தாயின் மனசு
“”கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது.
அவர் மீண்டும் தணிவாய், “”கமலா, இப்படியே நின்னுட்டிருந்தா எப்படிம்மா? போம்மா. போய் உள்ள ஆக வேண்டியதைக் கவனிக்க வேண்டாமா?” என்றார்.
ஆக வேண்டியது என்று இனிமேல் அவளுக்கு ஒன்று உண்டா? அதுதான் நேற்று அமர்க்களமாய் நடந்து முடிந்துவிட்டதே… பெரியவர் அருணாசலம் கைத்தடியை அழுந்த ஊன்றிக்கொண்டு மற்றொரு கையால் மூக்குக் கண்ணாடியை கொஞ்சம் உயர்த்தி வண்டிப் பாதையைப் பார்க்கிறார். புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு பெட்டி வண்டி அந்தப் பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டிருந்தது.
கமலாவும் கூட தன் சிந்தனையில் வெகுதூரம் போயிருந்தாள்.
“”அம்மா, ஏம்மா இவ்வளவு நேரம் முழிச்சிட்டிருந்தே? நான் சொல்லிட்டுத்தானே போனேன். ஆபீஸ்ல நிறைய வேலைன்னு. நீ எடுத்து வச்சுட்டுப் படுத்திட்டா நான் சாப்பிட்டுக்க மாட்டேனா?”
“”ஐயையோ! என்னம்மா இது, இப்படிச் சுடறதே உன் உடம்பு! கொடுத்த மருந்த ஒழுங்கா சாப்பிட்டியா?”
“”இங்கே பார்த்தியாம்மா, இதிலே என்ன இருக்குன்னு சொல்லேன் பார்க்கலாம். நாளைக்கு என் பிறந்த நாளில்லை? அதான் மம்மிக்கு என்னோட கிப்ட்! வெங்காயச் சருகு நிறத்துல பட்டுச் சேலை!’
இப்படியெல்லாம் அவளை – கமலாவை இனி யார் கேட்கப் போகிறார்கள்? இனி யாருக்குத்தான் அவள் வாசற்படியிலே உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு ஒடிய காத்துக் கிடக்கப் போகிறாள்?
கண்களில் நீர் வழிய பாதையைப் பார்த்தபடி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள் – கமலா. பெட்டி வண்டி பார்வையிலிருந்து ஓடி மறைகிறது. “ஜல் ஜல்’ என்ற அதன் சலங்கை சப்தம் அவள் காதைச் சுற்றி ஒலிப்பதுபோல ஒரு பிரமை.
எதிரே நின்ற பெரியவர் அருணாசலத்துக்கும் இந்தத் துக்கத்தில் பங்கு உண்டு. பக்கத்து வீட்டுக்காரரும் ரிட்டயர்டு தலைமை ஆசிரியருமான அவர், கமலாவின் மகள் பவானிக்கு ஆசிரியராக இருந்தவர். அவரையும் அவள் பிரிவு அலைக்கழித்தது.
ஒரு பெண்ணுக்கு வாய்க்கிற வாழ்வும் வாத்சல்யமும் புகுந்த வீட்டுக்குத்தான் சொந்தம்னு யாருக்குத் தெரியாது? இன்றைக்கு வண்டிப் பாதையைப் பார்த்து கண்கலங்கி நிற்கும் இதே கமலா, இதேபோல ஒருநாள் தன் தாயைக் கலங்கவைத்துவிட்டு புகுந்த வீட்டுக்குப் பயணப்பட்டவள்தானே?
பெரியவர் அருணாசலம் கைத்தடியை ஊன்றிக்கொண்டே ஏதோ மெல்ல முணுமுணுத்தபடி போய்விட்டார்.
பன்னிரெண்டு வயதில் தந்தையை இழந்தவள் பவானி. அவளுக்கு தாயோடு தந்தையாகவும் இருந்து குறையில்லாமல் வளர்த்தவள் இந்தக் கமலா.
பவானியை உயர் படிப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது அவள் தந்தையின் ஆசை. அவர் இன்று இல்லை. ஆனால், அவர் கொண்ட ஆசை நிராசையாகிவிடவில்லை. கமலா பவானியைக் கல்லூரிக்கு அனுப்பினாள். இதில் கமலாவுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது; கூடவே ஓர் அச்சமும் தொடர்ந்தது. வயது கால உணர்வுகள் தன் மகளை எந்தவிதத்திலாவது தடம் புரட்டிவிடுமோ என்ற பயம்தான் அது. ஆணின் அரவணைப்பை இழந்து தனித்த அவள் வாழ்க்கையில் இத்தகைய பயம்கூட நியாயம்தான். மூன்றாண்டு பட்டப்படிப்பு முடிந்தது. அந்தமட்டில் பவானிக்கு ஒரு வேலை கிடைத்தால் குடும்பத்துக்கு பாரம் குறையுமே என்று நினைத்தாள். ஒரு தொழிற்சாலையின் நிர்வாகப் பிரிவில் பவானிக்கு வேலையும் கிடைத்துவிட்டது. அதன்பிறகு அவளுக்கு நல்ல ஒரு வரனாகப் பார்த்து ஒரு குறையும் இல்லாமல் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமே என அடுத்த சிந்தனைக்குத் தாவியது கமலாவின் உள்ளம்.
உறவில் ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து… இதோ அவனோடு கல்யாண காட்சிகள் முடிந்து அனுப்பி வைத்துவிட்டாள்.
திரும்பி வீட்டுக்குள் வந்தாள். ஏதோ ஓர் இனந்தெரியாத அமைதி வீட்டில் அழுந்திக் கிடப்பதாக அவளுக்குத் தோன்றியது. பழக்கமில்லாத ஒரு புதிய வீட்டுக்குள் நுழைவதுபோல் இருந்தது கமலாவுக்கு. உள்ளே வந்தாள்.
“”மியாவ்!”
கமலா மேலே உத்திரத்தை நிமிர்ந்து பார்க்கிறாள்.
“”பவானியா? அவள்தான் புருஷன் வீட்டுக்குப் போயிட்டாளே! இனி நான்தான் உனக்குப் பவானி”.
அந்தப் பூனைக்கு அவள் உள்ளம் பதில் சொல்கிறது.
பெட்டி படுக்கை – காலையில் பவானி துலக்கி வைத்த பாத்திரங்கள் – அவள் நின்ற இடம் – உட்கார்ந்திருந்த இடம் என்று வீடு முழுவதையும் பரக்க விழித்துக்கொண்டு புதுமையாய் பார்த்தாள் கமலா. அவள் உள்ளம் ஏங்கித் தணிந்தது.
உள்ளே கூடத்தில் உட்கார்ந்து தூணில் சாய்ந்தாள். என்றைக்காவது ஒருநாள் பெண் பிறந்த வீட்டுக்கு அன்னியம்தானே என்று எண்ணிச் சமாதானப்பட முடியவில்லை. தன்னை நினைத்தாள். இறந்துபோன தன் கணவனை நினைத்தாள். அவரோடு புதிதாய் இந்த வீட்டில் வாழ வந்த நாட்களை நினைத்தாள். எங்கோ முடங்கிக் கிடந்த கனவோ, அந்தக் காலத்து நினைவுகளெல்லாம் மளமளவென அவள் மனதில் மடல் விரித்தன மலரும் நினைவாக.
“”கமலா, கமலா!” – சத்தமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள் பர்வதம்மாள் – கமலாவின் தாய்.
எதிர்பாராமல் இவ்வளவு காலையில் தாயின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுவிட்டாள் கமலா.
“”அடடே! அம்மா என்னம்மா இத்தனைக் காலையில புறப்பட்டு வந்திருக்கியே, என்னம்மா விஷயம்?” என்று கேட்டுக்கொண்டே கமலா வெளியே வரவில்லை; அதற்குள் பர்வதம் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு வந்த துணி முடிச்சை பொத்தென போட்டுவிட்டு ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்டாள்.
“”ஒண்ணுமில்லேடி கமலா. பாழும் மனசு கேக்கலை. எப்படி இருக்கேன்னு பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நல்லா இருக்கியாம்மா?” என்றாள் பர்வதம்.
கமலா எதுவும் பேசவில்லை. அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. கமலா புகுந்த வீட்டுக்கு வந்து ஐந்தே நாள்தான் ஆகிறது. “”அதற்குள் யாராவது இப்படி நலம் விசாரிக்க பதறி அடிச்சிட்டு ஓடி வருவாங்களா? நீ நல்ல பைத்தியம் அம்மா?” என்று வாய்விட்டுச் சிரித்தாள் கமலா. இந்த சப்தத்தைக் கேட்டு கமலாவின் புருஷனும் மாமியாரும் உள்ளிருந்து வந்துவிட்டார்கள்.
துணி முடிச்சுக்குள் பர்வதம்மாள் கொண்டு வந்ததெல்லாம் கமலாவினால், பின்னி முடியாமல் இருந்த ஸ்வெட்டர் ஒன்று, ஊசி, நூலுருண்டை, அவளுக்குப் பிடித்த நெய் முறுக்கு…!
அந்தப் பாசத்தின் நெகிழ்வை அப்போது கமலாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. “”இதுக்கா அம்மா, இப்படி மாத்தி உடுத்திக்காமக்கூட அலங்கமலங்க வந்தே?” என்றுதான் கேட்டாள்.
இப்போது கமலாவின் இமைகள் கண்ணீரை ஒற்றிக் கொள்கின்றன. நேற்று நடந்தது இன்றைக்கு, இன்று நடப்பது நாளை தன் மகளுக்கு. காலம் ஒரே மாதிரிதானே சுழன்று கொண்டிருக்கிறது. இதில் மாறுதல் ஏது? மனிதர்கள்தானே மாறுகிறார்கள். உறவுகளா மாறுகிறது? புதுமை, புரட்சி என்பதெல்லாம் இந்த ஆத்ம சலனங்களுக்கு அப்பால் எங்கோ நிகழ்ந்து எங்கேயோ பேசப்படுகிற விஷயங்களோ…
“”ம்மா…!” – என்ற குரல் அவளை அந்தச் சிந்தனையிலிருந்து தட்டி எழுப்பியது. மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய பசுவின் குரல் அவளைத் தோட்டத்திற்கு அழைத்தது. திடுக்கிட்டதுபோல் எழுந்த கமலா அதே வேகத்தில் போய் அதன் கன்றையும் அவிழ்த்துவிட்டாள். தவிட்டு தொட்டியின் அருகில் கொண்டுபோய் விட்டு கிளறிவிட்டாள்.
அவளின் பிரியத்துக்குரிய அந்த வெள்ளைப் பசு செல்லமாகத் தலையைக் குலுக்கிக் கொண்டது. தவிட்டைக் கிளறிவிட்ட கமலாவின் கைகளை பசுவின் சொறசொறப்பான நாக்கு நீவிவிட்டது. அதில் அவளுக்கு இப்போது அசூசையாக இல்லை… இதமாக இருந்தது.
– பாவலர் மலரடியான் (நவம்பர் 2013)