தர்மத்தின் வாழ்வு!




கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் சம்மந்தப்பட்ட ஆற நாடு பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர் அமராவதிக்கு ஒரு பழக்கம் உண்டு. தான் உண்ட மீதத்தை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் கொண்ட மற்ற மனிதர்களுக்கு மத்தியில் தம்மை நாடி வந்தோர் உண்ட மீதத்தையே தான் உண்ணும் பழக்கம் தான் அது.

வழிப்போக்கர்கள் உண்டு பசியாறி உறங்கிச்செல்ல பல இடங்களில் கோவில் உள்ள பகுதிகளில் அன்னதான சத்திரங்களைக்கட்டினார். பசிக்கொடுமை தன் நாட்டில் வாழும் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மழை பொய்க்கும் காலத்தில் சேமிப்பு கிடங்கில் உள்ள தானியத்தை அனைவருக்கும் தானமாகக்கொடுக்க ஏற்பாடு செய்தார். மழை பெய்யும் காலத்தில் அளவுக்கதிகமாக விளையும் போது தன் நாட்டில் சேமித்தது போக பக்கத்து நாடுகளுக்கு கொடுத்து உதவியதால் யாரும் படையெடுத்து வராததால் போரின்றி மன்னரும், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
மக்கள் சாதாரண வீடுகளில் வாழ்வது போலவே தானும் வாழ நினைத்தவர், தமது மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்திலேயே உழவு செய்து, தானியங்களை உற்பத்தி செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்வதோடு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் பங்கிட்டுக்கொடுத்தார். வரியால் வரும் நாணயங்களை, உணவு தானியங்களை அணை கட்டவும், பாதை அமைக்கவும், அன்ன சத்திரம் கட்டவும் மட்டுமே பயன்படுத்தினார். அவரது அமைச்சரவையில் விவசாயம் செய்து உழைத்து வாழ்வோரையே மந்திரிகளாக வைத்துக்கொண்டார்.
மக்களுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டுமென சத்திரங்களிலேயே குரு குலம் அமைத்து புலவர்களை வரவழைத்து பாடங்களை, வரலாறுகளை,மொழியை கற்றுத்தர ஏற்பாடு செய்தவர், புலவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். புலவர்களை கடவுளுக்கு இணையாக நினைத்தவர் அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார்.
“பொறந்தா ஆற நாட்ல பொறக்கோணும். புலவர் வேலைன்னா ஆற நாட்ல கெடைக்கோணும், பொண்ணு கட்டிக்கொடுத்தா ஆற நாட்டு பையனுக்குத்தாங்கொடுக்கோணும்” என கொங்கு நாட்டிலுள்ள மற்ற உட்பிரிவு குறு நில நாடுகளில் வாழும் மக்கள் பேசிக்கொண்டனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல ஆண்டுகள் மழை பொய்த்ததால் உணவுப்பஞ்சம் நாட்டில் தலைவிரித்தாடியது. கற்றாழை கிழங்கை கூட மக்கள் வேகவைத்துத்தின்னும் நிலை வந்திருப்பதைக்கண்டு மன்னர் அமராவதி மனக்கவலை கொண்டார்.
“என்ற நாட்டு மக்களெல்லாம் செம்மையான வாழ்க்கை வாழ செம்பகாளியம்மன் நீ தான் துணை புரியோணும். காலங்காலமா இருக்கறத இல்லாதவங்களுக்கு கொடுத்து வாழ்ந்து வந்த செம்ப குல பரம்பரையில பொறந்த எனக்கு மத்தவங்களுக்கு கொடுக்க ஒன்னுமில்லாம பண்ணிட்டியே தாயே….” என மனமுருகி தமது குலதெய்வ கோவிலில் வேண்டியவர், ” கொடுக்க எதுவுமில்லாத நான் ஒன்னி இருந்து என்ன பிரயோசனம்? செத்துப்போறதே மேல்” என கூறியவர் திடீரென ‘பாம்பு தீண்டினால் உடனே இறந்து விடலாம்’ என நினைத்து அருகிலிருந்த பாம்பு புற்றில் கையை விட்டார்.
மந்திரிகள், படை வீரர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்பட அருகிலிருந்தவர்கள் பதறியபடி தடுக்கப்போக, “என்னைத்தடுக்காதீர்கள்….” என சத்தமிட்டதால் அவரது சொல்லை மீறி அவரைத்தடுக்க யாரும் அருகில் செல்லவில்லை. பாம்பு தீண்டினால் மயக்கமடைந்ததும் காப்பாற்றி விட வைத்தியர்கள் தயாராகினர். கையை புற்றிலிருந்து வெளியே எடுத்தவரது வலது கையில் பாம்பு தீண்டிய ரத்தக்காயம் இருப்பதற்கு பதிலாக விலைமதிப்பற்ற, அரிதான நாக மணி இருந்தது கண்டு அனைவரும் திகைத்து, அதிசியத்து பேச்சிழந்து நின்றனர்.
கையிலிருந்த நாக மணிகளை கண்களில் ஒற்றிக்கொண்டு மகிழ்ந்த மன்னர் அமராவதி , அருகிலிருந்த ஒரு புலவரை அழைத்து நாக மணிகளை அவருக்கு தானமாகக்கொடுத்த போது, உயிர் போகும் நிலையிலிருந்த கர்ணன் கிருஷ்ணனுக்கு தர்மத்தின் புண்ணியத்தை கேட்டதும் மறுக்காமல் தாரை வார்த்த மகாபாரதக்காட்சி அனைவருக்கும் நினைவுக்கு வந்தது!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |