தலைப் பொங்கல் சீர் – ஒரு பக்கக் கதை





போகியலுக்கு முதல் நாள் மாலை.

பத்மனாபனும் அவன் மனைவியும் கடைத் தெருவுக்குச் சென்றார்கள்.
சாலையோரக் கடைக்காரர்கள் எல்லோரும் எழுந்து சல்யூட் செய்தார்கள் பத்மனாபனுக்கு.
அந்தக் கடைத்தெருவில் ஏட்டாக இருந்தபோது பல வருடங்கள் பீட் பார்த்தவராயிற்றே.
இன்ஸ்பெக்டர் ப்ரோமஷனில் வேறு ஊருக்குப் போனாலும், மக்கள் நேர்மையான போலீஸ்காரரை மறப்பார்களா என்ன?.
இன்ஸ்பெக்டர் பத்மனாபன் தம்பதியர் முதலில் ஜவுளிக் கடைக்குச் சென்றார்கள்.
புடைவை, சரிகை வேட்டி காஸ்ட்லியாக எடுத்தார்கள்.
கடைக் கடையாக ஏறி இறங்கி, அவர்கள் வீட்டு வழக்கப்படி வெண்கலப்பானை, துடுப்பு, வடிதட்டு என்று எல்லாம் வாங்கினார்கள் பத்மனாபன் தம்பதியர்.
மஞ்சள், பழம், பாக்கு வெற்றிலை… மங்கலப் பொருட்கள் பர்ச்சேஸும் கம்ப்ளீடட்.
ஜாதிமல்லி, சந்தனமுல்லை, மல்லிகை என பலவிதமான புஷ்பங்களைக் கடைசியாக வாங்கி பையின் மேல் மட்டத்தில் வைத்துக்கொண்டார்கள்.
‘போகியலும் அதுவுமா விடிகாலைல யாரு கதவு தட்டுறா?’
அடுப்படியில் போகியலுக்காகச் சிறப்புச் சமையலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வந்து கதவைத் திறந்ததும் பிரமித்து நின்றனர்.
ஒன்றரை மாதத்திற்கு முன் தங்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைத்த இன்ஸ்பெக்டர் பத்மனாபன் தலைப் பொங்கலுக்கான சீரோடு நின்றதைக் கண்டு மகிழ்ச்சியில் உரைந்து நின்றனர்.
– கதிர்ஸ்-ஜனவரி-2023