திருப்புமுனை




வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்று கூற முடியாது, ஓர் அறை மட்டுமே. அதுவும் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகக் காட்சியளித்தது.
தோளில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பையைக் கழட்டி கட்டிலில் வைத்தான். அருகிலிருந்த பாட்டிலில் கடைசிச் சொட்டு தீரும் வரை தண்ணீரைக் குடித்து முடித்தான். வெளியே அடித்த வெயிலில் கருகிய உடல் அந்த நீரால் குளிர்ந்தது.
பர்ஸை எடுத்துப் பார்த்தான். ரூபாய் நோட்டுகளை விடப் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது.
ஒரு வருடம் முன்பு எப்படியும் இயக்குனர் ஆவேன் என்று வீட்டை விட்டு வந்தபோது எடுத்தது முதல், ஒவ்வொரு தயாரிப்பாளரைத் தேடி இயக்குனர் வாய்ப்புக் கேட்டு, இயக்குநர்களைத் தேடி உதவி இயக்குனராகும் வாய்ப்புக் கேட்டு, சில சமயம் இவர்களைப் பார்ப்பதற்காகப் பலரை சந்தித்து…
நீண்டப் பெருமூச்சை வெளியிட்டு அவையனைத்தையும் எடுத்து ஒரு நோட்டுப் புத்தகத்துக்குள் பத்திரப்படுத்தினான். கைபேசி அலறியது. அழைப்பது அவனுடைய அப்பா தான். அதை எடுக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எடுத்தாலும் என்ன கூறுவது?
தன் ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் இந்த நிமிடம் வரை தன்னைச் சுமந்து வரும் தந்தை… எண்ணிப் பார்த்தால் அவர் இல்லையென்றால் தனக்கு இந்தத் தன்னம்பிக்கை வந்திருக்காது என்றே தோன்றியது.
கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது. திறந்தபோது கையில் ஒரு குறியரைத் திணித்துக் கையெழுத்து வாங்கிப் பறந்து சென்றான் ஒருவன்.
முரளி – கவரில் இருந்த தன் பெயரை ஒருமுறை வருடி அனுப்புனர் முகவரியைப் பார்த்தான்.
எத்தனை நாளைக்குத் தான் அப்பாவை கஷ்டப்படுத்துவதென்று மருகிய சமயம். போன மாதம் ஒரு மாத இதழில் அறிவித்திருந்த புகைப்படப் போட்டிக்கு தான் தினம் சுமந்து நடக்கும் பையினுள்ளிருந்துத் தன் கதைக்காக லொகேஷன் தேடி அலைந்து எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பியது நினைவுக்கு வந்தது. அவனுடைய கதைக்கு உயிர் கொடுக்கும் என்று நினைத்த புகைப்படங்கள் அவை. இந்தக் கடிதம் அப்போட்டிக்கான முடிவாய் இருக்கலாம்.
கவரைப் பிரித்தான். அந்தப் பிரபலமான பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகச் சேருவதற்கான ஆர்டர் இருந்தது. விடாமல் அடித்துக் கொண்டிருந்த கைபேசியை எடுத்து “அப்பா என் DSLR கு இன்னொரு கிட் லென்ஸ் வாங்கப் போறேன் பா…” என்றான் முரளி.