தனி மரம்

தாமோதரன் அந்த நூலகத்திற்கு வந்து அன்றுதான் நான் பார்க்கிறேன். எப்பொழுது வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தார் என்று கவனிக்கவில்லை. இத்தனைக்கும் உள்ளே நுழைந்து பதிவேட்டில் கையெழுத்திடும் இடத்திற்கு அருகிலுள்ள நாற்காலியில்தான் உட்கார்ந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவர் என்னைக் கவனித்திருக்கக் கூடும். அமைதியாக அமர்ந்து எல்லோரும் படிக்கும் இடம் ஆயினும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர் எனில்…உறலோ…என்றோ…வாங்க…என்றோ ஒற்றை வார்த்தையில் சத்தமின்றிச் சொல்லி வரவேற்றுக் கொள்வதுதான். இவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் நிமிர்ந்து பார்த்திருந்தால் சார்…வாங்க…என்றிருப்பேன் நிச்சயமாக….எனக்கு ஒன்றும் அவர் மேல் வருத்தமோ, கோபமோ இல்லை. பரிதாபம்தான் உண்டு. கடைசி நேரத்தில் அனாவசியமாய்க் காரியத்தைக் கெடுத்துக் கொண்ட அசடு…என்று…! ஒரு புதிய இடத்தில் (அவருக்கு) அப்படி அவர் அழைத்திருக்க வாய்ப்பில்லைதான். பழகிய இடத்திலேயே யாருடனும் வாயைக் கொடுக்காத மனுஷன்..இங்கு வந்தா பேசப் போகிறார்?
பிறவியிலேயே அவர் தனியனா அல்லது ஏதேனும் காரண காரியம் முன்னிட்டு இப்படித் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாரா தெரியவில்லை. இருபது இருபத்தஞ்சு பேரை மேய்க்கும் அலுவலகத்தில் கூட மேலாளரான அவர் தனிமையில்தான் இருப்பார். அதாவது மனதளவில். எனக்குத் தனி ரூம் கொடுத்திடுங்க என்று சொன்னவர்தான். அப்பறம் ஆபீஸை யார் சார் கவனிக்கிறது? உங்க கண்காணிப்பிலதானே இருக்கணும் என்று அந்தப் பெரிய உறாலிலேயே முக்கிய இடத்தில் அவரை உட்கார வைத்து விட்டார்கள். வேறு வழி? தலை குனிந்த மனிதன்…அதாவது தலையைக் குனிந்தமேனிக்கே இருப்பார். அதுதான் அவரது தோற்றம். நிச்சயமாக எந்தப் புகைப்படத்திலும் அவர் முகம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லைதான். யாராவது பின்புறமிருந்து நிமிர்த்திப் பிடித்துக் கொண்டால்தான் உண்டு. ஏன் இப்படி? என்று யாருக்கும் புரியவில்லைதான். கேட்கவா முடியும்? இவர் எப்படி எல்லாரையும் கண்காணிக்கப் போகிறார் என்றுதான் தோன்றும். அவர்தான் தலையே நிமிர்வதில்லையே…நிமிர்ந்தால்தானே வேலை நடக்கிறதா என்று பார்க்க முடியும்? உலகத்தில் எந்தத் தப்பும் செய்யாமல் தலை குனிந்த மனிதன் இவராய்த்தான் இருப்பார். இப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு துன்பம் வரத்தானே செய்தது…! ஓட்டப் பந்தயத்தில் கடைசி ஒரு நிமிடத்தில் வெற்றிக் கோட்டைக் கோட் டை விட்ட வீராங்கனைபோல் அல்லது வீராங்கதன்போல் அவருக்கு நடந்துவிட்டது.
இன்றுவரை அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிவு பெற்றனவா அல்லது இன்னும் நிலுவையில்தான் கிடக்கின்றனவா என்று தெரியவில்லை. அவர்தான் என்னோடு பேசுவதையே விட்டாயிற்றே…! பேச வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அவராகத்தான் நிறுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்பு அறுந்து பல நாளாயிற்று. அவரே ஒதுங்கியிருக்கும்போது நான் என்ன செய்வது?
அவருக்குக் கீழ் வேலை பார்த்த, அவரது கன்ட்ரோலில் இருந்த குமாஸ்தா நான் என்பதால் கௌரவக் குறைச்சல் என்று அவரின் கொஞ்சப் பேச்சையும் நிறுத்திக் கொண்டாரா அல்லது தனக்கு நேர்ந்த அந்தச் சம்பவத்தினால் அவமானமுற்று, மனதுக்குள் குமைந்து, இவனோடெல்லாம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு என்றோ அல்லது பேசி என்ன தீர்வு கிடைக்கப்போகிறது என்றோ நினைத்து ஒதுங்கிக் கொண்டாரா தெரியவில்லை. மனுஷன் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
நான் குமாஸ்தாவாய் இருந்து ஓய்வு பெற்றவன்தான். ப்ரமோஷன் வேண்டாம் என்று சொல்லி உள்ளூரிலேயே குப்பை கொட்டியவன். பணி உயர்வு வேண்டாம் என்று இருப்பவன் என்றால் மட்டமா என்ன? அவனவன் குடும்ப வசதி வாய்ப்பு அவனவனுக்கு. ஆனால் அவரைப்போல் கௌரவமாய் இருந்தவன்தானே? சொல்லப்போனால் அவரைவிட என்றே சொல்லலாம்…அதற்காகவாவது மதிக்கலாம்தானே? அவனைப்போலவே இருந்து கடைசி நேரத்தில் தனக்கு இப்படியாகிவிட்டதே என்ற பொறாமையோ அல்லது வருத்தமோ? தனக்கு நேர்ந்த இழிவினால் தன் கௌரவம் அடியோடு போய்விடுமா என்ன என்று நினைக்கிறாரோ என்னவோ? எல்லாம் அவராய் நினைத்துக் குமைந்து கொள்வதுதான். இருப்பவர்களுக்கெல்லாம் இவரையே நினைத்துக் கொண்டிருப்பதற்கா நேரம்? அவனவனுக்கு ஆயிரம் வேலை. நன்மையும் தீமையும் பிறர்தர வாரா….
ஏறக்குறைய சில மாதங்கள் ஆகிவிட்டது அவர் என்னுடன் பேச்சை நிறுத்தி. இத்தனைக்கும் அவர் தினமும் என் வீட்டைக் கடந்துதான் போயாக வேண்டும். நாலு தெரு தள்ளி ஒரு திருப்பத்தில் அவர் வீடு இருந்தது. தினமும் காலையில் நடைப்பயிற்சிக்குப் போவார். பயிற்சிமாதிரித் தெரியாது அது. ஸ்லோவாய், எதையோ பறிகொடுத்ததுபோல் போவது நடைப் பயிற்சியா என்ன? வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலு மனுஷாளைப் பார்க்க வேண்டாமா? இவர்தான் தலையே நிமிர்வதில்லையே…! பின் யார்தான் கண்ணில் படுவார்? உயரம் குறைவாய் அங்கங்கே ஓடிக் கொண்டிருக்கும் தெரு நாய்தான் கண்ணில் பட வேண்டியிருக்கும்.
குனிந்த தலை நிமிராது. தனக்கு ஏற்பட்ட அந்த அநியாய இழப்பினால் உலகத்தில் யாரையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை என்பதுபோல் இருக்கும் அவரது போக்கு. பூமியோடு, இந்த மண்ணோடு அப்படி என்ன பேசுகிறார்? ஒரு வேளை திரும்பவும் பள்ளத்தில் இறங்கிவிடக் கூடாது என்று கவனமாய்க் கால் பதிக்கிறாரோ? இரண்டு பக்கங்களும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன என்பதே அவர் கவனத்தில் இல்லையே! என்னைப்போல் எதிர்வீட்டில் இருக்கும் ராவ்ஜி கூட அவரைக் கவனித்ததுண்டு. என்ன…இப்டிப் போறாரு….உங்களோட பேச மாட்டாரா….? என்றார் ஒருநாள். தாமோதரனின் கதை ராவ்ஜிக்குத் தெரியும். அதுதான் பேப்பரில் வந்துவிட்டதே…! பேப்பர்காரன் எதை விட்டான்? இன்றுதான் மூலை முடுக்கு, சந்து பொந்தில் நடப்பவைகூடச் செய்தியாக வந்துவிடுகின்றனவே…! கொடுத்து முடிலய்யா…! என்கிற கதை. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி…!
முன்பெல்லாம் ஒரு தெருவில் ஏதாவது நடந்தால் பக்கத்திலுள்ள வீடுகள் சிலவற்றிற்குத்தான் தெரியும். அந்தத் தெருவோடு போச்சு. விஷயம் முடிந்து போகும். அதுவே இப்பொழுது அப்படியா இருக்கிறது? ஊருக்கு, உலகத்திற்கு என்று டமாரம் போட்ட கதையாய் அல்லவா ஆகிவிடுகிறது?
எதாச்சும் கவனமாப் போவார் சார்….வாக்கிங் கிளம்பிட்டாரு….எதுக்கு அவரைத் தொந்தரவு செய்திட்டு? என்று மழுப்பினேன் நான்.
நீங்கதான் கூப்பிடுங்களேன்…குறைஞ்சா போறது….? அவர் விஷயம் என்னாச்சு, ஏதாச்சுன்னு தெரிஞ்சிக்கலாமில்லியா? – இது பூமா. என் மனைவி. இவளுக்கு என்ன வந்தது? அடுத்தவன் விஷயத்தில் ஆர்வத்தைப் பாருங்கள்!
உனக்கு அது துறுதுறுங்குதாக்கும். அதத் தெரிஞ்சிட்டு நாம என்ன பண்ணப் போறோம்…அதப் போய் வாய்விட்டுக் கேட்க முடியுமா? அது நாகரீகமா? அந்த மனுஷன் ஏற்கனவே என்னை ஒரு கிளார்க்காப் பார்க்கிறவரு…ஓய்வு பெற்றாச்சுன்னா எல்லாரும் பென்ஷனர் தானேங்கிற நினைப்பு இல்ல அவருக்கு. இத்தனைக்கும் அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ரிடையர்ட் ஆனவன் நான். நம்பளவிடப் பெரியவன்ங்கிற நெனப்பாவது வேணும். எதுவுமில்லையே…! படிப்படியா அவராத்தானே வர்றதைக் குறைச்சிக்கிட்டாரு…நாமளா வேண்டாம்னோம்? வந்தபோதென்ன வாய்விட்டா பேசியிருக்கார்? கமுக்கமா, பூனை மாதிரி வந்திட்டு மறைஞ்சிடுவார்! ஆனால் ஒன்று. சில சமயம்…
சர்வ சகஜமா வந்து, உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு, மேற்கொண்டு படிக்கிறதுக்கு புஸ்தகமெல்லாம் வாங்கிட்டுப் போயிட்டிருந்தவர்தானே…! அப்பயும் அவர் மானேஜர்ங்கிற கௌரவத்தைக் விட்டுக் கொடுக்காமத்தான் வந்து போயிட்டிருந்தார்ங்கிறதை நீ கவனிச்சிருக்கியா? அதிகமான ஒட்டுதலைக் காண்பிச்சிக்க மாட்டார்…அதை நோட் பண்ணியிருக்கியா? பிறகென்ன…அவரை நான் கூப்பிடுறது…என்ன …எப்டியிருக்கீங்க சரவணன்…ன்னு அவரா கேட்டுட்டு வந்தா வரட்டும்…நான் கூப்பிடுறாப்ல இல்லை….! – பூமா அமைதியாகி-விட்டாள். இது அவங்க பாடு…நமக்கெதுக்கு? என்று விட்டுவிட்டாளோ என்னவோ? கொடுத்தனுப்பிச்ச புஸ்தகமெல்லாம் வந்துடுத்தாங்கிறதை மட்டும் பார்த்துக்குங்கோ….இரவல் வாங்கியே தனி லைப்ரரி வச்சவாள்லாம் இருக்கா உலகத்திலே…என்ன ஒரு கிண்டல்….?
தினமும் காலையில் வாசல் வராண்டாவில் சுருட்டி வீசி எறியப்பட்டிருக்கும் தினசரியை அவர்தான் வந்து எடுத்து வெளியிலிருக்கும் மாடிப்படியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார். பல நாட்களில் படித்து முடித்தபின்னே ஒழுங்காய் மடித்து திண்ணை ஜன்னலில் செருகிவிட்டுப் போயிருக்கிறார். நாங்கள் எதுவுமே சொன்னதில்லை. படிக்கப் படிக்க எழுத்து மறைந்துவிடப் போகிறதா என்ன? படித்து முடித்து மூலையில் அடுக்கி வைக்கும் ஐட்டம்தானே? உரிமையோடு எடுத்துப் படிக்கிறார். படிக்கட்டும்….என்று விட்டாயிற்று. அதை அவராகத்தான் இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறார். வந்ததற்கும் காரணமில்லை…நின்றதற்கும் காரணமில்லை…
இப்போது நூலகத்திற்கு வருவது இதற்காகத்தானோ? என்று தோன்றியது எனக்கு. படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி சற்று ஓரமாக அவரை நோக்கினேன். தள்ளி உட்கார்ந்திருந்தார். அந்த இடத்து நாற்காலியில் யாருமே உட்கார மாட்டார்கள். ஃபேன் காற்று வராது. அதற்கு அருகிலுள்ள சேரைக் கூட யாரும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீள மேஜைக்கு சுற்றிலும் சில இடங்கள் காலியாய்த்தான் இருந்தன. ஆனால் அதிலெல்லாம் மற்றவரை ஒதுங்கச் சொல்லிவிட்டு எழுந்து வர வேண்டும். பேச வேண்டுமே? இதுவென்றால் சடாரென்று எழுந்து பட்டென்று வெளியேறிவிடலாம். அந்த வசதி கருதித்தான் அவர் அங்கு அமர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
சார்…வர்ற சனிக்கிழமை வாசகர் வட்டம் கூட்டம் அறிவிச்சிரலாமா சார்…? – நூலகர் பெண்மணி கேட்டது. சின்னப்பெண்தான். இப்பொழுதுதான் திருமணம் கழிந்து ஒரு கைக்குழந்தை. படு சுறுசுறுப்பாய் இருக்கும். புதிய புதிய புத்தகங்கள் வரும்போதெல்லாம் அவற்றை அடுக்கி, பதிவேட்டில் வரிசை எண்ணிட்டுப் பதிவு செய்து கொடுப்போம். இன்னும் அஞ்சாறு ரேக்குகள் தேவை என்று சொல்லியும், மேற்புற சீலிங் சுவற்றிலிருந்து காரை உதிர்கிறது…அதனைப் பூச வேண்டும் என்றும் கோரிக்கையிட்டு மனு எழுதி எல்லோரும் கையெழுத்திட்டு அந்த நூலகத்தை அங்கேயே நிரந்தரப்படுத்துவதற்கான முனைப்பிலிருந்தோம் நாங்கள்.
அதை அங்கிருந்து எடுத்து வேறெங்கோ கொண்டு நடுவதற்கு ஒரு ப்ரபோசல் உள்ளதாய் கடந்த கூட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையை எங்களிடம் அந்தப் பெண் சொல்லி வருத்தப்பட்டது. இங்கிருந்தால் மதியம் வீடு போய் குழந்தையைக் கவனித்துவிட்டு வேண்டியதைச் செய்துவிட்டு, திரும்பவும் மாலை நாலு மணிக்கு வந்து திறக்க வசதியாய் இருக்கும் என்று சொல்லி அழுதது. இடத்தை மாற்றினால் பஸ்ஸில் நெடுந்தூரம் போய் வருவது மிகுந்த சிரமம் என்றது. இங்கு வந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. தான் வந்ததும் இப்படி ஒரு துக்கமா என்று துயரப்பட்டது.
வாசகர் வட்டக் கூட்டம் விடாமல் நடத்துவதும், நூலக விழா கொண்டாடுவதும், அனுதினமும் படிக்க வருபவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் அந்த இடத்தைத் தக்க வைக்கும் என்கிற எங்கள் யோசனையை ஏற்று விடா முயற்சியோடு இயங்கிக் கொண்டிருந்தது அந்தப் பெண். பலரும் அவர்களிடமுள்ள சொந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து இலவசமாய் நூலகத்திற்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புதியது, பழையது என்று புத்தகங்கள் சேர்ந்து கொண்டேயிருந்தன. புரவலராய்ப் பலரையும் சேர்ப்பதில் முனைந்திருந்தோம் நாங்கள். பணி ஓய்வு பெற்றவராயினும் ஒரே ஒரு முறை ஆயிரம் ரூபாய் நன்கொடையாய் வழங்குவது ஒன்றும் சிரமமில்லை என்று எடுத்துரைத்து ஒரு போர்டு எழுதி வரிசையாகப் பெயரிடப்படும் என்று சொல்லி ஊக்கப்படுத்தி, வயசானவர்களிடமிருந்து பிடுங்கினோம். மனதோடுதான் தந்தார்கள். ஐந்தாறு பேர் சேர்ந்து பக்கத்துக் காலனிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று கேன்வாஸ் செய்து உறுப்பினர் சேர்க்கையையும் அதிகப்படுத்தினோம்.
அறிவிச்சிருங்கம்மா…இன்னைக்கே அறிவிப்பு வச்சிருங்க…அப்பத்தான் தினசரி வர்றவங்க பார்வைல படும். வழக்கம்போல அந்த ரிஜிஸ்டர் பக்கத்துல ஒட்டிருங்க…என்றேன் நான். இதை நான் சொல்லும்போது தாமோதரன் என்னை நிமிர்ந்து பார்த்து கவனித்தது போலிருந்தது. பரவால்ல…அடுத்தவங்க பேச்சாவது காதுல விழுகுதே…! டமாரச் செவிடு மாதிரி இல்லாம….!
இந்த வாரத்திலிருந்து ஒரு புது அறிவிப்பை வெளியிடுவோம்….கூட்டத்துக்கு வர்றவங்க அந்த வாரம் அவுங்க படிச்ச புத்தகத்தைப் பற்றி இங்கே பகிர்ந்துக்கணும்…ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாலும் போதும். படிச்ச புத்தகங்கள், படிச்ச முக்கியமான செய்திகள்பற்றிய கருத்துக்கள் இப்படி எதுபற்றி வேணாலும் பேசலாம்….அத்தோட குழந்தைகளுக்கு ஓவியம் வரையுற போட்டியை அந்தந்த மாதத்தோட கடைசி சனிக்கிழமைக் கூட்டத்துல நடத்திடுவோம்…அதுகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்ங்கிறதை இந்த மாதம் நானே முடிவு பண்ணி என் செலவுல செய்துடறேன்…..இதையும் அறிவிச்சிடுங்க….விரும்பி இந்தச் சின்னச் செலவை குழந்தைகளை ஊக்கப்படுத்துறதுக்காக யாரு வேணாலும் ஏத்துக்கலாம்னு போடுங்க…என்றேன்.
பணியில் இருக்கும் காலத்திலேயே சங்கப் பணிகள் என்று அலைந்தவன் நான். தமிழ்நாடு பூராவும் இருக்கும் பல ஊர்களுக்கும் செயற்குழு, பொதுக்குழுவென்றும், மாநாடு என்றும் கிளம்பிச் சென்று நாயாய்ச் சுற்றியிருக்கிறேன். உள்ளூரில் அலுவலக நேரம் போக, சங்கப் பணி என்று நேரம் பார்க்காமல் அலைந்திருக்கிறேன். பல நாட்கள் லீவு போட்டுவிட்டு கையில் உறுப்பினர் ரசீதையும் நன்கொடை ரசீதையும் வைத்துக் கொண்டு துறை சார்ந்த அலுவலகங்கள் ஒன்று வி்டாமல் வலம் வந்திருக்கிறேன். அம்மாதிரி நாட்களிலெல்லாம் தாமோதரன் வாயில் விழக் கூடாது என்றே விடுப்பு போட்டு விடுவேன். அந்த வளாகத்துக்குள்ளேயே அவர் கண்பட ஒவ்வொரு அலுவலகமாய் நான் அலைந்து கொண்டிருப்பதைக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார் அவர். ஒரு முறை பெரிய சண்டையே வந்து விட்டது அவருக்கும் எனக்கு.
முதல் நாளே தெரியாதா? சொல்லிட்டுப் போனா, சாவியை வாங்கி வச்சிக்கிடுவேன்ல…நீங்கபாட்டுக்குப் போயிட்டீங்கன்னா உங்க செக் ஷன் ஃபைலை பாஸ் கேட்டார்னா யாரு எடுத்துக் கொடுக்கிறது? அவரு இன்னைக்கு லீவுன்னா சங்கடப் படுறாரு…என் கண்காணத்தான் இந்தக் காம்ப்ளெக்சுக்குள்ளேயே அலையுறீங்க…கூப்பிட்டு விட்டா வரமாட்டேங்கிறீங்க…
ஒண்ணும் பிரச்னையில்லை சார்….ஸ்டெனோ தம்பி பாலுகிட்டேத்தான் சாவி இருக்கும். அவர்ட்டச் சொல்லுங்க…எடுத்துத் தருவாரு….என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் திருப்தியடையவில்லை. மறுநாள் சீஃப் எந்தக் கோப்பைக் கேட்பார் என்று தெரிந்து, அதைத் தக்க நடவடிக்கை எடுத்து மேலாளர் மேஜைக்கு வைத்துவிட்டுத்தான் வந்திருப்பேன் நான். அதில் சுணங்கியதேயில்லை. ஆனாலும், நான் இல்லாதபோது ரொம்பவும் அவர் கஷ்டப்பட்டுவிட்டதாய்க் காட்டிக் கொள்வதுபோல் பேசுவார். அது அவர் வழக்கம். நான் வேலையில் கரெக்டானவன் என்பது
அவருக்குத் தெரியும். குறை சொல்லவென்று எது அகப்படும் என்று கண்ணி வைத்துக் காத்துக் கொண்டிருப்பார்.
ஒரே நாள்ல இத்தனை ஃபைல் போட்டீங்கன்னா நான் எப்படிப் பார்க்கிறது? மற்ற செக் ஷன் ஃபைலெல்லாம் இருக்குல்ல….நீங்கபாட்டுக்கு முப்பது நாற்பதுன்னு போடுறீங்க..தினம் பத்து, பதினஞ்சு போடுங்க…போதும்….
சார்…ஐநூற்றி நாற்பது ஃபைல் இருக்குசார் என்கிட்டே ரிமைன்டர் டைரிலயே இருபதுக்கு மேலே வருது…அதுபோக அன்றாடத் தபால்களுக்கு நடவடிக்கை எடுத்தாகணும்…..போடலைன்னா அதையும் கேட்பீங்கல்ல….? ஒழுங்கா வேலை செய்தாலும் தப்புன்னா எப்டி சார்…? என்றேன் பதிலுக்கு. எல்லோர் முன்னாடியும் அப்படிப் பட்டென்று பேசுவது பிடிக்காது அவருக்கு. தப்போ, சரியோ…அவர் சொல்வதைத் தலையாட்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும். ரொம்ப பர்ஃபெக்ட்தான்…பொத்துங்க…என்றார் ஒரு நாள். அந்த வார்த்தையை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. வாயே திறக்காதவனுக்குக் கோபம் வந்தால் இந்த லட்சணம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
பணியிலிருக்கும் காலங்களில் எந்தச் சங்கத்தையும் சாராதவராய் காலத்தை ஓட்டி விட்டவர் தாமோதரன். யார் கேட்டாலும் நன்கொடைன்னு போட்டுக்குங்க என்று காசைக் கொடுத்துவிடுவார். ஒரு கூட்டத்தில் கூட அவரை நான் கண்டதில்லை. ஒரு பணியாளர் மொத்த சர்வீசையும் இப்படியே ஒட்ட முடியமா? என்று ஆச்சரியமாயிருந்தது எனக்கு. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் சமரசம் செய்து கொண்டு ஏதேனும் ஒன்றில் மெம்பராய் இருந்து தொலைப்பதுதான் எல்லோருடைய வேலையும். ஆனால் இந்தாள் எப்படி இத்தனை வருடங்களை ஓட்டினார் என்பது ஆச்சரியம்தான். அவருக்குக் கை கொடுத்தது அவரது நேர்மை. சின்சியரான உழைப்பு. இதைச் சொல்லாமல் முடியாது. நேரம் காலம் பார்க்காமல் அலுவலகமே கதி என்று கிடந்து ஆபீஸ் வேலையாய்ப் பார்த்துத் தள்ளுவது. அலுவலர்களுக்கு உண்மையாய் இருப்பது. ரொம்பவும் பணப் புழக்கமுள்ள அலுவலகங்களில் இந்த மனுஷன் எப்படி சந்நியாசியாய் வலம் வருகிறார் என்பது பலருக்கும் ஆச்சர்யம். எதுலயும் சிக்க மாட்டேங்கிறானே…!
நான் ஒருவன் அவருக்குத் துணை உண்டுதான். ஆனாலும் நான் சங்கத்தைச் சேர்ந்தவன். சங்கப் பணிகளில் ஈடுபாடு உள்ளவன். பணியாளர்களின் குறைகளை முன்னின்று செய்து கொடுத்துத் தீர்த்து வைக்க முனைபவன். நான் இருக்கேன் செயலாளராய் என்று வலியப் பதவியைப் பிடுங்கிக் கொண்டவன். பிறகு இவர்தான் லாயக்கு என்றோ, அவரே இருக்கட்டும் அப்பத்தான் வேலை நடக்கும்…என்றோ விட்டுவிட்டார்கள். பதவி உயர்வு வேண்டாம் என்று வேறு தத்தம் செய்து விட்டேனா…கேட்கவே வேண்டாம். அந்த மாவட்டத்தின் சீனியர் என்று மதிப்பிட்டு எனக்கே சாசனம் செய்து எழுதிக் கொடுத்து விட்டார்கள். ஒரு முறை கட்டாயம் எலெக் ஷன் வைத்தே தீர வேண்டும் என்று ஒரு க்ரூப் கொடி பிடிக்க, அந்தத் தேர்தலிலும் நான்தான் ஜெயித்தேன். என் காலம் அப்படியே ஓடி விட்டது.
ஆனால் ஒன்று நான் ஓய்வு பெற்ற வழியனுப்பு விழாவுக்கு தாமோதரன் வந்திருந்தார். கொஞ்சம் ஐட்டங்கள் அதிகம்தான். அது என் ஏற்பாடு. அதாவது காலையில்…பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல் என் ஸ்பெஷல் மெனு…எல்லோருக்கும் பயங்கர திருப்தி. சந்தோஷம். தாமோதரன் ரசித்துச் சாப்பிட்டதைப் பார்த்தேன். ஒரு விஷயம்… வாய்விட்டுக் கேட்டு அன்று மேலும் இரண்டு ஸ்வீட் வாங்கிக் கொண்டார். இனிப்பை இவ்வளவு விரும்பும் மனுஷன் எல்லாருக்கும் இனிப்பாய் இருக்கக் கூடாதோ? என்று நினைத்துக் கொண்டேன். அந்த நன்றியோ என்னவோ…மாலை பணியாளர்கள் சேர்ந்து நடத்திய விழாவில் அவரும் கலந்து கொண்டார். ஒரு வெள்ளைத் துண்டை எனக்குப் போர்த்தினார். அதாவது செய்யணும் என்று தெரிந்ததே…! அதுவரையில் மகிழ்ச்சிதான்.
நான் ஓய்வு பெற்ற அடுத்த இரண்டாண்டுகளில் தாமோதரன் ஓய்வு பெற்றார். அதென்ன ஓய்வா? தேதிதான் கடந்ததேயொழிய அந்த நாளில்தான் அவர் சஸ்பென்ஷனில் இருந்தாரே…! போயும் போயும் அந்த அல்பத் தொகைக்காகப் பிடிபட்டுக் கொண்ட அல்பன் அவர். விதி யாரை விட்டது. அவரைப் பொறுத்தவரை அதை விதி என்றுதான் சொல்ல வேண்டும்.
சர்வீஸ்ல இருக்கிற காலத்துல யார் வாய்லயும் விழக் கூடாதுய்யா…அது பலிதமாகும். இப்ப ஆள் மாட்டிக்கிட்டார் பாருங்க…எவன் போய் காப்பாத்துறது…? அவரேதான் பார்த்துக்கணும்….அந்த ஆபீசர்னால ஏதாச்சும் செய்ய முடிஞ்சிதா? எனக்கென்னன்னு இருந்திட்டாரு அவரு….வாங்கின காசைக் கொடுத்துத் தொலைச்சிருந்தா இந்த வம்பு உண்டா? கொடுப்பார்…அவரா கொடுத்திடுவார்னு இவர் இருக்கப் போக, கேட்டா பார்த்துக்கலாம்னு அவர் இருக்கப்போக, விடாப்பிடியா அந்தக் காசை எப்டியும் சம்பாரிச்சிடணும்னு இப்டியா கையை நீட்டுவாரு…? ஆபீசர்ட்டக் காசை வாங்கி ஏமாத்தின ஸ்டாஃபைப் பார்த்திருக்கோம். ஆபீசரே கடன் வாங்கி ஏமாத்துனதை இப்பத்தான் பார்க்கிறோம். அவரும் மனுஷன்தானே…வாங்கத் தெரிஞ்சவருக்கு ஏமாத்தத் தெரியாதா? ஆனா இந்தச் சின்ன விஷயத்தை அவர் இப்படிச் செய்திருக்க வேண்டாம். யாரையேனும் கையைக் காண்பித்து விட்டிருக்கலாம். செட்டில் பண்ணிருய்யா…என்று. வேறு எதையேனும் மனதில் வைத்துக் கருவறுத்து விட்டாரோ? என்று தோன்றியது.
ஆத்திரமா இருந்தா வாய்விட்டுக் கேட்டிருக்கலாம்ல…எங்கிட்ட வாங்கின பணத்தை எப்பத்தான் சார் திருப்பித் தருவீங்க…ன்னு ஒரு சத்தம் கொடுத்திருந்தார்னா…ஒண்ணு கொடுத்திருப்பாரு…இல்லன்னா எதாச்சும் பதிலாச்சும் சொல்லியிருப்பாரு..அதெல்லாம் ஒரு காசா.அவருக்கு ?..பிசாத்து…! …ரெண்டுமில்லாம இவரா ஏதோவொண்ண நினைச்சிக்கிட்டு, நேத்து வந்த புது கான்ட்ராக்டர்ட்டக் கறார் பேசிக் கையை நீட்ட, அவன் எதையோ விபரீதமாப் பண்ணி வைக்க, கையும் களவுமாப் பிடிபட்டுட்டார்ல….? வாங்கத் தெரியாதவன் வாங்கக் கூடாது…பேசத் தெரியாதவன் பேசக் கூடாதுங்கிறது எவ்வளவு உண்மையாப் போச்சு? வருஷக் கணக்கா பழகின ஒப்பந்ததாரர்னா நெளிவு சுளிவு தெரியும்..ஒரு இடத்துல தொலையுதுன்னு குடுத்திட்டு. இன்னோரிடத்துல சம்பாரிச்சிக்குவான்…புதுசா நுழைஞ்சவன் மிரளத்தான செய்வான்…? தொழிலுக்குப் புதுசுன்னு பயமுறுத்துற மாதிரிக் கேட்டாரோ என்னவோ..கான்ட்ராக்ட் கிடைக்காட்டாலும் பரவால்லன்னு ..அவன் துணிஞ்சிட்டான்…! உலகத்துல இந்தப் பண விவகாரம் என்னெல்லாம் வேலை பண்ணிடுதுங்கிறதை யாருமே உணர்றதில்லை. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்ங்கிறதை ஒட்ட அழுகல்னு சொல்லிச் சிரிப்பாரே…அவர் கதியைப் பார்த்தீங்களா இப்ப?
அந்த நாளின், அந்த மாலைப் பொழுதின், அந்தச் சில கணங்களும், அன்று தாமோதரனின் தட்டுக்கெட்ட நிலையும்…இவன் மனக் கண்களில் படமாய் ஓட உடம்பு லேசாக நடுங்கியது. வாழ்க்கையில் அப்படியெல்லாம் அவமானப் படக்கூடாதுதான். பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. அந்தக் கேவலம் ஆகவே ஆகாதுதான். ஆனால் அது அப்படியிருந்த ஒருவருக்கு நடந்து போனதே…! இதை எப்படிச் சொல்லி நோவது?
நூலகம் அடைக்கும் நேரம் வந்து விட்டதை உணர்ந்த சரவணன் இருக்கையை விட்டு எழுந்தான். எதிரே தாமோதரன் அமர்ந்திருந்த நாற்காலி காலியாய்க் கிடந்தது. சுற்றிலும் பார்த்தான். ஆள் இல்லை. போய்ட்டார் போல்ருக்கு என்று நினைத்தவாறே- நான் வர்றேம்மா….என்று அந்த நூலகர் பெண்ணிடம் கூறிவிட்டு வெளியே வந்தபோது….மரத்தடியில் தாமோதரன் நின்றிருந்தார். இவனுக்காகவே காத்திருந்ததுபோல் நிமிர்ந்தார்.
சைகை மூலம் அழைப்பதைப் பார்த்து அருகே சென்று நின்றான். அமைதியாய் இருந்தார். எப்படிச் ஆரம்பிப்பது என்ற தயக்கமோ? சொல்லுங்க சார்…கூப்டீங்க…? என்றேன். இன்னைவரைக்கும் என் கிராஜூட்டி பணம் வரல்லே…அதை நிறுத்தக் கூடாதுங்கிறது உண்டுதானே? …பாதியாவது சாங்ஷன் பண்ணனும். பைசா வரல்லை. ஏ.ஜி. – ட்டர்ந்து இன்னும் ஆர்டர் வரலேங்கிறாங்க.. வந்திருந்தா எனக்கும் காப்பி வந்திருக்கணுமே…!..ஒருவேளை என் நகலும் சேர்ந்து ஆபீசுக்கே போயிடுச்சோ என்னவோ? அவுங்களாவது ஃபார்வேர்டு பண்ணனுமே…!
அதுவுமில்லை……என் பென்ஷன் என்னாச்சுன்னே தெரில….ப்ரொபோசல் அனுப்பிச்சாங்களா இல்லையான்னு கூடத் தெரிஞ்சிக்க முடில….ஆபீசுக்குப் போனா எல்லாரும் புதுசா இருக்கிறாங்க… ஆள் மாறிட்டாங்க பலரும். இருக்கிற சிலரும் கண்டுக்கலை…கொஞ்சம் என்னாங்கிறதை உங்களால விசாரிச்சுச் சொல்ல முடியுமா? – என் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் கேட்ட விதம் கண்களைக் கலங்கச் செய்து விட்டது.
நான் கேட்டேன். இதெல்லாத்துக்கும் முன்னாடி உங்க சஸ்பென் ஷனை ரிவோக் பண்ணி ஆர்டர் வரணுமே சார்….அது வந்திடுச்சா….? அப்புறம்தானே பீரியடை ரெகுலரைஸ் பண்ணி ப்ரபோசல் அனுப்புவாங்க…அதுபத்தி ஏதாச்சும் தெரியுமா?
அவர் கண்களில் பீதி பரவியது. இதைப்பத்தி நான் யோசிக்கவேயில்லையே? என்பதுபோல…என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்தவாறே நின்றார். கண் கலங்குகிறாரோ என்று அவர் தோள்களைப் பற்றினேன். உடம்பில் நடுக்கம் பரவியிருந்தது. அலுவலகத்தில் ஒழுங்கு முறை நடவடிக்கைக் கோப்புகளில் அத்தனை ஆர்வம் காட்டாதவர். யாருக்கும் தன் கைப்பட ஒரு மெமோ கூடக் கொடுக்கத் துணியாதவர். என்னையும் கஷ்டப் படுத்தாதீங்க…நானும் யாரையும் தொந்தரவு பண்ணலை…இதுதான் தாமோதரன். அவர் சொன்னார்…
அதையும் நீங்கதான் செய்யணும்…..எனக்காகச் செய்றதுக்கு நீங்க மட்டும்தான் இன்னிக்கு இருக்கீங்க…….ஒரு முறை மெட்ராஸ் போயிட்டு வாங்களேன்…எனக்காக.- நானும் வேணாலும் வர்றேன்…..எனக்கு யாரையும் தெரியாது. எங்கியும் நான் போனதில்லை…வந்ததில்லை…நாம போவமா..? .-அதற்க மேல் பேச்சு வரவில்லை. கைகளைப் பிடித்துக் கொண்டு முகம் புதைத்துக் கொண்டார். அழாதீங்க சார்…..கண்ணைத் துடைங்க…என்றேன். அவருக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டேன்.
நானே குடும்பத்தோடு ஒரு முறை சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். இப்போது துணைப் பொட்டலமாக இவர் வருகிறேன் என்கிறாரே…? பொருந்துமா…? நீங்க அலைய வேண்டாம் சார்….எல்லா டீடெய்ல்சையும் என்கிட்டே கொடுங்க…நானே போய்ப் பார்த்திட்டு வர்றேன்….எங்க வீட்டுலயும் வர்றாங்க…அவங்க அம்மா, அக்கா, மாமால்லாம் சென்னைலதானே இருக்கிறாங்க… அதுல ரெண்டு நாள் கழிஞ்சிடும்…பிறகுதான் வெளில கிளம்ப முடியும்… அதனால… வேலையோட வேலையா உங்க விஷயத்தைக் கண்டிப்பா இருந்து பார்த்து முடிச்சிட்டு வர்றேன்…. சரிதானா…?
வீட்டோட போறீங்களா? அப்ப முடியுமா உங்களால…? -கொஞ்சம் ஏமாற்றமடைந்தது போல் கேட்டார்.
முடியாம என்ன சார்…எல்லாம் மனசுதான் வேணும்… நம்புங்க… சொல்லிட்டீங்கல்ல… கவலையை விடுங்க… என்றேன். என் சமாதானம் மிகுந்த தெம்பளித்திருக்க வேண்டும் அவருக்கு. கண்களைத் துடைத்துக் கொண்டு விடைபெற்றுக் கொண்டார். நடை ரொம்பவும் தளர்ந்திருந்தது பார்க்கச் சங்கடமாயிருந்தது.
அவருக்கான பணப்பயன்கள் குறித்த பணிகளை இயன்ற அளவு முயன்று முடித்துக் கொடுப்பது என் கடமை என்று அந்தக் கணத்தில் தீர்மானித்துக் கொண்டேன் நான். அவரிடமிருக்கும் விபரங்களையெல்லாம் பெற்றுக் கொண்டு, மறுநாள் உள்ளூர் அலுவலகம் சென்று விவரமாக விசாரித்துத் தெரிந்து கொண்டு, அங்கும் தேவையானதைப் பெற்றுக் கொண்டு, சென்னை புறப்படத் தயாரானேன்.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |