தியாகம்

“நல்ல ஜெர்மன் ஷெப்பார்ட் வகை நாய் . ரெண்டுகுட்டி போட்டது.. ஒண்ணு உடனேயே இறந்துடிச்சி.. ஒருகுட்டி நல்லா இருக்கு..ரெண்டுமாசம் ஆச்சு… தாய்ப்பாலை இன்னும் குடிச்சிட்டுதான் இருக்கு இந்த நிலையில் தாயையும் குட்டியையும் பிரிக்கணும் வேற வழி இல்லை எனக்கு.. ஆனா இப்போ என் பையன் பள்ளிக்கூடம் போயிருக்கிற நேரம் அதனால உங்களுக்கு விக்கறேன்.அவன் மட்டும்வீடு வந்து விஷயம் தெரிஞ்சா என்னையும் அவன் அம்மாவையும் உண்டு இல்லைன்னு தீர்த்துடுவான். அப்படி இந்த தாய் நாய்கிட்டயும் இந்த குட்டி நாய்கிட்டயும் பழகறான்.. பத்து வயதுக்கு அவனுக்கு இதோட அம்மாநாய் அம்புஜா தான் ஃப்ரண்ட்…. ஒருவெளிநாட்டுக்காரர் இந்தியால இருந்தப்போ கொஞ்சநாள் வளர்த்தார். அவர் கார் ஒரு வாட்டி ரோட்டுல நின்னுபோயி நான் ரிப்பேர் செய்துகொடுத்தேன்னு எனக்கு இந்தியா விட்டுப்போறப்போ அன்பளிப்பா அம்புஜாவை என் கிட்ட கொடுத்தாரு. இல்லேன்னா இப்படி லட்சக்கணக்குல விலை போகிற ஜாதி நாயெல்லாம் நான் எங்க வாங்கறது! ஜெர்மன் ஷெப்பார்ட் நாய்க்கு என்ன தமிழ்ப்பெயரான்னு பாக்கறீங்களா…இது எங்கம்மாவோட பேரு.. என் மகன் சதீஷுக்கு பாட்டின்னா உயிர். பாட்டி செத்துப்போன ஒரு வருஷத்துல இந்த நாய் கைக்கு வந்ததாலே அம்புஜான்னு பேர் வச்சோம்.. கொரானா காலத்துல போன என் மெகானிக் வேலை மீண்டும் கிடைக்கல.. கம்பெனியையே இழுத்து மூடிட்டாங்க.. கை நிறைய சம்பாதிச்சவன் இன்னிக்கு வாடகை கொடுக்க முடியாம திண்டாடறேன்..அதனால்தான் இந்த ஜாதிநாய்க்குட்டியை உங்ககிட்ட தரேன்…சீக்கிரமா எடுத்துப்போங்க…தாய் நாயை என் மனைவி தனியே அழைச்சிட்டுப் போயிருக்கா..சீக்கிரம் பணம்கொடுத்திட்டு எடுத்திட்டுப்போங்க…” நீளப்பேசி முடித்த செந்திலின் குரலில் பதட்டம் அதிகம் இருந்தது.. பணத்தேவை நிறைவேறப் போகிற நிம்மதி பிறந்தது.கூடவே மகனை எப்படி சமாளிப்பது என்ற பயமும் மனதைக் கவ்வியது.
அதற்கு ஏற்றமாதிரி சதீஷ் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் குட்டி நாயை தேட ஆரம்பித்தான். அதற்கு தன் தாத்தாவின் பெயர் வைத்திருந்தான். “பத்ரி எங்கப்பா காணோம்?” என்று கவலையாய் கேட்டான்.
“தெரியலப்பா… தோட்டத்தில் தான் இருந்தது காணோம்..”
செந்தில் பொய் சொல்ல சங்கடப்பட்டான். பழக்கமில்லாத ஒன்று. இந்தப் பொய்யை வேலை பார்க்கும் இடத்தில் சொல்லி இருந்தால் எங்கேயாவது வேலை கிடைத்திருக்கும். உண்மை பேசியதாலேயே உதாசீனப்பட்டுப் போனவன்.
சதீஷ் வீதி முழுக்க தேடினான். அழுதான்..தாய் நாயும் கண் அலைபாய தேடியது. அதைப் பார்க்கும் போதெல்லாம் செந்திலுக்குக் குற்ற உணர்ச்சியில் மனம் குறுகுறுத்துப் போனது. பெற்ற குழந்தையைப் பிரித்த பாவி நானென்று உள்மனம் அரற்றியது.
ஒரு வாரத்தில் தாய் நாய் அம்புஜா வருத்தம் நீங்கி சமாதானமாகிவிட்டது.. சதீஷ் தான் அழுது கொண்டே இருந்தான்.
“அம்புஜாவையாவது காப்பாத்தணும்ப்பா” என்றான் அதன் முகத்தைக் கட்டிக் கொண்டு.
செந்திலுக்கும் அவன் மனைவி உஷாவுக்கும் குற்ற உணர்வில் மனம் துடித்தபடியே இருந்தது..
அன்று வீட்டு சொந்தக்காரர் வந்துவிட்டார், “நீங்க வாடகையும் ஒழுங்கா கொடுக்கல….மேலும் நானே இந்த வீட்டுக்கு குடிவரப் போறேன். அதனால ஒரு மாசத்துல வீட்டைக்காலி பண்ணுங்க” என்று கூச்சல் போட்டார்.
புதிதாய் வாடகைக்கு வீடு பார்ப்பதா? நாய் இருப்பதால் சற்று வாசல் பக்கமாவது பெரிதாய் இருக்கிற வீடு வேண்டும். அதற்கே சென்னையில் பத்தாயிரம் ரூபாய் ஆகுமே. இந்த வீடு பத்துவருஷமாய் இருப்பதால் ஐந்தாயிர ரூபாய் வாடகையில் காலத்தை ஓட்டியாகி விட்டது. அதிர்ந்து போனவனாய் செந்தில் என்ன செய்வதென தெரியாமல் விழித்தான்..
அப்போதுதான் அவன் நண்பன் ராஜா சென்னையில் கூடப் படித்தவன், தன் கிராமத்து வீட்டில் யாராவது தங்கி பார்த்துக்கொண்டால் போதும் வாடகை கூட வேண்டாம் என்றான்.
“எனக்கு சென்னையில் வேலை காரணமாய் அங்கே போகவே முடிவதில்லை..ரிடையர் ஆனதும் செட்டில் ஆக அங்கேயே அப்பா ஞாபகமாய் அந்த வீட்டை வைச்சிருக்கேன்” என்றான்.
சதீஷின் படிப்புக்கு அருகில் டவுனில் நல்ல பள்ளிக்கூடம் இருப்பதாகவும் ராஜா சொன்னதும் செந்தில், மனைவி உஷா மகன் சதீஷ் நாய் அம்புஜாவுடன் உளுந்தூர்பேட்டை அருகில் இருந்த அந்த கிராமத்திற்கு வந்தான்.
ஓட்டு வீடுதான். வாசலில் திண்ணை..ரேழி தாழ்வாரம் கூடம் என்று சற்று பெரிதாகவே இருந்தது. கூடத்தில் ஊஞ்சல்..நெல் கொட்டி வைக்கப்படும் குதிர்கள்..சுவரில் எண்ணைக்கறைகொண்ட பிறைகள். உத்திரத்தை தாங்கும் தூண்கள் என்று கிராமத்து வீடுகளுக்கே உரிய அழகுடன் இருந்தது. சமையற்கட்டு பெரியதாக இருந்ததில் உஷா மகிழ்ந்து போனாள்.
கொல்லைப்பக்கம் வாழை தென்னை மரங்கள்.. சில பூச்செடிகள்.கிணறு.
சதீஷுக்கு அம்புஜாவுடன் விளையாட கொல்லைப்பகுதி மிகவும் பிடித்திருந்தது.
“அப்பா! இந்த வீடு பெருசா இருக்குப்பா…நானும் அம்புஜாவும் பின்கட்டுல பந்து தூக்கிப் போட்டு விளையாட அருமையான இடம்” என்றான்.
செந்திலும் உஷாவும் சென்னையில் ஒரு பிரபல அப்பள விற்பனை நிறுவனத்தில் முன்னமே பேசிப்பார்த்து அப்பளமிட்டு கொண்டு தரும் வேலைக்கு ஆர்டர் வாங்கி இருந்தனர். அதை செய்ய கிராமத்து வீடு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அப்பளம் காயப்போட பெரிய முற்றம் இருந்தது, தொழில் தொடங்க முதல் காரணமாகிப் போனது.
தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்து பின்கட்டில்தான் சதீஷ் அம்புஜாவுடன் இருப்பான்.
அன்று பள்ளிவிட்டு வந்தவன் நாயுடன் விளையாடியபடியே இருந்தவன் அசதியில் அப்படியே கொல்லையில் அவரைப் பந்தல் கீழே படுத்தவன் தூங்கி விட்டான்.
செந்திலும் அவன் மனைவியும் கூடத்தில் அப்பளம் இட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பார்த்து அம்புஜா பெரிதாய் குரைக்க ஆரம்பிக்கவும் இருவரும் அதிர்ந்தனர்.
அம்புஜா சதீஷுடன் இருந்தால் வாயே திறக்காது.
“சதீஷ் ஏதும் விளையாட்டு காட்டி பயமுறுத்தி இருப்பான்” என்றாள் உஷா சிரித்தபடி.
“ஆமாமாம்..குறும்பு எல்லை மீறினா அம்புஜா குரைக்காம என்ன செய்யும்?” என்றான் செந்தில்.
ஆனால் குரைப்பு சத்தம் அதிகமானதும் கவலையானது இருவருக்கும்.
“சதீஷு அப்பா சதீஷு..” மகனை அழைத்தனர். பதில் வராமல் போகவுமிருவரும் பின் கட்டுக்கு பதறிக்கொண்டு ஓடினர்.
அங்கே அவரைப் பந்தலின் கீழ் சதீஷ் மிரட்சியுடன் உட்கார்ந்திருக்க அவன் எதிரில் படமெடுத்துக் கொண்டிருந்த நல்லபாம்பின் மீது சீறிப் பாய்வதும் கால்களை உதறிக்கொண்டு பின்னே ஓடி வருவதுமாய் இருந்த அம்புஜாவைக் கண்டதும் செந்தில் ‘ஐயோ’ என அலறிவிட்டான்.
அப்போதுதான், “அப்பா! அம்மா….பா… பாம்பு” என்று நடுங்கும் குரலில் சதீஷ் சொன்னான்.
அவன் அருகில் வந்த பாம்பின் மீது சரேலென மோதி அது கொத்த வரும் போது மீண்டும் பின்னே வந்த அம்புஜா பெரிதாய் குரைத்து விட்டு மறுபடி நாலுகால் பாய்ச்சலில் பாம்பின் உடலைப் பல்லால் கடித்தது.. வாலை சுழற்றி பாம்பு திரும்பி அம்புஜாவைக் கொத்த வந்தது. அம்புஜா பலம் கொண்ட மட்டும் தன் கழுத்துப் பகுதியை கடிக்க பாம்பு சரசரவென கொல்லைப்பக்கத்தின் பின்பாதையில் நகர்ந்த்து..அம்புஜா விடாமல் துரத்தியது.
அதற்குள் மகனை வாரிச்சுருட்டிக் கொண்டு செந்தில் கூடத்திற்கு வந்தான்.
மனைவியையும் மகனையும் உள்ளே பத்திரமாய் இருக்கச் சொல்லி கையில் பெரிய கழியுடன் பின்கட்டு வந்தவன் அங்கே கொல்லை மூலையில் அம்புஜா பாம்பினை வாயில் கடித்துக் குதறுவதைப் பார்த்தான். பத்துநிமிஷப் போராட்டத்தில் பாம்பின் உடல் இரண்டு பட்டு செத்துப் போனது.
அம்புஜா வேகவேகமாய் செந்திலை நோக்கி ஒடி வந்து அவன் கைகளில் தஞ்சம் புகுந்தது. அதன் உடம்பிலும் கீறல்கள் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. நாக்கில் ஜலம் வடிய அது வந்த கோலம் செந்திலுக்கு கண்ணை நனைத்தது.
‘அன்னிக்கு என் குட்டியை என்னிடமிருந்து நீ பிரிச்சாலும் நான் உன் குட்டியை இன்னிக்குக் காப்பாத்திட்டேன்’ என்று அம்புஜா வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் செந்திலுக்கு அதன் மனக்குரல் கேட்காமலில்லை. பாம்புக்கடி விஷம் உடலில் ஏறிய நிலையில் உயிர் விட்ட அம்புஜாவை கண்ணில் நீர் வழிய கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தான்.