தாம்பத்யம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 14,180 
 
 

மீனாட்சி வீட்டில் காலிங் பெல் சப்தம் .

சோபாவில் அமர்ந்து டிவியில் நாடகம் பார்த்தபடி, காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்த மீனாட்சி , காலிங் பெல் சப்தம் கேட்டதும் எழுந்து சென்று கதவை திறந்தாள்.

வாசலில் மகள் மாலதி. கையில் பையுடன் நின்று இருந்தாள்.

“என்னடி மாலதி ? திடிர்னு எதுவும் சொல்லாம வந்திருக்க. நேத்து நைட்டு போன் பேசுறப்ப கூட வீட்டுக்கு வாரேன்னு ஒன்னும் சொல்லல. அம்மாக்கு சர்ப்ரைஸ் பண்றியா? , எங்க நீ மட்டும் தான் வந்தியா. தம்பி வரலையா ? “ என்று ஆச்சரியம் கலந்த தொனியில் வாசலை நோக்கி கண்களை நோக்கி மீனாட்சி பேசினாள்.

மகள் மாலதி பதில் பேசவில்லை. வீட்டிற்குள் உள்ளே நுழைந்தாள். அவளுக்கென்ற அறைக்கு சென்று பையை வைத்து விட்டு வந்தாள்.

“என்னடி? நான் கேட்ட எதுக்குமே பதில் சொல்லல. நீ பாட்டு உள்ள போற வெளிய வார..” என்று மீனாட்சி மீண்டும் கேள்வி கணைகளை தொடுத்தாள்.

“நீயும் இப்படி பேசாத.! அங்க தான் அவரு பள்ளிக்கூடம் நடத்துற மாதிரி கண்டிசனா இருக்கார் , நீயும் அதையே பண்ணாத “

என்று கோவமாக மாலதி பதில் அளித்தாள்.

மீனாட்சிக்கு ஒரே மகள் மாலதி . மருமகன் பிரசாத். இருவருக்கும் திருமணம் கடந்த ஆறு மாதத்திற்கு முன் தான் முடிந்தது. மருமகன் தனியார் அலுவலக கணக்காளர். மீனாட்சி கணவர் சுந்தரம் பத்து வருடத்திற்கு முன் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மீனாட்சி தனி ஆளாய் மாலதியை வளர்த்து, படிக்க வைத்து, கட்டி கொடுத்தாள்.

“ என்னடி ? இப்ப நான் என்ன கேட்டேன்? ஏன் இந்த கோவம் ? “ என்று மாலதியை பார்த்து மீனாட்சி கேட்டாள்.

“பின்ன என்ன அம்மா , பெத்த பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கேன் , வந்ததுமே வரிசையா கேள்வி கேட்டா கோவம் வருமா ? வராதா ?. வந்து உட்காந்து அப்புறம் கேக்க வேண்டியது தான , உள்ளே நுழைந்ததுமே பதில் சொல்லிட்டு தான் வரணுமா? இது என்ன வீடா ? இல்ல பள்ளிக்கூடமா ? “ என்று மாலதி கூறினாள்.

“தாயே ! வந்து உட்காரு , அப்புறமா சொல்லு. டீ குடிக்கிறியா ? “ என்று உபசரிப்பில் இறங்கினாள் மீனாட்சி.

“சூப்பர் ! அப்படி கேளு அம்மா. சாப்பிட்டு முடி அப்புறம் டீ போட்டு கொண்டு வா “ என்று மாலதி அம்மா மீனாட்சியிடம் கூறினாள்.

சாப்பிட்டு முடித்தாள் மீனாட்சி. சில நிமிடங்களில் சூடான காபி உடன் வந்தாள் மீனாட்சி.

இருவரும் எடுத்து குடிக்க ஆரம்பித்தனர்.

“அம்மா , நீயும் அப்பாவும் எத்தன வருஷம் ஒண்ணா இருந்திங்க. ? “ என்று மாலதி கேட்டாள்.

“உங்க அப்பா கூட இருபது வருடம் ஒன்ன இருந்திருக்கேன். பாவம் அந்த மனுஷன் , அவர் போய் நம்மள வாழ வச்சிட்ட்ருக்கார். பென்சன் பணம், விபத்து காப்பீடு அத வச்சு தான் நாம வாழ்ந்து கிட்டு இருக்கோம். ஆமா இத ஏன் கேக்குற? “ என்று மீனாட்சி கேள்வி கேட்க ,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உனக்கும் அப்பாக்கும் சண்டை வந்தது இல்லையா? “ என்று மாலதி கேட்டாள்.

“ஏண்டி திடிர்ன்னு இப்படி கேக்குற ? “ என்று சந்தேகமாய் மீனாட்சி கேட்டாள்.

“ அட சொல்லுமா , ! “ என்று ஆவலோடு மாலதி கேட்டாள்.

“சண்டை போடாமலா! , சண்டை வராம எப்படி இருக்கும்? சண்டை போடுவோம் , அப்புறம் பேசிக்குவோம் சேர்ந்துக்குவோம் “ என்று மீனாட்சி கூறினாள்.

“எந்த மாதிரி விசயத்திற்கு சண்ட வரும் ? “ என்று மாலதி கேட்டாள்.

“மாலதி , என்ன உனக்கும் தம்பிக்கும்(மருமகன்) ஏதும் சண்டையா ? “ என்று சந்தேகமாய் கேட்டாள் மீனாட்சி.

“ஆமா அம்மா. அடிக்கடி சண்டை வருது “ என்று சலிப்போடு பதில் கூறினாள் மாலதி.

“என்னடி சொல்ற? “ என்று அதிர்ச்சியாய் கேட்டாள் மீனாட்சி.

“ ஆமாம்மா , என்னைய ஏதாவது கோளறு சொல்லிட்டே இருக்காரு? கோவம் வருது எனக்கு. “ என்று சலிப்பாய் பேசினாள் மாலதி.

“என்ன மாலதி வேலைக்கு போக சொல்றாரா ? “ என்ற கேள்வி மீனாட்சிக்கு ,

“வேலைக்கு போக சொல்லல. வீட்டில் அவர் இருந்தார்னா இத பண்ணாத அத பண்ணாத , இப்படி உட்காராத , இப்படி ஏன் தூங்குற டிவி பார்க்காத , செல்போன் நோண்டாத, என்று குறையாவே சொல்லிட்டே இருக்கார். அது எனக்கு சுத்தமா பிடிக்கல. அப்படி பேசாதிங்கன்னு சொன்னேன். கேக்க மாட்டேங்கிறார். அவர் சொன்னத சொல்லிட்டே இருக்கார். அதான் அவர்ட்ட சண்ட போட்டு வந்துட்டேன் “ என்று கோவம் கலந்த தொனியில் மீனாட்சியிடம் கூறினாள் மாலதி.

“ஏனடி மாலதி , வேலைக்கு போய்ட்டு வரும் மாப்பிள்ளை , உன்னிடம் சில விசயத்த எதிர்பார்த்து இருப்பார். அத புரிஞ்சு நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும். வீட்ல இருக்கிறது 2 பேர் தான் , அவர் வீட்டுக்கு வந்ததும் , அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும். நீ செல் , டிவி பார்த்துட்டே இருந்திருப்ப , அதான் திட்டி இருப்பார் “ என்று மீனாட்சி நடந்ததை நேரில் பார்த்த மாதிரி கூறினாள்.

“அதுக்குன்னு , அவர் வீட்டுக்கு வந்துட்டா , நான் அவர் அடிமையா ? அவர் சொல்றத தான் கேக்கனும்னு ஏதும் சட்டம் இருக்கா ? நான் சந்தோசமா , இருக்கணும் , அவ்ளோதான். யாருக்கும் நான் அடிமை இல்லை. அத பண்ணாத , இத பண்ணாத என்று சொல்ல கூடாது , எனக்கு சுத்தமா பிடிக்கல , அதான் டைவர்ஸ் பண்ண போறேன். அப்போ தான் என் அருமை அவருக்கு தெரியும் “ என்று மாலதி கூற ,

பளார் என்று கன்னத்தில் அறைந்தால் மீனாட்சி.

“என்னடி பேசுற.? விவாகரத்து வாங்குற அளவு பெரிய பிரச்சனையா இது. பைத்தியகாரி , கல்யாண வாழ்க்கை அப்டின்னா என்ன நெனச்ச ? அப்பா இல்லாத பிள்ளை என்று உன்னை அடிக்காம வளர்த்தது தப்ப போச்சு. அதான் இப்படி பேசுற ? “ என்று ஆவேசமாக மீனாட்சி கூறினாள்.

“என்னம்மா , என்னைய அடிக்கிற ? அப்போ நான் அந்த ஆளுட்ட அடிமையா இருக்கலாம் , அது தப்பு இல்ல.” என்ற கேள்வி மாலதிக்கு ,

“என்னடி பேசுற , அடிமைன்னா என்னடி ? புருசனுக்கு பணிவிடை செய்வது ஒன்னும் அடிமைத்தனம் இல்ல. அது நம்மோட கடமை. வேலைக்கு போய்ட்டு கலைப்பா வர்ற புருசனுக்கு , தேவைய புரிஞ்சு பண்ணி தர்றது ஒன்னும் அடிமை தனம் அல்ல. வீட்டில இருக்குற நம்மள மாதிரி பொண்ணுகளுக்கு அது வேலை. அவ்ளோதான். இதுல என்ன அடிமை தனம் பார்த்த ? “ என்று மீனாட்சி கூறினாள்.

“என்னம்மா சொல்ற , நான் சொல்றது தப்பா ?“ என்று புரியாதவளாய் மாலதி.

“ஆமாடி , நீ சொல்றது தப்பு தான். தாம்பத்யம் என்பது சாதாரணம் அல்ல. கணவன் மனைவி ரெண்டு பேரும் கடைசி வரை ஒன்னா இருக்கணும் , நல்லது கெட்டது எது வந்தாலும் இருவரும் அதை நல்ல விதமாக எதிர் கொள்வோம் , என்று , உற்றார் , உறவினர் முன் அக்னி சாட்சியாய் வைத்து தான் கல்யாணம் பண்றோம். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சும்மாவா சொன்னங்க. தாம்பத்யம் வாழ்க்கை தற்போதய கால கட்டத்தில் கொஞ்சம் விளையாட்டாக மாறிவிட்டது. சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் சண்டை. உப்பு சப்பில்லா பிரச்சனைக்கு சண்டை. இப்படி சண்டை போட்டு விவாகரத்து கொடுக்க வர்றது.” என்று மீனாட்சி தொடர்ந்தாள்.

“குடும்ப நல நீதி மன்றத்தில் தற்போது ஏராளமான விவாகரத்து வழக்குகள் இருக்கு. அதற்க்கான காரணம் பார்த்தா இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தான். பேசி முடிக்க வேண்டிய விஷயங்கள் , பேச நேரம் இல்லை அத்துடன் பொறுமை இல்லை இருவருக்கும். எங்க காலத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை , மாமனார் , மாமியார் , கொழுந்தன் , நாத்தனார் , மச்சான் , மாமன் , தாத்தா , பாட்டி என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் , அத்தனை பேரையும் சமாளித்து குடும்பத்தை நடத்துவோம்.”

“இப்போ இருக்கிற தாம்பத்ய வாழ்க்கை , திருமணம் முடிந்ததும் , தனிக்குடித்தனம் , யாரையும் வீட்ல சேர்ப்பதில்லை. இருவர் மட்டும் வாழும் வாழ்க்கை விரும்பிகளா இருக்கீங்க. அப்படின்னா கூட இருவரும் சந்தோசமா இருப்பீங்களா அதுவும் இல்ல. சில்லறை சண்டை போட்டு , அதுக்கு விவாகரத்து போறது , என்று இப்ப வாடிக்கை ஆய்ருச்சு “ என்று மீனாட்சி ஆதங்கதுடன் தாம்பத்யம் பற்றி பாடம் நடத்தினாள்.

மௌனமாய் இருந்தாள் மாலதி. கன்னத்தில் விழுந்த ஒரு அறை போதும் என்ற படி ,

“இல்லம்மா , நான் சும்மா சொன்னேன் , நான் உன் பொண்ணும்மா , அப்படி எல்லாம் முடிவு எடுப்பேனா ? “ என்று சமாளித்த படி அங்கிருந்து நகர்ந்தாள் மாலதி.

இன்றைய காலத்தில் , விவாகரத்து என்பது மிக சர்வ சாதரணமான விஷயம் ஆகிவிட்டது. பொறுமை , விட்டு கொடுத்து போவது , இவை எல்லாம் கணவன் மனைவி இருவர் இடத்திலும் குறையும் போது , யார் பெரியவன் , என்ற எண்ணம் வருகிறது. அதனால் வருகிறது பிரிவு. சில நிமிடம் இருவரும் அமர்ந்து பேசினாலே பிரச்னை தீர்ந்து விடும்.

கணவன் – மனைவி தாம்பத்யம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். தாம்பத்யம் என்றால் என்ன என்பதை உணர்ந்து உணர்வு பூர்வமாக இருப்போம். விவாகரத்து என்பது குடும்பத்திற்கு பிடித்த கேடு. அதை தவிர்க்க பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *