கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 26,497 
 
 

ம்மா…”

“என்ன இந்துக் குட்டீ?”

“என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?”

“ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?”

“இல்லேம்மா.. வந்து…”

“சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு…”

“நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி… நீங்களும், டாடியும் வரணும் மம்மீ..”

“நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? சாயங்காலமா? ஸாரிடா – அன்னிக்கு போர்ட் மீட்டிங் இருக்கு. முடிய ஏழு, எட்டு ஆயிடுமேடா, ஏன் முன்னாலியே சொல்லலை? ம்…? அப்பாவும் லண்டன் லேந்து அடுத்த வாரம்தான் வர்றார்…”

“ப்ளீஸ் மம்மி..எல்லார் அப்பா, அம்மாவும் வருவாங்க மம்மி…”

“முடிஞ்சா வரமாட்டேனா இந்தும்மா? மறுநாள் ஸண்டே தானே? அன்னிக்கு நீயும் நானும் ‘சோழா’க்குப் போய் ஒண்ணா ஸ்விம் பண்ணிட்டு சாப்பிட்டுட்டு வரலாம்… ஒகே?”

“ப்ராமிஸ்?”

“ப்ராமிஸ்! இப்ப அம்மாவைத் தனிய விட்டுட்டு ஓடிடுடா…”


ம்மி…”

“எஸ் இந்து?”

“வெளிலே போகப் போறீங்களா?”

“ம்ம்-ரோட்டரி கூட்டத்திலே விமன் ஆப் இண்டியாவைப் பத்தி பேசப் போறேன்”

“மாலை போடுவாங்களாம்மா?”

“போடுவாங்கடா!”

“அப்பாவும் வர்றாராம்மா?”

“வரார் ஸ்வீட் ஹார்ட்…”

“நா-நானும் வரட்டுமா?”

“இது பெரியவங்க கூட்டம் இந்து. உனக்கு போரடிக்கும். உமாவை விட்டு உன்னை பீச்சிக்கு அழைச்சிட்டுப் போகச் சொல்றேன். ஹவ் அபௌட் ஐஸ்கிரீம்?”

“உங்க மடிலே நா உட்கார்ந்துக்கட்டுமாம்மா?”

“வேணாம் டார்லிங்… புடவை கசங்கிடும். கிட்ட வா.. அம்மா உனக்கு ஒரு கட்டி முத்தா கொடுக்கிறேன்.. உமா, இவளை அழைச்சிட்டு பீச்சுக்குப் போயிட்டு, வர்றப்போ தாஸ்ப்ரகாஷ் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு, என்ன?”


ந்து தூங்கிட்டாளா, உமா?”

“இப்பத்தான் படுக்க வச்சேன். தண்ணி கேட்டா, எடுக்க வந்தேன்…”

“அந்த டம்ளரை என்கிட்டே குடு. நா எடுத்துட்டுப் போறேன்.”

“ஹாய் மம்மி…”

“ஹலோ-குட்டிம்மா.. ஸர்ப்ரைஸ் பாத்தியா?”

“மம்மி…மம்மி…மம்மி…மம்மி…”

“ஷ்.. ஷ்…போதும்..போதும்டா..இந்தா தண்ணி…”

“வேணாம்..கிஸ் வேணும்…நிறைய..அம்மா, இப்ப உங்க மடிலே நா உட்காரலாமா? புடவை கசங்கினா பரவாயில்லையா?”

“உட்காருடா..வா..இந்தக் கன்னத்துக்கு ஒரு கிஸ்-அந்தக் கன்னத்துக்கு ஒரு கிஸ். போதுமாடா?…இந்தா தண்ணி; குடிச்சிட்டு சமர்த்தா படுத்துக்கோ…மம்மி, இன்னிக்கு உனக்கு ஜோரா ஒரு கதை சொல்லப் போறேன்…”

“ஹய்யா…மம்மி…என்..ம..ம்..மி…”

“ஒ.கே. ஒ.கே. கழுத்தை விடுடா…படு..படுத்தாச்சா?…ஒரு ஊர்ல ஜாக் ஜாக்னு ஒரு பையனாம்…அவனுக்கு ஒரு அம்மாவாம்…”

“மம்மி…நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க…”

“தாங்க்யூடா கண்ணா-நீயும்தான் கொள்ளை அழகு…சரி..பேசாம கதையைக் கேளு…அந்த பையன் ஒருநாள்…என்ன உமா?”

“மிஸ்டர் ராமன் போன்ல கூப்பிடறார்..அர்ஜெண்டா பேசணுமாம்…”

“பத்து நிமிஷம் கழிச்சி நா பேசறேன்னு சொல்லேன். இரு, இரு, வேணாம், நானே வரேன்.”

“கதை மம்மி?”

“மிஸ்டர் ராமன் ஒரு முக்கியமான க்ளயண்ட் இந்து, அவசியம் இல்லாட்டி கூப்பிடமாட்டார். இன்னொரு நாள் அம்மா கதை சொல்றேன்..குட் நைட் டார்லிங்…”


கேக் ரொம்ப நல்ல இருக்கு மாலினி.. வாங்கினதா இல்லே, வீட்டிலே செய்ததா?”

“வாங்கினதுதான் ராஜி..வீட்டுல செய்ய நேரம் எங்கே?”

“எம்.பி.ஏ. படிச்சிட்டு, ஹுஸ்பண்ட் கூடவே ஆபீஸ்லேயும், பார்ட்னரா இருந்து, எல்லாத்தையும் கவனிச்சுக்கறே-நேரம் இருக்காதுதான்… ஆண் பிள்ளைக்கு சரியாய் பெரிய வேலையும் பார்த்துகிட்டு வீட்டையும் இத்தனை அழகா நீ எப்படித்தான் கவனிக்குறியோ.. என்னால முடியாதும்மா…”

“கஷ்டமாதான் இருக்கு…ஆனாலும், நம்ம வீட்டு வேலைய நாமதானே கவனிக்கணும்…”

“இதான் உன் பொண்ணா?”

“இந்தூ-குளிச்சிட்டு வந்திட்டியா..இங்க வா டார்லிங். ஸே ஹல்லோ ஆண்ட்டி.. இது அவங்க டாட்டர் அனுராதா.. அழைச்சிட்டுப் போய் விளையாடுடா…”

“இந்த பொம்மை மாதிரி நா பார்த்ததே இல்லே-இந்தூ…”

“எங்கப்பா லண்டனிலேந்து வாங்கிட்டு வந்தார்…”

“அந்த வீடு?”

“அது பம்பாய்ல வாங்கினது…உன் ப்ராக்லே இது என்ன பொம்மை, பொம்மையா?”

“எங்கம்மாவே எம்ப்ராய்டரி பண்ணி தைச்சது…”

“உங்கம்மாவேவா?”

“ஆமா-என் ப்ராக்ஸ் எல்லாம் அம்மாவே தைப்பாங்க…எங்கம்மா ரொம்ப நல்லவங்க, தெரியுமா…”

“எங்கம்மாவும் தான் நல்லவங்க; ரொம்ப கெட்டிக்காரங்க… ஆபீஸிலே அப்பா மாதிரி எங்கம்மாவும் வேலை பண்ணறாங்களே…”

“எங்கம்மா கேக் பண்ணுவாங்க… என்னோட பீச்சிக்கு வருவாங்க…என்னை குளுப்பாட்டி, டிரஸ் பண்ணுவாங்க…கதை சொல்லுவாங்க..எப்பவும் என்கூடவே இருப்பாங்களே…”

“எங்கம்மவும்தான் கதை சொல்லுவாங்க..ஆமா, வந்து வந்து…உங்கம்மா எப்பவும் உன்கூடவே இருப்பாங்களா அனு?”

“எ..ப்..ப..வும்…”


மா, டாக்டர் வந்திருக்கார்னு சொல்லி இந்துவைக் கூட்டிட்டு வா..என்னமோ தெரியலை டாக்டர், ஒரு வாரமா இந்து சரியாவே இல்லே. எது கேட்டாலும் சரியாய் பதில் சொல்றது இல்லே. ‘ம்’முனு இருக்க-ஒழுங்கா சாப்பிடற தில்லையாம், விளையாடறதில்லையாம்…உமா சொல்றா.. கிட்ட நின்னு கவனிப்போம்னா முடியாதபடி எனக்கும் இப்பப் பார்த்து ஆபீஸ்லே எக்கச்சக்க வேலை…”

“சுந்தர் எங்கே?”

“அவர் ஊர்ல இல்லே டாக்டர். ஒரு செமினாருக்காக கல்கத்தா போயிருக்கார்.. நாளைக்கு வந்திடுவார்.. கூப்பிட்ட வராளா பாருங்க, இந்தூ…”

“வந்துட்டேன் மம்மி…”

“என்னம்மா பண்ணிட்டு இருந்தே?. உன்னை செக்அப் பண்ண டாக்டர் அங்கிள் வந்திருக்கார்… ஸே, குட்மார்னிங்”

“குட்மார்னிங்”

“குட்மார்னிங் இந்தூ; இப்படி வா..ஆ..சொல்லு”

“ஆ…”

“இங்கே வலிக்குதா? இங்கே?”

“ம்ஹூம் இல்ல…”

“என் பக்கத்திலே உட்காரு. அடேயப்பா..என்னமா வளர்ந்திட்டம்மா! உன்னை, இத்துனூண்டு குழந்தையா வெளிலே எடுத்துப் போட்டவன் நான்தான், தெரியுமா?”

“அம்மா தொப்பைலேந்து என்னை வெளிலே எடுத்தது நீங்கதானா அங்கிள்?”

“நானேதான்”

“எப்படி எடுத்தீங்க? அம்மா தொப்பைல ஜிப் இருக்கா.. திறந்து எடுத்தீங்களா?”

“அது…அ…அப்படி இல்லே இந்தூ..அதை விளக்கிச் சொன்ன உனக்கு இப்பப் புரியாதும்மா…”

“டாக்டர் படிப்பு படிச்சாதான் புரியுமா?”

“ம்-ஆமா-பெருமூச்சி விடு…திரும்பு…”

“அங்கிள்…”

“என்னம்மா?”

“வந்து…வந்து..தொப்பைலேந்து எடுக்கற மாதிரி, திரும்ப தொப்பைக்குள்ளியே என்னை வைச்சிட முடியுமோ?”

“ஆ?. அது எப்படி முடியும் இந்து?”

“ஏன் முடியாது அங்கிள்?”

“இப்ப நீ பெரிசா வளர்ந்திட்டயே!”

“மருந்து கொடுத்து பெரியவளை சின்னப் பாப்பாவா சுருக்க முடியாது?”

“ம்ஹூம்-முடியாது…”

“ஏன் முடியாது?”

“வந்து-அ, இன்னும் அந்த மருந்தை யாரும் கண்டு பிடிக்கலையே!”

“நீங்க பெரிய டாக்டர்னு மம்மி சொல்வாங்களே, நீங்க கூட கண்டுபிடிக்கலியா அங்கிள்?. சுருக்க கண்டு பிடிச்சி, அந்த மருந்தை எனக்குக் கொடுத்து திரும்ப அம்மா தொப்பைக்குள்ள போக வைச்சிடுங்க அங்கிள். அப்பத்தான் அம்மாவோட எப்பவும் என்னால இருக்க முடியும். ப்ளீஸ் அங்கிள், ப்ளீஸ்…”

கெஞ்சலாக, ஆனால் தீவிரமாக இந்து பேசி நிறுத்த, மாலினி திடுக்கிட்டுப் போனாள். இந்துவின் உடம்பில் கோளாறு இல்லை, மனசில்தான் என்பது அப்பட்டமாய் புரிய, எதிரில் அமர்ந்திருந்த டாக்டரை ஒரு கணம் வெறித்துவிட்டு பார்வையைத் தழைத்தாள்.

சில நிமிஷங்களில் மௌனித்து, யோசித்து, நாளைக்கு சுந்தர் கல்கத்தாவிலிருந்து வந்ததும் சொல்லவேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்து விட்டவளாய், மகளை எட்டிப் பிடித்து இழுத்து “புடவை கசங்கினா பரவாயில்லை, அம்மா மடிலே உட்காருடா…” என்று மெதுவாக அவள் கூற, அதை நம்ப முடியாதது போல இந்து கண்களை விரித்தாள். அப்புறம், ‘ஐ லவ் யூ மம்மி’ என்று சொல்லி அழுந்த தாயைக் கட்டி முத்த மிட்டாள்.

– 1980

1 thought on “தாய்

  1. அன்புடையீர்,
    வணக்கம். தாய் சிறுகதை அருமை. இயந்திர வாழ்க்கை வாழும் மேல்தட்டு குடும்பங்களில் பாசத்திற்காகஏங்கும் குழந்தைகள் மனநிலை குறித்து நன்கு கதாசிரியை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். கதா சிரியைக்குப் பாராட்டுக்கள். சிறுகதை இணையதளம் ஆசிரியருக்கு நன்றி

    பூ, சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *