கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 1,408 
 
 

(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. கமலா

பேயும் நடு நடுங்கும் பாழும் இருளிலே நான் புறப் பட்டேன். என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண் டிருந்தது. கையிலே காசில்லை. கட்டியிருந்த கந்தைத் துணியைத் தவிர வேறு துணியும் கிடையாது. அத் தான் வைத்துவிட்டுப்போனபணத்தின் மீதியைக்கூட வீட்டிலேயே விட்டு விட்டேன். என் உள்ளத்திலே பயங்கரமான சிந்தனைகள் போய்க் கூத்தாடிக் கொண்டிருந்தன. எனக்கு வாழ்க்கையிலே நம்பிக்கையற்றுப் போய்விட்டது. நான் எங்கு போய்க் கொண்டிருந்தேன்…

ஓடுகின்ற ரயில்… பயங்கரமாக என் மனக்கண் முன்னே இரைந்து கொண்டு ஓடி வந்து கொண்டிருந் தது. நல்ல பாம்பு படமெடுத்துச் சீறிக்கொண்டிருந் தது. ஆழமான கிணறு தன் அகலவாயைத் திறந்து என்னை வாரி விழுங்கிவிடுகிறேன் என்றது, அலைக் கின்ற கடல் தன் ஆயிரம் கரங்களை நீட்டி வா வா வென்றழைத்தது அவற்றை நான் மனமார வாழ்த் தினேன். வாயார நன்றி செலுத்தினேன். வாழ வழியற்றுப்போன ஏழைகளுக்கு…. என்னைப் போன்ற திக்கற்ற அபலைகளுக்கு இடம் கொடுக்கத் திறந்த உள்ளத்துடன் காத்துக் கொண்டிருக்கும் இயற்கையின் செல்வங்களே… என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அனாதை….அபலை. இந்தக் கொடிய உலகத்திலே பிழைக்கத் தெரியாத பேதைப் பெண்… என் கணவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். நீங்களும் என்னைக் கை விட்டு விடாதீர்கள் என்று என் உள்ளம் இரைந்து கொண்டிருந்தது.

கருமுகில்களுக்கிடையிலே தெரிந்த நட்சத்திரங் களில் ஒன்று உதிர்ந்து விழுந்தது. அங்கே அந்த வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள்…! உதிர்ந்து விட்ட அந்த நட்சத்திரத்திற்காகக் கண்ணீர் விடுவார் யாருமில்லை. கவலைப்படுவார் யாருமில்லை. கவனிப் பார் இல்லாத ஒரு நாய் நின்று ஊளையிட்டது. அந்த நாயாகப் பிறந்திருந்தால் நான் வாழ்ந்திருக்க முடியும் ! நடமாட்டமற்ற சாலைகளிலே நெடுங் கரங்கள் நீட்டி நின்ற மரங்கள் காற்றில் சல சலத்தன. சாவை நோக்கி நடந்து செல்லும் இந்த அபலையைக் கண்டு அவை பயன் படா வேதனையைத் தெரிவித்துக் கொள்கின்றன. ஹும்…மனிதர்…. அந்த உணர்ச்சி கூட உண்மையாகக் காட்டப் போவதில்லை.-உயிருடன் இருக்கும் வரை ஏசுவர் பேசுவர். செக்த பிணமாய்க் கண்டால் சுச் சுச் சூ என்பர்.

தூரத்திலே கோட்டான் ஒன்று அலறியது. கால தேவனின் அழைப்பு…. இதோ என் வாழ்க்கை முடியப் போகிறது. உலகத்திலே நான் இருந்த இடம் சூன்யமாகப் போய் விடும். தற்கொலை செய்து கொள்ளும் எனக்கு நரசும் தான் கிடைக்கும். நரகத்தின் வாயில் கள் என் வருகைக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் பரவா இல்லை. நரகம் உலகத்தைவிட நல்லதாகத்தான் இருக்கும். அங்கே துன்புறுவார் இருக்கலாம். வேதனை கள் இருக்கலாம். ஆனால், காமுகர்கள் இருக்க மாட் டார்கள். மனிதரை விலைபேசும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஏமாற்றும், வஞ்சிக்கும், இச்சகம் பேசி இழுத்துப் பறிக்கும் எத்தர்கள் இருக்க மாட்டார்கள். நரகம் உலகத்தை விட இனியதுதான். நான் அங்கு செல்வேன்….!

நான் வேகம்வேகமாக நடந்து கொண்டிருந்தேன் எங்கோ ஒரு தாலாட்டுக் கேட்டது. ஏதோ ஒரு குடிசை யில் நள்ளிரவில் விழித்துக்கொண்ட ஒரு குழந்தையை அதன் தாய் தூங்கப் பண்ணுகிறாள். இவர்களெல்லாம் வாழ்கிறார்கள்! நான் மட்டும் சாகப் போகிறேன். என் குழந்தை….!

என் இதயம் விம்மியது. வாய் விட்டுக் குமுறி அழாமல் இருக்க முடியவில்லை. என் செல்வத்தைப் பார்த்துக் கொண்டேன். அத்தான்… இதற்காகவா என்னை விட்டுப் போனீர்கள். அத்தான்… ஆருயிர் அத்தான்…. இதற்காகவா என்னை விட்டுப் போனீர்கள். நான் ஒன்றும் தெரியாதவள். இவ்வளவு கொடிய உலகத்தில் இந்தப்பேதை எப்படித் தனித்து வாழ்வாள் என்று சிந்தித்தீர்களா? அத்தான் நான் சாகப் போகிறேன் அத்தான். போர்க்களத்திலே…. எங்கோ தொலை தூரத்திலே இருக்கும் உங்களுக்கு இந்தச்செய் தியை யாரும் வந்து சொல்லப் போவதில்லை. ஒரு சம யம் நீங்கள் திரும்பி வரலாம் என்னைத் தேடி என் அருமைக் குழந்தையைத் தேடி ஓடி வரலாம். ஆனால் நீங்கள் எங்களைக் காணமாட்டீர்கள். நீங்கள் எப்படி எங்களிடம்சொல்லாமல் ஓடிப்போனீர்களோ…. அதைப் போல் நாங்களும் உங்களிடம் சொல்லாமலேயே ஓடிப்போகிறோம். மீண்டும் சந்திக்க முடியாத இடத்திற்கு… அத்தான் எங்களை அப்பா விடமாவது சேர்த்து விட்டுப்போனீர்களா….? ஐயோ….யாரை வாழ்விப்பதற்காக நீங்கள் பட்டாளத்தில் சேர்ந்து படு களத்திற்குப் போனீர்களோ… அவர்கள் அதே காரணத்தால் வாழ முடியாதவர்களாகிச் சாவை நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றனர். அத்தான்….! என் அப்பா அறிந்திருந்தால்…?

அப்பாவைப்பற்றி நினைக்கும் போது… ஐயோ துன்பம் சகிக்க முடிய வில்லையே….என் இதயம் இப்படியே வெடித்துப் போகாதா….? அப்பா… எங்களை அருமையாக வளர்த்த அப்பா… இனி நீங்கள் எங்களைக் காணப்போவதில்லை. எங்கள் முடிவைப்பற்றி அறிந்தால் நீங்கள் மனம் உடைந்து மடிந்தே போவீர்கள். ஆனால், நீங்கள் வாழவேண்டும். விமலாவுக்காக….! ஐயோ நான் மட்டும் ஏன் வாழக்கூடாது? என் கண் மணிக்காக….

நான் என் செல்வத்தினுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டேன். அதற்குமேல் என்னால் நடக்க முடியவில்லை. அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். நேரம் போனது தெரியாமல்.

கோழி கூவியிருக்கும், காகங்கள் கரைந்தன. பொழுது விடிந்து கொண்டிருந்தது. நான் எதையுமே உணர்ந்தவள் அல்ல நான் அப்படியே சாலையின் நடுவே உட்கார்ந்து என் செல்வத்தை இறுக அணைத்த படி உறங்கிக் கொண்டிருந்தேன்.

பெண்களின் பேச்சுக்குரல் கேட்டு நான் விழித்தேன். “யாரோ பாவம் சின்னப்பொண்ணு….” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. “நடு ரோட்டில் தூங்கறாளே.. ஏதாவது மோட்டார் கீட்டார் வந்தால்…” என்றாள் இன்னொருத்தி, நான் விழித்துக் கொண்டதைப் பார்த்ததும், “ஏன் அம்மா இப்படித் தூங்கறே…. குழந்தையையும் கையிலே வெச்சுக்கிட்டு…” என்று கேட்டாள் ஒருத்தி என் குரல் தடுமாறிற்று, ‘நான் சாவதற்கு வந்தேன்’ என்று சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். “அடப் போம்மா… பைத்தியக்காரியா இருக்கறியே….அப்படி வலிய வலிய உயிரை விட்டுடறதுன்னா முடியற் காரியமா…? எந்திரியம்மா… இந்தப் பெரிய உலகத்திலே உனக்குத் தான பொழைக்கறதுக்கு வழி இல்லாமேப் போச்சு….?’ என்றாள் வயது முதிர்ந்தவளாகக் காணப்பட்ட ஒரு மாது. நிராசை நிறைந்த கண்களுடன் அவளைப் பார்த்து “பிழைக்கறதுக்கு வழி இருக்கிறதா… நான் அனாதையம்மா…” என்று கூறி னேன். பேசும் முன் துயரம் நெஞ்சை அடைத்தது. கண்ணீர் பீறிட்டது. அவள் குனிந்து என் கண்களைத் துடைத்துக்கொண்டே, “உடம்பு வளைஞ்சு பாடு பட்டா உசிரு பிழைக்கறதுக்குத் தானா மார்க்கம் இல்லே பச்சைக் குழந்தையையும் வெச்சுக்கிட்டு சாகப் போறேங்கறயேம்மா…. என்ன பொண்ணு நீ” என்று சொல்லிக்கொண்டே குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

இரவெல்லாம் என்னைக் கூவி அழைத்த சாவு என் கண் முன்னால் இருந்து பின் வாங்கிவிட்டது. இப்பொழுது வாழ்வின் குரல் கேட்கிறது. பசிய மரங்களின் மேலே இருந்து பறவைகள் கல கல வென்று பாடிக் கொண்டிருந்தன. அவை வாழ்கின்றன. வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வாழ்வில் தற்கொலைச் சிந்தனை இருக்கிறதா….நான் எழுந்திருந்து அவர்களோடு நடந்தேன்.

அன்று முதல் நானும் ‘வாழ’ ஆரம்பித்தேன். சாலைகளிலே கற்கள் உடைத்தேன். ரோலர் இழுத்தேன். நெல் அரைக்கும் இயந்திர சாலையிலே நெல் எடுத்துக் கொட்டினேன். வீடு கட்டினேன். கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த கூலியைப் பெற்று நானும் என் குழந்தையும் உயிர் வாழ்ந்து வந்தோம். நான் எங்கே வேலைக்குப் போனாலும் அங்கே என் செல்வத்தையும் எடுத்துப் போவது வழக்கம். அவன் சாலைகளிலே புளியங் கொம்புகளில் கட்டிய தூளிகளில் உறங்கினான். இயந்திரசாலைகளின் கூடங்களில் விளையாடினான். கடவுளே… எங்களுக்கு இந்த வாழ்வு வரும் என்று நான் கனவிலாவது கருதியிருப்பேனா….?

நான் ஒன்று மட்டும் கற்றுக் கொண்டேன். “வாழ்வு என்பது மாடி வீடுகளிலும் பணம் உடையவர்களிடையே மாத்திரமும் அடைந்து கிடப்பதல்ல. அது மிகப் பரந்த ஒன்று, வாழ்க்கையிலே எவ்வளவு பாதாளத்தில் கிடப்பவனுக்கும்…. அவனுடைய வாழ்விலே ஒரு பொருள் இருக்கிறது. அர்த்தம் இருக்கிறது. அது எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருந்தாலும் அதை வேறெதற்கும் மாற்றாக அவன் கொடுக்கமாட்டான். எவ்வளவு செல்வம் அவன் காலடியிலே குவிக்கப்படுவதானாலும் அதற்கு மாற்றாக அவன் தன் வாழ்வை இழக்கச் சம்மதிக்க மாட்டான். இன்பமும் துன்பமும் செல்வமும் வறுமையும் எல்லாம் வாழ்வு உள்ளவரை தானே…. ?

நான் சாவதற்கு இருந்தேன். இப்பொழுது வாழ்வதற்கு முயல்கிறேன். வாழவேண்டும் என்ற ஆசை வந்தவுடனே நான் எவ்வளவு வேகமாக மாறிவிட்டேன் முதலாவதாக என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். எத்தனை நாட்களாகியும் அதற்குப் பதில் கிடைக்க வில்லை. அத்தான் அடிக்கடி கடிதம் எழுதுவதாக எழுதியிருந்தார். ஆனால்…

நம்பிக்கை என்ற கயிற்றைப் பிடித்துக் கொண்டு நான் எனக்கு ஒழிவு கிடைத்த போதெல்லாம் எங்கள் பழய வீட்டை நாடிப்போய்க் கொண்டிருந்தேன். தெரிந்த மனிதர்கள் யாராவது பார்த்து விடக்கூடாதே என்ற பயம். அஞ்சி அஞ்சி.. மறைந்து மறைந்து நான் அந்த வீடு இருந்த பக்கம் சென்றேன். முதலில் அது பூட்டிக் கிடந்தது. ஒரு நாள் தபால்காரன் வரு கிற சமயம் காத்துக்கொண்டிருந்து, அவனைத் தூரத் தில் சந்தித்து என் பெயருக்குக் கடிதம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவன் மேலும் கீழும் பார்த்துவிட்டு கடிதங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு ‘இல்லை’ என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

பிரிந்த ஆவி தான் விட்டுச்சென்ற கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து பார்க்கும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது பொய்யாக இருக்கலாம். ஆனால் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டையாரும் இல்லாத வேளைகளில் நான் சுற்றிச் சுற்றி வந்ததும் அடிக்கடி தபால்காரனைத் துரத்திக்கொண்டு போன தும் உண்மை. அந்த வீடு…. இளம் தம்பதிகளாய் நாங் கள் இன்ப வாழ்வு புகுந்த வீடு….அன்போடும் ஆதரவோடும் நாங்கள் காதல் வாழ்வு கண்ட வீடு…துன்பம் வந்தபோதும் பொறுமையோடு மனம் ஒன்றி எதிர் காலத்தில் நம்பிக்கைவைத்து ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டிருந்த வீடு….அதை ஒவ்வொரு சமயம் பார்க் கும் பொழுதும் என் நெஞ்சம் குமுறி எழும். கண் களிலே கண்ணீர் பீறிடும். ஆனால்….

கடைசியாக அந்த வீட்டிற்கு யாரோ குடி வந்து விட்டார்கள். நான் மறைந்து நின்று பார்த்தேன். ஒரு கணவனும் மனைவியும். என் இதயம் விம்மி எழுந்தது. கடவுளே அவர்களாவது இன்பமாக இருக்கட் டும். அவர்கள் வாழ்வில் துன்பச்சூறாவளிகளைப் புகுத் தாதே. வறுமைப் புயல்களை ஏவி விடாதே. மனிதர்கள் யாருக்குமே துன்பம் வரக்கூடாது. வாழ்க்கை வளமானதாக இருக்கவேண்டும். இன்பம் நிறைந்ததாக இருக்கவேண்டும். அதுதான் என் ஆசை. அதைத்தான் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன் என்று சொல்லிக்கொண்டேன்.

எந்த சமயத்திலும் நான் என் சூழந்தையைவிட்டு ஒருகணமும் பிரிந்தவள் அல்ல. ஒரு நாள் இரவு பதினொரு மணி இருக்கும். நான் அந்த வீட்டுக் கதவைத் தட்டினேன். “யார்…?” என்று அதட்டும் குரலில் அந்த வாலிபன் கேட்டான். “ஐயா உங்களைக் கொஞ்சம் பார்க்கவேண்டும், நான் ஒரு ஏழைப் பெண்” என்று கூறினேன். கதவு கொஞ்சம் திறக்கப்பட்டது. அந்த வாலிபன் முன்னால் வந்தான். அவன் பின்னால் நின்று அந்த அழகிய பெண் எட்டிப் பார்த்தாள். அந்த வேளையில் நான், ஒரு குழந்தையும் தாயும் அங்கு வந்தது பற்றி அவர்கள் என்ன நினைத்தார்களே….அவன் கோபத்துடன் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன்பே, “ஐயா எனக்கு ஒன்றும் வேண்டாம். கமலம் என்ற விலாசத்திற்கு இந்த வீட்டிற்கு ஏதாவது கடிதம் வந்தால்…. அல்லது யாராவது இங்கு வந்து அந்தப் பெயர் உள்ளவளைப் பற்றி விசாரித்தால்…. அவள் உயிருடன் இருக்கிறாள். அடிக்கடி இந்தப் பக்கம் வருகிறாள். அவளைப் பார்க்க முடியும் என்று மட்டும் சொல்லிவிடுங்கள். அதுமட்டும் போதும். நான் உங்களை வேறு விதத்தில் தொந்தரவு செய்யமாட்டேன்….” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடி விட்டேன். அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அவர்கள் கண்ணில் படும்படிப் போவது என் வழக்கமாயிருந்தது.

என் உடல் ரொம்பவும் இளைத்துப் போயிற்று. நான் உருக்குலைந்து போனேன். முன்பு பார்த்தவர்கள் இப்போது என்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாது. என் உடல் நாளுக்கு நாள் பலஹீனமானதோடு நாளாக நாளாக எனக்கு எப்படியோ இருந்தது. நான் உற்சாக மிழந்தவளாக மட்டும் இருக்கவில்லை. உள்ளுற ஏதோ நோயில் பீடிக்கப்பட்டவள் போல் உணர ஆரம்பித்தேன். இரண்டு மூன்று நாட்களாக வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. கையிலே காசும் இல்லை. அரைப்படி கால்படி கடன் வாங்கிக் கஞ்சி வைத்துக் குடித்தேன். இனி அதுவும் யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியவில்லை. மற்ற பெண்கள் எங்கோ தூரத்தில் சுண்ணாம்புக் காளவாய்க்கு வேலைக்குப் போனார்கள். வேறு வழியின்றி நானும் குழந்தையை எடுத்துக்கொண்டு அவர்களோடு சென்றேன். மாலைவரை வேலை செய்துவிட்டு வீட்டை நோக்கித் திரும்பினேன். உடல் குளிர்வது போல் இருந்தது. நடக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி நான் எப்படி நடந்து கொண்டிருந்தேன் என்பது எனக்கே புரியவில்லை. என் குழந்தை நான் தூக்க. முடியாதபடி கனமாகி விட்டதுபோல் தோன்றிற்று. தலை சுற்றுவது போல் இருந்தது.

கண்கள் சுழன்று கொண்டுவந்தன. என் வாழ்க்கை அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. இனிச்சற்று நேரத்தில் நான் உறங்கி விடுவேன். பிறகு எழுந்திருக்கவே மாட்டேன். மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன் என்று நினைத்தேன். அந்த நிலையிலும் என் மனதில் அந்த ஆசை தோன்றிற்று. அதுதான் என் வாழ் நாளில் கடைசி ஆசை என்று நினைத்தேன். அதை நிறைவேற்றிக் கொள்ளாமல் நகரக்கூடாது என்றும் நினைத்துக் கொண்டேன். அதனால்…. நான் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். எங்கள் பழய வீட்டை நோக்கி.

சற்று தூரத்தில் நின்று ஏக்கத்துடன் அந்த வீட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்றேன். என் கண்களில் அருவிபோல் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. அந்தப்பெண் என்னைப்பார்த்தாள் ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த வாலிபனும் எங்கோ இருந்து வந்தான். என்னைப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டான். அதனால் என்னைத்தேடிக் கொண்டு ஒருவரும் வரவில்லை. அப்பாவும் வரவில்லை ….அத்தானும் வரவில்லை எனவே நான் இன்னும் அனாதை யாகத்தான் இருக்கிறேன். இப்பொழுது செத்தாலும் யாருமற்றவளாக அனாதையாகவே சாவேன். என்னையாராவது அயலார் எடுத்துப் புதைத்து விடுவர். என் கண்மணி யாரோ இரக்க முடையவர்களால் வளர்க்கப்படும். அல்லது பிச்சை எடுத்துத்திரியும். கண்ணீர் வடித்துக்கொண்டே நான் மீண்டும். நடந்தேன். சிறிது தூரம் சென்றதும் நடக்க முடியாமல் ஒரு திண்ணைமேல் – சாய்ந்து விட்டேன். கண்களை மூடிக்கொண்டே அப்படியே நெடு நேரம் உட்கார்ந்திருந்தேன்.

நேரம் போனதே தெரியவில்லை. என் கண்மணி பசியால் அழுத குரல் கேட்டுக் கண் விழித்தேன். என் உடல் அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. இனி ஒரு அடிகூட நடக்க முடியாது போல் தோன்றிற்று, குழந்தை அழுகிறது. எங்காவது அதற்கு ஒரு வாய்ச்சோறு வாங்கிக்கொடுக்க வேண்டும். ஆமாம் நான் இப்பொழுது பிச்சைக்காரியாகப் போகிறேன். நான் எழுந்திருந்தேன். கண்ணீர் குமுறிக்கொண்டு வந்தது,

யாரிடம்போய் எப்படிக்கேட்டது என்று தெரி யாமலே இரண்டு மூன்று வீதிகளைச் சுற்றிச்சுற்றி வந்தேன். குழந்தை அழுதுகொண்டே இருந்தது.. கடைசியாக ஒரு வீட்டின் முன்னால் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் துணிவடைந்து…. “அம்மா…. அம்மா…இந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் சோறு கொடுங்கள் அம்மா….” என்று கேட்டேன். உள்ளே பேச்சுக்குரல் கேட்டது, ஒரு பெண் சாதம் எடுத்துக் கொண்டு வந்தாள். நான் எதில் வாங்குவது என்று தெரியாமல் விழித்தேன். இந்த விசித்திரமான பிச்சைக்காரியை அவள் ஏறிட்டுப்பார்த்தாள். அவள் கையிலிருந்த தட்டம் கீழே விழுந்தது….”அக்கா…” என்று அவள் கூவிவிட்டாள். அவள் என் தங்கை விமலா. உள்ளே இருந்து என் அப்பா ஓடி வந்தார். என்னைப் பார்த்ததும் கமலா கமலா….என்று கூவி விட்டார். நான் உணர்விழந்து விழுந்து கொண்டிருந்தேன்.

14. ரகு

நான் வாழ்வைப்பற்றியே சிந்தித்தவன். இப்பொழுது சாவின் இடையே நடமாடுகிறேன். எவ்வளவு பயங்கரமான உண்மை இது…! தூரத்திலே குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அங்கே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. களத்திலே கடினமான உழைப்பின் பின் கண்ணுறங்க வந்தவன் சிந்தனையிலே மூழ்கிக் கிடக்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. என் இதயத்திலே வெடிக்கும் சிந்தனை குண்டுகளின் பேயிரைச்சல் பீரங்கிகளின் முழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. என்னைச் சுற்றிலும் சாவு பயங்கரமாகப் பேய் நடனம் ஆடிக்கொண்டிருக் கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்…. தங்கள் ஆருயிர்களை இழக்கிறார்கள். அவர் கள் உடல்களைக் குண்டுகள் துளைத்துச் செல்கின்றன. கைகால் போயும் தலை உடல் சின்னா பின்னமாகியும் இறப்போர் பலர். மரணத்தின் ஓலம் தான் இங்கே சதா கேட்டுக் கொண்டிருக்கிறது. அடிபட்டவர்களின் முனகல் தான் அதன் பின்னணி. ஆம்…. நானும்கூட இன்றோ நாளையோ சாக நேரிடலாம். சாவு அவ்வளவு சர்வ சாதாரண மானதாகத்தான் இருக்கிறது! இங்கே …..ஆனால்…. இன்னும் கூட நான் வாழ்வைப்பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சின்னக் குருவிகள் சேர்ந்து கட்டிய சிங்காரக் கூட்டைச் சின்னப் புத்திச் சிறு குரங்கொன்று பிய்த் தெறிந்ததுபோல் எங்கள் குடும்பம் வறுமையில் சின்ன பின்னமாகிக் கிடக்கிறது. நான் என் துயரத்தை எந்த வார்த்தைகளால் கூறுவேன் ? என் உணர்ச்சி களை எப்படித்தான் சொல்வேன்?

மனைவி குழந்தையை விட்டு நான் ஓடிவந்தேன். நளனுடைய கதை நினைவுக்கு வருகிறது. நள்ளிரவில் நடுக்காட்டில் தூங்குகின்ற தன் மனைவியின் துணியிலே பாதியைக் கிழித்தெடுத்து உடுத்துக் கொண்டு அவளை அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் எழுந்து சென்றானாம் அவன்….! அவனுடைய இதயம் எவ்வளவு கொடியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் நான். ஆனால்…. எனக்கு அதே போன்ற தலையி லெழுத்து வரும் என்று நான் கனவிலாவது நினைத் திருப்பேனா ? அவளுடைய தந்தையிடமாவது சேர்த்து விட்டு வந்திருக்கலாகாதா என்ற நினைவு பங்களூர் வந்து சேர்ந்த பின்தான் வந்தது. உடனே அவருக் குக் கடிதம் எழுதினேன். ஒரு மாதம் கழித்துக் கடி தம் விலாசதார் கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து சேர்ந்தது. அவர்களும் நம்மைப் போல்தான் எங்கா வது ஓடிப்போயிருப்பார்களா? அப்படி ஓடும் நிலை வந்திருந்தாலும் அவர் என்னைப் போல் விமலாவை விட்டு விட்டு ஓடவில்லை. தந்தையின் பாசம் கணவ னுடையதைவிட அதிகமானதா? ஐயோ கமலா…. நீ ஒருவேளை பட்டினி கிடப்பதைக்கூடப் பார்க்கச் சகிக்காமல் அல்லவா நான் ஓடிவந்தேன்.

கமலாவுக்குக் கடிதங்கள் எழுதினேன். ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனை எத்தனையோ…? நான் கடிதங்களா எழுதினேன்? என் கண்ணீரையும் இரத்தத்தையும் கலந்து உணர்ச்சிகளின் சித்திங்கள் அல்லவா வரைந்தனுப்பினேன். முதல் இரண்டு மூன்று கடிதங்கள் போன இடம் தெரியவில்லை மற்ற கடிதங்கள் திரும்பி வந்து விட்டன.

வீட்டுக்காரருக்கு கடிதம் எழுதினேன். கமலாவை அவள் தந்தை வந்து அழைத்துக் கொண்டுபோய் விட்டதாகவும் வாடகைப் பாக்கியை அனுப்பும்படியும் பதில் வந்தது. நான் வாடகைப் பணத்தை அனுப்பி விட்டேன். ஆனால் அவர் எழுதின பதிலை என்னால் நம்ப முடியவில்லை. பாங்கில் வேலைசெய்து கொண்டிருந்த என் நண்பன் ஒருவனுக்குக் கடிதம் எழுதினேன். எப்படியாவது என் மனைவி என்ன ஆனாள் என்பதை விசாரித்து எழுதும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து நாள் கழித்து பதில் வந்தது என் மனைவியைப்பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவளுடைய தந்தையும் தங்கையும் கூட வந்து தேடிவிட்டுப் போனார்கள் என்றும் அதில் இருந்தது. ஐயோ என் மனைவி என்ன ஆனாள்? குழந்தை என்ன ஆயிற்று….? நான் பாதகன். மகா பாபி…. அவர்களை யாரும் அறியாத ஊரில் தன்னந் தனியே விட்டு விட்டு ஓடி வந்தேனே…?

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும்நரகத்தில் அழுந்துவதைப்போல் அழுந்திக் கொண்டிருக்கிறேன் நான். சிந்தனைகள் என் இதயத்தைக் கூறு கூறாகத் துளைக்கின்றன. ஆனால் நான் என்ன செய்வேன். எனக்கு விடுமுறை கிடையாது. இங்கிருந்து தப்பி ஓடவும் முடியாது. ஐயோ நான் மீண்டும் என் மனைவி குழந்தையைப் பார்ப்பேனா….?

அபாய அறிவிப்புச் சங்குகள் ஊதுகின்றன. விமானங்கள் புற்றீசல்கள்போல் மேலேசுழல்கின்றன. அதோ குண்டுகள் விழுகின்றன. அவற்றிற்கு எத்தனையோ பேர் பலியாகலாம். என்னால் பாதுகாப்பிடத்திற்குப் போய்ச்சேர முடியவில்லை… ஹா.. – ஐயோ கமலா?

15. பாலு

நான் சென்னையில் மாணிக்க முதலியாரைச் சந் திக்க முடியும் என்று நினைக்கவே இல்லை. மனிதன் என்னடா என்றால் கார்கீர்வைத்துக்கொண்டு தட புடலாக இருக்கிறான், நான் என்ன நினைத்தேன். ஆள் அட்ரெஸ் இல்லாமல் போய் விட்டான். பெண்ணுக்குப் பாடத் தெரியும். எங்காவது தெருவிலே பாட விட்டுப் பிச்சை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போகக் கிளம்பியிருப்பான் என்று ராமகிருஷ்ண பிள்ளை அதை நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கே…?

நடேச முதலியாரும் ‘அவரும்’ பஸோட்டா முன் னால் வந்திறங்கியதும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

மனிதன் உலகத்தை என்னவோ பண்ணிவிட்டான் போலிருக்கிறதே. இந்த ஆளிடம் லகம் இப்படி வாலைக் குழைக்கவாவது என்று நினைத்தேன். உள்ளே இருந்து விமலாவும் சபேசனும் இறங்கியதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விஷயம் வெளிச்சமாயிற்று. ஓ… உலகம் இப்படி பெண்ணைக் கண்டா மயங்கிக் கொண்டிருக்கிறது, சபாஷ்…. மாணிக்க முதலியார் உலகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என்று நினைத்தேன்.

நடேச முதலியார் பெரிய ஆள். அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

மாணிக்க முதலியார் பாலுவைக் கண்டதும் ஆனந்தத்தில் அப்படியே கட்டித்தழுவிக் கொண்டார். இது தானே நம்முடைய மகிமை! எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். “பாலு கெட்டிக் காரப் பயலடா நீ…. பார் நீ யாரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி நாசப்படுத்தி விட்டாயோ அந்த மனிதன் உன்னை உயிரன்பன் என்று நினைத்துக் கட்டித் தழுவிக்கொள்கிறான். பாலு உலகம் உன்னை ஒன்றும். செய்து விட முடியாது அது உன் காலடியில். கிடக்கிறது.” என்று. முதலியாரிடம் சேமசமாச்சாரங்கள் விசாரித்தேன். விமலாவும் கமலாவும் கச்சேரி கள் செய்வதாகவும் ‘ப்ளே பேக்’பாடுவதாகவும் நல்ல வருமானம். கிடைக்கிறதென்றும் கூறினார். ரகுவைப் பற்றி விசாரித்தேன். பாவம் அவன் தான் பட்டாளத் திற்குப்போய் விட்டோன். இப்பொழுதுதான் விலாசம் கிடைத்தது கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார். நான் உள்ளுறச் சிரித்துக்கொண்டு ரொம்ப வருத்தம் அடைந்து விட்டதாக நடித்தேன்.

மாணிக்க முதலியாரிடம் இவ்வளவு அன்யோன்யமாகப் பழகுவது கண்டு நடேச முதலியார் என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மறுபடியும் பாலுவின் திறமை என் மனக்கண்முன் படமெடுத்தாடிற்று. என்ன சாமர்த்தியம். எந்த மனிதனுடைய நட்பை எவ்வளவு ஆயிரம் கொடுத்தாலும் சம்பாதிக்க முடி யாது என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அந்த மனிதன் என்னைத்தேடி ஓடி வருகிறான். என்னுடைய நட்பைத் தானாகப்பெற முயல்கிறான். பாலு நீ பெரிய மனிதனாடா என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு, நடேச முதலியாரிடம் அப்படியே உள்ளம் உருகிவிடுகிற மாதிரி நாலு வார்த்தைகள் பேசி வைத் தேன். “உங்களைப்பற்றி ரொம்பக் கேள்விப்பட் டிருக்கிறேன். ஆகா நீங்கள் எப்படிப்பட்ட பெரிய மனிதர் உங்கள் நட்பைப்பெற நேர்ந்த இந்தப்பொன் னான சமயத்தை என் வாழ்க்கைப் பேரேட்டிலிருந்து என்றென்றும் அழிக்க முடியாது…” என்று கூறி விட்டால்….என்ன அருமையான பேச்சுத்திறமை…! புகழ் மொழிகளில் மயங்காத பெரிய மனிதன் இருக் கிறானா? புகழுக்கு ஆசைப்படுகிறவன் தானே பெரிய மனிதன் ஆகிறான்? நடேச முதலியார் இப்பொழுது என் நண்பராகி விட்டார். நாளைக்குப் பாங்க் ஏஜெண்ட் சந்திரசேகரிடம் ‘நடேச முதலியாரை எனக்கு ரொம்ப நாளாய்த்தெரியும் அவர் என் நண்பர்’ என்று தைரியமாகக் கூறலாம். அவர் பொறாமைப் படுவார். அப்படியே மெள்ள நம்ம பாங்கில் இணைத்து விடுங்கள்! என்று கெஞ்சுவார் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின்னால் நடேச முதலியார் தலைமையில் ஒரு உதவிக் கச்சேரி நடப்பதாகவும் அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டனர். எனக்கு ரொம்ப வேலை யிருப்பதாகவும் இருந்த போதிலும் கமலா விமலா பாட்டைக்கேட்டு ரொம்ப நாட்களாகி விட்டதாகவும் அதனால் கண்டிப்பாகக் கலந்து கொள்வதாகவும் கூறி விடைபெற்றுக் கொண்டேன்.

நம்முடைய நிலைமை நாளுக்கு நாள் பக்குவ மடைந்துகொண்டு வருகிறது. நம் ஆசைக்கனவுகள் எல்லாம் அருமை நினைவுகள் ஆகப்போகின்றன. கொஞ்ச நாளிலே பாலு ஒரு அமெரிக்கனாகி விடுவார். நியூயார்க் வீதிகளிலே ராஜநடை போடுவதுபோல் கனவு கண்டு கொண்டே சந்திரசேகரிடம் வந்து சேர்ந்தேன். சந்திரசேகர் நடேச முதலியார் சமாச் சாரத்தைக் கேள்விப்பட்டதும் வாயைப் பிளக்கிறான். என்க்குத் தெரியாதா ஆள் எப்படிப்பட்டவன் என்று. உம் கிடக்கிறான் கழுதை…. விடுங்கள். கச்சேரிக்குத் தன்னையும் அழைத்துக் கொண்டுபோக வேண்டும். என்பது அவன் வேண்டுகோள். அது நமக்கும் கொஞ் சம் லாபம் தானே ! இவர் பெரிய பாங்க் ஏஜெண்ட் நம்ம நண்பர் என்று பிரமாதமாகச் சொல்லிக்கொள்ள லாம் அல்லவா என்று நினைத்துக் கொண்டேன்.

பாலுவின் கணக்கு எப்பொழுதுமே தப்பாகப் போன தில்லை. அந்தக் கணக்கை முடித்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமும் வந்து கொண்டிருக்கிறது. இனி இந்த நாட்டில் தங்குவதெல்லாம் நாட்கணக்கில் தான் இருக்கிறது. திருட்டுச் சொத்தெல்லாம் பணமாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கி. அதுவும் முடிந்துவிடும். முதலில் சிலோனுக்குப் போகப் பாஸ் போர்ட்டும் வாங்கித்தயாராக வைத்திருக்கிறேன். எங்கேயோ போய் விட்டேனே….? கச்சேரி ஹாலில் நுழைந்ததும் எனக்குப் பிரமாதமான வரவேற்பு. நடேச முதலியார் தலைமை தாங்குகிறார். நான் அவருக்குப் மக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். சந்திர சேகர் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.

பெண்கள் நன்றாகத்தான் பாடுகிறார்கள். அவர்களுடைய சங்கீத ஞானம் ரொம்ப முன்னேறியிருக்கிறது எல்லோரும் கைதட்டுகிறார்கள். நான் மாணிக்க முதலியாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சந்திரசேகர் மெதுவாக என் கையைப்பிடித்து அழுத்தி வெளியே போக வேண்டும் என்பதுபோல் ஜாடை செய்தார்.

நாங்கள் வெளியே வந்தோம். சேகர் மெல்லிய குரலில். “பெண்கள் எப்படி என்று கேட்கிறார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை ஆனால் புரிந்துகொண்டதும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம் பித்து விட்டேன். மனிதன் பாவம் ரொம்ப நாளாகப் பெண்ணின்பம் என்றால் என்னவென்ற தெரியாமல் காய்ந்து கிடக்கிறான். பாவம் அவனுக்கு இப்படிப்பட்ட விஷயங்களைக் கவனிக்க ஓய்வே கிடைத்திராது. கச் சேரி, சினிமா, நாடகம் இதிலெல்லாம் அவனுக்கு அக் கரையே கிடையாது இப்பொழுது முதலாவதாகச் சந்தர்ப்பம் கிடைத்ததும்…

சினிமா நாடகக்காரிகள், பாடகிகள் இவர்கள் எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்கள். காசை வீசி எறிந்தால் அவர்களில் யாரை வேண்டுமானாலும் வாடகைக்குப் பிடித்துக் கொள்ளலாம்,’ என்று கேள்விப் பட்டிருப்பான். இந்த அழகிகளைப் பார்த்ததும் அவனுக்குச் சபலம் தட்டுகிறது. என்னை உதவிக்கு அழைக்கிறான். நான் சிரித்துக் கொண்டிருந்த போதிலும் என் சிந்தை வேலை செய்து கொண்டிருந்தது. நம் திட்டத்திற்கு இது இன்னொரு படி முன்னேற்றம் சந்திரசேகரைப் பூராவும் மயக்கி நம் கைக்குள் போட்டுக்கொண்டால் நாம் என்ன செய்கிறோம் என்பதையே அவன் கவனிக்க மாட்டான் என்று நினைத்துக்கொண்டேன். நம்ம புத்திதான் எப்பொழுதும் வாளின் முனைபோல் கூர்மையாக இருக்கிறதே. எப்பொழுது என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை பாலுவுக்கிருப்பது போல் வேறு யாருக்குமே இருக்காது. உடனே போட்டேன் ஒரு போடு, “மிஸ்டர் சேகர் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டாம். இதுகள் என்ன அடிப் பட்ட கட்டைகள் தானே” இப்பொழுது பார்க்கிறீர்களா ….இந்த பாலு மேடைக்குப் போனால் அதுகள் என்ன தளுக்கு தளுக்கு மினுக்கிக் குலுக்குகின்றன என்று…. உங்களுக்கு நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன். கமலா போதும் அல்லவா…. பெரியவள்பெயர் கமலா….என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.

கமலா பாடிக் கொண்டிருக்கிறாள். நான் சென்று பின்னால் உட்கார்ந்தேன். உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் மேலாக்கு நழுவிக் கீழே விழுகிறது. நான் அதை எடுத்து மேலே போடு கிறேன். அவள் என்னைப் பார்க்கிறாள். வெட்கத் துடன் புன்னகை புரிகிறாள். பாட்டின் உற்சாகத்திலே கை தட்டிக் கொண்டிருக்கும் சபையோர் இதை எங்கே கவனிக்கப் போகின்றனர். நான் முன்வரிசையில் பார்க்கிறேன். சந்திரசேகரின கண்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பாவம், இந்த அழகிகளை அப்படியே வாரி விழுங்கிடத் துடிக்கின்றன. அவர்களுடைய கண்களோடு உறவாட விரும்புகின் றன. அந்த இன்பமெல்லாம் சும்மா கிடைத்து விடுமா ஐயா…! தொட்டு தாலி கட்டிய கண வன் கூட பிறர் முன்னிலையில் தன் மனைவியின் மேலாக்கைத் தொடத்தயங்குவான். நான் கமலாவின் மேலாக்கை எடுத்துப் போடுகிறேன். அவள் வித்தி யாசமாக நினைத்துக் கொள்வதில்லை. இந்த நம்பிக்கை சும்மா ஏற்பட்டு விடுமா….? எல்லோருக்கும் நல்லவன் பாலுவுக்குத் தவிர வேறு யாருக்குமே இப்படிப்பட்ட துணிச்சல் வராது. நான் தான் அவர்களிடம் பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் போல் பழகிக் கொண்டிருக்கிறேனே….? சந்திரசேகர் நினைத்துக் கொண்டிருப்பான். இந்தப் பெண்களின் அந்தப் புறக்காதலர்களிலே நானும் ஒருவன் என்று. அவனும் ஒருவன் ஆகவேண்டும் என்பதுதானே அவன் ஆசை!

கச்சேரி முடிந்தது. சந்திரசேகரை வீட்டுக்கு அனுப்பி விட்டு நான் காரில் இவர்களோடு புறப்பட்டு விட்டேன். மாணிக்க முதலியார் மகன் சபேசன்… இந்தப்பயல் எப்பொழுதுமே விமலாவுக்குப் பக்கத்தில் உட்கார வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவர்கள் பெரிய காதலர்களாகி விட்டார்கள். கல்யாணமும் நடக்கப் போகிறது. வீட்டில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கமலாவின் குழந்தை நடக்க ஆரம்பிக்கிறது. குழந்தை கொழு கொழுவென்று அழகாக இருக்கிறது. கொஞ்ச நேரம் அவர்கள் பாட் டுத் திறமையைப் புகழ்ந்து கொண்டிருந்து விட்டு. குழந்தையிடம் கொஞ்சம் விளையாடிவிட்டு நான் புறப் பட்டேன். நடேச முதலியாரும் புறப்பட்டார். அவருடைய நட்பையும் உறுதிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டு, “வீட்டிற்குத்தானே போகிறீர்கள். நானும் அந்தப் பக்கமாகத்தான் போக வேண்டும்.” என்றேன். “வாருங்களேன் காரிலேயே போய்விடலாம்,” என்றார் முதலியார். நாங்கள் மூன்று பேரும். நானும், நடேச முதலியாரும், சபேசனும் புறப்பட்டோம். பங்களாவிற்குச் சென்றதும், ஏன் உள்ளே வாங்களேன், கொஞ்ச நேரம் பேசிக்கொண் டிருக்கலாம்,” என்றார். இந்த மாதிரி சமயங்களை பாலு நழுவ விடுவாரா? உடனே உள்ளே போனேன்.

நாங்கள் ஹாலில் உட்கார்ந்தோம். சபேசன் தனக்குத் தூக்கம் வருகிறதென்று கூறி உள்ளே போய் விட்டான். நடேச முதலியார் என்னை அந்தரங்க மாகக் கேட்டார். நம்ம பையனுக்கு அந்தச் சின்னப் பெண்ணை முடித்து வைததுவிடலாம் என்று யோசனை. உங்கள் அபிப்பிராயம் எப்படி என்று….?” நான் திகைத்துப் போய்விட்டேன். இதைப்போன்ற விஷயத்தில் அவர் என் அபிப்பிராயம் கேட்பார் என்று நான் நினைக்கவேயில்லை. நான் சிரித்துக்கொண்டே ”அதற்கென்ன? செய்யலாங்க…. செய்யாமே என்ன என்று மழுப்பினேன். ஆனால் நம்ம தலைக்குள்ளே மூளை சுறுசறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. இந்த மனிதனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி விட்டால்……..?

நடேச முதலியார் தொடர்ந்து கூறினார், “இல்லை உங்களிடம் எதற்காகக்கேட்கிறேன் என்றால் நீங்களும் அவரும் ஒரே ஊர்க்காரர்கள் ரொம்ப நாளாகப் பழக் கம் என்று சொன்னீர்களா…. அதனால்தான்…அவர் பாவம் ரொம்பக் கஷ்டதசையில் இருக்கிறார். ஆனால் பெண் …அவளுக்கு அபாரமான திறமை இருக்கிறது….

“ஆமாங்க ஆமாங்க….அதிலொண்ணும் குறைச்சல் இல்லே…. உங்களுக்கெல்லாப் திருப்தியானா தாராள மாகச் செய்யலாம். நான் என்ன சொல்லப் போறேன் ஆனா….”

“சொல்லுங்க. சும்மா சொல்லுங்க. நமக்குள்ளே பேசிக்கக் கூடாதா என்ன ? நான் எப்பவுமே எப்படீன்னா நம்ம அபிப்பிராயம் எப்படி இருந்த போதிலும் நாலு பேரைக் கேட்டுத்தான் எதையும் முடிவு செய்வேன். ஆத்திரப்பட்டு எதையும் செஞ்சுடமாட் டேன். உங்கள் அபிப்பிராயம் எப்படி…?”

“அடே அப்பா…. என் அபிப்பிராயத்தைக் கேக்கிறீங்களே….? உங்கள் அனுபவத்துக்கும் அறிவுக்கும் எது பொருத்தமாத் தெரியறதோ அதைச்செய்யுங்க… ஆனா அந்த மூத்த பொண்ணு பாருங்கோ…. பாவம்….”

“என்னங்க….அந்த சமாச்சாரத்தைத்தான் உங்க கிட்டக் கேக்கணும்னு நெனைச்சேன். சும்மா சொல்லுங்க….”

“உம்…. அதன் தலையிலெழுத்து அப்படி….அதற்கு தாம் என்ன செய்யலாம், என்னவோ அப்படி எல்லாம் நடந்துட்டுது…”

“எப்படி நடந்தது…?”

“உம் அதை ஏன் கேக்கறீங்க அந்தப் பொண்ணு….யாரோ ஒருத்தனைக் கூட்டிட்டு ஒடிப் போயிட்டுது….அவன் பட்டணத்திலே கொண்டாந்து இதை விட்டுவிட்டு எங்கேயோ கம்பி நீட்டிட்டான்.

“என்ன….?”

“உம்…அதனாலே என்னங்க மூத்த பெண்ணை நினைச்சு இளைய பெண்ணோட வாழ்க்கையைக் கெடுத்துடலாம்களா….இந்தக் காலத்திலே அதை எல்லாம் யார் பார்க்கறாங்க….”

நடேச முதலியார் முகம் கறுத்துப்போய்விட்டது. அவர் எழுந்திருந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கோ உள்ளூற ஒரே குஷி…நம்ம மருந்து எங்கேயுமே பலிக்காமல் போன தில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கொஞ்சநேரம் அப்படியே மௌனம் நிலவியது. கடிகாரம் மூன்றடித்தது. நான் மெதுவாக எழுந்திருந்து “நான் வரட்டுமா….இரவு ரொம்ப நேரமாகி விட்டது,” என்றேன். அவர் சடக்கென்று திரும்பி என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு…. ‘பாலு ….நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் என் கண்களைச் சரியான சமயத்தில் திறந்து வைத்தீர்’ என்றார். அந்தச் சமயத்தில் மௌனமாக விடை பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது என்று நினைத்து விடைபெற்றுக் கொண்டேன்.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *