கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 7,732 
 
 

கஷ்ட நஷ்டம் பார்த்தால் நாலு காசு சம்பாதிக்க முடியாது என்ற ஆசையில் அரபுநாட்டுக்குப் போனான் பரமன். சங்கரியைக் கைப்பிடித்து ஆறு மாதங்கள் கூட முடியாத சூழலில் , இளம் கனவுகளுடன் துபாய்க்குப் புறப்பட்டுப் போனான் .

கேரளாவின் மிகப்பெரிய விமானத் தளமான கொச்சி விமானநிலையத்தில் காத்திருக்கும்போது அவனுக்கு ஒரு நற்செய்தி வந்தது. 

சங்கரி தாய்மை அடைந்திருக்கிறாள்! 

வாட்ஸப் கால். அவனுக்கு தலை கால் புரியவில்லை. அலைபேசியை முத்தமிட்டான்.

ஆசை ஆசையாய் சொற்களைப் பொழிந்தான். ஒருபக்கம் ஆனந்தம். மறுபக்கம் துயரம். இந்தக் கோலத்தில் அவளுக்கு நிழலாக இல்லையேயென்று உள்ளூரக் கவலை… 

அவனுடைய சகபயணி ஆங்கிலத்தில் கேட்டார்:

“எனி குட் நியூஸ், சார்?” 

“ஷுயூர் ஷூயூர்..!” – சொன்னான் . 

அசலான வாழ்க்கை அன்றாடம் தோன்றி மறைகிற கனவு போன்றது. எவ்வளவு சடுதியில் நாட்கள் விரைந்து மடிகின்றன! 

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள். அயல்நாட்டுப் பணியிலிருந்து விடுபட்டு, கொச்சி – பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினான், பரமன். 

நாள் தவறாமல் வாட்ஸப் வீடியோ கால் வழியே பார்த்து, பேசி, மகிழ்ந்து, சிலிர்த்துப் போனவன் இன்னும் சில மணி நேரங்களில் மகளையும் மனைவியையும் நேரில் பார்க்கப்போகிறான். 

மகள் இனியா எவ்வளவு பெரியவளாக மாறிப்போயிருக்கிறாள்! 

‘டாடி! எனக்கும் மம்மிக்கும் என்ன வாங்கியிருக்கறீங்க..காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க..என்ன டாடி..சரியா..!’ 

அட! என்ன மழலைப் பேச்சு! திக்குமுக்காடிப்போனான் பரமன்..

கொச்சியிலிருந்து புறப்பட்ட வோல்வா பஸ், கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில் மூச்சிரைக்க நின்றது.

‘ஸ்ஸ்… அப்பாடா.. ‘ பயணிகள் எல்லோரும் கை கால்களை நீட்டி, தங்களுக்குத் தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள் . 

பஸ்ஸிலிருந்து கீழே குதித்ததும், ‘ஆகா..கோயம்பத்தூரா, கொக்கா..என்னமாய் வளர்ந்து விட்டது!’ 

‘அடுத்து சேலம் போற பஸ்ஸைப் பிடிக்கவேண்டும்..’ என்று நினைத்தவனாய்த் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பேக்கரிக்கு முன்பு நின்றுகொண்டிருந்த  ஒருவன் அவனைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தான் .

ஓரடி முன் வந்து “சார்! என்னைத் தெரீலீங்களா..நீங்க பரமன்தானே?” என்றதும், பரமன் விழிகளை அகல விரித்தவாறு அவனையே பார்த்தான் . 

“ஆமாம். நீங்க?” 

“என்ன சார்…மறந்துட்டீங்களா…நீங்க இப்ப துபாயிலேருந்துதானே வர்றீங்க..நம்ப ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்பறேன்னு சொல்லீட்டு, அந்த ஏஜென்ட் என்னை ஏமாத்திட்டான், படு பாவி!” 

“ஓ..ஒ..யூ ஆர் பழனிவேல்! இப்ப ஞாபகத்துக்கு வருது..அப்புறம் என்னாச்சு..போகலையா?” என்றான் பரமன்.

“இல்லே சார்… பக்கத்திலே எலைட் ஓட்டல்லே இருக்கேன்…போர்டிங் அண்ட் லாட்ஜிங்.. இப்ப நீங்க எங்க போகணும்?” 

“சேலம்..அழகாபுரத்திலே பேமிலி இருக்கு” 

“அப்ப வாங்க..ஹோட்டலுக்கு..பிரெஷ் பண்ணீட்டு, டிஃபன் முடிச்சிட்டுப் போலாம்.. கொறைஞ்சது நாலு மணி நேரமாவது ஆகும் ..சேலம் போறதுக்கு” என்றான் அந்த பழனிவேல் .  

இருவரும் எலைட் ஓட்டலை நோக்கி நடந்தார்கள் .

அழகாபுரத்தில் சங்கரி வீட்டை அழகுபடுத்திக்கொண்டிருந்தாள். இன்றைக்கு சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் போகாமல் ‘டாடி எப்ப வருவாங்க’ என்று தொணதொணத்துக் கொண்டிருந்தாள் இனியா. 

சமையலறையில், சிக்கன் வறுவலுக்கு தேங்காய் நறுக்கிக்கொண்டிருந்த சங்கரியின் அம்மா கேட்டாள்: 

“ஏம்மா . சங்கரி….இன்னிக்கு சனிக்கிழமை..டாக்டர் செக்கப்புக்குப் போகணுமில்லே…” 

” ஆமாம்…அவரு வரட்டும்…ஈவினிங் போயிட்டு வந்தர்ரோம்” என்று சொல்லியவாறே படுக்கையை தூசி தட்டி புதிய பெட் ஸ்பிரட்  விரித்துக்கொண்டிருந்தாள் 

அப்போது –

டீவியில் ஓடிக்கொண்டிருந்த நியூஸ் சானலை யதேச்சையாக கவனித்தாள். அந்த நொடியில் ஒளிபரப்பான செய்தியைக் கேட்டதும் அப்படியே ‘தொப்’ என்று கட்டிலில் சரிந்தாள்.

‘இன்று அதிகாலை கோவையில், துபாயிலிருந்து வந்த ஒருவரை, பண மோசடி வழக்கு தொடர்பாக ஒரு ஓட்டலில் வைத்து காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.’ 

அவள் தலையணையில் முகம் கவிழ்த்து கேவிக்கேவி அழுதாள் .

‘ஐயோ கடவுளே! இது அவரா இருக்கக்கூடாது.. ஒண்ணும் புரிலியே… அவரும் துபாயிலிருந்துதானே வர்றார்… இதென்ன சோதனை’  

உடனே டிவியை நிறுத்திவிட்டு, வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் இனியாவை எட்டிப் பார்த்துவிட்டு,

துவாலையால் விழிகளைத் துடைத்துக்கொண்டு, கைப்பேசியில் கணவனைத் தொடர்பு கொண்டாள்.

அது ஸ்விச் ஆப் ஆகியிருந்தது. மேலும், அச்சமும் அழுகையும் அவளை ஆட்கொள்ள… 

சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா “ஏம்மா..ரொம்ப அலட்டிக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்காருல்லே…தம்பி வர்றதுக்கு இன்னும் லேட் ஆகும்..கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க” என்றவாறே கடந்து சென்றாள்.

கேட் அருகே ஆளரவம். காலிங் பெல் ஒலித்தது .

“மம்மி ..கொரியர்!” என்றாள் இனியா.

பதட்டத்துடன் வெளியே வந்தாள் சங்கரி.. 

“மேடம்! பரமன் சார் இருக்காரா?” 

அவளுக்கு விளங்கவில்லை. ‘அவர் இன்னும் வந்து சேரவில்லை..அதற்குள் கொரியரா..’

ஒரு பார்சல். கையெழுத்துப் போட்டு வாங்கினாள்.

துபாயியிலிருந்து அவர்தான் அனுப்பியிருக்கிறார். என்னவாயிருக்கும்? 

திகைப்புடன் பிரித்தாள் .

விலையுயர்ந்த ஆடைகள். காஸ்மெடிக்ஸ் .பிரத்தியேகமாய் இனியாவுக்கு சில கவரிங்குகள்.

“அய்! டாடி எனக்கு இத்தனை வாங்கிட்டு வந்திருக்கீங்க!” 

இனியா பார்ஸலை வாங்கிக் கொண்டு  உள்ளே ஓடினாள். கௌரி சேலைத் தலைப்பில் முகத்தை மூடிக்கொண்டு குமுறினாள் . 

‘கடவுளே ! நீதான் காப்பாத்தணும்!’ 

சிறிது நேரத்தில் –

மீண்டும் காலிங் பெல் அழைத்தது. சங்கரியின் இதயம் ‘பக் பக் ‘கென்று துடித்தது . 

அது –

அந்த இல்லத்துக்கு வந்த விலையுயர்ந்த வெகுமதி ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *