தான் அறியா திறன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 1,620
துளசிக்காட்டூர் ஒரு சிறு நகரம். அங்குள்ள மைதானத்தில் அன்று ஒரு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. நல்ல கூட்டம். இரு பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ” அதோ அங்க வெளிர் மஞ்சள் கலர்ல சட்டை போட்டிருக்காரே, அவருதான் நம்ப ஆர்.கே.ராஜ் வெற்றிக்கு முக்கியமான நபர். அங்கே மேடை கிட்ட சாம்பல் கலர்ல சட்டை போட்டு, ஜீன்ஸ் போட்டுட்டு யாரோடயோ பேசிட்டிருக்கார் பாரு, அவரும் இன்னொரு முக்கியமான ஆள்.” என்றார் ஒருவர்.
மற்றவர் ” அப்படியா, நம்ப ஊர் பையன் இந்தளவுக்கு வந்தது நமக்கு பெருமையா இருக்கு. அந்த பெருமை வரதுக்கு இவங்க காரணம்னா இவங்களுக்கும் முதல்ல மரியாதை கொடுக்கணும். அதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்களா?” என்று கேட்டார்.
” அதெல்லாம் செஞ்சிருக்காங்க. நம்ப நகராட்சி தலைவர் எங்கிட்ட சொன்னாரு. நம்ப ராஜ் ஆரம்ப காலத்தில இருந்த நாளை நினைச்சா இப்பவும் சிரிப்புதான் வருது. ஆனால் ஒரே குறியா இருந்தான். இந்த சின்ன வயசுலயே நல்லா வந்திருக்கான். இப்ப உள்ள பசங்க இதெல்லாம் கத்துக்கணும். ராஜை பெத்தவங்க தங்கமானவங்க.” என்றார் முதலில் பேசிய பெரியவர்.
கனகராஜ் ஆத்திரத்தை அடக்க முடியாமல் பின்னங்கால்களால் அங்கிருந்த அட்டைப் பெட்டியை உதைத்து மேல் எழுப்பினான். கண்ணெதிரே இருந்த பிளாஸ்டிக் குவளையை இடது காலால் மேலே தூக்கி தலையால் முட்டி சுவற்றில் பட்டு விழும்படி செய்தான். ” டேய், கனகு, என்னடா உனக்கு அவ்வளவு ஆத்திரம்? நீ எங்கயோ ஏதோ சண்டையைப் போட்டு வந்துட்டு இங்க வந்து நம்ம வீட்டு பொருளை வீணடிக்கறே? ஒங்கோபத்தை அதுல காமிக்காதேடா! போய் எப்படி அந்த பிரச்னைய தீக்கலாங்கறதை பாரு. பெரிய வீரனாட்டம் எல்லாத்தையும் உதைக்கறான்.போடா, கை, கால் கழுவிட்டு சாப்பிட வா. அதுக்கப்புறம் என்ன செய்யணுங்கறதை யோசிடா.” ராசாத்தி, கனகராஜின் அம்மா அவனைப் பார்த்து கத்தினாள்.
மொட்டை மாடியிலிருந்து, காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்த ரத்தினசாமி, ” ஏண்டா, என்னடா செஞ்சே, உங்க அம்மா இந்த கத்து கத்தறா, நம்ப வீட்டு மாடில நின்னுட்டு இருந்த எனக்கு மட்டும் இல்ல, பக்கத்து வீட்டு மாடில இருக்கிறவங்க கூட கேக்க ஆரம்பிச்சுட்டாங்க, என்ன சண்டைன்னுட்டு? என்னத்த போட்டு உடைச்ச? சொல்லுடா, முழிச்சுட்டு நிக்கறயே? ராசாத்தி, என்னடி ஆச்சு? என்ன செஞ்சான்?” என்று இருவரையும் கேட்டான்.
“இல்லேப்பா, இன்னிக்கும் ஒரு ரன் கூட எடுக்காம அவுட் ஆயிட்டேன்ப்பா.ஒரே வெக்கமா போச்சு. எனக்கு வந்த கோவத்தில இதெல்லாத்தையும் ஒதைச்சு தள்ளினேன். அதுக்காகத்தான் அம்மா கத்தினாங்க.” என்று சொல்லி விட்டு கனகராஜ் ராசாத்தி பக்கம் திரும்பி,”சரிம்மா, இனிமே இப்படி செய்யல. ப்ராமிஸ்” என்று சொன்னான்.
” என்னத்த ப்ராமிஸ், இத்தோட நூத்துக்கு மேல ப்ராமிஸ் ஆயிடுச்சு.சரி, சரி போய் கை, கால், முகம் கழுவிட்டு சாப்பிட வா. வரும்போது இந்த சட்டைய தோய்க்க போட்டுட்டு வேற ட்ரஸ் போட்டு வா” என்று கூறி ரத்தினசாமியிடம் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு பக்கத்து அறைக்குள் சென்றாள்.
அவளைப் பின்தொடர்ந்து சென்று ரத்தினசாமி,”இதெல்லாம் இந்த வயசுல சகஜந்தான். கோவிச்சுக்காம பக்குவமா நாம சொல்லி அவனை வழிக்கு கொண்டு வருவோம் ராசாத்தி, நம்பளும் சேந்து சத்தம் போட்டோம்னா இன்னும் கோவிச்சிட்டு ஏதாவது ஏடாகூடமா செய்ய ஆரம்பிப்பானுக இந்த காலத்துல பசங்க. என்னமோ விளையாட்டுல தோத்திருக்கான். அதைத்தான் அப்படி வெளிப்படுத்திருக்கான். உனக்குத்தான் தெரியுமே, அவனுக்கு கிரிக்கெட்னா அவ்வளவு பைத்தியம்னுட்டு, நம்மள டிவி பாக்க விடாம ஏதோ ஒரு கிரிக்கெட் மேட்சை பாத்துட்டு இருக்கான். ஆனா பாரு, இந்த வயசுலயே கிரிக்கெட் பத்தி அத்துப்படியா இருக்கான். பாக்கலாம் வரப்போற நாள்ல எத்தனை திறமை இவங்கிட்ட இருக்குன்னு. அதுக்காகத்தான் அந்த அம்மன் கோயில் மைதானத்தில ப்ராக்டிஸ் செய்யட்டும்னு அனுப்பினேன். ” என்று சொன்னான்.
” என்னவோ செஞ்சுக்கங்க, நல்ல விதமா எல்லாத்தையும் கத்துகிட்டான்னா சரி.கோவம் அநியாயத்துக்கு வருது. அதை சொல்லி திருத்தனும் நாம.” என்று சொல்லியபடியே துணிகளை மடித்து அங்கிருந்த துணிகள் வைக்கும் அலமாரியில் அடுக்கினாள்.
கனகராஜுக்கு பதினொரு வயது. இன்னும் இரண்டு மாதங்களில் பனிரெண்டை எட்டிவிடுவான். துளசிக்காட்டூர் எனும் சிறு நகரத்தில் வசிக்கும் ராசாத்தி, ரத்தினசாமி தம்பதியரின் ஒரே வாரிசு.கனகராஜுக்கு கிரிக்கெட் விளையாட்டில் அளவற்ற விருப்பம். அவனுக்கு எட்டு வயதாகும்போதே
தொலைக்காட்சியில் எந்த கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பினாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான். அவனுடைய இந்த அதீத ஆர்வத்தை கண்டு ரத்தினசாமி அவனுக்கு சில பந்துகளையும், மட்டைகளையும் வாங்கி கொடுத்திருந்தான். கனகராஜ் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தனியாகவோ அல்லது அவன் நண்பர்களுடனோ தினமும் கிரிக்கெட் விளையாடியவாறு இருப்பான். ராசாத்தி வந்து ‘ போதும்டா, கொஞ்சம் படிக்கவும் செய். ஹோம் ஒர்க் இருந்தா அதை முடி’ என்று சத்தம் போடும் வரை விளையாட்டில் மும்முரமாக இருப்பான்.
எட்டு, ஒன்பது வயதில் இப்படி இருந்தவன், இந்த மூன்று வருடங்களில் இன்னும் தீவிரமாக ஆர்வப்பட்டு, பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்று ரத்தினசாமியிடம் தினமும் கெஞ்சி, ‘ மாசம் நூறு ருபாய்தான்பா, நம்பளைப்போல வசதி அதிகம் இல்லாதவங்களுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் சொல்லித்தர ஒரு கம்பெனி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. நானும் பேர் கொடுக்கப் போறேன். நீங்க சரின்னு சொல்லுங்க அப்பா ‘ என்று நச்சரித்து, அதில் சேர்ந்து இப்போது ஒரு ஏழு மாதங்களாக போய் வருகிறான்.
வாரத்தில் நான்கு நாட்கள் போகவேண்டும் .மூன்று நாட்கள் பயிற்சிகளும் நான்காம் நாளில் அவர்களுக்குள்ளேயே அணிகள் பிரித்து போட்டி என்ற முறையில் ‘ ட்ரீம் லேடர் ‘ எனும் அந்த நிறுவனத்தார் துளசிக்காட்டூரில் நடத்தி வருகிறார்கள். நடுத்தர மற்றும் அதற்கும் கீழே உள்ள குடும்பங்களில் எத்தனையோ இளைய தலைமுறைகள் தங்களின் விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாமலேயே போய்விடுகிறது நிதி வசதியின்மையால் என்பதை கருத்தில் கொண்டு, ‘ ட்ரீம் லேடர் ‘ நிறுவனம் உதவி மனப்பான்மையுடன் சிறிய கட்டணத்தொகை வசூலித்து இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதிர்ஷ்ட வசமாக ரத்தினசாமி அந்த நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான ‘ஆட்டோ ஃபோகஸ் ” என்ற நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் ‘சீனியர் மெக்கானிக்’ பதவியில் பணி புரிவதால் அவனுக்கு பயிற்சி வகுப்பு கட்டணத்தில் ஐம்பது சதவீதம் சலுகை கிடைத்தது. எனவே மகிழ்ச்சியுடன் கனகராஜை சேர்த்து விட்டான்.
கனகராஜ் எவ்வளவு பயிற்சி செய்தாலும் போட்டிகள் நடக்கும்போது அவன் திறமையாக விளையாட முடியாமல் போய்விடுவான். பந்துகள் வீசுவதில் பல நேரங்களில் தவறுகள் செய்து எதிரணி வீரரை வெளியேற்ற முடியாமல் விரக்தி அடைந்து கோபத்துடன் கால்களால் எதையாவது உதைத்தவாறு இருப்பான்.
அது போல, கிரிக்கெட் மட்டையை சரியாக பந்துகளில் பிரயோகிக்காமல் அடிக்கடி களத்தில் இருக்கும் வீரர்கள் கையில் பிடிப்பதற்கு ஏதுவாக போய் நிற்க, கனகராஜ் அதிக ஓட்டங்கள் எடுக்காமல் சீக்கிரமே வெளியேற நேரிடும். அந்த கோபத்தில் மட்டையை காலால் பல்வேறு விதங்களில் உதைத்து தள்ளி விடுவான்.
அப்படித்தான் அன்று ஒரு போட்டியில் கலந்து கொண்டு அதில் அவனால் சோபிக்க முடியாமல் போய்விட்டது. பந்துகள் வீசுவதிலும் சரியானபடி அவன் திறமை வெளிப்படவில்லை. அவனுக்கு பின்னர் வந்து பயிற்சி வகுப்பில் சேர்ந்த பிரகாஷ் ஐந்து பேரை வீழ்த்தி எல்லோரிடமும் பாராட்டு பெற்றான். கனகராஜுக்கு பிரகாஷ் நல்ல நண்பன்தான். கனகராஜ் செய்யும் தவறுகளை சரியாக சுட்டிக்காட்டி அதை திருத்திக் கொள்ள வழிகளையும் கூறுவான் பிரகாஷ். கனகராஜும் தன்னால் இயன்ற வரை தன் பிழைகளை சரி செய்ய முயற்சி செய்து வெகு சில போட்டிகளில் மட்டுமே சிறிது முன்னேற்றம் காட்டுவான். எப்படியோ ஏதோவொரு வகையில் தப்பாக விளையாடி அல்லது சில உத்திகளை பயன்படுத்தி விளையாடாமல் போய் மறுபடியும் ஆரம்ப கட்டத்துக்கே வந்து விடுவான். இது வழக்கமாக நடந்து வரும் ஒன்றாக இருந்தது. ஆனாலும் அவன் அணியில் களத்தில் பந்தை தடுப்பதற்கும், எகிறி முன்னே குனிந்து கைகளால் பிடிப்பதற்கும் இவனை விட வேகமாகச் செய்பவர்கள் இல்லை என்பதால், அவனை ஏதும் சொல்ல மாட்டார்கள். ஆனால் கனகராஜுக்கு அவன் மேலேயே கோபம் கொண்டு காலால் எதையாவது வெவ்வேறு கோணங்களில் உதைத்து தள்ளி விட்டுக்கொண்டு இருப்பான்.
துளசிக்காட்டூர் அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு மிகப்பெரிய மைதானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும். கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ் இப்படி பல விளையாட்டு ஆர்வலர்கள் பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
அந்த மைதானத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் துளசிக்காட்டூரின் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. ராசாத்தி அந்த அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறாள். மாலையில் வேலை முடிந்து அவ்வழியே வரும்போது சில நேரங்களில் அவளுடைய இருசக்கர வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி விட்டு, கனகராஜின் விளையாட்டுப் பயிற்சியை வேடிக்கை பார்ப்பாள். அவனுக்கு ஏற்படும் கோபத்தையும் கவனிப்பாள்.
இதே போல அந்த மைதானத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் மேகநாதன், அவரும் எல்லோரையும் பார்த்துக் கொண்டு இருப்பார். மேகநாதன் முன்னாள் கால்பந்து வீரர். இப்போது ஒரு நிறுவனத்திற்காக, இந்த ஊருக்கு வந்து இம்மைதானத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்று இப்போதுள்ள மாநில அணியில் முக்கிய விளையாட்டு வீரராக இருக்கும் ஃபெர்னாண்டஸும் அங்கு வந்து பயிற்சி தருகிறார் சிறார்களுக்கு.
அவர்களின் பயிற்சி நேரம் சீக்கிரமே முடிந்து விடும் நேரங்களில் மற்ற விளையாட்டுகளையும் ஆர்வத்துடன் நோட்டம் விடுவார்கள். அப்படித்தான் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிகளையும், அந்த சிறுவர்கள் விளையாடுவதையும் கவனித்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்த சிறிய சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விளையாடுபவர்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
” டேய், ஒழுங்கா சாப்பிடுடா, அதுக்கப்புறம் படிப்பு சம்பந்தமா என்னவோ அதைப்பாரு. நேத்து மேத்ஸ் ஹோம் ஒர்க் செஞ்சுட்டு போனியே, எல்லாம் ரைட் தானே? இன்னிக்கு விளையாட்டை பத்தியே நினைச்சுட்டு இருந்தா நாளைக்கு ஒழுங்கா விளையாடறது கஷ்டமா இருக்கும். அதனால கொஞ்சம் கவனத்தை மாத்தி அதுல மூளைய செலுத்து. எல்லாம் சரியாயிடும்.” என்று ராசாத்தி கனகராஜுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள். ” எல்லா மேத்ஸ் ஒர்க்கும் ரைட்டும்மா. இன்னிக்கு நிறைய ஒண்ணுமில்லை. இங்கிலீஷ் மட்டும்தான் கொஞ்சம் எழுதணும். அதை முடிச்சிடுவேன் நான் சீக்கிரமா. ” என்று பதிலளித்தான் கனகராஜ்.
” அம்மா உனக்கு சொல்லி கொடுத்த மேத்ஸ் கரெக்டா இருந்துதா, இல்லையான்னு அம்மா செக் பண்றாளாடா கனகு?” என்று சிரித்தபடியே கேட்டான் ரத்தினசாமி. ” நீங்க ஒருநாள் செய்யுங்களேன் அதை, கிண்டல் செய்ய மட்டும் வந்துடறீங்களே!” என்று ராசாத்தி அவனைப் பார்த்து கேட்டாள் சிறிய கேலி சிரிப்புடன்.
” அப்பா, அடுத்த வாரம் நம்ப ஊர் அணிக்கும், சந்தனத்தூர் அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கப் போகுதுப்பா. நம்ப மைதானத்திலதான் நடக்குது. இதனால அன்னிக்கு வேற விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடையாது.ஏன்னா அதைப்பாக்க வர்றவங்களுக்கு உக்கார இடம் வேணுமில்லையா அதனால. நம்ப அணில நான் இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் வரணும்ப்பா. ஞாயித்துக்கிழமைதான், அதனால வாங்க, அம்மா நீயும் வா” கனகராஜின் குரல் ஆர்வத்துடன் ஒலித்தது.
“சரிடா, வரோம்.நிச்சயமா வருவோம்.நீ நல்லா ப்ராக்டிஸ் செஞ்சுக்க. இப்ப சாப்டுட்டு ஸ்கூல் வேலையப் பாரு சீக்கிரம் ” என்றான் ரத்தினசாமி.
மறுநாள் மாலையில் எப்போதும் போல் கனகராஜ் பயிற்சி செய்ய மைதானத்திற்கு சென்றான். பயிற்சியாளர் அன்று திடீரென அணிகளாக பிரித்து போட்டிகள் போல் விளையாட வேண்டும் என்று சொல்ல இவர்களும் அப்படி விளையாட ஆரம்பித்தனர். அன்றும் அதைப் பார்க்க மேகநாதன், ஃபெர்னாண்டஸ் இருவரும் வந்திருந்தனர். குறிப்பாக கனகராஜை கவனித்தார் மேகநாதன். பிறகு ” ஃபெர்னாண்டஸ், இந்த பையனை கொஞ்சம் நோட் பண்ணி, நீ என்ன அப்ஸர்வ் பண்ணேன்னு எனக்கு சொல்லு” என்றார்.
அதே நேரத்தில் கனகராஜ் விளையாடுவதைப் பார்க்க வந்த ராசாத்தி இவர்கள் அருகில் நின்று கொண்டிருந்ததால் இருவரும் பேசியது காதில் விழுந்தது. ‘ கனகு விளையாட்டை பாத்து என்னதான் சொல்றாங்கன்னு பாக்கலாம், நாம மௌனமாக இருப்போம் ‘ என்று முடிவு செய்து அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
வழக்கம்போல் கனகராஜ் சில தவறுகள் செய்து பந்து வீசுவதிலும், ஓட்டங்கள் எடுப்பதிலும் கோட்டை விட்டு, கால்களால் உதைத்து கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான். தண்ணீர் அருந்த இடைவெளி விட்ட நேரத்தில் அங்கிருந்த ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலை உதைத்து பந்தாடிக் கொண்டிருப்பதை பார்த்த ஃபெர்னாண்டஸ் ” சார், இவனை நான் அப்ஸர்வ் பண்ண வரையில், இவன் நம்ம கேமுக்கு சூட்டபிள் ஆனவன். இவனுக்கு கால் பயிற்சி நல்லா வருது. வெவ்வேற கோணத்தில எப்படியெல்லாம் அந்த பாட்டிலை உதைச்சான் பாருங்க. ஐ திங்க் இவனுக்கு நாம பயிற்சி கொடுத்து ஒரு நல்ல ப்ளேயர உருவாக்கலாம் அப்படிங்கறதுதான் என் ஒப்பீனியன் ” என்றான்.
அதைக்கேட்டு மேகநாதன்” அதைத்தான் நானும் கணித்தேன். அவனை நாம சந்திச்சு பேசணும்.. உனக்கு ஞாபகம் இருக்கா? பத்து நாள் முன்னால நம்ப ஃபுட்பால் அவங்க ஃபீல்டு பக்கம் தவறுதலா போயிடுச்சு.அதை இங்கே அனுப்புங்கப்பான்னு சொன்னப்ப இந்த பையன்தான் கிக் பண்ணான். நீ கூட சொன்னியே, நம்ப கோல் கீப்பர் தோத்துடுவான் இவன் கிட்ட அப்படின்னு. அவன்தான் இது.ஆனால் அவனுக்கு புரிய வைக்கணும். முதல்ல அவனோட திறமை பத்தி அவனுக்கே சொல்லணும்.” என்று கூறினார்.
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட ராசாத்தி மேகநாதன் அருகில் சென்று” சார், என் பெயர் ராசாத்தி, நான் இந்த பையன் கனகராஜோட அம்மா. நீங்க பேசினதை நான் கேட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல இந்த விளையாட்டு முடிஞ்சு இங்கே வருவான் அவன். நானும் இருக்கேன். நீங்க என்ன
கேக்கணுமோ கேளுங்க சார். ஆனால் இவனுக்கு ஃபுட்பால் நல்லா விளையாட வரும்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று சொன்னாள்.
” அம்மா, ரொம்ப நல்லதா போச்சு. நீங்க இங்க இருந்தது, எங்க பேச்சைக் கேட்டது, அவனை நாங்க கேக்கலாம்னு சொல்றது, இது எல்லாமே நல்ல அறிகுறிதான். நாங்க அவனை கணிச்சபடி அவன் ஃபுட்பால் விளையாட்டுல பெரிய ஆளாக வர்றதுக்கு நல்ல சான்ஸ் இருக்கு ” என்று மேகநாதன் உற்சாகமாக கூறினார்.
” ஏம்மா, அவனுக்கு கிரிக்கெட்ல மட்டும்தான் ஆர்வமா? நல்லா விளையாடுவானா? உங்களுக்கு அவன் விளையாடற திறமை பத்தி ஏதாவது தெரியுமா?” என்று ஃபெர்னாண்டஸ் ராசாத்தியைக் கேட்டான்.
” அவனுக்கு எட்டு, ஒன்பது வயசு இருக்கும்போதே கிரிக்கெட், கிரிக்கெட்னு பைத்தியமா இருப்பான். அப்புறம் மிடில் ஸ்கூல் வந்தவுடனே அங்கிருந்த ஸ்கூல் டீம்ல சேந்து விளையாட ஆரம்பிச்சான். வீட்ல லீவு நாள்லேயும் இதைத்தான் விளையாடிட்டு இருப்பான். அவங்க அப்பாவை நச்சரிச்சு இந்த பயிற்சி குழுவில சேந்து விளையாடறான். எல்லா போட்டியிலயும் கலந்துப்பான். ஆனா….” என்று நிறுத்தி தலையை தொங்க விட்டு பூமியைச் பார்த்து நின்றாள்.
“ஆனால், என்னம்மா, என்ன ஆச்சு” என்று மேகநாதன் கேட்க, ” சார், அவன் விளையாட்டுல எதிர்பார்த்த அளவில் சோபிக்க முடியாம என்னவாவது தப்பாட்டம் ஆடி, சீக்கிரம் அவுட் ஆகி, பந்து வீச்சுல சரியா ஷைன் பண்ண முடியாம விரக்தியால கோபமா தினமும் வீட்டுக்கு வருவான். எதையாவது கண்டபடி உதைச்சு தள்ளிட்டிருப்பான். இது தினப்படி வழக்கமா ஆகிடுச்சு.” என்றாள் ராசாத்தி.
அதை கவனித்து கேட்டுக் கொண்டிருந்த மேகநாதன், ஃபெர்னாண்டஸ் இருவரும் அவளுக்கு ஆறுதல் கூறி, ” அவன் சம்மதிச்சா, நீங்களும் ஓ.கே சொன்னீங்கன்னா, அவனுக்கு நாங்க ஃப்ரீயா ஃபுட்பால் ட்ரெயினிங் கொடுக்கிறோம். அவனுக்கு அங்கே நல்ல எதிர்காலம் காத்திட்டிருக்குன்னு நம்பறோம்.” என்று உறுதியளித்தார்கள்.
இந்த நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி முடித்து சிறுவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். கனகராஜும் வந்தபடி இருந்தவன் அம்மாவைப் பார்த்து விட்டு அவளருகே முகத்தை தொங்க போட்டுக்கொண்டு விரக்தி பார்வையுடன் வந்தான். ராசாத்தி அவனை மேகநாதனுக்கும், ஃபெர்னாண்டஸுக்கும் அறிமுகப்படுத்தினாள். அவர்கள் இருவரும் அவனிடம் விளையாட்டு பற்றிப் பேசி, அவனுக்கு ஃபுட்பால் பயிற்சி எடுக்க ஆர்வம்
உண்டா என்பதையும் கேட்டனர். கனகராஜ் ” எனக்கு அதைப்பத்தி ஒண்ணும் பெருசா தெரியாது சார். ஆனால் மூணு வருஷமா கிரிக்கெட் தான் விளையாடிட்டு இருக்கேன். அதுல ரொம்ப இன்டரஸ்ட் சார் எனக்கு” என்றான். மேகநாதன் அவனைப் பார்த்து ” நீ உன்னோட திறமையின் ஒரு பக்கத்தை பாக்கறே. நாங்க நீயறியாத இன்னும் வேற சில திறமைகளை கவனிச்சு பார்த்ததுல, நீ ஃபுட்பால் விளையாட்டுல ட்ரெயினிங் எடுத்தா, பெரிய சக்ஸஸ் ஆகலாம்னு நினைக்கிறோம்.நீ எங்க கூட வந்து ஒரு மாசம் மட்டும் விளையாடு. பிடிக்கலேன்னா வேண்டாம். என்ன சொல்றே?” என்றார்.
” உனக்கு ஃப்ரீயா ட்ரெயினிங் கொடுக்கறதா உங்க அம்மா கிட்ட சொல்லிருக்கோம். அவங்களும் உன்னோட பதிலுக்காகத்தான் வெயிட்டிங். நீ நல்லா யோசிச்சு நாளைக்கு வேணும்னாலும் சொல்லு. நாங்க ரெண்டு பேரும் இங்கயே நாளைக்கு ஈவினிங் வந்து வெயிட் பண்றோம் ” என்று ஃபெர்னாண்டஸ் சொன்னான்.
” சரி சார், நான் நாளைக்கு சொல்றேன். ஆனால் அடுத்த வாரம் சந்தனத்தூர் கிரிக்கெட் டீமோட எங்களுக்கு போட்டி இருக்கு. அது முடிஞ்சதுக்கப்புறந்தான் நான் ஃபுட்பால் ட்ரெயினிங் வரணுமா வேண்டாமான்னு சொல்வேன். சரியா சார்?” என்று கனகராஜ் கூறினான். இருவரும் ‘ஓ.கே’ என்று கூறி விடை பெற்றனர்.
அன்றிரவு ரத்தினசாமியிடம் கனகராஜும், ராசாத்தியும் மாலை மைதானத்தில் நடந்தவைகளை கூறினர். ரத்தினசாமி ” ஒரு விளையாட்டுல இன்டரஸ்ட் இருக்குங்கறதுனால இன்னொரு விளையாட்டை விளையாடிப் பாக்கறதுலயோ, ட்ரெயினிங் எடுத்துக்கறதுலயோ தப்பே இல்லை. சொல்ல முடியாது, அவங்க சொல்ற மாதிரி இதுல இல்லாதபடி அதுல நீ திறமைய காட்ட தகுந்தவனா இருக்கலாம். இது ஒரு சான்ஸ் தானே, அவங்களே வாலண்டிரா வந்து கூப்டறாங்க, போய் ஒரு மாசம் விளையாடித்தான் பாரேன்டா கனகு” என்று ஊக்கமளித்தான்.
இது நடந்த பத்தாவது நாளில் கனகராஜ் ஃபுட்பால் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல் சந்தனத்தூர் அணியுடன் நடந்த கிரிக்கெட் போட்டிகளிலும், அவன் சாதிக்க முடியாமல் கோபத்துடன் பந்து , மட்டைகளை பின்புறச் சுவரோரம் வீசியெறிந்து, இன்னும் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாடாமல் ஃபுட்பால் விளையாடி வரலாம் என்று முடிவு செய்து, மேகநாதன், ஃபெர்னாண்டஸ் இருவரும் வழிகாட்டியபடி பயிற்சி எடுத்து வந்தான்.
இறைவன் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தனித்திறமையை வைத்தே படைக்கிறான். அதை மனிதன், தன் சுயபரிசோதனை மூலம் அறிய வேண்டும் என்று படைத்தவன் விரும்புகிறான். அதை அறிய வைக்க சில சந்தர்ப்பங்களையும் தருகிறான். இதை புரிந்து தெளிவாக அதன் வழி நடப்பவன் நிச்சயம் வெற்றி காண்கிறான். அப்படித்தான் இங்கே கனகராஜ் செயல்பாடுகளிலும் நடந்தது.
முதல் பத்து நாட்கள் கால்பந்து பயிற்சியில் கனகராஜ் மிகவும் பழக்கப்பட்டவன் போல் எளிதாக விளையாடினான். பந்தை லாவகமாக உதைத்து சக வீரர்களிடம் அனுப்புவது, பிறரின் கால்களுக்கு கிடைக்காதபடி தானே உருட்டிப் போவது, அதாவது ‘ட்ரிப்ளிங்’ செய்வது, தூரத்தில் இருந்து துல்லியமாக உதைத்து இலக்கு இடத்தில் அனுப்புவது, காற்றில் உயரமாக எகிறி தலையால் முட்டி பந்து திசையை மாற்றுவது இப்படி எல்லா செயல்களிலும் மற்ற சிறார்களை விட ஒரு படி மேலே இருந்ததை அணியின் அத்தனை பேரும் உற்று நோக்கியது மட்டுமல்லாமல் கை தட்டி பாராட்டவும் செய்தனர். அந்த நிமிடமே கிடைக்கும் சக வீரர்களின் பாராட்டு என்றுமே விளையாட்டு வீரனுக்கு அழுத்தமாக மனதில் நிற்கும் அற்புதமான பரிசு. கனகராஜும் அதே நிலையில் இருந்தான். நாட்கள், வாரங்கள் கழிந்து ஒரு மாதம் முடியும்போது மற்ற ஊரின் அணியுடன் போட்டியிட நிர்ணயித்திருந்த அணியில் அவன் பெயர் ‘ அட்டாக்கிங் மிட் ஃபீல்டராக’ இடம் பெற்றது.
மேகநாதன், ஃபெர்னாண்டஸ் இருவரும் அவன் பெயரை அணியில் சேர்ப்பதற்கு முன் அவனிடம் கேட்டனர்.” ராஜ், உன்னை சேர்க்கலாமா, இல்லை ஒரு மாதம் முடிஞ்சுடுச்சுன்னு கிரிக்கெட் ட்ரெயினிங் போகப்போறயா?” என்று கேட்க, கனகராஜ் உடனே,”இல்லை சார், நீங்க என்னைப் பத்தி ஊகிச்சது கரெக்டா இருக்கும்னு இப்ப நான் நினைக்கிறேன் சார். ஃபுட்பால் விளையாட்டுல நல்ல விதமா ஷைன் பண்ணுவேன் போல நம்பிக்கை இருக்கு, அதுக்கு என் கால் சரியா ஒத்துழைக்குது. அதனால என் பெயரை சேத்துக்கங்க சார்.இன்னும் ரெண்டு மாசம் இதை விளையாடறதா முடிவு பண்ணிட்டேன்.அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டேன் நேத்து.” என்றான்.
அதற்கு அடுத்த வாரம் நடந்த போட்டியில் ‘அட்டாக்கிங் மிட் ஃபீல்டர்’ வீரனாக விளையாடிய கனகராஜ் ஒரு ‘கோல்’ போட்டவுடன் அணியினர் அவனை உயரத்தூக்கி விட்டனர். கனகராஜ் மகிழ்ச்சியில் திளைத்தான். அதைப் பார்க்க வந்திருந்த ரத்தினசாமியும், ராசாத்தியும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
அதன் பின்னர் தொடர்ந்து தன் படிப்பையும் பார்த்துக் கொண்டே கால்பந்து பயிற்சிகளையும் மேற்கொண்டான் கனகராஜ். இவனுடைய அசாத்திய
திறமையை இன்னும் மெருகேற்ற மேகநாதன் மற்ற சில அனுபவசாலிகள் அளிக்கும் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு கனகராஜ் கடுமையாக அடுத்த மூன்று வருடங்கள் பயிற்சிகளில் ஈடுபட்டும், சில உள்ளூர், பக்கத்து ஊர் போட்டிகளிலும் பங்கெடுத்து விளையாடியவாறும் இருந்தான். வெகு விரைவில் திறமை பெற்ற கால்பந்து வீரர் எனப்பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டான்.
கனகராஜ் பள்ளி படிப்பின் கடைசி வருடத்தை அடைந்த போது அவனை மாநில அணியின் முக்கியமான நபராக கால்பந்து தேர்வு குழு சேர்த்து அவன் திறமையை அங்கீகரித்தது. கனகராஜ் நிறைய விளையாட்டு போட்டிகளின் இடையே பள்ளி படிப்பையும் ஒரு வழியாக திருப்திகரமாக முடித்து விட்டான். இப்போதெல்லாம் அவனுக்கு முன்பு போல் கோபம், ஆத்திரம் இவைகள் வருவதில்லை. மிகவும் உற்சாகமாக இருப்பதை ரத்தினசாமியும், ராசாத்தியும் கவனித்து தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.
அவன் தன் பெற்றோர்களிடம் ” நான் இந்த ஃபுட்பால் விளையாட்டு உலகிலே என் கேரியரை அமைச்சுக்கறதா முடிவு பண்ணிருக்கேன். இப்ப மாநில அளவில வந்திருக்கேன் இல்லையா, இதுல நல்லா திறமைய காட்டி தேசிய அளவில, நம்ம நாட்டு அணியில சேர்றதுக்கு முயற்சி பண்ணப்போறேன்.என்னை நீங்க அலோ பண்ணுவீங்களா?” என்று கேட்டான். அவன் ஆர்வத்தையும் அதுவரை அடைந்த முன்னேற்றத்தையும் பார்த்த அவர்கள் அவன் வேண்டுகோளுக்கு சம்மதித்தனர்.
கனகராஜ் எண்ணியபடி அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தேசிய அணியில் அவனை சேர்த்தார்கள். மேகநாதனும், ஃபெர்னாண்டஸும் இதற்குப் பின்னால் உந்துதலாக இருந்தார்கள். இப்போது கனகராஜ் சேர்க்கப்பட்ட அணியில் ஃபெர்னாண்டஸும் மூத்த வீரனாக இருந்தார். அதன் பின்னர் கனகராஜ் ஆர்.கே.ராஜ் எனும் பெயரில் பிரபலமாகி விட்டான்.
தற்போது ஒருவாரம் முன்னர் நடந்த ஆசியக்கால்பந்து விளையாட்டுகளில் ஆர்.கே.ராஜ் நன்றாக விளையாடி இறுதி விளையாட்டில் இரண்டு ‘கோல்கள்’ செலுத்தியதால் ஏற்பட்ட வெற்றி மூலம் நாட்டிற்கு வெற்றிக் கோப்பையை பெற மிக முக்கியமான நபராக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டான். அதை நாடே கொண்டாடியது. அதே நேரத்தில் ஒரு சிறப்பு பாராட்டு விழா துளசிக்காட்டூர் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க ஆர்.கே.ராஜ் எனும் கனகராஜ் வந்துள்ளான்.
கனகராஜ் அந்த விழாவில் பேசுகையில் கூறினான். ” எனக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால் நான் நினைச்சபடி ஜெயிக்க
முடியல.ஆனால், என்னையும் அறியாமல் எனக்கு வேறொரு திறமை இருக்குங்கறதை கரெக்டா கண்டு என்னை அதுக்காக தயார் செஞ்சு, பலவிதமான ட்ரெயினிங் தந்து இந்த அளவுக்கு நான் வந்ததுக்கு முக்கிய காரணம் என் குரு மேகநாதன் சார், ரெண்டாம் குரு ஃபெர்னாண்டஸ் சார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு கிடைச்சது என் அதிர்ஷ்டம். அவங்களுக்கு என் நன்றிகளும், வணக்கங்களும். அதேபோல் என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் நான் என் வாழ்க்கை முழுதும் நன்றி சொல்லணும். என் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தி அதுக்கு நிறைய உதவி செஞ்சாங்க. அவங்களோட தினப்படி பிரச்னைய எனக்கு எதுவுமே சொல்லாமல், நான் விளையாட்டு பயிற்சில ஃபுல்லா கான்சென்ட்ரேட் பண்ண தினமும் சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்க எனக்கு பெற்றோரா அமைஞ்சதுல நான் ரொம்ப பெருமைப்படறேன். அதை அமைச்ச கடவுளுக்கு நன்றி.வணக்கம்.” பலத்த கை தட்டல்களுக்கு இடையே கனகராஜ் மேடையில் நின்றிருந்தபோது அவன் மனம் வேறொரு உலகில் பறந்து கொண்டிருந்தது.
முன் வரிசையில் அமர்ந்திருந்த ரத்தினசாமியும், ராசாத்தியும் தங்களையும் அறியாமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் மகனின் வெற்றி கண்டு பூரிப்பில் திளைத்தனர். தொடக்கத்தில் பேசிக் கொண்டிருந்த இரு பெரியவர்களும் கனகராஜ் அருகே சென்று அவனுக்கு மாலை அணிவித்தனர்.
.