தப்புத் தாளம்




(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சின்ன வயசிலேந்தே எனக்கு பாட்டுன்னா உசிரு. எதுக்காவது அடம் புடிச்சேன்னா என் சித்தி, அதான் என் அம்மாவோட தங்கை, “அம்மூ இங்கெ வா பாட்டு சொல்லித் தறேன்” ன்னு கூப்பிடுவா. நான் பொட்டிப் பாம்பா அடங்கி ஒடுங்கி சித்தி முன்னாடி போய் ஒக்காருவேன். சித்தியும் “சா…… பா….. சா…..” ன்னு ஆரம்பிப்பா. நானும் கூடவே “சா….. பா….. சா…..” ன்னு சன்னக் குரலுலே பாடுவேன்.

“வாயெ நன்னா தொறந்து கணீர்னு பாடணும். அப்பொதான் சங்கீதம் வரும்” னு சொல்லுவா சித்தி. நான் ஒரத்திக் கத்துவேன்.
“அவ்வொளோ ஒரத்திக் கத்தினையானா பாட்டு வராது. வண்ணான் வந்தூடுவான் தன் கழுதெயெத் தேடிண்டு” னு சித்தி சிரிப்பா. உடனே என்னெத் திருத்திண்டு ஒழுங்காப் பாடுவேன். எப்பிடியாவது கத்துக்க வாணாம் சங்கீதம்?
சரளி வரிசெ, ஜண்ட வரிசென்னு ஆரம்பிச்சு ‘லம்போதர லகுமிகர’ ன்னு கீதம் வரைலும் வந்தூட்டேன் அப்பாக்கும் தோணித்து இவளுக்கு பாட்டு சொல்லிக் குடுத்தா வரும் போல இருக்கேன்னு. ஒரு பாட்டு வாத்தியாரே ஏற்பாடு பண்ணா. கூடவே ஒரு ஆர்மோனியமும் வாங்கினா.
வாத்தியார் பேரு ராம அய்யங்கார்னு. கட்டுக் குடுமி. நெத்திலெ நாமம். கையிலெ சாயம் போன கருப்புக் கொடெ ஒண்ணு. ஸ்ரீரங்கத்துலேந்து பொன்மலைக்கு ட்ரெய்ன்லெ வருவார். என்னோட பெரியண்ணா என்னெக் கேப்பான், “ஏண்டீ ஒன் வாத்தியாரு பேரு ராம அய்யங்காரா இல்லே நாம அய்யங்காரா?” ன்னு. அவ்வொளோ பெரிசா இருக்கும் அவர் நெத்திலெ நாமம்.
ஒரு நாளு வாத்தியார் ஒரு அடி சொல்லிக் குடுக்க நான் அதெ தப்பாப் பாட ரெண்டாம் வாட்டி சொல்லிக் குடுத்தார். மறுபடியும் தப்புப் பண்ண, மூணம் வாட்டி சொல்லிக் குடுத்தார். எனக்கு அதெ அப்பொவும் சரியாப் பாட வரலே. ஆனா வாத்தியாருக்கு வந்தது அசாத்திய கோபம். அவர் பக்கத்துலெ வெச்சிண்டு இருந்த கொடையாலெ என்னெ அடிக்க ஓங்கினார். கூடத்துலெ ஒக்காந்துண்டு இருந்த என் பெரியண்ணன் ஒரே தாவலுலெ பாய்ஞ்சு வந்து கொடெயெப் புடுங்கி வாசலுலெ உட்டெறிஞ்சான். அன்னிக்கிப் போன வாத்தியார் அப்புறம் வரவே இல்லெ.
அப்பா எதுத்த தெருவிலெ இருந்த ஜானகி டீச்சரெ ட்யூஷன் சொல்லிக் குடுக்க ஏற்பாடு பண்ணா. கேரளாவெச் சேந்த ஜானகி டீச்சர் பரம சாது. ஒரத்திக் கூட பேசமாட்டா. அப்பிடி இப்பிடி கீர்த்தனெ வரெ வந்தூட்டேன். ஜானகி டீச்சரோட கணவனுக்கு வேறெ ஊருக்கு மாத்தலாயிடுத்து.
அப்புறமா அண்ணாமலை யுனிவர்சிடிலெ படிச்ச சங்கீத பூஷணம் வெங்கட்ராமன் என்பவர் பாட்டு சொல்லிக் கொடுத்தார். கொஞ்ச நாளுலெ அவரும் மெட்ராஸுக்குப் போயிட்டார். ஆனா நான் சங்கீதத்தெ மறக்கலெ. பாடறதெ உடலே. ரேடியோலெ வர கச்சேரிகளே, அது பெரிய வித்வானோட கச்சசேரியோ இல்லெ கத்துக் குட்டியோட கச்சேரியோ, ஒண்ணு உடாமெ கேப்பேன். என் வாயி எப்பொவும் ஏதாவது ஒரு பாட்டெ மொண மொண்த்திண்டு இருக்கும். அப்பொப்போ ஒரத்தியும் பாடுவேன்.
பொண்ணாப் பொறந்தா கல்யாணம்னு ஒண்ணு பண்ணணுமே? அப்பொதானே தங்க கடெமெ முடிஞ்சதா பெத்தவா நெனெப்பா? எனக்கும் நடந்தது கல்யாணம். அவருக்கு மெட்ராஸுலெ வேலெ.
“ஒனக்கென்னடீ புருஷனுக்கு மெட்ராஸுலெ வேலெ. பழசெல்லாம் மறந்தூடுவையா? எங்களெல்லாம் நீ ஞபகத்துலெ வெச்சுப்பையா இல்லியா?” என் நண்பிகளின் கேள்விகள் இவை.
“எப்டிடீ மறப்பேன் ஒங்களெ எல்லாம்?” திருப்பிக் கேட்டேன் நான்.
“ஒன் சங்கீதம் என்னடீ ஆகும்? அவருக்கும் புடிக்குமா கர்னாடக சங்கீதம்?” “சங்கீதம் ஒண்ணும் ஆகாது. அதுலெ எனக்கிருக்கற ஆர்வம் ஒரு நாளும் கொறையாது. அவருக்கு கர்னாடக சங்கீதம் புடிக்குமா புடிக்காதான்னு அங்கே போனப்புறந்தான் தெரியும்” என்றேன் அவர்கள் கேள்விக்கு பதிலாய்.
என் மெட்ராஸ் வாசம் ஆரம்பித்தது. வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் பாடிக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள் இரவு ஏழரை மணிக்கு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி. அவர் இசைக்கு இந்த ஒலகத்துலெ ஏது ஈடு? ஆனந்தமாய் ஆரம்பித்தார், “வாதாபி கணபதிம் பஜே” என்று ஹம்ஸத் தவனியில். என்னை அப்படியே ஏதோ ஒரு வேற்று உலகத்துக்கு இழுத்துக் கொண்டு போனது அந்த இசை.
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்க போய்க் கதவைத் திறந்தேன். “எத்தெனெ தடவெ தட்டறது? என்ன பண்ணிண்டு இருக்கே?” என்றார் என் கணவர்.
“ரேடியோலெ பாட்டு’. சொல்ல வந்ததை முடிக்க வில்லை நான். நேராக ரேடியோ அருகே சென்ற அவர் அதன் ஸ்விச்சை அணைத்தார். பின் தன் ஆபீஸ் பேகில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, கட்டை விரல்களை கூரையைப் பார்ப்பது போல வைத்துக் கொண்டு, மற்ற விரல்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு ஜிங்கு ஜிங்கு என்று குதிக்க ஆரம்பித்தார்.
“ரேடியோலெ எம்.எஸ். கச்சேரி கேட்டிண்டுருந்தேன்” என்றேன். ஒனக்கு சரிகமபதநிஸ தான் புடிக்கும்னா ஒனக்கும் வாங்கித் தறேன் இது போல ஒண்ணு. நீயும் காதுலே மாட்டிண்டு கேளு” என்றார் அவர்.
ஒரு நாள் மாலை தியாகராஜரின் மோஹன ராக கீர்த்தைனையான “நன்னு பாலிம்ப நடச்சி வச்சீரீ ஓ” என்று பாடிக் கொண்டிருந்தேன். மாலை நெரமாயிற்றே என்று வாசல் கதவை மூட வில்லை.
ஆபீசில் இருந்து அன்று சீக்கிரம் வந்த அவர், “என்ன பாட்டு இது அர்த்தம் புரியாமே?” என்றார்.
“தியாகராஜரெப் பாக்க ராமர் அவர் வீட்டுக்கே வராறாம். என்னெக் காப்பாத்தறதுக்காக நடந்தே வந்தயா ராமா?” ன்னு கேட்டு பாடறார் அவர் என்றேன்.
“நீ இப்பிடி வாசக் கதெவெத் தெறந்து வெச்சிண்டு பாடினையானா ராமர் மட்டும் இல்லெ. ராவணனும் வருவான். நிறுத்து ஒன் பாட்டெ” என்று எரிந்து விழுந்தார்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.
கணவன் அமைவதெல்லாம் யார் கொடுத்த வரமாம்?
– அபலைகள், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: தனசேகர் (tddhanasekar@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.