தாமரை பூத்த தடாகம்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 15,279
பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கணவன் பசுபதியைப் பார்த்து கொண்டிருந்தாள்.
மூச்சு அடங்கும் நேரம்.
முழுமையாக மூச்சு அடங்காததால் உடம்பு அடிக்கடி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது.
“”மூச்சு வாங்குது மேடம் வெண்டிலேடர்லே போட்டுடலாமா?” டாக்டர் கேட்டார்.
“”பிழைப்பாரா?”
“”மாட்டார். ஆனா மரணத்தை கொஞ்ச நேரம் தள்ளிப் போடலாம்”
அந்த தேகத்தை எத்தனைதான் கொடுமைப்படுத்துவது?
பராலிக் ஸ்டிரோக் வந்து வாய் இழுத்துக்கொண்டு வலப்புறம் செயலற்று…
எத்தனை வைத்தியம்? எத்தனை மருந்துகள்?
ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி எந்தப் பதியாலும் பசுபதியைக் குணப்படுத்த முடியவில்லை. பிழிசல். பத்தியம். உடம்பு முழுவதும் ஊசி குத்திக்கொண்டு அக்குபங்சர் சிகிச்சை. உடம்பும் மனமும்தான் புண்ணாகின.
“”எனக்கு இதெல்லாம் வேண்டாம் பாரு.. என்னை விட்டுடு.. பேசாம உன் மடியிலே தலை வைச்சுப் பிராணனை விட்டுடறேன்.”
குழறிய வார்த்தைகளில் பசுபதி பேசுவார்.
ஆனால் பிராணன்தான் போகவில்லை .
இவளே நர்ஸாய் ஆயாவாய் அம்மாவாய் அனைத்துமாய் இருந்தாள்.
கைப் பிடித்துக் குளியலறை அழைத்துப் போவது, ஸ்பூனில் சாப்பாடு ஊட்டுவது, பாத்ரூம் அழைத்துப் போவது…
இப்போது எல்லாமே நின்று விட்டது..
கஞ்சி ஸ்பான்ஞ் பாத் பெட்பேன் என்று அவர் வட்டமே அந்தக் கட்டிலுடன் முடங்கிப் போனது.
எல்லாப் பெண்மணிகளும் பூவுடன் பொட்டுடன் தான் போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆனால் இவளோ…?
நான் போய்விட்டால் இவர் திண்டாடிப் போவார். இவருக்குச் செய்ய வேண்டிய என் கடமைகளை முடித்தபின்தான் நான் சாகவேண்டும்.
கடமைகள் முடியவில்லை. இவள் காத்திருந்தாள்.
முன்பு ஒரு தடவை பசுபதி சொன்னார்…
“”பாரு நமக்கு ஒரு குறையும் இல்லை. பிள்ளை இல்லாத குறை ஒண்ணுதான். அதனால என்ன? எனக்கு நீ குழந்தை உனக்கு நான்”
உண்மைதான். இப்போதுதான் இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. இவள் அன்னையாய் அசுத்தம் துடைத்து பால் புகட்டி….
இதுவும் ஒரு அவதாரம்தான்..
“”பாரு பிள்ளை இல்லாதவங்க “புத்’ங்கிற நரகத்திலே விழுவாங்களாமே..”
இவள் சிரிப்பாள்.
“”உலகத்திலே எத்தனையோ பேர்களுக்குக் குழந்தை இல்லை. அத்தனை பேரும் “புத்’ என்கிற நரகத்திலே பொத்து பொத்துன்னு விழுந்தா நரகத்திலேயே இடம் இருக்காது”.
“”ஒரு குழந்தையை தத்து எடுத்தா என்ன?”
“”எடுக்கலாம்.. ஆனா குலம் கோத்திரம் எதுவும் தெரியாம”
உண்மைதான். தத்துக் கொடுக்கும் ஸ்தாபனங்கள் குழந்தையின் பூர்வ வரலாற்றைச் சொல்வதில்லை.
நல்ல பிறப்புள்ள குழந்தையாக அமைந்தால் சரி. இல்லையென்றால் பின் விளைவுகள் தாறுமாறாக இருக்கும். உறவுக் கோல்களை நட்டு விட்டு அதை உணர்வுக் கயிற்றால்கட்டி விடலாம்தான்… ஆனால் கோலும் கயிறும் இற்றுப் போய்க்கிடந்தால்….?
இதெல்லாம் பழைய கதை
இப்போது பசுபதியின் மூச்சுத் திணறலும் எதிர்காலமுமே இவள் சந்திக்க வேண்டிய பிரச்னைகள்…
“”அம்மா..”
இவள் உதவிக்காக அமர்த்தி இருந்த ஆயா.
“”என்ன ஆயா?”
“”ஐயா என்னமோ மாதிரிப் பாக்கறாரு அம்மா”
இவள் சட்டென்று கனவு கலைந்து பார்த்தாள்.
பசுபதி இவளைப் பார்த்தபடி தன் உயர்த்திய கரங்களை இவள் மடியில் பொத்தென்று போட்டபடி தன் இறுதி சுவாசத்தை சுவாசித்து முடித்து விட்டார்.
“புத்’தென்ற நரகத்தில் வீழ்ந்தது இவள்தான்..
இப்போது தன் கணவன் மார்பில் விழுந்து அழுதாள்.
ஆயிற்று எல்லாம் முடிந்து போன கதை.
செய்தி கேட்டு வந்த சில உறவினர்களில் ஒருவன் பூபதி வலிய வந்து இறுதிச் செயல்களைச் செய்தான்.
ஈமச் சடங்கு முடித்து மின் மயானத்தில் சாம்பலைச் சேகரித்தவன் லீவு இல்லாத காரணத்தால் “கூலி’ பெற்றுக்கொண்டு விடைபெற்றுக் கொண்டான்.
கையில் ஒரு பிடி சாம்பலாகிப் போன பசுபதி. இவளுடன் வாழ்ந்த வாழ்வு சாம்பலாக ஒரு கலசத்தில்.
மரணித்துப் போன மகிழ்ச்சிகள் இதோ இந்தக் கலசத்தில்.
உணர்வுகளும் உறவுகளும் சங்கமித்த கலசம்.
வெறும் சாம்பலாய் மண் கலசத்தில் மரண சாசனமாய் மோனம் காத்தது.
வரும் அமாவாசை நாளில் அஸ்தியை பவானி ஆற்றில் கரைக்க வேண்டும்.
பூபதியைத்தான் அழைக்க வேண்டும்.
அவன் தந்த விலாசமும் செல் நம்பரும் எங்கே?
அந்தப் பரபரப்பான இறுதி நேர அவசரத்தில் குழப்பத்தில் விலாசத்தை எங்கே வைத்தோம் என்று நினைவில்லை.
தேடினாள்.
தன் பீரோ டைரி பசுபதியின் பீரோ எல்லாம் தேடினாள். ஒருவேளை கம்ப்யூட்டரில் எங்காவது பழைய உறவுகளையும், விலாசங்களையும் குறித்து வைத்திருப்பானோ?
கம்ப்யூடர் முன் அமர்ந்து தேடினாள்.
விலாசம் கிடைத்து விட்டது.
அஸ்தி வைக்கப்பட்ட கலசத்தைப் பார்த்தாள்.
பர்வத ராஜகுமாரியான இவள் பரதேச ராஜகுமாரியான கதையை அது சொல்லாமல் சொன்னது.
யாரோ வரும் சப்தம்.
திரும்பினாள்,
ஆயா!
“”நான் வரேன்மா.. உங்களுக்கு உதவியா என்னை வேலைக்குச் சேத்தீங்க.. இப்போ ஐயாவே போயிட்டார்.. இனிமே நான்
எதுக்கு?”
“”உன் பேர் தாமரையா?”
அழுது கொண்டிருந்த அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“”அஅஆ..மா ஆனா”
“”உன்னை ஆயான்னே கூப்பிட்டுப் பழகிட்டேன்.. அதான் பேர் தெரியல்லை. இப்பத்தான் ஐயா கடிதாசியினால”
தாமரை திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“”அம்மா நான் துரோகம் செய்யல்லை”
அழுதபடி கூறினாள்.
“”தெரியும் ஐயாவுக்கு நீ எழுதின கடிதங்களை ஐயா பத்திரப்படுத்தி வைச்சிருக்கார். நஞ்சு போன அந்தக் கடிதங்களிலே இருந்துதான் உன் பேரைத் தெரிஞ்சுட்டேன்.”
“”அம்மா..”
“”பயப்படாதே.. ஐயா ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தா நான் மறுத்திருக்க மாட்டேன். மனசுக்குள்ளே ரகசியத்தை வைச்சு வைச்சு தனக்குள் மறுகி ஒரு போலி வாழ்வு வாழ்ந்து அந்தக் குற்ற உணர்வில் வாய் அடைச்சு…… அவரால பேச முடியாத காலகட்டத்துலே நீ தற்செயலாய் வந்து சேர்ந்திருக்கே..புரியுது..” தாமரை அழுதாள்.
அந்த நாள் நினைவுக்கு வந்தது.
இந்த வீட்டில் நோயாளியைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆள் தேவை என்பதைக் கேள்விப்பட்டு வந்தவள்..
பேச முடியாமல் படுக்கையோடு படுக்கையாகக் கிடந்த பசுபதியைப் பார்த்து பதறிப் போனாள்.
வாய் பேசமுடியாத பசுபதி கண்ணீர் வடித்தார்.
எட்டு மாத வயிற்றுப் பிள்ளையுடன் அவள் பிரிக்கப்பட்டது உண்மை. இது யார் செய்த தவறும் இல்லை.
காலத்தின் கொடுமை..
பர்வதம் தாமரையின் கண்ணீர் துடைத்தாள்.
“”தாமரை யாரும் தெரிந்தே தவறு செய்வதில்லை. சந்தர்ப்பம்தான் காரணம். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்களே..
ஆனானப்பட்ட சந்தனு மகராஜாவே ஒரு ஓடக்காரப் பெண்ணக் காதலித்தார். இந்திரன் அகலிகை மீது ஆசை கொண்டான்.
பெண் ஆசையால் ராவணனும் மண்ணால் துரியோதனனும் தம் தம் அழிவைத்தாமே தேடிக் கொண்டார்கள். இதுபோன்ற தவறுகள் புராணங்களில் நிறைய இருக்கிறது. நல்ல வேளை கடைசி நேரத்திலேயாவது வந்து சேந்தியே. உன் மகன் எங்கே?”
“”வாசல்லே விளையாடிட்டு இருக்கான்..”
“”பத்து வயசு இருக்குமா?”
கடிதத் தேதியை நினைவு வைத்துக் கேட்டாள்.
தாமரை தலையசைத்தாள்.
“”அவனை நான் முறைப்படி தத்து எடுத்துக்கறேன். இல்லேனா அவுட் ஹவுஸ்லே இருந்தவங்க எப்படி வீட்டுக்குள்ளே வந்தாங்கன்னு ஊர்க்காரங்க பேசுவாங்க.. இறந்த மனிதருக்குக் களங்கம் வேண்டாம். தத்து எடுத்தப்பறமா அவன் கைகளாலேயே அவரோட அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யறேன்.”
இனி குலம், கோத்திரம், ஜாதி, இனம் எதுவுமே பார்க்க வேண்டாம்.
ஏமாற்றப்பட்டது இவளைப் போன்றே ஒரு பெண் குலம்.
ஒதுக்கப்பட்டது பெண் இனம்.
நிச்சயம் பசுபதி நரகத்தில் விழ மாட்டார்.
எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும் பிள்ளை தராதது இவள் தவறுதான்.
“”ஆமா, உன் மகனோட பேர் என்ன?”
“”சபாபதி. அவர் நினைவா..”
“”போய் சபாபதியைக் கூப்பிட்டு உள்ளே வரச் சொல்லு..”
கண்ணீர் துடைத்தபடி பர்வதம் சொல்கிறாள்.
– நவம்பர் 2014