கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2025
பார்வையிட்டோர்: 589 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோயிலுக்கு முன்னால் ‘மேஸிடஸ் பென்ஸ் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து உடம்பெல்லாம் வைரமும், முத்தும், மணிகளும், பொன்னுமாய் இழைத்தபடி பெனாரஸ் பட்டுச் சருகைப் புடைவை உடலிலே சரசரக்க ஒரு பெண் இறங்கினாள். அவள் கைகளிலே துவாய்க்குள் சுருண்டபடி அவளின் ‘வாரரது வந்த மாமணி’ கிடந்து, அந்தத் தாயுள்ளத்திலே கனிவையும் பெருமிதத்தையும், பூரிப்பையும் அளித்த படியிருந்தது. 

கடந்த பதினைந்தாண்டுகளாய் உள்ளம் ஒடுங்க, உணர்வொடுங்க, தான் மலடி என்ற எண்ணமே தன் னைக் கொல்லாது கொல்லச் சித்திரவதைப்பட்டு இக் கோயிலின் வாயிலிலே வந்து நின்று இரத்தக் கண்ணீர் விட்டவள் அவள். 

அவளின் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. இன்று அவள் மலடியல்லள். இறைவன் அவளின் வயிற்றை வாய்க்கச் செய்து, உலகின் முன் தலை நிமிர்ந்து ‘தாய்’ எனத் தருக்கி நடக்கவைத்துவிட்டார். அந்த நன்றி டைச் செலுத்தவே அவள் கோயிலுக்கு வந்திருக்கிறாள். 

கோயிலின் கண்டாமணி கம்பீர நாதம் எழுப்புகிறது. இறைவன் தேவிசமேதராய் ஒளிவெள்ளத்துள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றான். பூசகர் பஞ்சாராத்தி காட்டுகிறார். மங்கல வாத்தியங்கள், சங்கு சேமக்கல ஒலிகளினிடையே, ‘சிவசிவ’, ‘அரஹர’ முதலாம் கோஷங்களும் எழுகின்றன. 

தாய், தன் செல்வத்தைச் சந்நிதானத்திலே கிடத்தி விட்டுத் தலையின்மேல் கூப்பிய கரத்தளாய், “தெய்வமே! எனது பாக்கியம் எனக்கு என்றைக்கும் நிலைக்க அருள் செய்வாய்,” என்று வேண்டிக்கொள்கிறாள். அவளின் கண்கள் பனிக்கின்றன. 

கோயிற் பூசை யாவும் முடிந்து அந்தத் தாய் உட் படப் பக்தகோடிகள் சிறிது சிறிதாகக் கோயிலை நீங்கிச் செல்கின்றனர். அந்த வேளையில் ஒருத்தி, கையில் ஒரு குழந்தையும், கையிற் பிடித்த ஒரு குழந்தையும், அதி லும் சற்றுச் சற்றுப் பெரியவையாய்ப் பின்னால் வந்து கொண்டிருக்கும் ஐந்து குழந்தைகளுமாக அந்தக் கோயில் வாயிலுக்கு வந்து சேர்கிறாள். அவளுடைய வயிற்றுப் பாகம் புடைத்திருப்பதை நோக்க அவளின் தாய்மைச் சேவை மேலும் தொடர்ந்துகொண்டிருப்பது துலாம்பரமாய்த் தெரிகிறது. அவளின் உடம்பில் ஒரு நகைகூட இல்லை. கழுத்தில் மாத்திரம் ஒரு தாலிக் கயிறு. குழந்தைகள் யாவும் பற்றாமை, போஷாக்குக் குறைவு என்பவற்றால் பீடிக்கப்பட்டுப் பஞ்சைகளாய் நிற்கின்றன. 

அந்த ஏழைத் தாய் தன் கைக் குழந்தையைச் சந்நிதானத்திலே கிடத்திவிட்டுக் கதறி அழுகிறாள். ‘ஆண்டவனே ! உனது சோதனைக்கு முடிவேயில்லையா? இந்த ஏழைக்கு ஏன் இப்படி அள்ளி அள்ளிக் கொடுக் கிறாய்? நான் இவற்றை வைத்துக்கொண்டு குடிகாரக் கணவனோடு படும்பாடு நீ அறியாததா? என்வரை யிலே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றும் பய னளிக்கவில்லை. நீ கண் விழித்து இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் உண்டு.” என்று அவள் கல்லுங் கரையு மாறு வேண்டிக்கொள்கிறாள். 

(2) 

வருடம் ஒன்று உருண்டோடிவிடுகிறது. மீண்டும் அதே கோயில் வாயிலில் ‘பென்ஸ் காரிலிருந்து சீமாட்டி இறங்குகிறாள். அவளின் கைகளைக் குழந்தை யின் றோஜா வண்ண மெல்லுடல் அணி செய்யவில்லை. நகைகளோடு சோகத்தையும் தாங்கும் சுமைதாங்கி யாய் இறைவனின் சந்நிதானத்தை அடைகிறாள். 

வழக்கம்போல இறைவன் அம்மை சமேதராய் ஒளி வெள்ளத்தில் அமர்ந்திருக்கிறான். மங்கல வாத்தியங் களும், சங்கு சேமக்கலங்களும் ஒலிக்க, பூசகர் பஞ்சா ராத்தி காட்டுகிறார். 

சீமாட்டி கைகளைச் சிரமேற்கூப்பிக் கதறுகின்றாள். 

வழக்கமான நாகரிகப் போலித்தனங்கள், செல்வத் தின் அர்த்தமற்ற போக்குக்களெல்லாம் தாய்ப் பாசத் திலே அமுங்கிப் போய்விட, அவளின் உள்ளம் உதடு களிலே நின்று பேசுகிறது, ”கடவுளே. உனக்குக் கல் மனசு. இரக்கமே இன்னதென அறியாதவன் நீ. இல்லாவிடில் என் செல்வத்தை நான்கு மாதங்களி லேயே என்னிட மிருந்து பறித்துவிட்டாய். பாலும், தேனும், பழமும் இளநீருங் கொண்டு உன்னை அபிஷே கம் செய்தேனே? கந்தசஷ்டி முதலான கடும் விரதங் களையெல்லாம் தப்பாது பிடித்து உன்னை எப்பொழுதும் வணங்கித் துதித்துவந்தேனே ? இவற்றிற்கெல்லாம் கைம்மாறு இதுதானா? பிள்ளையில்லாப் பெரும்பாவியாய் நான் வாழ்நாளெல்லாம் வருந்திச் சாகவேண்டுமா?” 

கோயில் ஓசைகள் ஓடுங்குகின்றன. பக்தகோடிகள் சீமாட்டி உட்படக் கோயிலை நீங்கிச் செல்கின்றனர். இப்பொழுது அந்த ஏழைத் தாய் அங்கு வருகிறாள். பழைய காட்சியில் இப்பொழுது ஒரு சிறு மாற்றம்; முன் னர் அவளின் கைகளிலே கிடந்த குழந்தை அவளின் சேலையைப் பிடித்திருக்கிறது. சென்ற ஆண்டு வயிற்றி லிருந்தது, கைகளை அலங்கரிக்கிறது. முன்பு கையைப் பிடித்துவந்த குழந்தை தாயைத் தொடரும் பிள்ளைக் கூட்டத்திலே சேரும் பதவி உயர்வினைப் பெற்றிருக் கிறது. மாற்றம் இல்லாதது அவள் வயிறு ஒன்றுதான்! அது சென்ற வருடம் போலவே… 

குழந்தையைச் சந்நிதியிற் கிடத்தியபடி கூப்பிய கரத்தளாய் நின்று அவள் அழுகிறாள் ‘”அப்பனே! உன் விளையாட்டிற்கு முடிவேயில்லையா? சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வயிற்றிற்கு வழியின்றி நான்படும் அல்லல்கள் நீ அறியாதவையா? என் கண்களைப் பார். இந்தச் சிறுசுகள் ஒன்றுமாறி ஒன்று கதறி அழ, இர வெல்லாம் கண்ணே மூடாமல் இருந்து பஞ்சடைந்து விட்டன. தலை சுற்றுகிறது. உடலில் ஒரு சொட்டு இரத்தமில்லை. இன்னும் என்னை வருத்துவதால் நீ 

காணும் பயன் என்ன? 

சந்நிதானத்தின் உள்ளே…… 

அப்பன் சிரிக்கிறான். அன்னைக்குக் கோபம் கோப மாய் வருகிறது. ஏன் சிரிக்கிறீர்கள்? உங்கள் வீரந் தான் சற்றுமுன் தெரிந்ததே! ஒருத்தி, வேண்டும், வேண்டும் என்று வேண்டி நிற்கக் கொடுத்துப் பறிக் கிறீர்கள். மற்றவள் வேண்டாம், வேண்டாம் என அள்ளி அள்ளிக் கொடுக்கிறீர்கள். அந்தப் பணக்காரப் பெண் சொன்னது உண்மைதான். உங்களுக்குக் கல் மனசு” என்று அவள் பொரிந்து தள்ளுகிறாள். 

இறைவன் மீண்டும் சிரிக்கிறான், “தேவி! உனக்குமா விளங்கவில்லை? பல பகுதிகள் பல விடைகள் காண்ட ஒரு கணக்கைத் தயாரித்து, உலகத்து மக்க ளெல்லாம் செய்து விடைகாணும்படி கொடுத்திருக்கி றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியைச் செய்து முடித்து விட்டுக் கணக்கையே செய்து விட்டதாகக் கொக்கரிக்கிறார்கள். நான் “அந்தக் கணக்கு முடிய வில்லை. ன்னும் பல விடைகள் உள்ளன. செய்து பாருங்கள்” என்றால் அவர்களுக்குக் கோபமாய் வந்து விடுகிறது. நான் என்ன செய்வேன்? 

“அப்படியானால் ஒருவருமே முற்றாக உங்கள் கணக்கைச் செய்ய முடியாதோ?” 

“ஏன் செய்ய முடியாது? அப்படிச் செய்து முடித்து விட்டால் அவர்கள் உலகத்தில் கிடந்து வருந்தாமல் என் பாதங்களை வந்து அடைந்து விடுவார்கள்…….” 

”அதுவரை அவர்கள் கதி?’* 

“இப்பொழுது இந்தப் பெண்கள் பெண்கள் இருவரைப் பார்த்தாயே ? இவர்களின் கதிதான் அவர்களுக்கு எல்லாம். செய்து முடிக்கும்வரை என்னைத் திட்டியபடியே மீண்டும் மீண்டும் கணக்கைச் செய்ய வேண்டியது தான்!” 

அம்மை மௌனமானாள். 

– வீரகேசரி, 1968-12-24.

– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *