா……..! நாங்க அடுத்த கெழம வர்ரோம்……. நம்ம தலவர கூட்டிக்கிட்டு வர்ரேன். கார் அயர் காச நீதான் கட்டணும்………!’ என்பார். 

பக்கத்துத் தோட்டத்தில் அங்கத்துவப் பெருக்கம் நாளில் முழு நேரமும் இருப்பார். 

மாவட்டத் தலைவருடன் தனது கங்காணி நண்பர் வீட்டுக்கு ஒரு நாள் சென்றார். 

கங்காணி நண்பர் தண்டபாணியைக் கண்டு அதிர்ந்து போனார். ஒரு சமூக சேவகன்…….. இப்படி தொழிற்சங்கவாதி உடையில் வந்து நிற்கிறார்……..! 

‘ஆ……..! இப்ப நீங்க சங்கத்துல இருக்கிறீங்களா ……..?’ 

‘ஆமாம் சார்……..! நீங்க எப்போதும் என்னை நல்லவனா தான் பாப்பீங்க……! 

தனது யூனியனுக்கு அங்கத்துவம் சேகரிக்கும் வேலையில் கங்காணியிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் பரஸ்பர நன்மையைக் கருதி இரவுச் சாப்பாட்டையும் கங்காணி வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டார். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்ட தண்டபாணி கங்காணியிடம் நயந்து பேசி இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொண்டார். 

படுக்கைக்குப் போகுமுன் கங்காணி நண்பரிடம் உறுதியளித்தார். எந்த சந்தர்ப்பத்திலும் கங்காணி பெரட்டு ஆட்களை தோட்ட பெரட்டுக்கு மாற்றிவிட மாட்டோம் என்றார். 

மறு நாள் காலையில் கங்காணியிடமிருந்து பரிசுப்பொருட்கள்…….. காசு மற்றும் பல சாமான்களோடு புறப்பட்டார். 

தொழிற்சங்கச் செயற்பாடுகள் தோட்ட நிர்வாகங்களை ஆட்டி வைத்தாலும் இவரைப் போன்றவர்களை இன்னும் ஆட்டம் காண வைக்க முடியவில்லை…….. 

திருவாளர் தண்டபாணியின் வாழ்க்கை பொங்கி வழியும், கரை காணாத ஆறாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

– ஆங்கில தொகுதி: In the right Direction, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *